035. துறவு - 02. வேண்டின் உண்டாக






திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     புறமாகிய செல்வத்திலும், அகம் ஆகிய உயிர் நின்ற உடம்பிலும் உண்டாகும் பற்றினை, அவற்றின் நிலையாமை கருதி விடுதல் துறவு எனப்பட்டது. எனவே, நிலையாமை என்னும் அதிகாரத்தின் பின்னர் இது வைக்கப்பட்டது.

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "எல்லாப் பொருள்களையும் துறப்பதால், ஒருவனுக்கு இப் பிறப்பில் உண்டாகக் கூடிய பலவிதமான இன்பங்களை ஒருவன் விரும்பினால், காலம் உண்டான போதே, அப்பொருள்களின் மீது வைத்த பற்றினை விட்டுவிட வேண்டும்" என்கின்றார் நாயனார்.

     இன்பங்கள் ஆவன --- துறந்த அப் பொருள் காரணமாக மனமும், வாக்கும், காயமும் அலையாது நிற்றலாலும், அந்த திரிகரணங்களும் நல்வழிப் படுதலாலும் வரும் இன்பங்கள். "யாதனின் யாதனின் நீங்கியான்" என்று முன்னர்த் திருக்குறளில் நாயனார் அறிவுறுத்தியது காண்க.

     "உண்டாகத் துறக்க" என்றது இளமைப் பருவம் உள்ளபோதே துறந்தால், அதனால் வரும் இன்பங்களை நெடுங்காலம் அனுபவித்து இருப்பான் என்பது பற்றி. "காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்" என்று மணிவாசகப் பெருமானார் அறிவுறுத்தியது காண்க. இதனால், "இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை" என்னும் பெருநிலை வாய்க்கும்.

திருக்குறளைக் காண்போம்...


வேண்டின் உண்டாகத் துறக்க,  துறந்தபின்
ஈண்டு இயல் பால பல.     

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல,

     வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க.

         (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.)


     பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க....

நரைவரும் என்று எண்ணி நல் அறிவாளர்
குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்.          ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     நல் அறிவாளர் --- பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி --- மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் --- இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரை தீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே --- குற்றம் நீங்குதல் இல்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் --- மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

         இளமைப் பருவத்தை அறவழியில் பயன்படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள்.


வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக்
குடி, குலம் என்று ஐந்தும் குறித்து --- முடியா,
துளங்கா நிலைகாணார், தொக்குஈர் பசுவால்
இளங்கால் துறவா தவர்.        ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     வடிவு --- உருவம், இளமை --- இளம்பருவம், வாய்த்த வனப்பு --- பெற்ற அழகு. வணங்கா குடி --- தாழாத குடி, குலம் --- (தாழாத) குலம், என்ற ஐந்தும் --- என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும், குறித்து --- தாம் எண்ணி, முடியா --- நுகர்ச்சி முடியப் பெற்று, துளங்கா நிலை காணார் --- அழியாத நிலையைக் காணமாட்டார். (ஆதலால்) இளங்கால் --- இளம் பருவத்திலேயே, துறவாதவர் --- நீங்கித் தவஞ் செய்யாதவர், தொக்கு --- கூடி, ஈர் --- பாரத்தை இழுக்கின்ற, பசு --- எருதோடு ஒப்பர்.

         வடிவும் இளமையும் வாயத்த வனப்பும், தாழ்வில்லாத குடிப்பிறப்பும், நற்குலமும என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் தாங்குறித்த நுகர்ச்சி நுகர்ந்து முடியுமளவும் நிற்கும் நிலைமை யாவரும் காணமாட்டார். ஆதலால் கூடி ஒரு பாரத்தை இழுக்கும் எருதோடு ஒப்பர், இளங் காலத்திலே துறவாதார்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...