033. கொல்லாமை - 03. ஒன்றாக நல்லது




திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "நூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் ஒப்பில்லாத அறமாவது கொல்லாமையே ஆகும். அதற்கு அடுத்த நிலையில், பொய் பேசாமை நல்லறம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

     வாய்மை என்று முன்னர் கூறப்பட்ட 30 - ஆவது அதிகாரத்தில், "பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று" என்றார் நாயனார். மேலும், "யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற" என்றும் அறிவுறுத்தினார்.

     இங்கு, கொல்லாமை கூறினார். வாய்மை, கொல்லாமை என்னும் இரண்டு அறங்களுள் சிறந்தது யாது என்னும் ஐயம் உண்டாகாதபடி, "ஒன்றாக நல்லது கொல்லாமை" என்று கொல்லா விரதத்தை எடுத்துக் கூறி, அதற்கு அடுத்தது, பொய்யாமை ஆகிய விரதம் என்பதை விளக்க, "அதன் பின்சார, பொய்யாமை நன்று" என்று கூறினார்.

     பிறக்கும்போதே உண்டாகிய காதை விடவும், பிறகு உண்டாகிய கொம்பு உறுதியாய் இருப்பதுபோல், முன்னர் சொன்ன வாய்மையை விடவும் உயர்ந்தது, கொல்லாமை ஆகும்.

     எனவேதான், கொல்லாமையை இன்றியமையாத விரதம் எனக்கொண்டு, "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்று தாயுமானவரும், "கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என்று அவர் பின், வாழை அடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் ஒருவரான, வள்ளல்பெருமானும் இதையே வலியுறுத்தினார்.

     பொய் பேசாமை கொலையை உண்டாக்கினால், பொய் பேசுதலாகவும், பொய் பேசுதல் கொலையை ஒழித்தால், மெய் பேசுதல் ஆகவும் இருக்கும். எனவே, பொய்யாமை, கொல்லாமைக்குப் பின்னர் வைத்து எண்ணப்பட்டது. "கொல்லா நலத்தது நோன்மை, பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்னும் திருக்குறளாலும் இது அறியப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

ஒன்றாக நல்லது கொல்லாமை, மற்று அதன்
பின்,சாரப் பொய்யாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒன்றாக நல்லது கொல்லாமை --- நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணை ஒப்பது இன்றித் தானேயாக நல்லது கொல்லாமை;

     பொய்யாமை அதன் பின்சார நன்று --- அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.

         ('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற் பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....


ஒன்றாக நல்லது உயிர் ஓம்பல், ஆங்கு அதன்பின்
நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- என்று இரண்டும்
குன்றாப் புகழோன் வருக என்று, மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.         ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும், - இல்எனக்கு ஒன்று
ஈக என்பவனை நகுவானும், இம்மூவர்
யாதும் கடைப்பிடியா தார்.           ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     கொலை நின்று தின்று ஒழுகுவானும் --- கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, ஓருயிரை வதைத்து அதன் இறைச்சியைத் தின்பவனும்;

         பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் --- பெரியோர் தன்னைத் தழுவும்போது, அவரோடு ஒப்பவனாகத் தன்னை மதித்துத் தானும் அவரை எதிர் தழுவுகின்ற அறிவில்லாதவனும்;

         எனக்கு இல் ஒன்று ஈக என்பவனை நகுவானும் --- எனக்கு இல்லை, ஒரு பொருளை ஈயக் கடவாய் என்று இரக்கின்றவனை இகழ்வானும்;

         இ மூவர் யாதும் கடைப்பிடியாதார் --- (ஆகிய) இம் மூவரும், யாதோர் அறத்தையும் உறுதியாகக் கொள்ளாதவராவர்.

         கொலைசெய்து உண்பதும், பெரியோர் தழுவினால் அவர்க்கு வணக்கம் செய்யாது தானும் அவரைத் தழுவுவதும் இல்லை என்று இரப்பவனைப் பார்த்து இகழ்தலும் நல்லொழுக்கத்தை மேற் கொள்ளாதவர் செயல்களாம்.


பொய்யாமை நன்று, பொருள்நன்று, உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்கால்-பல்லார்முன்
பேணாமை பேணுந் தகைய சிறிது எனினும்
மாணாமை மாண்டார் மனம்.   ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     பொய்யாமை நன்று --- பொய்சொல்லாதிருத்தல் நன்மையாம்; பொருள் நன்று --- தன் முயற்சியால் வரும்பொருள் நன்மையாம்; உயிர் நோவக் கொல்லாமை நன்று --- பிறிதோருயிர் வருந்த, கொல்லாதிருத்தல் நன்மையாம், கொழிக்குங்கால் பேணும் தகைய பல்லார் முன் பேணாமை நன்று --- ஆராயுமிடத்து, விரும்புந் தன்மையவற்றை, பலரறிய விரும்பாமை நன்மையாம், மாண்டார் மனம் சிறிது எனினும் மாணாமை --- மாட்சிமை பட்டவர்களுடைய மனமானது சிறிதாயினும் மனை வாழ்க்கைக்கு மீள்கைக் கண்ணே ஒருப்படாமை நன்மையாம்.


கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல்,
     குத்திரம் கோள் களவு
கல்லாமல், கைதவரோடு இணங்காமல்,
     கனவினும் பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல்,
     தோகையர் மாயையிலே
செல்லாமல், செல்வம் தருவாய்
     சிதம்பர தேசிகனே!             ---  பட்டினத்தார்.

இதன் பொருள் ---

     சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! ஓர் உயிரையும் கொல்லாமல் இருக்கவும், கொன்றதைத் தின்னாமல் இருக்கவும், வஞ்சகத்தையும், கோள் சொல்லுதலையும், திருட்டுத் தனத்தையும் கல்லாமல் இருக்கவும், வஞ்சகர் கூட்டுறவு இல்லாமல் இருக்கவும், கனவில் கூடப் பொய்ச் சொற்களைச் சொல்லாமல் இருக்கவும், துன்பம் தரும் சொற்களைக் கேளாமல் இருக்கவும், பெண்கள் மீது மயக்கம் கொள்ளாமல் இருக்கவும், தேவரீரது திருவடிச் செல்வத்தைக் கொடுத்து அருள்வாய்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...