திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
30 -- வாய்மை
வாய்மை எனப்படுவது உண்மையின் தன்மை ஆகும்.
பெரும்பாலும் காமும் பொருளும் பற்றி உண்டாவதாகிய பொய்ம்மையை விலக்குவது.
இல்லற இயலில், வாக்கின் குற்றங்களாகிய பொய் குறளை கடுஞ்சொல், பயனில் சொல்
ஆகிய நான்கின் உள்ளும், பொய்யானது, துறந்தார்க்கு அல்லாமல், கடிதல் முடியாது
என்று 'பயனில் சொல்' என்னும்
அதிகாரத்தில் கூறினார். ஆதலால், இங்கு, காமத்தினாலும், பொருளின் காரணமாகவும்
உண்டாவதாகிய பொய்மையை விலக்கவேண்டும் என்று கூற வந்த நாயனார், காமத்தின்
காரியமாகிய "கூடா ஒழுக்கம்", பொருளின் காரியமாகிய "கள்ளுதல்"
ஆகிய இரண்டு அதிகாரங்களின் பின்னர், "வாய்மை" என்னும் இத்தை வைத்தார்.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "மெய்ம்மை என்று
சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது எனக் கேட்டால், அது பிறிது ஓர்
உயிருக்கு,
ஒரு
சிறிதும் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுதல் ஆகும்" என்கின்றார் நாயனார்.
இதனால், மெய்ம்மையின் இலக்கணம்
கூறப்பட்டது. யாதொரு உயிர்க்கும் யாதொரு தீங்கும் நேரக் கூடாது என்றதனால், நடந்ததைச்
சொல்லுதல் நீக்கப்பட்டது. நடந்ததைக் கூறுவதிலும் ஓர் உயிருக்கும் தீங்கு விளையாமல்
இருத்தல் வேண்டும். தீமையினை உண்டுபண்ணுமாயின் பொய்ம்மை. தீமையினை
உண்டுபண்ணாதாயின் வாய்மை.
ஏனெனில், விரதம் காக்க வந்தவனாகிய
இவன், ஓர் அறிவு
உயிராகிய புல்லுக்கும் தீமை செய்யாது இருத்தல் வேண்டும். அதற்குத் தீங்கு
வருவதாயின் அதைக் காக்கும் பொருட்டுத் தன் உடலை ஒறுத்துக்கொண்டேனும்
காக்கவேண்டும்.
உயிர் காப்பதே விரதமாகக் கொண்டவன், பிற உயிர்க்குத்
தீங்கு வராது காக்கும் சொற்களையே பேசவேண்டும். அதுவே வாய்மை ஆகும்.
திருக்குறளைக்
காண்போம்...
வாய்மை
எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும்
தீமை
இலாத சொலல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
வாய்மை எனப்படுவது யாது எனின் ---
மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்,
தீமை யாதொன்றும் இலாத சொலல் --- அது
பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.
('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது
கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு
பயவாதாயின் மெய்ம்மையாம்: பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
வையினால் விளங்கும்
நேமி,
வலம்புரி வயங்கு செம்பொன்
கையினான், அந்தணாளன்
கையறல் புகன்ற காலை,
மெய்யினால்
வகுத்தது அன்ன
மெய்யுடை வேந்தன் கேட்டு,
"பொய்யினால்
ஆள்வது இந்தப்
புவிகொலோ?" என்று நக்கான்.
--- வில்லிபாரதம், 15-ஆம் நாள் போர்.
இதன்
பதவுரை ---
வையினால் விளங்கும் நேமி --- கூர்மையோடு விளங்குகின்ற
சக்கரமும், வலம்புரி --- சங்கமும், வயங்கு --- விளங்கப்பெற்ற, செம் பொன் கையினான் --- சிவந்த அழகிய திருக்கைகளை உடையவனான கண்ணன், அந்தணாளன் கையறல் புகன்ற காலை --- (இங்ஙனம்) துரோணன் செயலற்று
ஒழியும் வகையைச் சொன்ன பொழுது, மெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன்
--- சத்தியத்தினால் அமைக்கப்பட்டது
போன்ற உடம்பையுடைய தருமராசன், கேட்டு-, பொய்யினால் ஆள்வது இந்த புவி கொலோ என்று
---இந்தப் பூமியைப் பொய் கூறி அதனால் பெற்று ஆளுவது
தகுதியோ? என்று கூறி, நக்கான் --- சிரித்தான்;
'அண்ணிய கிளையும், இல்லும்,
அரும் பெறல் மகவும், அன்பும்,
திண்ணிய
அறிவும், சீரும்,
செல்வமும், திறலும், தேசும்,
எண்ணிய
பொருள்கள் யாவும்
இயற்றிய தவமும், ஏனைப்
புண்ணியம்
அனைத்தும் சேர,
பொய்மையால் பொன்றும் அன்றே.'
--- வில்லிபாரதம், 15-ஆம் போர்.
இதன்
பதவுரை ---
இல்லும் --- மனைவாழ்க்கைத் துணையும் (தாரமும்), அரும்பெறல் மகவும் --- அரிய பெரிய சந்தாநமும், அண்ணிய கிளையும் --- நெருங்கிய மற்றைப் பந்து வர்க்கமும், அன்பும் --- அன்பும், திண்ணிய சீரும் --- உறுதியுள்ள
அழியாத புகழும்,
மிக்க
செல்வமும் --- மிகுதியாய் உள்ள செல்வமும், திறலும்
---வலிமையும், தேசும் --- ஒளியும், எண்ணிய பொருள்கள் யாவும்
--- மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும், இயற்றிய தவமும் --- செய்த தவசும், ஏனை புண்ணியம் அனைத்தும் --- மற்றைப் புண்ணியங்கள்
யாவையும், சேர
--- ஒரு சேர, பொய்ம்மையால் --- பொய்
சொல்லுதலினால், பொன்றும் அன்றே --- அழிந்துவிடும் அன்றோ! அன்றே -
தேற்றம்; பொய்கூறிய அப்பொழுதே எனினுமாம்.
'உம்மையில் மறுமைதன்னில்
உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில்
விளங்கும் யார்க்கும்
அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே
ஒருவர்க்கு உற்ற
விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும்
மெய்ம்மை போலப்
புண்ணியம் பயக்கும் மாதோ! --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.
இதன்
பதவுரை ---
உம்மையில் --- கழிந்த பிறப்பிலும், மறுமை தன்னில் ---வரும் பிறப்பிலும், உறு --- பொருந்திய, பயன் இரண்டும் ---வினைப்பயன்கள் இரண்டும், பார்க்கின் --- ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே --- இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்கும் --- எல்லார்க்கும், விளங்கும் ---
விளங்கும்; ஒருவர்க்கு உற்ற விபத்தினை
--- ஒருவர்க்கு மிக்க ஆபத்தை, பொய்ம்மையும் --- அசத்தியமும், மெயம்மையே மீட்கும் ஆகில் --- உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மை போல --- சத்தியம் போலவே, புண்ணியம்
பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.
இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்பதுன்பங்களினால்
முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை
ஊகித்து அறியலாம் என்பதும், இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டு
வருபிறப்பில் அவர் அடையும்
இன்பதுன்பங்பளை
ஊகித்து அறியலாம் என்பதும் முன்னிரண்டடிகளின் கருத்து, பின்னிரண்டடியினால், பெரிய ஆபத்துக் காலத்தில் அதனை நீக்கும்
பொருட்டுப் பொய் கூறலாம் என்று வற்புறுத்தியபடி, "பொய்ம்மையும் வாய்மையிடத்த
புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்"
என்றதுங் காண்க. இதனால் அசுவத்தாமா
இறந்தானென்பது
ஒருவகையாற் பொய்யாயினும் நன்மை பயத்தலால் மெய் போன்றதே என்று கூறியவாறு.
'வல்லவர் அனந்த கோடி
மறைகளின்படியே ஆய்ந்து,
சொல்லிய
அறங்கள் யாவும்
நின்னிடைத் தொக்க ஆற்றால்,
புல்லிய
பொய் ஒன்று என் ஆம்?
பொரு பெரு நெருப்புக்கு ஈரம்
இல்லை; நீ ஒன்றும் எண்ணாது
இயம்புதி, இதனை!' என்றான். ---
வில்லிபாரதம், 15-ஆம் போர்.
இதன்
பதவுரை ---
வல்லவர் --- அறிந்த பெரியோர்கள், அனந்த கோடி மறைகளின்படயே --- அளவிறந்த கோடிக்கணக்கான வேத வாக்கியங்களில்
கூறியபடியே, ஆய்ந்து --- ஆராய்ந்து, சொல்லிய ---
சொன்ன, அறங்கள் யாவும் --- தருமங்களெல்லாம், நின்னிடை
தொக்க
ஆற்றால் --- உன்னிடத்துக் கூடியுள்ளபடியால், புல்லிய பொய்ஒன்று --- (இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானது, என் ஆம் --- (உனக்கு) யாது தீங்கு தருவதாம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை --- மூண்டெழுந்த
மிக்க நெருப்புக்கு ஈரத்தாலாகும்
அபாயம் இல்லை; (ஆகவே), நீ ஒன்றும் எண்ணாது --- நீ யாதொன்றையுஞ்
சிந்தியாமல், இதனை இயம்புதி --- இப்
பொய் ஒன்றைக் கூறக் கடவாய், என்றான் --- என்று (கண்ணன் தருமனுக்குப்)
கூறினான்.
'நான்
கூறுவது நம்முடைய பக்கத்தார்க்கு நன்மை தருவதானாலும் எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால்
இது பொய்யேயன்றோ!" என்று தருமனுக்குத் தோன்றுஞ்
சங்கையை, இதனால் பரிகரிக்கின்றான் கண்ணன். அசுவத்தாமன் இறந்தமை கூறுதல், நிகழாதது கூறலன்றி நிகழ்ந்ததனையே மாறுபாடாக் கூறுதல் ஆதலால், 'புல்லிய பொய்' எனப்பட்டது பொரு
நெருப்பு-எல்லாவற்றையும் எரித்துவிடத்தக்க நெருப்பு எனினுமாம். 'பெரு
நெருப்புக்கு ஈரமில்லை' என்பது, பழமொழி. பெரியோர் கூறிய அறங்கள் யாவும் நின்னிடத்து ஒருங்கே அமைந்துள்ளதனால், இச்சிறு பொய்யினாற் சிறிதும் தவறு உண்டாகாது; பெருநெருப்புக்குச் சிறிய ஈரத்தினால் சிறிதும்
கெடுதியில்லாதவாறு போல என்றான்.
No comments:
Post a Comment