037. அவா அறுத்தல் - 07. அவாவினை ஆற்ற






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஆசைக்கு அஞ்சி, அது மறந்தும் தன்னிடத்து வாராமல் ஒருவன் கெடுப்பானானால், அவனுக்குத் தான் கெடாமைக்கு ஏதுவாகிய செயல், தன் விரும்பும் வழியினால் உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

     கெடாமை என்றது, பிறவித் துன்பங்களால் ஒருவன் அழியாமை.

     தான் விரும்பும் வழி என்றது, உடல் வருந்தாத வழி.

     ஆசையை முற்றிலும் ஒழித்தவன் வேறு அறம் செய்யவேண்டுவது இல்லை. அவன் செய்யும் செயல்கள் யாவுமே அறத்தின் வழிப்பட்டவையாக இருக்கும்.

திருக்குறளைக் காண்போம்...

அவாவினை ஆற்ற அறுப்பின், தவா வினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அவாவினை ஆற்ற அறுப்பின் --- ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின்,

     தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் --- அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.

         (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறு அறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தேசஞ்சொல் பத்ரகிரி சிந்தையின் மூவாசை விட்டான்
ஈசன் பரவும், இரங்கேசா! - பாச
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

இதன் பொருள் ---

     ஈசன் பரவும் இரங்கேசா --- உருத்திரன் போற்றும் திருவரங்கநாதக் கடவுளே! தேசம் சொல் பத்திரகிரி --- பல தேசத்தாரும் புகழ்கின்ற பத்திரகிரி அரசன், சிந்தையில் மூன்று ஆசை விட்டான் --- தன் மனத்தகத்தில் குடியிருந்த (மண், பெண், பொன் என்னும்) மூவித ஆசைகளையும் நீக்கினான். (ஆகையால், இது) பாச அவாவினை-- - ஆசையாகிய கயிற்றை, ஆற்ற அறுப்பின் --- முழுதும் அறுத்துவிட்டால், தவா வினை --- தான் கெடாத நல்வினையானது, தான் வேண்டும் ஆற்றான் வரும் --- (ஒருவன்) தான் விரும்புகிறபடி உண்டாகும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- ஆசையை அறுப்பவனே அழியாத ஞானியாவான்.

         விளக்கவுரை --- பட்டினத்தார் காலத்திருந்த பத்திரகிரியார் அரசாள்கையில், அதி வைபவத்தோடு முந்நூறு பெண்களை விவாகம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடை.ய பிதா கோவிந்தசாமி என்பார் நிரியாண தசையில் இருந்தபோது, மகனை அழைத்து, "தம்பீ! நீ பல சாதி சூத்திரப் பெண்களை மணந்திருப்பதால், அவர்கள் பெறும் மக்களின் வமிசம் உலகில் நீடித்து இருக்குமட்டும் எனக்கு முத்தி கிடையாது, நரகம் கிடைப்பது நிச்சயம்" என்று வருந்தினார்.

         அது கேட்டவுடன் பத்திரகிரியார் தன் அரசாட்சியை விக்கிரமார்க்கனுக்கு வழங்கி,  முந்நூறு பெண்களையும், அவர்கள் விருப்பம் போல் போகவிட்டு, மூவாசைகளையும் அற நீக்கித் துறவியானார். அதனால் அவர் பிதாவுக்கும் முத்தி கிடைத்தது.  தாமும் சுஞ்ஞானியாய்ப் பீடு பெற்று வீடு பெற்று உய்ந்தார்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...