029. கள்ளாமை - 03. களவினால் ஆகிய






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 29 -- கள்ளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "களவு செய்தலினால் உண்டாகிய பொருளானது, அளவுக்கு மீறிப் பெருகுவது போலத் தோன்றி,  முன் இருந்த செல்வத்தோடும் அழிந்து விடும்" என்கின்றார் நாயனார்.

     முன் இருந்த செல்வத்தோடும் போதலாவது, தான் போகும் காலத்தில் பழியையும் பாவத்தையும் நிலைபெறச் செய்து, அவன் முன் செய்த தருமத்தையும் உடன்கொண்டு போதல்.

     களவு செய்வதால் உண்டாகிய செல்வம் பெருகுவது போலத் தோன்றி, பாவத்தையும் பழியையும் நிறுத்தி, விரைவில் அழிந்து விடும் என்பதாம்.

     ஆற்றில் வெள்ளம் வந்தபோது, வந்த புதுப் புனலோடு, முன்பே இருந்த புனலும் அடித்துச் செல்லப்படுவது போல, உள்ள செல்வமும், இல்லாமல் போகும்.

திருக்குறளைக் காண்போம்...

களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து
ஆவது போலக் கெடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     களவினால் ஆகிய ஆக்கம் --- களவினால் உளதாகிய பொருள்,

     ஆவது போல அளவிறந்து கெடும் --- வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.

         (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வில்லவன் வாதாவி கபடு ஏதாயது, மலயச்
செல்வமுனி நோக்கால், சிவசிவா! - சொல்லில்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

         வாதாவி தன் தம்பியைக் கொன்று அகத்தியர்க்குப் படைத்து அவரால் தானும் மாண்டான்.

     அகத்திய முனிவர் பொதியமலைக்குப் போகும் வழியில், தொண்டை நாட்டில் வாதாவி வல்லவன் என்னும் இராக்கத சகோதரர் இருவர், முனிவரை வஞ்சித்துக் கொல்லும் தங்கள் வழக்கம்போல், அவரையும் கொல்ல எண்ணினார்கள்.  ஆகையால், வாதாவி ஆடாய் மேய்ந்துகொண்டு இருந்தான்.  வில்லவன் முனிவரை எதிர்கொண்டு அழைத்து, பிராமணார்த்தத்திற்கு இருக்க வேண்டினான். அதற்கு அவர் சம்மதித்ததனால், அக் காலத்திய வழக்கம்போல் அவன் வாதாவியாகிய ஆட்டை அறுத்துக் கறி சமைத்துப் படைத்தான்.  அகத்தியர் அகத்தில் வஞ்சனையின்றி ஆட்டுக்கறியைக் கொஞ்சமேனும் விடாமல் புசித்துப் பிராமணார்த்தத்தை நிறைவேற்றினார். உடனே, வில்லவன், தன் வழக்கம் போலச் சஞ்சீவி மந்திர உச்சாடனத்தால், அவர் வயிற்றில் இருந்த ஆட்டுக் கறியாகிய வாதாவியை உயிர்ப்பித்து, வயிற்றைக் கீறிக்கொண்டு வெளியில் வரவழைத்தான். அவர் வயிற்றில் வாதாவி உயிர் பெற்றதனால் கொட கொட என்று இரைந்தான்.  அந்த அரவத்தால், மோசத்தை உணர்ந்த அகத்திய முனிவர், வாதாவியின் நாசத்தை எண்ணி, "வாதாவி ஜீர்ணாஹா, சுவாஹா" என்று தம் வயிற்றைத் தடவினார். அவன் அவர் வயிற்றிலேயே ஜீர்ணமாய் மாண்டு போனான். வில்லவனையும் அவர் கோபாக்கினியினாலே சாம்பாராக்கிச் சென்றார். இதனால் ஆற்றுவாராகிய அகத்தியர்க்கு, ஆற்றாதாராகிய வில்லவ வாதாவியர் வலிய அழைத்து, இன்னா செய்ததனால், கூற்றத்தைக் கையால் விளித்ததுபோல், அவரால் உயிர் துறந்தழிந்தமை காண்க.

     வில்லவனது கள்ளத்தனம் கேடாய் முடிந்தது.

     இத் திருக்குறளுக்குப் பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
ஆவதே போன்று கெடும்.        --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ --- ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடல் துறையை உடையவனே!, கேள் --- கேட்பாயாக, தீயன ஆவதே போன்று கெடும் --- தீச் செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன் எல்லையைக் கடந்து கெட்டுப் போகும் (ஆதலால்), அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை --- தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை, நல்லது செய்வார் நயப்பவோ --- நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்புதலிலர்.)

         நல்லோர், தீயது செய்வார் செல்வ நிலையாமையை அறிந்து அதனைப் பொருளாக மதித்தலிலராகலின், தீவினை செய்து பொருளீட்டலாகாது என்பதாம்.

     தீயன செய்வார் செல்வம், போங்கால், பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்து அறத்தை உடன்கொண்டு போதலின், நல்லது செய்வார் அதனை விரும்புதல் இலர். புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போனது போல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி, வந்த அளவினும் மிகுந்து போவதாம். அழிவினைச் செய்யினும் அல்லது செய்வார் ஆக்கம் என்று கருதுதலின் 'ஆக்கத்தை'என்றார்.

         'தீயன, ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...