030. வாய்மை - 09. எல்லா விளக்கும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 30 -- வாய்மை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "துறவினால் நிறைந்தோர்க்கு, புறத்து இருளை நீக்குகின்ற உலகத்தாரது விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆவன அல்ல. மனத்து இருளை நீக்குகின்ற பொய் பேசாமை ஆகிய விளக்கே விளக்கு ஆகும்" என்கின்றார் நாயனார்.

     உலகத்தாரது விளக்குகள் ஆவன, சூரியன், சந்திரன், அக்கினி. இந்த விளக்குகளுக்கு நீங்காத அகத்திருள், பொய் பேசாமையால் நீங்குவதால், அதுவே பொய்யாத விளக்கு என்றார்.

     இனி, இத் திருக்குறளுக்கு, எல்லா விளக்கும் விளக்கு அல்ல --- கல்வி அறிவு ஒழுக்கங்களால் வரும் விளக்கம் எல்லாம் விளக்கம் அல்ல. பொய்யா விளக்கே விளக்கு - பொய் பேசாமையால் உண்டாகும் விளக்கமே விளக்கம் ஆகும் என்று உரைப்பாரும் உளர்.


திருக்குறளைக் காண்போம்...


எல்லா விளக்கும் விளக்கு அல்ல, சான்றோரக்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எல்லா விளக்கும் விளக்கு அல்ல --- புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா,

     சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே --- துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.

         (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

பொய்யா நாஅதனால் புகழ்வார்கள் மனத்தின் உள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர்பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே.     ---  சுந்தரர் தேவாரம்.

பொழிப்புரை ---

     பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி, மை பொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் .


முன்னமோர் பொய்யுரைக்க, அப்பொய் வெளி
             ஆகாமல் மூடும் வண்ணம்
பின்னும்ஓர் பொய் உரைக்க, அதையும் நிலை
             நிறுத்த ஓர் பெரும்பொய் சொல்ல,
இன்னவகை கைதவம் ஒன்று இருநூறு
             கைதவத்துக்கு இடமாம், வாய்மை
தன்னையே முன்பகரில் சங்கடம் ஒன்று
             இலை, அதுவே தகைமை நெஞ்சே.   ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

     முதற்கண் சொன்ன பொய் வெளியாகாமல் மறையும்படி பல பொய் சொல்லல் நேரிடுகின்றது. இதனால், ஒரு பொய் சொல்லுதல் ஒரு நூறு பொய் சொல்லுவதற்கு இடமாகின்றது. மெய்சொல்லின் நெஞ்சமே, எவ்வகையான துன்பமும் நேரிடாது.


இழுதைசொல்லி மறைக்கலாம் எனும் திடத்தால்
             பாதகங்கள் எல்லாம், தீயர்
பொழுது எலாம் புரிதலால், குற்றங்கள்
             யாவுக்கும் பொய் பிதாவாம்,
வழுது ஒன்றை நீக்கிடில் தீவினைகள் எலாம்
             நீங்கிடும், நல் வண்மை ஒன்றே
முழுதும் உணர் அறிஞர்க்குத் தோழனாம்,
             அவர்க்கு அதனால் மோசம் உண்டோ.---  நீதிநூல்

 இதன் பொருள் ---

     பொய் சொல்லி மறைக்கலாம் என்ற திடத்தால் தீயவர்கள் எப்பொழுதும் எல்லாப் பாவங்களும் செய்கின்றனர். அதனால், குற்றங்களுக்கெல்லாம் பிறப்பிடம் பொய் ஆகும். (கொடிய) பொய் ஒன்றை நீக்கிவிட்டால் தீமைகளெல்லாம் தாமே யகலும். மெய் ஒன்றே எல்லாமுணர்ந்த சான்றோர்க்கு நண்பனாகும். அதனால் அவர்களுக்குக் கேடு ஒன்றும் இன்று.


அங்கதமே பொருள் என்னக் கைக்கொண்டோர்
             மறந்து ஒருமெய் அறைந்திட் டாலும்,
இங்கு அதனை எவரும் நம்பார், துணைவியர், புத்
             திரர், தமரும் இகழ்ச்சி செய்வார்,
அங்கண் உலகு எங்கணுமே வசையாடி,
             நரர் எலாம் அகிதர் ஆவார்,
பங்கம்உறும் பொய்யுரைப் பொய்யரும் சேரார்,
             தம் உளமும் பழிக்கும் அன்றோ. ---  நீதிநூல்
        
 இதன் பொருள் ---

     பொய் சொல்லுவதே தம் திறமையாகக் கொண்டோர் தம்மை மறந்து ஒரு மெய் சொன்னாலும் அம்மெய்யை ஒருவரும் நம்பார். மனைவி, மக்கள், உறவினர் முதலியோரும் இகழ்வர். உலகமெலாம் வசையுண்டாகும். உலகத்தாரெல்லாரும் பகைவராவர். இழிவு தரும் பொய்யரைப் பொய்யரும் சேரார். பொய்யர் உள்ளமும் அவர்களைப் பழிக்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...