027. தவம் - 04. ஒன்னார்த் தெறலும்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "தமது துறவு ஒழுக்கத்திற்குப் பகையாய் நின்று கெடுதி செய்தவரை அடக்குதலும், அந்த ஒழுக்கத்தினை விரும்பியவரை உயரச் செய்தலும், ஆகிய இரண்டையும், தவம் செய்வார் நினைப்பாராயின், அவரது தவ வலிமையால் அவ்விரண்டும் அவருக்கு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

     பகைவரை அடக்குதல் என்பது சாபம் இடுதலையும், உவந்தாரை ஆக்குதல் என்பது அனுக்கிரகம் புரிதலையும் குறித்தது.

     வசிட்டர் திரிசங்குவை நீசன் ஆக்கியதும், விசுவாமித்திரர் திரிசங்குவை விண்ணுலகில் ஒருவன் ஆக்கியதும், இன்னும் இது போன்ற பிறவும் எடுத்துக்காட்டு.

திருக்குறளைக் காண்போம்...

ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒன்னார்த் தெறலும் --- அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும்,

     உவந்தாரை ஆக்கலும் --- அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்

     எண்ணின் தவத்தான் வரும் --- தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.

      (முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் ஒரு பாடல்....

தமிழ்மணக்கப் பாடி அரன் தண்அளி சேர்மைந்தன்
அமண்அழிக்கும், தென்னவனை ஆக்கும் --- இமையளவில்
ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.                  

         அளி --- கருணை. மைந்தன் --- ஆளுடைய பிள்ளையார்.  
அமண் --- சமண் மதத்தை. தென்னவனை --- மங்கையர்க்கரசியாரின் கணவனாகிய கூன்பாண்டியனை.  ஆக்கும் --- ஓங்கச் செய்யும்.

     பாண்டியன் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருள் பெற்று முத்திப் பேற்றுக்கு அருகனானது அன்றி, தன்உடல் கூனும் நீங்கப் பெற்றமையால்,  ஆக்கும் என்பது மிகவும் பொருத்தம் உடையது ஆகும்.

     தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின. உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு சீதனமாக சோழராஜனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.

     அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள். அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து, சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள்.

     திருஞானசம்பந்தர் மறைக்காட்டு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை உன்னி, ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
         மிகநல்ல வீணைதடவி
 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்
         உளமே புகுந்த அதனால்,
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
         சனி பாம்பு இரண்டும் உடனே,
 ஆசு அறும் நல்லநல்ல, அவைநல்ல, நல்ல
         அடியாரவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார்.

     எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

     சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி,

 சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
     இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால்
     எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
     நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,
வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
     மேன்மையும் பெற்றனம் என்பார்"

     மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார்.

     சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசன் ஆணையால் வந்தது என்று உணர்ந்து,

    செய்ய னேதிரு வாலவாய் மேவிய
  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார்.

     “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது, சுரநோயாகி, பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.

     மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கம் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

     கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். திருஞானசம்பந்தர் அவர்க்கு அபயம் தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாய் உலகாண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.

ஆலமே அமுதமாக உண்டு, வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை, அடியேற்கு இன்று
ஞாலம்நின் புகழே ஆக வேண்டும், நான் மறைகள் ஏத்தும்
சீலமே! ஆல வாயில் சிவபெருமானே! என்றார்.    --- பெரியபுராணம்.

     பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க, சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு
     மாபெருந் தேவி! கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்
     என்று நீ பரிவு எய்திடேல்,
ஆனைமாமலை ஆதியாய
     இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு
     ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

         அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற்பீலியால் தடவ, நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி, புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள, நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

         பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். திருஞானசம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிட, அவை சாம்பலாயின. பின்னர், புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது, திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்தை ஓதி, ஏட்டினை ஆற்றில் இட்டார். அது உலகியல் நாட்டத்தை விடுத்தவர்கள், அதனை எதிர்த்து, அருளியலில் முந்துவது போல் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து வேகமாகச் சென்றது.  வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

     நெறியல்லா நெறி நின்று கொடுமைகளைப் புரிந்த சமணர்களை நீக்கியதும், அவர்வழி நின்று ஒழுகிய பாண்டிய மன்னனை சைவனாக்கி, பாண்டி நாட்டைக் காத்ததும், திருஞானசம்பந்தப் பெருமானுடைய தவ மகிமையால் விளைந்தவை.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்,
தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல்,
குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ?  --- கம்பராமாயணம், மந்திரப் படலம்

இதன் பதவுரை ---

     இழைத்த தொல் வினையையும் --- ஒருவன் செய்த பழமையான வினைகளின் பயன்களையும் ;  கடக்க எண்ணுதல் --- தாண்டிச் செல்லக் கருதுவது ;  தழைத்தபேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் --- மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால் உண்டாகுமானால், (அத்தவத்தினைச் செய்யாது) ;  குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி --- இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி ;
வேறு அழைத்த தீ விடத்தினை --- அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட கொடிய நஞ்சினை ;  அருந்தல் ஆகுமோ --- நுகர்தல் தகுமோ? (தகாது)

     அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது போலத் தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது கருத்து. தவத்தினைச் செய்யாமல் அரச வாழ்வை மேற்கொண்டிருத்தல்என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும்கூறியதனால் இது ஒட்டணி ஆகும்.
    

தேவர்என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்,செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர் தம்முளும்ஒருவன் அங்கு உழையனா முயலும் !
தாவில் மாதவம்அல்லது பிறிதொன்று தகுமோ?
                          ---  கம்பராமாயணம், ஊர்தேடு படலம்.

இதன் பதவுரை ---

     திருநகர்க்கு இறைவற்கு --- இந்த இலங்கை அரசனுக்கு; தேவர் என்பவர் யாரும் --- தேவர் என்று சொல்லப்படுபவர் அனைவரும்; ஏவல் செய்பவர் --- அடிமைப் பணி புரிவோர்; (ஏவல்) செய்கிலாதவர் எவர் என்னின் --- (அவனுக்கு) பணிபுரியாதவர் எவர் என்றால்; மூவர் தம்முளும் --- மும்மூர்த்திகளில்; ஒருவன் --- ஒருவனாகிய பிரமதேவன்;
அங்கு --- அந்த இலங்கையில்; உழையனா முயலும் --- பணிசெய்பவனாக முயல்கின்றான்; தா இல் மாதவம் அல்லது --- குற்றமற்ற பெருந்தவம் அல்லது; பிறிது ஒன்று தகுமோ --- வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...