திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
27 -- தவம்
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறளில், "இல்லறத்தையே
பற்றி நிற்பவர்கள், துறவறத்தை மேற்கொண்டவர்க்கு உணவும், மருந்தும், இருப்பிடமும்
உதவுதலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தனர் போலும்" என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
துறந்தார்க்குத்
துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றைய
வர்கள் தவம்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
மற்றையவர்கள் --- இல்லறத்தையே பற்றி
நிற்பார்,
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம்
மறந்தார்கொல் --- துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை
விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்.
( துப்புரவு -
அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம்
செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது
பெற்றாம்.)
"இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய
மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை" என்று முன்னர்த் திருக்குறளில் நாயானர்
காட்டினார்.
தவமானது வேண்டியதை வேண்டியபடியே அடைவிக்கும்
ஆற்றல் உடையது. அந்தத் தவத்தையும், தாம் செய்யும்
தானத்தின் மேல் உள்ள விருப்ப மிகுதியால் மறந்தார் போலும் என்றதால், தவத்திலும், தானம் உயர்ந்தது என்பது
பெறப்படும்.
"அறவோர்க்கு
அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு
எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து
எதிர் கோடலும் இழந்த என்னை"
என்னும்
சிலப்பதிகாரப் பாடல் வரிகள் இல்லறத்தார் கடமைகளுள் ஒன்றாக, துறவோர்க்கு
எதிர்தலைக் கூறுதல் காண்க.
தானத்திலும் தவம் மிக்கது என்று பரிமேலழகர்
தமது உரையில் காட்டினார்.
ஆயின், இது பட்டினத்தடிகளால் மறுக்கப்பட்டது
பின்வரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"ப் பாடலால் காணலாம்.
புண்ணிய!
புராதன! புதுப்பூங் கொன்றைக்
கண்ணி
வேய்ந்த ஆயிலை நாயக!
காள
கண்ட கந்தனைப் பயந்த
வாளரி
நெடுங்கண் மலையாள் கொழுந!
பூத
நாத! பொருவிடைப் பாக!
வேத
கீத! விண்ணோர் தலைவ!
முத்தி
நாயக! மூவா முதல்வ!
பத்தியாகிப்
பணைத்தமெய் யன்பொடு
நொச்சி
ஆயினுங் கரந்தை ஆயினும்
பச்சிலை
இட்டுப் பரவுந் தொண்டர்
கரு
இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை
மருத! திரிபு ராந்தக!
மலர்தலை
உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை
மனைவியை ஒக்கலை ஒரீஇ,
மனையும்
பிறவும் துறந்து, நினைவரும்
காடும்
மலையும் புக்கு, கோடையில்
கைம்மேல்
நிமிர்த்துக் காலொன்று முடக்கி,
ஐவகை
நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி
நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை
மூழ்கி நெடிது கிடந்தும்,
சடையைப்
புனைந்தும், தலையைப் பறித்தும்,
உடையைத்
துறந்தும், உண்ணாது உழன்றும்,
காயுங்
கிழங்குங் காற்று உதிர் சருகும்
வாயுவும்
நீரும் வந்தன அருந்தியும்,
களரிலும்
கல்லிலும் கண்படை கொண்டும்,
தளர்வுறும்
யாக்கையைத் தளர்வித்து
ஆங்கவர்,
அம்மை
முத்தி அடைவதற்காகத்
தம்மைத்
தாமே சாலவும் ஒறுப்பர்,
ஈங்கு
இவை செய்யாது, யாங்கள் எல்லாம்
பழுதின்று
உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது
உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல்
இயங்கும் முன்றில் அகத்தும்,
தண்டாச்
சித்திர மண்டப மருங்கிலும்,
பூவிரி
தரங்க வாரிக் கரையிலும்,
மயிற்பெடை
ஆலக் குயிற்றிய குன்றிலும்,
வேண்டுழி
வேண்டுழி ஆண்டாண்டு இட்ட
மருப்பின்
இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு
கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை
அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர்
கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உட்
பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை
யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல்
மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல்
அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொன்
தோரணத்தைச் சுற்றிய துகில் என
அம்மென்
குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும்
மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி
மேகலை மருங்கில் கிடப்ப
ஆடு
அரவு அல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட
வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணிஇயல்
கமுகை அலங்கரித்தது போல்
மணிஇயல்
ஆரங் கதிர்விரித்து ஒளிர்தர
மணிவளை
தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த
சாந்தின்மிசை விரித்து மீது இட்ட
உத்தரீ
யப்பட்டு ஒருபால் ஒளிர்தர
வள்ளை
வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத்து
அருகாத் தரளம் நிரைத்தாங்கு
ஒழுகி
நீண்ட குமிழ் ஒன்று பதித்துக்
காலன்
வேலும் காம பாணமும்
ஆல
காலமும் அனைத்தும்இட்டு அமைத்த
இரண்டு
நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதி
என மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை
அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல்
மடந்தையர் ஆகந் தோய்ந்தும்,
சின்னம்
பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை
அடிசில் வறிது இனிது அருந்தாது
ஆடினர்க்கு
என்றும் பாடினர்க்கு என்றும்
வாடினர்க்கு
என்றும் வரையாது கொடுத்தும்;
பூசுவன
பூசியும், புனைவன புனைந்தும்,
தூசின்
நல்லன தொடையிற் சேர்த்தியும்,
ஐந்து
புலன்களும் ஆர ஆர்ந்தும்,
மைந்தரும்
ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி
இவ்வகை
இருந்தோம்; ஆயினும் அவ்வகை
மந்திர
எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது,
சிந்தை
நின்வழி செலுத்தலின், அந்த
முத்தியும்
இழந்திலம், முதல்வ! அத்திறம்
நின்னது
பெருமை அன்றோ? என்னெனின்,
வல்லான்
ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா
ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின்
வழாஅக் கல்லேபோல்
நலத்தின்
வாழார்நின் நாமம்நவின் றோரே.
"யாங்கள்
இவ்வகை இருந்தேம், ஆயினும் அந்த
முத்தியும் இழந்திலம்`` என்றதனால், `தம்மைத் தாமே ஒறுப்பவர் அவ்வாறு
ஒறுப்பினும் அந்த முத்தியைப் பெறுகிலர்` என்பது
பெறப்பட்டது.
பல
வகையிலும் உடலை வருத்தி நோற்றல் மன ஒருக்கத்தின் பொருட்டே ஆகும். மனம் ஒருங்குதலின் பயன், மந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாது
சிந்தை சிவன்வழிச் செலுத்தலே ஆகலின்,
தம்மைத் தாமே ஒறுத்தும், அது செய்யாதார், அந்த முத்தியை அடைவாரல்லர்` எனவும், `முன்னைப் புண்ணிய மிகுதியால் இம்மையில்
மனம் ஒருங்கப் பெற்றோர் உடல் வருந்த நோலாதே, மாறாக, ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும் அந்த
முத்தியையும் இழவாது பெறுவர்` எனவும் `எவ்வாற்றானும் சிவனை நினைதலே முத்தி
சாதனம்` என்பதும், `எனவே, எதனைச் செய்யினும் அச்சா தனத்தைப்
பெறாதார் முத்தியாகிய பயனைப் பெறுமாறு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு.
அப்பர்
பெருமானும் இக்கருத்தை,
``கங்கை யாடில் என், காவிரி யாடில் என்`` என்பது முதலாக எடுத்துக் கூறி, ``எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே`` என நியமித்து அருளிச் செய்தார்.
அதனால் அவர், அங்குக் கங்கை ஆடுதல் முதலியவற்றையும், இங்கு இவ்வாசிரியர், ``மக்களை, மனைவியை, ஒக்கலை ஒரீஇக் காடும், மலையும் புகுந்து கடுந்தவம் புரிதலையும்
இகழ்ந்தார் அல்ல. மற்று, எவ்வாற்றானும் சிவனை நினைத்தலே சாதனம்
ஆதலையே வலியுறுத்தினர்.
அவைதிகருள் சமணரும் வைதிகரும் மீமாஞ்சகரும்
இங்குக் கூறியவாறு, `தம்மைத் தாம்
ஒறுப்பதே முத்தி சாதனம்` என்பர். அது பற்றியே இங்கு வைதிகர் புரியும்
தவங்களாகக் கூறிவந்தன பலவற்றுக்கு இடையே, தலையைப்
பறித்தல், உடையைத் துறத்தல், உண்ணாது உழலல், கல்லில் கண் படைகொள்ளல் ஆகிய சமணர்
தவங்களையும் கூறினார்.
கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம்முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர்
ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா
எறிதல், அவற்றைச்
செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள்.
`
கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில்
வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியிற் சேர்த்தல்` என்பது இவ்வுவமைகளால் விளக்கப்பட்டது.
சிவனை நினையாது பிறவற்றையெல்லாம் செய்வோர்
அச்செயலுக்கு உரிய பயன்களைப் பெறுதலோடு ஒழிவதல்லது, பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்` என்பது கருத்து.
இதனை,
பரசிவன்
உணர்ச்சி இன்றிப்
பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய
துயர்க்கு ஈறு எய்தி
வீடுபேறு அடைதும் என்றல்,
உருவம்
இல் விசும்பின் தோலை
உரித்து உடுப்பதற்கு ஒப்பு என்றே
பெருமறை
பேசிற்று என்னில்
பின்னும்ஓர் சான்றும் உண்டோ?
எனக்
கந்த புராணத்திலும்
மானுடன்
விசும்பைத் தோல்போல்
சுருட்டுதல் வல்லன் ஆயின்,
ஈனம்
இல் சிவனைக் காணாது
இடும்பை தீர் வீடும் எய்தும்;
மானமார்
சுருதி கூறும்
வழக்கு இவை ஆதலாலே
ஆன்அமர்
இறையைக் காணும்
உபாயமே அறிதல் வேண்டும்
எனக்
காஞ்சிப் புராணத்திலும் கூறப்பட்டது காண்க.
மேலும் இல்லறத்தின் சிறப்பு குறித்தும், துறவிகளும்
இவர்க்குச் சமானம் ஆகார் என்பது குறித்தும், பின்வரும் பாடல்
கூறுவது காண்க...
தந்தை,தாய், சற்குருவை, இட்டதெய் வங்களை,
சன்மார்க்கம் உள மனைவியை,
தவறாத சுற்றத்தை, ஏவாத மக்களை,
தனைநம்பி வருவோர்களை,
சிந்தைமகிழ்வு
எய்தவே பணிவிடைசெய்வோர்களை,
தென்புலத்தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம்
செய்கடனை என்றும்இவை பிழையாது
தான் புரிந்திடல் இல் லறம்;
சாருநலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரியாயிடார்!
அந்தரி
உயிர்க்கெலாம் தாய்தனினும் நல்லவட்கு
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! ---
அறப்பளீசுர சதகம்.
இதன்
பதவுரை ---
அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும்
நல்லவட்கு
அன்பனே
---- பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!,
அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள் என்பான் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தந்தைதாய் சற்குருவை --- தந்தை
தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை --- வழிபாடு
தெய்வங்களையும், சன்மார்க்கம் உள
மனைவியை --- நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை --- நீங்காத
உறவினரையும், ஏவாத மக்களை ---
குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை
நம்பி வருவோர்களை --- தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை
செய்வோர்களை --- மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை ---
தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை ---
குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை ---
அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும்,
தேனுவை
--- பசுக்களையும், பூசுரர் தமை ---
அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம்
செய்கடனை --- எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை --- (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது --- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் --- ஒருவன்
இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர்
ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் --- பொருந்திய நன்மையையுடையராகிய
துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.
No comments:
Post a Comment