திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
36 -- மெய் உணர்தல்
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம்
திருக்குறளில், "பிறப்பிற்கு
முதற்காரணமாக உள்ள அஞ்ஞானமானது கெட்டு ஒழிய, முத்திக்கு நிமித்த
காரணமாக உள்ள மெய்ப்பொருளைக் காண்பதே ஒருவனுக்கு மெய்யுணர்வு ஆகும்"
என்கின்றார் நாயனார்.
ஐவகைக் குற்றங்கள் --- அவிச்சை என்னும்
அஞ்ஞானம், அகங்காரம், அவா, ஆசை, கோபம். இவற்றுள்
அஞ்ஞானமே ஏனைய நால்வகைக் குற்றங்களுக்கும் காரணமாக இருப்பதால், அதுவே
பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமை ஆகியது.
எல்லாவற்றிலும் சிறந்ததாகையால், வீடுபேறு, சிறப்பு
எனப்பட்டது.
செம்பொருள் --- தோற்றம் அழிவு இல்லாமையால், என்றும் உள்ளதாய், பெருமையால் தன்னை
ஒன்றும் கலத்தல் இல்லாததால், தூய்மை உடையதாக, எல்லாப் பொருள்களிலும்
கலந்து நிற்கின்றதால் முதற்பொருளாக உள்ளது.
நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தில், "சி"காரம்
என்பது,
செம்பொருள்
ஆகிய சிவத்தைக் குறிக்கும்.
"சிவனருள் ஆவி திரோதம்மலம் ஐந்தும் அவன்
எழுத்து அஞ்சின் அடைவாம்" என்பது மெய்கண்ட சாத்திரம்.
சி
--- சிவம்.
வ
--- அருள்
ய
--- ஆன்மா.
ந
--- திரோதம்.
ம
--- மலம்.
திருவைந்தெழுத்து மந்திரத்தை சிகாரம்
முதலாகக் கொண்டு (சிவாயநம) நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய் நிற்பது
புலனாகும்.
"சிவ"
என்பது முதற்கூறு.
"ய"
என்பது இரண்டாம் கூறு
"நம"
என்பது மூன்றாம் கூறு
"சிவ" என்பது பதியையும் அதன்
அருளாற்றலையும், "ய" என்பது
பசுவையும், "நம" என்பது
பாசத்தையும் குறிக்கும். முதற் கூறில் உள்ள "சி"காரம் சிவனையும் "வ"
என்பது அவனது அருட்சத்தியையும் குறிக்கும். மூன்றாம் கூறில் உள்ள "ம"காரம்
ஆணவத்தையும், "ந"காரம் திரோதான
சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதன்
வழிபட்டு நிற்றலின் அதனுள் அடங்கும். நடுவில் உள்ள "ய" ஆகிய உயிர்
இருபக்கமும் சென்று பாசத்தோடும் பதியோடும் நிற்கும் தன்மையுடையது.
யகாரம் ஆகிய உயிர் பின்னுள்ள மகாரம் ஆகிய ஆணவ
மலத்துள்பட்டு அறியாமையில் அழுந்தியும், நகாரம்
ஆகிய இறைவனது திரோதான சத்தியால் செலுத்தப்பட்டு மாயை கன்மங்களைப் பொருந்தி உலக
நுகர்ச்சியில் அழுந்தியும் வரும். எனவே, நம
ஆகிய ஈரெழுத்துக்களும் முறையே சகல நிலையையும் கேவல நிலையையும் குறிக்கின்றன. உயிர்
நம வில் அழுந்தியிருக்கும் நிலையே கட்டு நிலையாகும். ய ஆகிய உயிருக்கு முன்னுள்ள
சி, வா என்பவை தந்தையும்
தாயுமாய் உள்ள சிவமும், அதனைப் பிரியாத
திருவருளும் உயிருணர்வில் உடன் கலந்திருப்பதை உணர்த்தும். உயிர் தனக்கு முன்னாக
உள்ள அம்மையப்பரைத் தன் அறிவின்கண் காண முற்படாமல், உலகத்தை மட்டுமே அறிந்து அனுபவித்து
வருகிறது. உயிர் நம வை விடுத்து,
வா
ஆகிய திருவருளைச் சார்ந்து நிற்பதே சுத்த நிலையாகும். திருவருள் உயிரைச்
சிவத்திடம் சேர்ப்பிக்கும். உயிர் சிவத்தில் அழுந்தி நிற்பதே இன்புறு நிலையாகும்.
எனவே, நாயனார் "செம்பொருள்" என்றது சிவத்தைக்
குறிக்கும். "எம் பொருளாகி எமக்கு அருள் புரியும் செம்பொருள் ஆகிய சிவமே
சிவமே" என்று வள்ளல்பெருமான் ஓதி உள்ளது அறிக.
செம்பொருளைக் காணுதலாவது, உயிர் தனது அஞ்ஞானத்தில் இருந்து நீங்கி, செம்பொருளோடு
ஒற்றுமைப்பட்டு இருக்க, அதனை இடைவிடாது பாவித்தல்.
உயிர் உடம்பை விட்டு நீங்கும் காலத்து, அவ்வுயிரால் பாவிக்கப்பட்ட பொருளாக அது
பிறக்கும் என்பது சாத்திரங்களில் காட்டப்பட்டது. ஆதலால், உயிர் உடலை விட்டுப்
போகும் காலத்தில், பிறப்புக்குக் காரணமான பாவனை கெடுதல் பொருட்டு, செம்பொருளையே
பாவித்தல் வேண்டும்.
அந்தப் பாவனாயானது, சாகும் போது எழவேண்டுமானால், அது முன்னரே
பழக்கப்பட்டு இருக்கவேண்டும். எனவே, உடம்போடு கூடி உள்ளபோதே பாவனை வேண்டும் என்பது
பெறப்படும்.
அதற்கு உபாயம் பின்வரும் பாடல்களில்
கூறப்பட்டுள்ளது காண்க.
என்ன
புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்னம்
நீபுரி நல்வினைப் பயன்இடை
முழுமணித் தரளங்கள்
மன்னு
காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாய்ஆரப்
பன்னி
ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே. ---
திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
---
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு
சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக்
கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த
இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே ! நீ ! எத்தகைய புண்ணியத்தைச்
செய்துள்ளாய் ?
வாயாரப் பன்னுதல் பாடுதல் - வாக்கின் செயல்.
ஆதரித்தல் - மனத்தின் தொழில். ஏத்துதல் - காயத்தின் செயல்.
சலம்பூவொடு
தூபம் மறந்துஅறியேன்
தமிழோடுஇசை பாடல்
மறந்துஅறியேன்
நலம்தீங்கிலும்
உன்னை மறந்துஅறியேன்
உன்நாமம்என் நாவில்
மறந்துஅறியேன்
உலந்தார்தலை
யில்பலி கொண்டுஉழல்வாய்
உடல்உள்உறு சூலை தவிர்த்துஅருளாய்
அலந்தேன்அடி
யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை
அம்மானே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
திரு அதிகை அம்மானே! இறந்தவர் மண்டை ஓட்டில்
பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப்
போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை
மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும்
உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன்.
தேன்உடை
மலர்கள் கொண்டு
திருந்துஅடி பொருந்தச் சேர்த்தி
ஆன்இடை
அஞ்சும் கொண்டே
அன்பினால் அமர ஆட்டி
வான்இடை
மதியம் சூடும்
வலம்புரத்து அடிகள் தம்மை
நான்அடைந்து
ஏத்தப் பெற்று
நல்வினைப் பயன்உற்றேனே. ---
அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து
தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால்
அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய
பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து
நல்வினைப் பயனைப் பெற்றவனானேன் .
எந்த
மாதவம் செய்தனை நெஞ்சமே!
பந்தம்
வீடுஅவை ஆய பராபரன்
அந்தம்
இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை
உள்ளும் சிரத்து உளும் தங்கவே. ---
அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
நெஞ்சமே ! பந்தமும் , வீடுமாயிருக்கும் தேவதேவனாகிய
திருவாரூர்ப் பெருமானுக்குரிய முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி
சிந்தையினும் , சிரத்தினும்
தங்குதற்கு எவ்வளவு பெருந்தவம் நீ செய்தனை ? ( திருவாரூர் , அரநெறியை உள்ளத்திற் கொண்டு மறவாது
உணர்தலும் தலையால் தொழலும் நற்றவத்தார்க்கு அன்றி எய்தொணாது என்றபடி ).
திண்தேர்நெடு
வீதி இலங்கையர்கோன்
திரள்தோள்இரு
பஃதும்நெ ரித்து அருளி
ஞெண்டு
ஆடு நெடுவயல் சூழ்புறவில்
நெல்வாயில் அரத்துறை
நின்மலனே
பண்டேமிக
நான்செய்த பாக்கியத்தால்
பரஞ்சோதி நின் நாமம்
பயிலப்பெற்றேன்
அண்டா
அமரர்க்கு அமரர் பெருமான்
அடியேன்உய்யப்
போவதுஒர் சூழல்சொல்லே.
--- சுந்தரர்.
இதன்
பொழிப்புரை ---
திண்ணிய தேர்களை உடைய , நீண்ட தெருக்களை யுடைய இலங்கையில்
உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முன்னர் நெரித்துப்
பின்னர் அவனுக்கு அருள்பண்ணி , நண்டுகள் உலாவுகின்ற
நீண்ட வயல் சூழ்ந்த , முல்லை நிலத்தையுடைய
திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத்
தலைவனே, நான் முற் பிறப்பிற்
செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல் லும் பேற்றினைப் பெற்றேன். இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய
ஒரு வழியினைச் சொல்லியருள்.
நானேயோ
தவம் செய்தேன்,
சிவாயநம எனப் பெற்றேன்,
தேனாய்
இன் அமுதமுமாய்த்
தித்திக்கும் சிவபெருமான்
தானே
வந்து, எனது உள்ளம்
புகுந்து, அடியேற்கு அருள்செய்தான்,
ஊன்ஆரும்
உயிர் வாழ்க்கை
ஒறுத்து அன்றே வெறுத்திடவே.--- திருவாசகம்.
இதன்
பொழிப்புரை ---
தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற
சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என்
மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய
எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப்
பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?.
பிறந்து
மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின்
சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற
கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று
தீர்ப்ப திடர். --- காரைக்கால்
அம்மையார்.
இதன்
பொழிப்புரை ---
எம்பெருமானே, வானோர் வணங்கியதும், அவர்களுக்கு அஞ்சேல் என்று அருளி, நஞ்சம் உண்டு நீலகண்டனாக நிற்கும் நீ, அடியேன் இம்மண்ணுலகில் தோன்றி மொழி
பயிலும் பருவத்திலேயே நின் திருவடிக்காம் அன்பு பெருகி, நின் திருவடியை அடைந்தேன். என் பிறவித்துயர் நீங்குவது எந்நாள்.
பின்வரும்
பெரியாழ்வார் திருமொழிகளையும் காண்க...
துப்பு உடையாரை
அடைவது எல்லாம்,
சோர்விடத்துத் துணை ஆவர் என்றே,
ஒப்பு இலேன் ஆகிலும், நின் அடைந்தேன்,
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,
எய்ப்பு என்னை வந்து
நலியும் போது
அங்குஏதும் நான் உன்னை நினைய மாட்டேன்,
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைத்தேன்,
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே.
எல்லைஇல் வாசல்
குறுகச் சென்றால்,
எற்றி நமன்தமர் பற்றும்போது,
நில்லுமின் என்னும்
உபாயம் இல்லை,
நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன்
நாமம் எல்லாம்
சொல்லினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லல் படாவண்ணம்
காக்க வேண்டும்,
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே.
தண்அனவு இல்லை நமன்
தமர்கள்
சொலக் கொடுமைகள் செய்ய நிற்பர்,
மண்ணொடு நீரும்
எரியும் காலும்
மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்,
எண்ணலாம் போதே உன்
நாமம் எல்லாம்
எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே! நீ எனைக்
காக்க வேண்டும்,
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே.
திருக்குறளைக்
காண்போம்....
பிறப்பு
என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள்
காண்பது அறிவு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பிறப்பு என்னும் பேதைமை நீங்க ---
பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட,
சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு
--- வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்
உணர்வாவது.
(பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.
ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே
பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்
கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால்
தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற
முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக்
காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும்
காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா
ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு
அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல்
வேண்டுதலான், அதனை முன்னே
பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
கருஆர்பிறப்பு
என்னும் பேதைமை நீங்கச்
சிறப்புஎன்னும் செம்
பொருள் காண்பது அறிவு என்று ஓதினரால்
பொருள் காண்பது அறிவு என்று ஓதினரால்
திருப்புல்லைநகர்
அருண்மால் சிறப்பு என்னுஞ் செம்பொருள்
அருண்மால் சிறப்பு என்னுஞ் செம்பொருள்
வாழ்வுடைத்து ஆதலினால்
வருபேரறிஞர் கண்டு ஏழ்பிறவிப்
வருபேரறிஞர் கண்டு ஏழ்பிறவிப்
புன்மை மாற்றுவரே.
இதன்
பொருள் ---
கருவிலே பொருந்தி வருவதாகிய பிறப்புக்குக்
காணரமாய் உள்ள அஞ்ஞானமானது நீங்க, சிறந்த முத்தி நிலையை அருள்வதாகிய செம்மையான
பொருளைக் காண்பதே உண்மை அறிவு ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளதால், திருப்புல்லாணி
என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளி உள்ள அருள் வடிவாகிய திருமால் என்னும்
செம்பொருளை அடையும் வாழ்வினை எண்ணி, அறிஞர்கள், எழுவகையாகிய பிறவிகளால்
வரும் இழிநிலையை மாற்றுவர்.
அருண்மால் --- அருள் பொருந்திய திருமால்.
செம்பொருள் --- சீரிய பொருள். ஏழ்பிறவிப் புன்மை --- எழுவகைப் பிறவியாகிய இழிநிலை.
பின் வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
முன்னை
ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை
ஞானப் பிறங்கு சடையனை
என்னை
ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன்
தன்னை
ஞானத் தளை இட்டு வைப்பனே. ---
அப்பர்.
.
இதன்
பொழிப்புரை ---
பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும், என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும்
ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.
ஞானத்தினால்
பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில்
வைத்த தனி ஆலயத்தனாம்
மோனத்தின்
ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத்
தவசி இவன் எனல் ஆகுமே. ---
திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை
---
சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால்
முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத் தான் சிவனது
திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லே அன்றி
மனமும் அடங்கி விட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி
பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம்.
சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல
முத்தனும், சித்தனும் ஆவன் என்று
சொல்லுதல் கூடுமோ! கூடாது.
சலியாது
முயன்ற தவப்பெருந் தொண்டர்
பலநாள்
ஓதிக் கலைமுற்றும் நிரம்பி
அளவையின்
அளந்துகொண்டு உத்தியில் தெளிந்து
செம்பொருள்
இது எனத் தேறி, அம்பலத்து
ஆரா
அன்பினோடு, அகன் அமர்ந்து
இறைஞ்சிப்
பேரா
இயற்கை பெற்றனர்.... --- சிதம்பர
மும்மணிக்கோவை.
இதன்
பொருள் ---
எத்தனையோ பிறவிகளாக இடைவிடாது முயன்ற
தவத்தைச் செய்த பெரிய தொண்டர்கள்,
எல்லாக்
கலைகளையும் நெடுங்காலம் ஓதி உணர்ந்து, பூரணஞானவான்கள் ஆனார்கள். தருக்க நூல்
உணர்ச்சி வல்லவர்கள் ஆனார்கள். பிரமாணங்களால் அளந்து அறிந்த பிரமேயத்தை
உத்தியாலும் தெளிந்து, இதுவே செம்பொருள் என நிச்சயம் பண்ணித் துணிந்து கொண்டார்கள்.
கொண்ட அத் தொண்டர்களும் தில்லைச் சிதம்பரத்தில் சென்று, திருக்கூத்தைக் கண்டு
வழிபட்டு,
முடிந்த
பயனை அடைந்தார்கள்.
ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப்
பேதைமைத்தாய்
வரும் பிறப்பை நீக்குறு
மாதவம்
தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்;
யாது
நும் கருத்து?’ என, இனைய கூறினான். --- கம்பராமாயணம். மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
ஆதலால் --- ஆகையால் ; இராமனுக்கு அரசை நல்கி ---இராமனுக்கு அரசாட்சியை
அளித்துவிட்டு; இப் பேதைமைத்தாய் வரும் பிறப்பை --- இந்த
அறியாமையை உடையதாக வரும் பிறவி நோயை;
நீக்குறு
மாதவம் தொடங்குவான் --- நீக்குகின்ற பெரிய தவத்தைத் தொடங்குவதற்காக; வனத்தை நண்ணுவேன் ---
கானகத்தை அடையப் போகிறேன்; நும் கருத்து யாது --- உங்கள் எண்ணம் யாது
; என --- என்று ; இனைய கூறினான் --- இத்
தன்மையானவற்றைத் தெரிவித்தான்.
பேதைமை - அறியாமை ; அவிச்சை, அறியாமை நிறைந்தது மனிதப் பிறப்பு என்பதனைத்
திருவள்ளுவரும் “பிறப்பென்னும் பேதைமை” (358) என்று புலப்படுத்தியுள்ளார். இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தயரதன்
எண்ணியதாகவே முதல்நூல் கூறுகிறது. இங்கோ அரசுரிமை ஏற்றலே
பேசப்படுகிறது.
அருஞ்
சிறப்பு அமைவரும் துறவும்,
அவ்
வழித்
தெரிஞ்சு
உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும்
பெருஞ்
சிறை உள எனின், பிறவி என்னும் இவ்
இருஞ்
சிறை கடத்தலின் இனியது யாவதோ? --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் --- அரிய சிறப்புப்
பொருந்திய துறவும்; அவ் வழி தெரிஞ்சு --- அந்த வழியை அறிந்து; உறவு என மிகும் தெளிவும்
ஆய் --- அதற்கு இனம் என்று சிறந்துள்ள மெய்யுணர்வும் ஆகி ; வரும்பெருஞ் சிறை உள எனின்
-- வருகின்ற பெரிய சிறகுகள் உண்டானால் ; பிறவி என்னும் இவ் இருஞ்
சிறை --- பிறப்பு என்னும் இந்தப் பெரிய சிறைச்சாலையை ; கடத்தலின் இனியது யாவதோ
--- நீங்கிச் செல்லுவதினும் இனிமையான தொன்று வேறு எதுவோ? (எதுவும் இல்லை).
உயிராகிய பறவைக்குத் துறவு, மெய்யுணர்வு என்னும் இரு சிறகுகள் முளைத்துவிட்டால், அது பிறவி ஆகிய கூண்டை
விட்டுப் பறந்துவிடும் என்பது கருத்து. அருஞ் சிறப்பு அமைவரும் - அடைவதற்கு அரிய வீட்டினை
அடைதற்குக் காரணமான எனலும் பொருந்தும். தெரிஞ்சு --- தெரிந்து என்பதன் போலி. திருவள்ளுவர்
துறவையும் மெய்யுணர்தலையும் அடுத்தடுத்து வைத்துள்ள முறைமை துறந்தார்க்கே மெய்யுணர்வு
தோன்றும் எனத் தெரிவித்தல் ஈண்டுக் கருதத் தக்கது.
துறத்தல்
ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர,
அறத்து
அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை
பிணிப்புறத் தம்மை
மறத்தலால்
தந்த மாயையின் மாய்ந்தது,
அம்
மாயை.
---
கம்பராமாயணம், இராவணன் வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
துறத்தல் ஆற்று --- (இராமபிரான்) ஏவிய வழியில்; உறு --- உற்ற; மாக்கடும் --- பெருமை மிக்கதும் கடுமை கொண்டதுமான; ஞானக்கணை --- ஞான அத்திரம்; தொடர --- பின்தொடர; அறத்து அலாது செல்லாத --- அறத்துக்கு மாறான வழியில்
செல்லும் இயல்பு நீங்கி; நல்லறிவு வந்து அணுக --- நல்லுணர்வு நெருங்கிச் சேர்தலால்; பிறத்தல் ஆற்றுறும்
--- பிறப்பின் (காரணமாக) வழிப்படும்; பேதைமை பிணிப்புற --- அறியாமையின் கட்டுற்று; தம்மை மறத்தலால் --- தம் நிலை மறந்ததனால்; தந்த --- ஏற்பட்ட; மாயையின் --- மாயை அழிவது
போன்று; மாயம் மாய்ந்தது --- அம் மாய அத்திரம் தொலைந்தது.
மெய்யுணர்வால் பிறப்பிற்குக் காரணமான மாயை நீங்குவது போன்று ஞான அத்திரத்தால் மாய அத்திரம் அழிந்தது.
பேதைமை
சார்வாச் செய்கை ஆகும்
செய்கை
சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி
சார்வா அருவுரு ஆகும்
அருவுருச்
சார்வா வாயில் ஆகும்
வாயில்
சார்வா ஊறுஆ கும்மே
ஊறு
சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி
சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை
சார்ந்து பற்றுஆ கும்மே
பற்றில்
தோன்றும் கருமத் தொகுதி
கருமத்
தொகுதி காரண மாக
வருமே
ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம்
சார்பின் மூப்புப்பிணி சாக்காடு
அவலம்
அரற்றுக் கவலைகை யாறுஎனத்
தவல்இல்
துன்பம் தலைவரும் என்ப
ஊழின்மண்
டிலமாச் சூழும்இந் நுகர்ச்சி --- மணிமேகலை, பவத்திறம்...... காதை.
இதன்
பதவுரை ---
பேதைமை சார்வாச் செய்கை யாகும் ---
பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய நிதானம் தோன்றும்; செயற்கை சார்வா உணர்ச்சியாகும் --- அச்
செய்கையைச் சார்பாகக் கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ; உணர்ச்சி சார்வா அருவுருவாகும் ---
அவ்வுணர்ச்சியைச் சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்; அருவுரு சார்வா வாயிலாகும் ---
அவ்வருவுருவைச் சார்பாகக்கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்; வாயில் சார்வா ஊறாகும்மே ---
அவ்வாயிலைச் சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்; ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் ---
அவ்வூற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சியாகிய நிதானம் தோன்றும் ; நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் ---
அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும் ; பற்றின் கருமத் தொகுதி தோன்றும் ---
அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயன் தோன்றும்; கருமத் தொகுதி காரணமாக --- வினைப்பயனைக்
காரணமாகக் கொண்டு ; ஏனை வழி முறைத்
தோற்றம் வரும் --- ஏனைப் பவமும் தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்; தோற்றம் சார்பின் --- அத்தோற்றத்தைச்
சார்பாகக் கொண்டு ; பிணி மூப்பு சாக்காடு
அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவலில் துன்பம் தலை வரும் --- நோயும் முதுமையும்
இறப்பும் அவலமும் அழுகையும் கவலையும் செயலறுதியுமென்ற கெடாத துன்பமாகிய நிதானம்
தோன்றும்; என்ப --- என்று நிதான
இயல்பறிந்த புலவர் கூறுவர்.
"அவிச்சையைக்
காரணமாகக் கொண்டு சம்ஸ்காரமும்,
சம்ஸ்காரத்தைக்
காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும், விஞ்ஞானத்தைக்
காரணமாகக் கொண்டு நாமருபமும், நாமரூபத்தைக்
காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாயதனத்தைக் காரணமாகக்
கொண்டு பரிசமும், பரிசத்தைக் காரணமாகக்
கொண்டு வேதனையும், வேதனையைக் காரணமாகக்
கொண்டு திருஷ்ணையும், திருஷ்ணையைக்
காரணமாகக் கொண்டு உபாதானமும், உபாதானத்தைக்
காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரணமாகக்
கொண்டு ஜாதியும், ஜாதியைக் காரணமாகக்
கொண்டு பிணி மூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும்" என்று கூறப்படுமாறு காண்க.
பிணி மூப்பு முதலியன இன்பமல்ல வாதலின், "தவலில்
துன்பம்" எனப்பட்டன.
பேதைமை
மீளச் செய்கை மீளும்
செய்கை
மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி
மீள அருவுரு மீளும
அருவுரு
மீள வாயில் மீளும்
வாயில்
மீள ஊறு மீளும்
ஊறு
மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி
மீள வேட்கை மீளும்
வேட்கை
மீளப் பற்று மீளும்
பற்று
மீளக் கருமத் தொகுதி
மீளும், கருமத் தொகுதி மீளத்
தோற்றம்
மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு
மீளும் பிறப்புப் பிணிமூப்புச்
சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை
கையாறு
என்றுஇக் கடையில் துன்பம்
எல்லாம்
மீளும்இவ் வகையான் மீட்சி
ஆதிக்
கண்டம் ஆகும் என்ப.... --- மணிமேகலை, பவத்திறம்...... காதை.
இதன்
பதவுரை ---
இந் நுகர்ச்சி --- பேதமை முதலாக நுகரப்படும்
இந் நிதானங்களின் தொடர்பு; ஊழில் மண்டிலமாச்
சூழும் --- முடிவில்லாத மண்டில் முறையாக (வட்டமாய்)ச் சூழ்ந்து நிற்பதாகும்; பேதைமை மீளச் செய்கை மீளும் ---
பேதைமையாகிய நிதான நீங்கின் அதன் காரியமாகிய செய்கை நீங்கும்; செய்கை மீள உணர்ச்சி மீளும் ---
செய்கையாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய உணர்ச்சி நீங்கும்; உணர்ச்சி மீள அருவுரு மீளும் --- உணர்ச்சியாகிய
நிதானம் நீங்க அதன் காரியமாகிய அருவுரு நீங்கும்; அருவுரு மீள வாயில் மீளும் ---
அருவுருவாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வாயில் நீங்கும்; வாயில் மீள ஊறு மீளும் --- வாயிலாகிய
நிதானம் நீங்க ஊறாகிய அதன் காரியம் ஒழியும் ; ஊறு மீள நுகர்ச்சி மீளும் --- ஊறாகிய
நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய நுகர்ச்சி நீங்கும்; நுகர்ச்சி மீள வேட்கை மீளும் ---
நுகர்ச்சியாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வேட்கை நீங்கும்; வேட்கை மீள பற்று மீளும் ---
வேட்கையாகிய நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய பற்று நீங்கும்: பற்று மீளக் கருமத்
தொகுதி மீளும் --- பற்று நீங்கிய வழி அதன் காரியமாய்த் தோன்றும் வினைப்பயன்
நீங்கும்; கருமத் தொகுதி மீள
தோற்றம் மீளும் --- அவ் வினைப்பயன் நீங்கவே பவமாகிய அதன் காரியம் நீங்கும்; தோற்றம் மீள பிறப்பு மீளும் --- பவம்
நீங்கிய வழிப் பிறப்பு நிங்கும்;
பிறப்புப்
பிணி மூப்புச் சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு என்று இக்கடையில் துன்பமெல்லாம்
மீளும் --- பிறப்பு நீங்கிய வழி அதனைச் சார்ந்துண்டாகும் பிணியும் முதுமையும்
சாக்காடு அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்ற இம் முடிவில்லாத
துன்பங்களெல்லாம் ஒழியும்; மீட்சி இவ்வகையால்
என்ப --- துக்க நிவாரணமாகிய மீட்சி இவ்வாறகும் என்று அறிந்தோர் சொல்லுவர்.
அளற்று
அகத்துத் தாமரையாய், அம்மலர்ஈன் றாங்கு
அளற்று
உடம்பு ஆமெனினும் நன்றாம்-அளற்று உடம்பின்
நன்ஞானம்
நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால்
தலைப்படுத லான். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
அளற்றகத்து ஆய்தாமரை அம்மலர் ஈன்றாங்கு ---சேற்றினிடத்து
வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, அளற்றுடம்பின்
நன் ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை --- தூயதல்லாத உடம்போடு கூடி நின்றவழியே
நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன, தன்னால்
தலைப்படுதலான் --- ஒருவனால் அடையக்கூடுமாதலால், உடம்பு அளறு ஆம் எனினும் நன்றாம் --- உடம்பு
மலமயமானதே எனினும் அதனோடு கூடிவாழ்தலே நல்லது.
உணர்ச்சி
அச்சாக உசா வண்டியாகப்
புணர்ச்சிப்
புலனைந்தும் பூட்டி--உணர்ந்ததனை
ஊர்கின்ற
பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்றது
ஆகும் பிறப்பு. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக --- அறிவை
அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி என்னும் வண்டியில், புணர்ச்சி புலனைந்தும் பூட்டி ---
ஐம்பொறிகளாகிய புரவிகள் ஐந்தையும் சேர்த்துப் பூட்டி, உணர்ந்து அதனை ஊர்கின்ற பாகன் --- செலுத்தும்
நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், உணர்வு உடையனாகுமேல் --- தெளிந்த
அறிவினையும் உடையனாயின், பிறப்புப்
பேர்கின்றதாகும்-பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.
இளமை
கழியும் பிணிமூப் பியையும்
வளமை
வலியிவை வாடும் - உளநாளால்
பாடே
புரியாது பால்போலுஞ் சொல்லினாய்!
வீடே
புரிதல் விதி. --- ஏலாதி.
இதன்
பதவுரை ---
பால்போலும் --- பாலைப்போன்ற, சொல்லினாய் --- மொழியினையுடைய பெண்ணே!, இளமை கழியும் --- இளம் பருவம் நிலைபெறாது
ஒழியும்; பிணி மூப்பு ---
நோயுங் கிழத்தனமும், இயையும் --- வந்து
சேரும், வளமை --- செல்வமும், வலி --- உடம்பின் வலிமையும், இவை வாடும் --- ஆகிய இவை குன்றும், உள நாளால் --- கழிந்தது போக
எஞ்சியிருக்கும் வாழ்நாளில் பாடே புரியாது --- துன்பந்தருஞ் செயல்களையே
செய்துகொண்டிருக்க விரும்பாமல்,
வீடே
புரிதல் --- வீடுபேற்றிற்கான தவ வொழுக்கங்களையே விரும்புதல், விதி - முறைமையாம்.
இளமை கழிந்து பிணி மூப்புகள் உண்டாதலின், மக்கள் வீடுபேற்றை விரும்பி நிற்றலே
கடமையா மென்பது.
இல்இயலார்
நல்லறமும் ஏனைத் துறவறமும்
நல்லியலின்
நாடி உரைக்குங்கால் - நல்லியல்
தானத்தால்
போகம் தவத்தால் சுவர்க்கம்ஆ,
ஞானத்தால்
வீடாக நாட்டு. --- சிறுபஞ்சமூலம்.
இதன்
பதவுரை ---
இல் இயலார் --- மனைவாழ்க்கை இயற்கையாக
உடையார், நல் அறமும், --- நல்ல அறமும், ஏனை துறவறமும் --- மற்றைத் துறந்தோர்
செய்யும் நல்ல அறமும், நல்இயலின் ---
நன்மையாகிய முறையால், நாடி --- ஆராய்ந்து, உரைக்குங்கால் --- சொல்லுமிடத்து, நல் இயல் தானத்தால் --- நல்லியலாகிய
கொடையினால், போகம் --- செல்வ
நுகர்ச்சியும், தவத்தால் சுவர்க்கம்
ஆ --- தவத்தினால் சுவர்க்க நுகர்ச்சியாகவும்,
ஞானத்தால்
--- ஞானத்தினால், வீடு ஆ --- வீடாகவும், நாட்டு --- நிலைபெறுத்துவாயாக; (எ-று,)
இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும் ஆராயின்.
கொடையாற் செல்வ நுகர்ச்சியும் தவத்தாற் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் பெறுவரென்பதாம்
No comments:
Post a Comment