திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
34 -- நிலையாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம்
திருக்குறளில், "வாய்
பேசமுடியாதபடி நாக்கை அடக்கி, விக்கல் மேலெழுவதற்கு
முன்னே,
வீடுபேற்றிற்கு
ஏதுவாகிய அறச் செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்" என அறிவுறித்தினார்
நாயனார்.
உடம்பானது எந்த நேரத்திலும் இறந்துபடுதல்
கூடும், அது எப்போது எவ்விதம் இறக்கும் என்பது அறிவதற்கு
இல்லை. அவ்விதம்
இறக்க நேரும் காலத்தில், நாவானது பேசுதற்கு இயலாமல் போய்விடும், அத்துடன் விடாது
வருகின்ற விக்கலானது வந்து சேரும். அக்காலத்தில் அறத்தைச் செய்யவேண்டும் என்று
எண்ணி இருந்தாலும், அதை வெளிப்படுத்தவோ, செய்யவோ இயலாது என்பதால், அந்த நிலை வரும்
முன்னதாகவே அறத்தைச் செய்து, உயிருக்கு ஊதியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும்.
திருக்குறளைக்
காண்போம்...
நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன், நல்வினை
மேல்சென்று
செய்யப் படும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் ---
உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே;
நல்வினை மேற்சென்று செய்யப்படும் ---
வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.
(மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும்
ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது
இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல்.
நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
பவனமாய்ச்
சோடையாய் நா எழாப்
பஞ்சுதோய்ச்சு அட்ட உண்டு,
சிவனதாள்
சிந்தியாப் பேதைமார்
போல நீ வெள்கினாயே,
கவனமாய்ப்
பாய்வதோர் ஏறு உகந்து
ஏறிய காள கண்டன்,
அவனது
ஆரூர் தொழுது உய்யலாம்,
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே. --- திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை ---
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை
எய்தி, நா எழாது உலர்ந்து, பிறர் பஞ்சில் தேய்த்துப்பால் முதலியவற்றைப்
பிழிய உண்டு மரணம் உறும் காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப்
போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே
நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை
ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று
தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
நெஞ்சே! மரணம் உறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும்
பாக்கியமில்லாத அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல்
ஏறிவந்தருளும் திருநீலகண்டப் பெருமானுடைய திருவாரூரைத்
தொழுது உய்யலாகும். மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத்
தொழப்பெறாதே கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே.
மீண்டும்போந்து தொழப்பெறலாம் என்பது கருத்து.
பவனம் --- காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது ‘மேல்மூச்சு வாங்குகின்றது’ என்ற வழக்கினாலும் அறியப்படும்.
நாக்கு உலர்ந்துபோம். சோடை --- வறட்சி, நாக்கு உலர்ந்து போதலோடு, அதன்கண் எய்தும் உணவை உட்செலுத்த எழமாட்டாமலும்
போம். நாவானது பால் முதலியவற்றை உட்செலுத்தமாட்டாது (வலிகுன்றியது) பற்றி, அருகில் இருப்பவர் அப்பாலையோ பிறிதோர் உணவையோ பஞ்சில் தோய்த்து உட்புகுமாறு
பிழிவர். அப் பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப் பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை
அறியாதே உட்செலுத்தப் பெறுவர்.
அட்ட --- பிழிந்து ஒழுக்க. கவனம் --- விரைவு.
கனைகொள்இருமல்
சூலைநோய்
கம்பதாளி குன்மமும்
இனையபலவும்
மூப்பினோடு
எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு
பைம்பொழில்
பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற
வேடத்தான்
வீரட்டானம் சேர்துமே. ---
திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
---
மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய் , நடுக்கம் , குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு
முன்னே , பனைகள் மிக்க பசிய
பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில் , இருவினைகளும்
அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக .
பொசியினால்
மிடைந்து, புழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால்
மீதூரப் பட்டே ஈட்டிப்
பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால்
அகப்பட்டு வீழா முன்னம்,
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால்
தொழுமடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை ---
செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு
இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான
உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு
பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும்
உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய
பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச்
சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
ஐயினால்
மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,
மையினால்
கண் எழுதி, மாலை சூட்டி,
மயானத்தில் இடுவதன்முன், மதியஞ் சூடும்
ஐயனார்க்கு
ஆளாகி, அன்பு மிக்கு,
அகங்குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்
கையினால்
தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை ---
கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன்
முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு
அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து
மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக்
கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
ஐ - கோழை. மிடறு - குரல். "ஆவியார்"
என்றது. நிலையாமை பற்றிய இழித்தல் குறிப்பு. கண்ணை மையினால் எழுதி என்க. இதனால், யாக்கை நிலையாமையை அறிந்து, சிவபிரானை விரைந்து தொழுதல் பணித்தருளப்பட்டது.
புறம்தி
ரைந்து நரம்பு எழுந்து
நரைத்து நீஉரை யால்
தளர்ந்து
அறம்பு
ரிந்துநி னைப்பது ஆண்மை
அரிது காண் இஃது
அறிதியேல்
திறம்பி
யாதுஎழு நெஞ்ச மேசிறு
காலை நாம்உறு வாணியம்
புறம்
பயத்து உறை பூத நாதன்
புறம்ப யம்தொழப்
போதுமே. --- சுந்தரர்.
இதன்
பொழிப்புரை
---
மனமே , தோல் திரைந்து , நரம்புகள் வெளித் தோன்றி , வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச்
செய்ய நினைப்பது பயனில்லாததாம் ;
இதனை
நீ அறிவையாயின் , நாம் இளமையிலே செய்து
ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக , புறத்திலே
அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச்
செல்வோம் ; என்னைப் பிறழ்வியாது , விரையப் புறப்படு .
புல்நுனிமேல்
நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே
செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான்
இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான்
எனப்படுத லால். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
புல் நுனிமேல் நீர்போல் --- புல் நுனியில் நிற்கும்
நீர்த்துளி போன்றது, நிலையாமை --- யாக்கை நிலையாமை
என்பது ; என்று எண்ணி --- என்று
கருதி, இன் இனியே --- இப்பொழுதே, செய்க அறவினை --- அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான்
--- இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான் --- உடனே தன் உறவினர்
அலறி அழும் படி இறந்துவிட்டான்,
எனப்படுதலால்
--- என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க.
புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல்
நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க.
மூப்புமேல்
வாராமை முன்னே அறவினையை
ஊக்கி
அதன்கண் முயலாதான் - நூக்கிப்
புறத்திரு
போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற்
கூறப் படும். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மூப்பு மேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி
அதன்கண் முயலாதான் --- கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன் உலகில்
அறச்செயலைத் தொடங்கி அதன்கண் முயன்று வராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்
இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும் --- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும்
நெட்டித் தள்ளப்பட்டு ‘வெளிப்புறத்தில் இரு' ‘ஒழிந்து போ' என்னுங் கொடுஞ் சொற்களுஞ்
சொல்லப்படுவான்.
புல்லறிவாளர் நல்லது செய்ய அறியாராய்ப்
பிறரால் இகழவும் படுவர்.
காலைச்
செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்
செய்வாரே தலைப்படுவார், -- மாலைக்
கிடந்தான்
எழுதல் அரிதால்மற்று என்கொல்
அறங்காலைச்
செய்யாத வாறு. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
அறத்தை --- அறத்தினை, காலை --- இளம் பருவத்திலேயே, செய்வோம் என்று --- செய்வோமென்று கருதி, கடைப்பிடித்து --- உறுதியாகக்கொண்டு, சாலச் செய்வாரே --- மிகச் செய்வோரே, தலைப்படுவார் --- உயர்ந்தோராவார், மாலை --- இரவில், கிடந்தான் --- படுத்தவன், எழுதல் --- காலையில் எழுவது, அரிது --- அருமை, (அங்ஙனமாகவும்), அறம் --- அறத்தினை, காலை --- இளம் பருவத்திலேயே, செய்யாதவாறு --- செய்யாதிருத்தல், என்கொல் --- என்ன அறிவீனமோ?
மூப்பொடு
தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற
அரசன் குறும்பு எறியும் --- ஆற்ற
அற
அரணம் ஆராய்ந்து அடையின் அஃது அல்லால்
பிற
அரணம் இல்லை உயிர்க்கு. ---
அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
மூப்பொடு தீ பிணி --- முதுமையையும் கொடிய
நோயையும், முன்னுறீஇ --- முன்னர்
அடைவித்து, கூற்ற அரசன் ---
எமனாகிய அரசன், பின் வந்து ---
பின்னர் அடைந்து, குறும்பு எறியும் ---
உடலாகிய அரணை அழிப்பான், ஆராய்ந்து ---
பலவற்றாலும் ஆராய்ந்து, ஆற்ற அற அரணம் ---
மிக்க அறமாகிய பாதுகாவலை, அடையின் அஃது அல்லால்
--- அடைந்தாலன்றி, உயிர்க்கு பிற அரணம்
இல்லை --- உயிர்களுக்குப் பாதுகாவலான இடம் வேறொன்றுமில்லை.
பசிமிகுந்த
பின்நெல்லை விதைப்பதுபோல்,
வீட்டில்தீ பற்றிக் கொண்டு
நசியும்போது
அதை அவிக்க ஆறுவெட்டல்
போலும்,போர் நடக்குங் காலை
விசிகநூல்
கற்கமுயல்வது போலும்,
கபம் மிஞ்சி விக்கிச் சிக்கி
இசிவுகொண்டு
சாங்காலத்து எப்படி நீ
அறம்புரிவாய் இதயப் பேயே. ---
நீதிநூல்.
இதன் பதவுரை ---
பேயாகிய எனது நெஞ்சே! இறுதிக்காலத்துக் கோழை
மிகுதிப்பட்டு, தொண்டை அடைத்துக் கை
கால் இழுத்து அறிவிழந்து அல்லல் படுவாய். அப்பொழுது எப்படிச் செயற்பாலதாம்
அறத்தினைச் செய்வாய். அப்பொழுது செய்யலாமென்று கருதுவது, ஒருவன் பசி மிகுந்தபின் உண்ண நெல்
விதைப்பதும், வீடு
தீப்பற்றிக்கொண்டு அழியும்போது தீயை அணைக்க ஆறு வெட்டுவதும், போர் நடக்கும்போது படைநூல் கற்பதும்
போன்று முடியாததாகும்.
நசிதல் - அழிதல்.
விசிகநூல் - படை நூல். கபம் - கோழை. இதயம் - நெஞ்சம்.
தோற்றம்
அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும்
துணையும் அறஞ்செய்க, --- மாற்று இன்றி
அஞ்சும்
பிணிமூப்பு அருங்கூற்று உடன் இயைந்து
துஞ்சு
வருமே துயக்கு. ---
பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
துயக்கு --- அறிவின் மயக்கம்,அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்று உடன்
இயைந்து --- அஞ்சத் தகும் நோய்,மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, மாற்று
இன்றி
துஞ்ச வரும் --- தடையில்லாது இறந்து படுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால் ---
தோன்றுதற்கு அருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஆற்றும் துணையும் அறம் செய்க --- ஒல்லும்
வகையான் அறவினையைச் செய்க.
No comments:
Post a Comment