திருக்குறள்
அறுத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
28 -- கூடா ஒழுக்கம்
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறளில், "மன வலிமை
இல்லாததால்,
தவக்
கோலத்தில் மறைந்து இருந்து, தவம் அல்லாதவற்றைச் செய்தல், வேடன் புதலில்
மறைந்து இருந்து பறவைகளைப் பிடித்தால் போலும்" என்கின்றார் நாயனார்.
தவம் அல்லாதவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தனக்கு
வசமாகும்படிச் செய்தல். பிறர் பொருள் தன்னிடத்தில் வந்து சேருமாறு செய்தல் ஆகிய
பாவகாரியங்களைச் செய்தல்.
திருக்குறளைக்
காண்போம்...
தவம்
மறைந்து அல்லவை செய்தல்,
புதல்
மறைந்து
வேட்டுவன்
புள் சிமிழ்த்து அற்று.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
தவம் மறைந்து அல்லவை செய்தல் --- அவ்
வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்,
வேட்டுவன் புதல் மறைந்து புள்
சிமிழ்த்தற்று --- வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப்
பிணித்தாற்போலும்.
( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத்
தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில்
உவமையான் அறிக.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
என்றும்
இறைவன் அடியார் பொருள் என்று
நின்று
ஒழுகும் மெய்ப் பொருளின் நேரான் போய் --- அன்று
தவம்
மறைந்து அல்லவை செய்தல்,
புதல்
மறைந்து
வேட்டுவன்
புள் சிமிழ்த்து அற்று.
மெய்ப்பொருள் ---
மெய்ப்பொருள் நாயனார். நேரான் --- பகைவன்
ஆகிய முத்தநாதன். அடியார் வேடமே மெய்ப்பொருள் என்று எண்ணி வந்த மெய்ப்பொருளாரை
முத்தநாதன் என்னும் பகைமன்னன் பலமுறை போரில் வெல்ல முடியாமல் புறகிட்டு ஓடினான்.
இறுதியில் அவன் சிவனடியார்போல் மெய்யெல்லாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டி, கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி, பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்து, தன்னை மெய்ப்பொருளார் வணங்கும்போது, அவரை வாளால் குத்திக் கொன்றான் என்பது
பெரியபுராணத்தில் கண்ட வரலாறு.
மெய்ப்பொருள் நாயனார்
வரலாறு
மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத்
திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக் குறுநில
மன்னர் குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்
குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடு விளையாதபடி
குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை இட்டார்.
‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு
வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து,
நிறைவு
காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறு ஒழுகி வந்த மெய்பொருள் நாயனாரிடம்
பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை
மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால்
மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன், வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த
மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும்
புத்தகமுடிப்பு ஒன்றைக் கையில் ஏந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான்.
வாயிற்காவலர் சிவனடியார் என வணங்கி, உள்ளே போகவிட்டனர்.
பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான
தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத்
தடுத்தான். ‘வஞ்சமனத்தவன் ஆன அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்து இருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக் கூடாதெனவும் கூறி
உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கே இருந்த அரசி
அடியாரின் வரவு கண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்
எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்
வேடத்தில் இருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப்
காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான
அவ்வேடத்தான் தனி இடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.
மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர்
ஆசனமளித்து அமரச் செய்தபின், தாம் தரைமேல்
அமர்ந்து ஆகமப் பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத் தீயவன் புத்தகம் அவிழ்ப்பான்
போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை
செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று
தொழுது வென்றார். முத்தநாதன் உள்ளே நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த
தத்தன், இக்கொடுரூரச் செயலைக்
கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம்
பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா! நமரே காண்” என்று
தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன்
இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான்.
“இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டு வா” என்று
மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச்
சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத்
திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந்
தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு
வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்
நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக
நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்”
எனத் திடம்படக் கூறி, அம்பலத்தரசின்
திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள்
நாயனாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது
கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..
சந்நியாசம்
புனைந்தே சானகியைத் தான்கவர்ந்தான்
முன்இலங்கை
வேந்தன், முருகேசா! - துன்னும்
தவமறைந்து
அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த்து அற்று.
இதன்
பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, முன் --- முன்னாளிலே, இலங்கை வேந்தன் --- இலங்கைக்கு அரசனாகிய
இராவணன், சந்நியாசம் புனைந்தே ---
பொய்யான துறவுக் கோலத்தை மேற்கொண்டு, சானகியைக்
கவர்ந்தான் --- சீதாபிராட்டியைப் பற்றிக்கொண்டு சென்றான். துன்னும் --- பொருந்தும், தவம் மறைந்து --- தவக்கோலத்திலே ஒளிந்து
நின்று, அல்லவை செய்தல் ---
பொல்லாத காரியங்களைப் புரிதல், புதல் மறைந்து ---
புதரிலே மறைந்து நின்று, வேட்டுவன் ---
வேடனானவன், புள் சிமிழ்த்து
அற்று --- பறவைகளைப் பிடித்தலைப் போன்றதாம்.
இலங்கை வேந்தனாகிய இராவணன், துறவுக் கோலம் பூண்டு சீதாபிராட்டியைக்
கவர்ந்துகொண்டு சென்றான். ஒருவன் தவக் கோலத்திலே மறைந்து நின்றுகொண்டு
அக்கோலத்திற்கு ஏலாத காரியங்களைச் செய்தல், வேடனானவன் புதரிலே மறைந்து நின்று
பறவைகளைப் பிடிப்பது போன்றது என்பதாம்.
இராவணன் கதை
இலங்கை வேந்தனாகிய இராவணன்
சீதாபிராட்டியினுடைய அழகு முதலியவைகளை அறிந்தான். நேரே சென்று இராமபிரானை வென்று
சீதையைக் கவர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் அவனுக்கு இல்லை. மாரீசனை மாயமானாகச் செய்து
முன்னர் அனுப்பிவிட்டுத் தான் பிறகு இலட்சுமணனும் இல்லாத சமயத்திலே பொய்க் கோலத்
துறவியாகச் சென்று சீதையைக் கவர்ந்து கொண்டு சென்றான். இராவணனுடைய அக்களவு
வேலையைப் பிறகு பலரும் இகழ்ந்தனர்.
இளையவன்
ஏகலும், இறவு பார்க்கின்ற
வளை
எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான்,
முளை
வரித் தண்டு ஒரு மூன்றும், முப்பகைத்
தளை
அரி தவத்தவர் வடிவும் தாங்கினான்.
ஊண்
இலனாம் என உலர்ந்த மேனியன்,
சேண்
நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்,
பாணியின்
அளந்து இசை படிக்கின்றான் என,
வீணையின்
இசைபட வேதம் பாடுவான்.
பூப்
பொதி அவிழ்ந்தன நடையன்; பூதலம்
தீப்
பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன்;
காப்பு
அரும் நடுக்கு உறும் காலன்; கையினன்;
மூப்பு
எனும் பருவமும் முனிய முற்றினான்.
தாமரை
மணிதொடர் தவத்தின் மாலையன்,
ஆமையின்
இருக்கையன், வளைந்த ஆக்கையன்,
நாம
நூல் மார்பினன், நணுகினான் அரோ
தூமனத்து
அருந்ததி இருந்த சூழல்வாய்.
எனவரும்
கம்பராமாயணப் பாடல்கள் காண்க.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
வேட
நெறிநில்லார் வேடம்பூண்டு என்பயன்?
வேட
நெறிநிற்போர் வேடம் மெய் வேடமே?
வேட
நெறிநில்லார் தம்மை, விறல்வேந்தன்
வேட
நெறி செய்தால் வீடு அது ஆகுமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை ---
யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்கு உரிய கோலம்
இன்றியமையாது. ஆயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்கு
உரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்? செயலில் நிற்பாரது கோலமே அதனைக்
குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன
செய்வானாயின், அதுவே அவனுக்கு
உய்யும் நெறியும் ஆய்விடும்.
பலவகைக் கடவுள்
நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக்
கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார்.
ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின், நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும்
ஆகலானும், அன்ன போலிகள்
தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை
விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தால்
பயன் இன்று` என்பதை,
வானுயர்
தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி
குற்றப் படின்.
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையே அன்றித்
தீமையும் பெருகுதலை,
தவம்மறைந்து
அல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த் தற்று.
வலியில்
நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல்
போர்த்துமேய்ந் தற்று
எனவும்,
வேடம்
புனையாராயினும், உண்மையில் நிற்பார்
உயர்ந்தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும்
நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த
தொழித்து விடின்.
எனவும்
திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
இவர்நிலை
இதுவே ஆக,
இலங்குவேல் தென்னன் ஆன
அவன்நிலை
அதுஆம் அந்நாள்
அருகர்தம் நிலையது எண்ணில்
"தவம்
மறைந்து அல்ல செய்வார்"
தங்கள் மந்திரத்தால் செந்தீ
சிவநெறி
வளர்க்க வந்தார்
திருமடம் சேரச் செய்தார். --- பெரியபுராணம், திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
---
இவ்விருவர் தம் நிலை இவ்வண்ணமாகவும், விளங்கும் வேல் ஏந்திய பாண்டியனான அவன்
நிலை அதுவே ஆகவும், அன்றைய நாளில்
சமணர்களின் நிலையாது என்றால், தவ வேடத்துள் மறைந்து
நின்று தீய செயல்களைச் செய்பவர்களான அவர்கள், தம் மந்திரத்தால், சிவநெறி வளர்க்கத் தோன்றியுள்ள
ஞானசம்பந்தரின் திருமடத்தில் செந்தீ சேர்தற்குரிய செயலைச் செய்தனர்.
`தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று\'
(குறள், 274) எனும் திருக்குறள்
நினைவு கூருமாறு `தவம் மறைந்து அல்லவை
செய்வார்' எனும் தொடர்
அமைந்துள்ளது.
"தவம்என்று
பாய்இடுக்கி,
தலை பறித்து நின்று உண்ணும்
அவம்ஒன்று
நெறி வீழ்வான்"
வீழாமே அருளும் எனச்
சிவம்ஒன்று
நெறி நின்ற
திலகவதியார் பரவப்
பவம்ஒன்று
வினை தீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார். ---
பெரியபுராணம்.
அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
தவத்தை மேற்கொண்டதாக எண்ணிக் கொண்டு, பாயை உடுத்தியும், தலைமயிரைப் பறித்தும், நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற
அவநெறியாய சமண நெறியில் விழுந்த என் தம்பியை, அவ்வாறு விழாமல் அருள் செய்ய வேண்டும்` என்று சிவத்தையே சார்ந்து நிற்கும்
திருநெறியில் வாழும் திலகவதியார் வேண்ட, பிறவி
வயப்பட்டு உழலும் வினைகளைத் தீர்ப்பவரான சிவபெருமானும் அதனைத் திருவுள்ளம்
பற்றுவாராய்,
அவர்நிலைமை
கண்டதற்பின்
அமண்கையர்
பலர்ஈண்டிக்
கவர்கின்ற
விடம்போல்முன்
கண்டு அறியாக்
கொடுஞ்சூலை
இவர்தமக்கு
வந்தது இனி
யாதுசெயல் என்று
அழிந்தார்
"தவம்என்று
வினைபெருக்கிச்
சார்பு அல்லா நெறிசார்வார்". --- பெரியபுராணம், அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
தருமசேனரின் நிலையைக் கண்ட அளவில், தவம் என்று கூறிக் கொண்டு, தீவினையையே பெருக்கி, நல்ல பற்றுக்கோடற்ற, சமண நெறியினைச் சார்ந்த கீழ்மக்கள்
பலரும் கூடி, `உயிரைக் கவரும்
நஞ்சைப் போல், முன் எங்கும், எவரும் கண்டறியாத இக் கொடிய சூலை நோய்
இவருக்கு வந்ததே; இனி என் செய்வோம்` என்று மனம் வருந்தினர்.
No comments:
Post a Comment