திருக்குறள்
அறுத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
28 -- கூடா ஒழுக்கம்
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம்
திருக்குறளில், "உள்ளத்தில்
அழுக்கை வைத்துக் கொண்டு, பிறர்க்குத் தவத்தால் மாட்சிமை உடையவராக நீரில்
மூழ்கிக் காட்டி, மறைந்து ஒழுகுகின்ற மனிதர் உலகத்தில் பலர் உள்ளனர்"
என்கின்றார் நாயனார்.
உள்ளத் தூய்மைக்கு முயல்வதே தவம். அது
இல்லாமல் உடல் தூய்மையைக் காட்டி உலகவரை மயக்குகின்றனர் துறவுக் கோலத்தை
உடையவர்கள்.
திருக்குறளைக்
காண்போம்...
மனத்தது
மாசுஆக, மாண்டார் நீர் ஆடி,
மறைந்து
ஒழுகும் மாந்தர் பலர்.
இத்றகுப்
பரிமேலழகர் உரை ---
மாசு மனத்தது ஆக --- மாசு தம்
மனத்தின் கண்ணதாக,
மாண்டார் நீர் ஆடி --- பிறர்க்குத்
தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி,
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் --- மறைந்து
செல்லும் மாந்தர் உலகத்துப் பலர்.
(மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை
போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார்.
இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய' என உரைப்பாரும் உளர்.)
பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக
அமைந்துள்ளமை காணலாம்...
உள்ளத்தின்
உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக்
குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும்
மேடும் பரந்து திரிவரே
கள்ள
மனம்உடைக் கல்வி இலோரே. ---
திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை
---
உள்ளத்தில் தானே நற்புண்பகளாகிய பல
தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்ச மனம்
உடைய அறிவிலிகள், புறத்தே பல
தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும்,
மேடும்
கடந்து நடந்து இளைக்கின்றனர்.
குறிப்புரை : கல்வியாகிய தீர்த்தத்தில்
மூழ்கக் கற்றல். இதனால், அகத் தூய்மை இன்றிப் புறத்தே தீர்த்தத்தில்
மூழ்குதலால் பயனில்லை என்பது கூறப்பட்டது.
கங்கை
ஆடில்என்? காவிரி ஆடில்என்?
கொங்கு
தண் குமரித்துறை ஆடில்என்?
ஓங்கு
மாகடல் ஓதநீர் ஆடில் என்?
எங்கும்
ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
கோடி
தீர்த்தம் கலந்து குளித்து, அவை
ஆடினாலும்
அரனுக்கு அன்பு இல்லையேல்
ஓடும்
நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி
வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.
என
அப்பரும் அருளிச்செய்தல் காண்க.
உள்ளத்தின்
உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின்
ஆரும் கலந்து அறிவார்இல்லை,
வெள்ளத்தை
நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில்
இட்டதோர் பத்தல்;உள்ளானே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை
---
உள்ளத்தில் உயிர்க்கு உயிராக உணரப்படும்
ஒருவனாகிய சிவபெருமானை, அவ்வுள்ளத்துள் அன்பு
இல்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில்
தீர்த்தங்கள் பலவற்றை நாடிச் செல்பவர், தீவினையாகிய
கிணற்றில் போகடப்பட்ட பத்தலே ஆவர். அதனால், அவர் உள்ளத்தில் அவன் விளங்குவனோ!
பத்தல் - நீர்முகக்கும் கருவி. `அன்பின்றித் தீர்த்தத்தில் முழுகுதலாலே
சிவனைப் பெறுதல் கூடுமாயின், நீர்ப் பத்தலும்
கூடச் சிவனை அடையும்` என நகையுண்டாகக் கூறியவாறு.
குண்டலங்கள்
பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள்
போலநீர் மனத்தின் மாசு அறுக்கிலீர்;
மண்டைஏந்து
கையரை மனத்து இருந்த வல்லீரேல்
பண்டைமால்
அயன்தொழப் பணிந்து வாழலாகுமே. --- சிவவாக்கியர்.
இதன்
பொருள் ---
உலகத்தில் ஆசாரியர்கள் என்று பேர் படைத்தவர்கள்
எல்லாம், காதுகளில் குண்டலங்களை
அணிந்துகொண்டு, திருக்குளங்களில்
உள்ள நீரில் மூழ்குகின்றீர்கள். குளத்தில் உள்ள தவளைகள் நாளும் அதிலேயே மூழ்கி
இருக்கின்றன அல்லவா. மனக் குற்றத்தை அறுக்க நீங்கள் முயவில்லையே. மண்டை ஓட்டினைத்
திருக்கையில் ஏந்தி உள்ள சிவபெருமானை, குற்றமற்ற உங்கள் உள்ளத்து இருத்தும் வல்லமை
பெற்றீரானால்,
திருமாலும், பிரமனும்
உங்களைப் பணியும்படி வாழ்தல் கூடும்.
செழுங்கள்ளி
நிறைசோலைத் தண்டலைநீள்
நெறியாரே! திருடிக் கொண்டே
எழும்
கள்ளர் நல்ல கள்ளர்! பொல்லாத
கள்ளர் இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர்
தம்முடன் கும்பிடும் கள்ளர்,
திருநீறு குழைக்கும் கள்ளர்,
அழும்
கள்ளர், தொழும் கள்ளர், ஆசாரக்
கள்ளர் இவர் ஐவர் தாமே. ---
தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே
--- வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளையுடைய தண்டலைநீள் நெறியாரே!, திருடிக்கொண்டு எழும் கள்ளர் நல்ல
கள்ளர் --- திருடிக்கொண்டு செல்லும் கள்ளரெல்லாரும் நல்ல கள்ளர்களே; இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் --- எனின், தீய கள்ளர் யாரென வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங்
கள்ளர் --- செல்வமுடைய கள்ளருடன் கும்பிடும்
கள்ளரும், திருநீறு குழைக்கும்
கள்ளர் --- திருநீறு குழைத்திடுங் கள்ளரும், அழும் கள்ளர் --- அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் --- தொழுகின்ற கள்ளரும்
(என), ஆசாரக் கள்ளர் ---
ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளராகிய, இவர் ஐவர் தாமே --- இந்த ஐவரும் ஆவர்.
ஆசாரக் கள்ளர் ஒழுக்கம் உடையார்போல நடித்து
மக்களை நம்பச் செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால்
ஒழுக்கமுடையோரும் மக்களால் நம்பப்படார். ஆகையால் வெளிப்படையாகத் திருடர் எனப்
பெயர் பெற்றோர் நல்லவராகவும், இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர்.
கொழுங்கள்ளர் --- செல்வம் இருந்தும் இல்லார்போல நடித்திடுவோர். நல்ல தோற்றமுடையராகக் காணப்பட்டு மக்களை
ஏமாற்றுவோர் எனினும் ஆம்.
கொழுங்கள்ளர் --- நன்னெறியில் வெறுப்புடையவராய்
இருந்தும் அதனை வெளியில் காட்டாது
மறைத்து ஓழுகுகின்ற வஞ்சகர். மற்றைய ஐவரும், நன்னெறியில் பற்று, வெறுப்பு இரண்டும் இல்லாதிருந்தும். மிகவும் பற்றுடையவர் போல நடிப்பவர்கள்.
காதிலே
திருவேடம்! கையிலே
செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே
தாழ்வடங்கள்! மனத்திலே
கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே
அயன்தேடும் தண்டலைநீள்
நெறியாரே! மனிதர் காணும்
போதிலே
மௌனம்! இராப் போதிலே
ருத்திராக்கப் பூனை தானே! --- தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
வாதிலே அயன் தேடும் தண்டலைநீள் நெறியாரே
--- திருமாலும் பிரமனும் தாமே பரம்பொருள் என்று தருக்குற்று வாது புரிந்த போது, அழல் பிழம்பாகத் தோன்றிய சிவபெருமானுடைய திருமுடியைக்
காண
பிரமன் தேடிய திருத்தண்டலை நீள்நெறி இறைவரே! காதிலே திருவேடம் --- காதில்
உருத்திராக்கம் அணிந்த சைவ வேடமும்,
கையிலே
செபமாலை --- கையில் செபமாலையும்,
கழுத்தில் மார்பின் மீதில் தாழ்வடங்கள் --- கழுத்திலும்
மார்பிலும் அணிந்துள்ள உருத்திராக்க மாலைகளையும் உடையோராய், மனத்திலே கரவடம் ஆம் வேடம் ஆமோ ---
உள்ளத்திலே வஞ்சகம் ஆகிய தோற்றம் தக்கது ஆகுமா? (இப்படி வஞ்சக வேடம் பூண்டோர் எல்லாம்), மனிதர் காணும் போதிலே மௌனம் --- மக்கள்
பார்க்கும் போது கண் மூடி, வாய் பேசா
மௌனியாய் இருப்பர், இராப்
போதிலே உருத்திராக்கப் பூனைதான் --- இரவிலே தாம் பூண்டிருந்து வேடத்திற்குப்
பொருந்தாத செயல்களைப் புரியும் இவர்கள் நிலையானது, பூனையைப் போன்று இருப்பதால், இவர்களை
உருத்திராக்கப் பூனை என்றே சொல்லலாம்.
No comments:
Post a Comment