திருக்குறள்
அறத்துபால்
துறவற
இயல்
அதிகாரம்
35 -- துறவு
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "முழுதும்
துறந்தவர் முத்தியை அடைந்தவர் ஆவார்; அப்படித் துறவாதவர், அறிவு மயங்கி
பிறப்பாகிய வலையில் அகப்பட்டவர் ஆவார்" என்கின்றார் நாயனார்.
பொய்ந்நெறி என்பது, அறிவு நூல் கூறும் வழி அல்லாது, உலகநூல் கூறும்
வழியாகும். பிறவிக்குக் காரணமாக உள்ள பொய்ந்நெறியை, வீட்டிற்குக் காரணமாகிய
மெய்ந்நெறி என்று கண்டு நடத்தல்.
தவறான பாதையில் செல்லத் தலைப்பட்டோர், தாம் கருகிய இடத்திற்குச் செல்ல முடியாமை
போல,
உலக
நூலை, அறிவு நூல்
என்று நம்பி,
அதில்
கூறியபடி ஒழுகுவோர், தாம் அடைய எண்ணிய வீட்டை அடையாமல், பிறவியிலேயே அழுந்துவர்.
திருக்குறளைக்
காண்போம்...
தலைப்
பட்டார் தீரத் துறந்தார்,
மயங்கி
வலைப்
பட்டார் மற்றை யவர்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
தீரத் துறந்தார் தலைப்பட்டார் ---
முற்றத் துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்,
மற்றையவர் மயங்கி வலைப்பட்டார் ---
அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
(முற்றத் துறத்தலாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும்
உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண்
சிறிதாயினும் பற்றுச் செய்தல். துணிவுபற்றித் தலைப்பட்டார் என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள்
அகப்படுதலின், 'மயங்கி' என்றும் கூறினார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல். (பாடல் இடையில் சிதைந்து உள்ளது).
பட்டினத்துப்
பிள்ளை பரனை அடைந்தார் துறந்து
விட்டுவிடா
விந்திர........... கிலார் --- கிட்டித்
தலைப்
பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்
பட்டார் மற்றை யவர்.
காவிரிப் பூம்பட்டினத்தில்
வணிகர் மரபில் சுவேதாரணியர் என்ற பெயருடன் குபேர சம்பத்தில் வாழ்ந்து வந்த ஒருவர்
சிவபூசை மேற்கொண்டு ஒழுகி ஒருநாள்,
"காதற்ற
ஊசியும் கடைவழிக்கு வாராது" என்பதை உணர்ந்து, முற்றும் துறந்து, சிவபெருமான் மீது பல அரிய நூல்களை
இயற்றி, இறுதியில் திருவொற்றியூரில்
இடைச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருக்கையில், தம்மை மணலில் புதைக்கும்படி அவர்களிடம்
கூறி, அங்ஙனம் புதைக்கப்
பெற்ற இடத்தில் சிவலிங்கம் ஆயினார்.
முற்றத் துறந்தவர்கள் முத்தி பெறுவர்.
துறவாதவர் பிறப்பில் அழுந்துவர் என்னும் நீதியை இவ்வரலாறு காட்டும்.
பட்டினத்தடிகள் வரலாறு
திருக்கயிலையிலே எம்பெருமாட்டியுடன்
வீற்றிருக்கும் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டி, எம்பெருமான் தோழனும், அளகாபுரிக்கு வேந்தனும் ஆகிய குபேரன், வெள்ளிமலையின் திருவாயிலை அணுகி, நந்தியெம்பெருமானைப் பணிந்து, அவர் தம் ஆணை பெற்றுத் திருச்சந்நிதி
அடைந்து, சிவபிரான்
உமாதேவியாரோடு எழுந்தருளி உள்ள திருக்கோலம் கண்டு, ஆனந்த பரவசனாய், "ஆண்டவனே! இத்திருக்கோலக் காட்சியை, மண்ணுலகில் உள்ள பல திருப்பதிகளிலும்
அடியேன் காண விரும்புகின்றேன். அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டி நின்றான்.
அடியவர்கள் வேண்டியதை வேண்டியவாறே அளிக்கும்
கருணைக் கடலாகிய பரம்பொருள், குபேரன்
வேண்டுகோளுக்கு இணங்கி, பார்வதி தேவியாருடன்
இடப ஊர்தியின் மேல் எழுந்தருளி,
தேவர்களும், முனிவர்களும், கணநாதர்களும் தம்மைப் புடைசூழ்ந்து வர, காசி, காளத்தி, காஞ்சி முதலிய திருத்தலங்களில் எழுந்தருளி, ஆங்காங்கே
குபேரனுக்குத் திருக்கயிலாயத் திருக்காட்சி வழங்கியருளி, சிதம்பரத்தை அடைந்தார். அங்கே சிலநாள்
குபேரன் அம்மையப்பரைத் தொழுது வருகையில், ஒருநாள், இறைவனை வணங்கி, "என்னுள் கோயில் கொண்ட பெருமானே! இச்
சோழநாட்டில் உள்ள திருவெண்காட்டிலே தேவரீரைத் தரிசிக்க விரும்புகிறேன்" என்று
விண்ணப்பித்தான். பெருமானும் அவ்வாறே அருள் செய்தார். குபேரனும் அம்பிகை பாகனைத் திருவெண்காட்டிலே
தரிசித்து இன்புற்று இருந்தான். திருவெண்காட்டிலே இருந்து வரும் நாளில், அருகில் உள்ள காவிப்பூம்பட்டினத்தை அவன்
கண்ணுற்றான். அதன் அழகைக் கண்டு மயங்கி, அதனை
நீங்க மனம் எழாது, அங்கே வசிக்க
விரும்பினான்.
குபேரனது நிலையை உணர்ந்த சிவபெருமான், "தோழனே! உன் உள்ளம்
காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி நிற்கிறது. நீ தாங்கியுள்ள தேகம் போக பூமியில்
வாழ்வதற்கு உரியது. மானுடர் வாழும் இந்தக் கர்ம பூமிக்கு உரியது அல்ல. நீ இக்
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறக்கக் கடவாய்" என்று அருளினார். அதுகேட்ட, அளகேசன், மெய் நடுங்கி, உள்ளம் கலங்கி, "ஐயனே! தேவரீர் ஆணையை மறுக்க எவராலும் இயலாது.
அதன் வழி நிற்கவேண்டுவதே அடியேன் கடமை. சிறியேன் மானுடப் பிறவி எடுத்து, இவ்வுலக இன்ப நுகர்ச்சியில் திளைத்து, அழுந்தும் காலத்து, ஏழையேனைத் தடுத்து ஆட்கொண்டு அருள
வேண்டும்" என்று வேண்டினான். அவ்வாறே பெருமான் அருளிச் செய்து, உமையம்மையாரோடு திருக்கயிலைக்கு
எழுந்தருளினார்.
காவிரிப்பூம்பட்டினத்திலே வேளாள மரபிலே, சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் ஞானகலாம்பை என்னும் கற்புக்கரசியாரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அவருக்கு
ஒரு பெண் குழந்து பிறந்தது. பின்னர், நீண்டகாலம்
தமக்கு ஆண் குழந்தை இல்லாதது குறித்துத் தமது மனைவியாருடன் தவம் செய்வாராயினார்.
அத்தவப் பேறாக, குபேரன், சிவாக்ஞைப்படி, ஞானகலாம்பையார் கருவில் உற்றான்.
பத்துத் திங்களில் ஆண் குழந்தையை ஈன்று எடுத்தார். சிவநேசர் அக் குழந்தைக்குத்
திருவெண்காடர் என்னும் பெயர் சூட்டி, பொன்னே
போல் வளர்த்து வந்தார். திருவெண்காடர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து, ஐந்தாம் வயது எய்தப்
பெற்றார்.
சிவநேசர் இறைவன் திருவடி நீழலை
அடைந்தார். திருவெண்காடர் தந்தையாருக்கு
ஈமக் கடன்களைக் குறைவறச் செய்து,
அற்புதத்
திருவிளையாடல்களால் அன்னையார் துயரம் போக்கிக் கொண்டு இருந்தார். அறிவில் சிறந்த
அன்னையார், தக்க ஆசிரியரைக்
கொண்டு, திருவெண்காடருக்குக்
கல்வி கற்பித்தார். சகல கலைஞானமும் இளமையிலேயே அடைந்ததன் பலனாக, "கல்வியினால் ஆய பயன், கங்காதரன் திருவடியைப் பூசித்தலே"
என்று தெளிந்து, அப் பூசனையைக்
குருமுகத்தால் பெறவேண்டும் என உறுதிகொண்டு, உணவும் கொள்ளாது, குருத் தியானமே செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள், சிவபெருமான், ஓர் அந்தணராகத் திருவெண்காடர் கனவில்
தோன்றி, "திருவோண நட்சத்திரம் கூடிய சோமவாரப்
பிரதோஷ தினம் நாளை நேர்கின்றமையால்,
நீ
திருவெண்காடு செல்வாயாக. அங்கு ஒரு வேதியர் உனக்குச் சிவதீட்சை செய்து, சிவபூசை முறையைக் கற்பிப்பர்"
என்று அருளிச் செய்து மறைந்தார். உடனே, திருவெண்காடர், விழித்து எழுந்து, தாம் கண்ட கனவினைத் தாயாருக்கு உணர்த்தி, அவ்வம்மையாரோடு திருவெண்காடு சேர்ந்து, சிவதரிசனம் செய்து, குருநாதனை எதிர்நோக்கிக் கொண்டு
இருந்தார். அப்பொழுது கனவில் தோன்றிய அந்தணரே அங்குக் குருமூர்த்தியாக
எழுந்தருளினர். திருவெண்காடர் வியப்புற்று, குருநாதன் திருவடிகளில் விழுந்து
வணங்கினார். குருநாதன் திருநோக்கம் செய்து,
"குழந்தாய்! நம் ஊர் வியாக்கிரபுரம். நேற்றிரவு
இங்கு வந்தோம். எமது கனவில் மறையவர் தோன்றி, திருவெண்காடு சென்று, அங்குத் திருவெண்காடன் என்னும்
சிறுவனுக்குத் தீட்சை செய்து வைக்கக் கட்டளையிட்டு, இச் சம்புடத்தைக் கொண்டு உன்னிடம்
சேர்க்கச் சொன்னார். இதன் உள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அது உன்னால்
முற்பிறப்பில் பூசிக்கப் பெற்றது. உன்
கைப்பட்டதும் தானாகத் திறந்துகொள்ளும் என்று சொல்லி, ஒரு மண்டலம் உன்னோடு இருக்க மொழிந்தார்"
என்று சொல்லித் தமது திருவுருக் கரந்தார். இங்கு வந்து உன்னைக் கண்டேன்"
என்று சொல்லினார். அதனைச் செவிமடுத்த திருவெண்காடர், குருமூர்த்தியின்
திருவடிகளில் பலமுறை விழுந்து வணங்கிப் போற்றினார். குருமூர்த்தியாக எழுந்தருளிய
பெருமான் திருவெண்காடருக்குச் சிவதீட்சை செய்து, கனவில் தான் பெற்ற சம்புடத்தைக்
கொடுத்தருளினார். திருவெண்காடரின்
கைப்பட்டதும் தானாகத் திறந்து கொண்ட அச் சம்புடத்தில் சிவலிங்கமும் விநாயக
மூர்த்தமும் இருந்தன. அவைகளை முறைப்படி பூசித்து
வந்தார். குருநாதரும் திருவெண்காடரோடு நாற்பது நாள் இருந்து, பின்னர் தமது இச்சை வழிச்
சென்றார்.
திருவெண்காடர் திருவெண்காட்டிலிருந்து
கொண்டே, சிவபூசையும் மகேசுர பூசையும்
செய்து வந்தார். செல்வம் சுருங்கி,
வறுமை
வந்தது. ஒரு நாள் இரவு, திருவெண்காடரின்
கனவில் சிவபெருமான் தோன்றி, "அன்பனே! வருந்தாதே. உன் இல்லம் முழுதும்
பொன்னும் மணியும் திரள் திரளாக மலியச் செய்தோம்" என்று திருவருள் செய்தனர்.
திருவெண்காடர் தாம் கண்ட கனவைத் தாயாருக்குச் சொன்னார். பொழுது விடிந்ததும், காவலர் மூலமாகத் தம் வீடு முற்றிலும்
பொன்னும் மணியும் நிரம்பி இருத்தலைத் கேள்வியுற்று, அவைகளைக் கொண்டு, சிவபூசை, குருபூசை, அடியவர் பூசை முதலிய பதி புண்ணியங்களைச்
செய்து, காவிரிப்பூம்பட்டினத்தை
அடைந்து, தமது அறச் செயல்களைத்
தொடர்ந்து வந்தார்.
திருவெண்காடருக்குத் திருமணப் பருவம்
வந்தது. அப் பட்டினத்திலே, வேளாண் மரபிலே
தோன்றிச் சிவபத்தி, சிவனடியார் பத்தியில்
சிறந்து விளங்கிய சிதம்பரச் செட்டியார் மனைவியாகிய சிவகாமியம்மையார் ஈன்ற
அருந்தவப் புதல்வியாகிய சிவகலை என்னும் அம்மையாரைத் திருமணம் செய்துக் கொண்டார்.
இல்லறத்தைச் சிறப்புற நடத்துங்கால்,
தமக்கு
முப்பத்தைந்து வயதாகியும் மகப்பேறு இல்லாமை குறித்துச் சிறிது வருந்தி, மருதவாணர் திருவடிகளை இடையறாது பூசித்து
வந்தார்.
திருவிடைமருதூரிலே சிவசருமர் என்னும்
வேதியர். அவர் மனைவி சுசீலை. இருவரும் சிவபூசை, அடியவர் பூசை செய்து வறுமையில் அழுந்தி
இருந்தனர். மருதவாணர் அவர்கள் கனவில் தோன்றி, "நமது தீர்த்தக் கரையில் இருக்கும் வில்வ
மரத்தின் அடியில் நாம் ஒரு குழந்தையாக இருப்போம். அக் குழந்தையை எடுத்துக்
கொண்டுபோய், காவிரிப்பூம்பட்டினத்திலே
குழந்தைப் பேறு இன்றி, அருந்தவம் செய்யும்
திருவெண்காடரிடம் கொடுத்து, அக் குழந்தை அளவு
எடையுள்ள பொன் பெற்று உங்கள் வறுமையைப் போக்குவீர்களாக" என்று அருள்செய்து
மறைந்தார். சிவசருமர், வில்வ மரத்தடியில்
குழந்தை இருக்கக் கண்டு, மகிழ்ந்தார்.
"தோன்றி நின்று அழியும் பொருட்செல்வத்தின் பொருட்டுக் குழந்தையை
விற்பதா" என்று வருந்தினார். திருவெண்காடரின் கனவிலும் அவர் மனைவியார்
சிவகலையம்மையின் கனவிலும், சிவசருமர் கொண்டு
வரும் குழந்தையப் பெற்றுக் கொள்ளுமாறு சிவபெருமான் அருளினார். சிவாஞ்ஞைப்படி, குழந்தையைப் பெற்றுக் கொண்டு, சிவசருமருக்கு வேண்டுவனவற்றைச்
செய்தார். சிவசருமர் திருவிடைமருதூர் சென்றார்.
திருவருளால் பெற்ற அருமைக்
குழந்தைக்குத் திருவெண்காடர், மருதப்பிரான் என்னும்
திருப்பெயர் இட்டு வளர்த்து வந்தார். மருதப்பிரான் வளர்ந்து பதினாறு வயது ஆனது.
தீவாந்தரங்களுக்குச் சென்று வாணிபம் செய்து வர விரும்பினார். குலமுறைப்படி
திருவெண்காடர், மருதப்பிரானுக்கு
விடைகொடுத்து அனுப்பினார். கொண்டு சென்ற பொருள்களை எல்லாம் விற்றுத் திருப்பணிகள்
செய்தார். எஞ்சிய பொருளைக் கொண்டு வரட்டியும், அவல், கடலையையும், மூட்டை மூட்டையாக வாங்கிக் கப்பலில்
நிரப்பிக் கொண்டு,
காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பினார். இடையில் மருதவாணர் திருவருளால், காற்றும் மழையும் உண்டாகக் கப்பல்
திசைமாறிப் போயிற்று. உணவுப் பொருள் ஒழியும் மட்டும் நேர்வழி புலனாகவில்லை.
"ஐயா! பசியாற்ற அவல்
கொடுங்கள். குளிர்காய எருமுட்டைகள் கொடுங்கள்" என்று உடன் வந்தவர்கள்
கேட்டார்கள். அதற்கு மருதப்பிரான்,
"நண்பர்களே, நான் பட்டினம் சேர்ந்ததும் இப்பொழுது
என்னால் அளிக்கப் படப் போகிற எருமுட்டைகள் எவ்வளவோ அவ்வளவு எருமுட்டைகளைத்
தரவேண்டும்" என்று கூறி, உறுதிப்பத்திரம்
எழுதி வாங்கிக் கொண்டு, தம்பால் உள்ள
எருமுட்டைகளை வழங்கினார். கப்பல் கரைகண்டு சேர்ந்தது. கப்பலில் இருந்தவர்கள்
திருவெண்காடரிடம் சென்று, நடந்ததைச் சொல்லிச்
சென்றனர். திருவெண்காடர் தமது மகன் கொணர்ந்த, வரட்டி மூட்டைகளையும், அவல் மூட்டைகளையும், அவிழ்த்துப் பார்த்தார். எருமுட்டைகள்
மாணிக்கக் கற்களாக ஒளி விடுகின்றன. அவலோடு சிறுசிறு பொன்கட்டிகள் பொலிகின்றன. அவைகளோடு, கடலில் மருதப்பிரானோடு சென்றவர்கள்
எழுதிக் கொடுத்த உறுதிப்பத்திரம் திருவெண்காடர் கையில் அகப்பட்டது. அது கண்ட மருதப்பிரான் நண்பர்களும்
மற்றவர்களும், "அந்தோ, இது என்ன மாயம். நாம்
எருமுட்டைகளுக்காகப் பத்திரம் எழுதி இருந்தோம். இப்போது அவை, அரதனங்களாக ஒளிர்கின்றனவே. என்ன
செய்வோம்" என்று துயருற்றார்கள். திருவெண்காடர் தமது மகனாரின் வாணிபத்
திறமையை வியந்து அவரைக் காணச் சென்றார். மருதப்பிரானைக் காணவில்லை. அவர்
திருவிடைமருதூரில் தம்மை மறவாது போற்றிப் பூசித்து வந்த சிவசருமருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அத்துவித
முத்தி அருளி, தாம் மகாலிங்கத்தில்
சாந்நித்தியமாயிருந்தார்.
திருவெண்காடர் நெஞ்சம் கலங்கி
வேதனைப்படுகின்ற நேரத்தில், அவரது மனைவியார் ஒரு
சிறிய பெட்டியைக் கொண்டு வந்து,
"நாதா! நமது புதல்வன் இப்
பெட்டியைத் தேவரீரிடம் சேர்க்கும்படிச் சொல்லிவிட்டுப் போய் விட்டான்"
என்றார். திருவெண்காடர் ஆவலோடு பெட்டியைத் திறந்தார். அதில் காதற்ற ஊசி ஒன்றும், ஓலைச் சீட்டு ஒன்றும் இருந்தன. ஓலைச் சீட்டில், "காதற்ற ஊசியும் வாராது காணும்
கடைவழிக்கே" என்று எழுதப்பட்டு இருந்தது. உடனே துறவறம் மேற்கொண்டார். தமது
கணக்கராகிய சேந்தனாரை அழைத்துத் தமது பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளையிடச்
செய்யுமாறு பணித்து, தாயாரின் பொருட்டு
வெளியூர் செல்லாது, அங்குள்ள ஒரு
பொதுமண்டபத்தில் தங்கி, வீடுதோறும் பிச்சை
ஏற்று உண்டு, ஞானநிட்டை செய்து
கொண்டு இருந்தார். அவரது செயல்
சுற்றத்தார்க்கு வெறுப்பைத் தந்தது.
தமக்கையார் அவரைக் கொல்ல வேண்டி, நஞ்சு
கலந்த அப்பத்தைக் கொடுத்தார். அந்த வஞ்சனையைத் திருவருளால் உணர்ந்து, அதனைப் பிட்டு ஒரு பகுதியைத்
தமக்கையாரின் வீட்டு இறப்பில் செருகினார். வீடு தீக்கிரையானது.
சிலநாள் கழித்து அன்னையார் சிவபதம்
அடைந்தார். திருவெண்காடர் சுடலைச்
சென்றார். அடுக்கப்பட்டு இருந்த சிறு விறகுகளை அகற்றி, பச்சை வாழை மட்டைகளை அடுக்கி, அதன் மீது தாயாரைக் கிடத்தி, சில பாடல்களைப் பாடவும் அனல் மூண்டது.
தாயாருக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து, திருவிடைமருதூர் சென்று, தலங்கள் தோறும் வழிபட்டுத் திருவாரூர்
சேர்ந்தார். அங்கே சன்னி நோயால் மரணமுற்ற ஒரு தொண்டனைத் திருவருள் துணையால்
எழுப்பினார்.
திருவெண்காடர் கொங்கு நாட்டை அடைந்து, மவுனவிரதம் மேற்கொண்டு, நிட்டையில்
இருந்தபோது, ஒருநாள் பசி
மேலீட்டால், ஒரு மூர்க்கன் வீட்டு
வாயிலில் நின்று கை தட்டினார். சுவாமிகளின் அருமையை உணராத, அக் கயவன் தடிகொண்டு புடைத்தான். அன்று
தொட்டு, அடிகள், தாம் இருக்கும் இடம் தேடி அன்னம் கொண்டு
வந்தால் அன்றி உணவு கொள்வது இல்லை என உறுதிகொண்டு, கொங்கு நாட்டினின்றும் நீங்கித் துளுவ
நாட்டினை அடைந்து, பல திருத்தலங்களை
வணங்கி, உஞ்சேனைமாகாளம் சென்று ஒரு விநாயகர்
திருக்கோயிலில் நிட்டையில் இருந்தார்.
ஒருநாள் இரவு, திருடர்கள் அந்த விநாயகர் ஆலயத்திற்கு
வந்து அவரை வணங்கி, அவ்வூரை ஆளும்
பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்து, மீண்டும் அக் கோயிலை அடைந்து, விலை உயர்ந்த மணிப்பதக்கம் ஒன்றை
விநாயகருக்குக் காணிக்கையாக்க வேண்டி, இருட்டில்
மயங்கி, அங்கே நிட்டையில்
இருந்த பட்டினத்துப் பிள்ளையாரை விநாயகர் எனக் கொண்டு, பதக்கத்தை அவர் கழுத்தில் வீசிச்
சென்றார்கள். பட்டினத்துப் பிள்ளாயர் கழுத்தில் மணிமாலையைக் கண்டு, அதைக் களவு செய்தவர் அவரே என்று
கொள்ளப்பட்டு, மன்னனால் பிள்ளையார் ஒறுக்கப்பட்டு, கழுமரத்தில் ஏற்றுமாறு ஆணை பிறந்தது.
"என் செயல் ஆவது யாதொன்றுமில்லை" என்னும் திருப்பாட்டினை பட்டினத்துப்
பிள்ளையார் ஓத, உடனே கழுமரம்
தீப்பிடித்தது. மன்னன் தன் தவறினை உணர்ந்து, பிள்ளையாரைக் குருவாக ஏற்று, அவரடி பணிந்தான். ஞானோபதேசம் செய்து, திருவிடைமருதூருக்குச் செல்லுமாறு
பணித்து, தாமும் பல தலங்களை
வழிபட்டுத் திருவிடைமருதூரை அடைந்தார்.
அங்கே பத்திரகிரியார் பிச்சையேற்றுக்
கொண்டு வந்து அளிக்கும் அன்னத்தை உண்டு வந்தனர். பத்திரகிரியார் வளர்த்த நாயனாது
இறந்து, காசி மன்னன் தவப் புதல்வியாகப்
பிறந்து மீண்டும் திருவிடைமருதூரில் உள்ள பத்திரகிரியாரையே குருவாகக் கொண்டு, அவரை அடைந்து, அவரது திருவடிகளில்
வீழ்ந்து வணங்கிற்று. அப்போது பெருஞ்சோதி ஒன்று தோன்றியது. அதிலே அவர்கள் கலந்து
அருளினார்கள். அந்த அற்புதத்தைக் கண்ட
பட்டினத்தடிகள், "பெருமானே! அடியேனை இவ்வுலகத்தில் இருத்தி
இருப்பதன் குறிப்பு என்னவோ, அறிகிலேன்"
என்று முறையிட்டார். "திருவெண்காடா! திரு ஒற்றியூர்
வருக" என்று ஒரு வானொலி எழுந்தது.
பட்டினத்தடிகள் இறைவன் திருவுள்ளக்
குறிப்புணர்ந்து திருவெண்காடு சேர்ந்தார். செய்தியை அறிந்த சேந்தனாருடைய மனைவியும்
அவரது மகனும் வந்து வணங்கினர்.
திருவெண்காடர் அவர்களை நோக்கி, "நீங்கள்
யார்" என்றார். சேந்தனார் மனைவியார், "சுவாமி அடியேன்
தேவரீர்பால் கணக்குப் பிள்ளையாய் இருந்த சேந்தனாரின் மனைவி. இவன் என் மகன். சுவாமிகள் ஆணைப்படி சேந்தனார், சுவாமிகளின் பொருள்கள் அனைத்தையும்
கொள்ளையிட வைத்தார். அரசன் அறியாமையால் ஐயங்கொண்டு, அவரை விலங்கிட்டுச் சிறையில்
அடைப்பித்தான். அவரது சிறையை நீக்கி அருளவேண்டும் சுவாமி" என்று வேண்டி
நின்றார். திருவெண்காடர் சிவபிரானைத் தியானிக்க, விநாயகர் திருவருளால் சேந்தனார் விலங்கு
இரியப் பெற்று, சிறை நீங்கி வெளியே
போந்து, பட்டினத்தடிகளைக்
கண்டு பணிந்து, "அடியேன் ஆத்ம
சிறையையும் நீக்கி அருளவேண்டும்" என்று பணிந்து நின்றார். திருவெண்காடர்
சேந்தனாரது அதி தீவிர நிலையை ஓர்ந்து, "நீ
சிதம்பரத்தை அடைந்து விறகு விற்று,
அதனால்
பெறும் ஊதியம் கொண்டு சிவபூசை, மாகேசுவர பூசை முதலிய
பதிபுண்ணியங்களை ஆற்றிக் கொண்டு குடும்பத்தோடு வாழ்வாயாக" என்று அருள்
புரிந்தார்.
பின்னர், பட்டினத்தடிகள் சீர்காழி, சிதம்பரம், திருவேகம்பம், திருக்காளத்தி, திருவாலங்காடு முதலிய திருத்தலங்களைத்
தரிசித்துப் பாடல்களைப் பாடி, திருவொற்றியூரை
அடைந்தார். அத் திருத்தலத்திலும் அவர்
சிலநாள் தங்கி பல பாடல்களைப் பாடியருளினார். சிலவேளைகளில் கடலோரம் சென்று, அங்கே விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களோடு கூடி அதியற்புத ஆடல்கள் பல ஆடுவாராயினார். ஒருநாள் ஒரு குழியில்
இறங்கி மறைந்தார். அவரோடு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், "அந்தோ, இது என்ன. நம்முடன் கலந்து பல அற்புதச்
செயல்கள் புரிந்து கொண்டிருந்த பெரியவர் இக்குழியில் மறைந்தார். அவரைக் காணோம். எங்கு சென்றார்" என்று
தேடுகையில் சுவாமிகள் ஒரு மணல்
குன்றின்மேல் தோன்றினார். சிறுவர்கள் அவரை அணுகியபோது சுவாமிகள் குழியில் குதித்து
மறைந்தார். இங்ஙனம் அடிகள் பலமுறை
இளையவர்கட்கு ஆடல்காட்டி, ஒருமுறை குழியில்
இறங்கி, உட்கார்ந்து, சிறுவர்களை நோக்கி, "நண்பர்களே, என்மீது ஒரு சாலைக் கவிழுங்கள்"
என்று அருளிச் செய்தார். ஒன்றும் அறியாச் சிறுபிள்ளைகள் அவ்வாறே செய்து, சிறிது நேரம் கழித்துச் சாலைப்
புரட்டிப் பார்த்தார்கள். அவர்கள் சுவாமிகளைக் காணாது, அவ்விடத்தில் ஒரு சிவலிங்கப் பெருமான் விளக்கம் கண்டு, வியந்து, ஊரில் உள்ள பலர்க்குத் தாங்கள் கண்ட
அற்புதச் செயலைத் தெரிவித்தார்கள். ஊரவர், கடலோரம் போந்து, சுவாமிகளது சிவலிங்க வடிவத்தைத்
தரிசித்துப் பேரானந்தம் எய்தினர். பல அன்பர்கள் திருவொற்றியூர் சென்று சுவாமிகள்
திருமேனியை வழிபடலாயினர்.
பட்டினத்தடிகளின் மனைவியாராகிய சிவகலையம்மையார், சுவாமிகட்கு முன்னரே அவர்களது திருவடித்
தாமரைகளை இடையறாது தியானம் செய்துகொண்டு இருந்து, சிவலோக பதவி அடைந்தார். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திருஞானசம்பந்தப்
பெருமான் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர்
மாலை"
என்னும் நூலில் பாடி அருளிய பாடல் ஒன்று...
கணவன்
எனக் காதலியைக் காழியர்,
கைப்பற்றி
மணவறை
ஈசன்கழலாய் வாழ்ந்தார், --- குணமே
தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார்
மற்றை யவர்.
சீகாழிப் பிள்ளையாராகிய
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தம்முடைய தந்தையாகிய சிவபாதவிருதயர், சுற்றத்தார் முதலியோர் வேண்டுகோளுக்கு
இசைந்து திருநல்லூரில் இருக்கின்ற அந்தணருள் நம்பாண்டார் நம்பி என்பவரின் மகளை
மணந்தார். மணத்தில் விபூதி உருத்திராக்க தாரணராய்த் திருவைந்தெழுத்தினை
ஓதிக்கொண்டு வந்த திருமணக் கோலத்துடனே அவர் வேதவிதிப்படி வளர்க்கப்பட்ட அக்கினியை, அக்கினியாவார் பரமசிவனே எனத் திருவுள்ளம்
கொண்டவராய் வலம் வந்தார். "இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே. நான் இவளோடு
சிவபெருமானது திருவடியை அடைவேன்" என உறுதி பூண்டார். திருப்பெருமணம் என்னும்
சிவாலயத்தை மனைவியாரோடு அடைந்தார். திருக்கோயில் சோதிப் பிழம்பாயிற்று. "நீயும்
உன் மனைவியும் உன்னுடைய திருமணத்தைக் காண வந்தவர்கள் எல்லோரும் இந்தச் சோதியின்
உள்ளே புக்கு வந்து நம்மை அடையுங்கள்" எனச் சிவபெருமான் அருளிச் செய்தவாறே, சோதி வடிவாய் நின்ற கடவுளை வணங்கித்
துதித்தார். "காதலாகிக் கசிந்து" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தை
யாவரும் கேட்க அருளிச் செய்தார். பிள்ளையாருடைய திருமணத்தைத் தரிசிக்க வந்த
எல்லோருடனும் திருநீலநக்க நாயனார்,
முருகநாயனார், சிவபாதவிருதயர், நம்பாண்டார் நம்பி, திருநீலகண்டப் பெரும்பாணர்
முதலியோருடனும் சித்தாந்த சைவசமய ஆசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தம்முடைய மனைவியாரைக் கைப்பற்றிக் கொண்டு, அந்தச் சோதியை வலம் வந்து, அதனுள்ளே புகுந்து, சிவசாயுச்சியம் அடைந்தார்.
முற்றத் துறந்தார் வீட்டினைத்
தலைப்பட்டார். அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுள் பட்டார் என்று
அருளினார் திருவள்ளுவ நாயனார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய, "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
மேக்குஉவணை
இன்பும் வெறுத்துச் சிவிமகவான்
மோக்கநிலை
சார்ந்தான், முருகேசா! - ஊக்கித்
தலைப்பட்டார்
தீரத் துறந்தார், மயங்கி
வலைப்பட்டார்
மற்றை யவர்.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, சிவி மகவான் ---
சிவிகைகளை உடைய இந்திரன், மேக்கு உவணை இன்பும்
வெறுத்து --- மேலாகிய விண்ணுலக இன்பத்தையும் வெறுத்து, மோக்க நிலை சார்ந்தான் --- வீடுபெற்று
நிலையை அடைந்தான். ஊக்கி --- ஊக்கத்தைச்
செலுத்தி, தீரத் துறந்தார் ---
முற்றும் துறந்தவர்கள், தலைப்பட்டார் ---
உயர்ந்த நிலையினராவர், மற்றையவர் --- துறவாத
மற்றவர்களோ, மயங்கி வலைப்பட்டார்
--- அறியாமையாகிய வலையிலே அகப்பட்டவர்களாவர்.
தேவேந்திரனானவன் விண்ணுலக இந்பத்தையும்
வெறுத்து வீடுபேற்று நிலையை அடைந்தான். இவ் உலகத்தில் எல்லாவற்றையும் முற்றும்
துறந்தவர்களே உயர்ந்த நிலையினராவர். துறவாதவர்களோ அறியாமையாகிய வலையிலே
அகப்பட்டவர்களாவர் என்பதாம்.
இந்திரன் கதை
எவ்வளவு சிறப்புடையவர்களும்
நூறுவேள்விகளைச் செய்தால் அல்லாமல் அடைதற்கரிய மேலாகிய விண்ணுலக இன்பங்களை
இந்திரன் நுகரும் காலத்திலே, அவைகளை எல்லாம்
நிலையற்றன என்று வெறுத்து விட்டு,
வியாழபகவான்
விளம்பியவாறே காஞ்சியில் சிவபெருமானை வழிபட்டு வீடுபேற்று நிலையை அடைந்தான்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ
வெண்பா"
என்னும் நாலில் வரும் ஒரு பாடல்...
பத்ரகிரி
மாதர்வசப் பட்டமனம் மீட்டது ஒரு
சித்ரகதை
அன்றோ: சிவசிவா --- ஒத்துத்
தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார்
மற்றை யவர்.
பத்திரகிரியார் அரச குலத்தில் தோன்றினவர்; சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர். அறநெறி வழாது உஞ்சேனை மாகாளம் என்னும் பதியை
ஆண்டவர். அவரது அரசாட்சி காலத்தில் ஒருநாள் திருடர் பலர் ஒன்றுகூடி நகர்ப்புறத்திலே
உள்ள ஒரு குறுங்காட்டிலே திருக்கோயில் கொண்டு வீற்றிருந்தருளும் விநாயகக் கடவுள் திருச்
சந்நிதி அடைந்து “பெருமானே! நாங்கள் இன்றிரவு
அரசமாளிகை புகுந்து களவிடப் போகிறோம். தேவரீர் திருவருள் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்து, ஊரை அடைந்து, நள்ளிரவில் அரண்மனை புகுந்து, தாம் விரும்பியவாறு பட்டாடைகளையும், பொன் ஆபரணங்களையும், மாணிக்கப் பதக்கங்களையும், பிற பொருள்களையும் திருடிக்கொண்டு சென்றனர்.
அன்னார் செல்லுங்கால் தமக்குத் திருவருள் புரிந்த கணபதி ஆலயமடைந்து ஒரு மாணிக்க மாலையை
அக்கடவுளுக்குச் சூட்டி வழியே போய்விட்டனர். அதுபோழ்து அர்த்த ராத்திரியாகையால் அம்மாணிக்க
மாலை விநாயகர் திருக்கழுத்தில் விழாமல் அங்கு நிட்டை கூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில்
விழுந்தது. பொழுது விடிந்ததும் அரசமாளிகையில் களவு நிகழ்ந்த செய்தி ஊரெங்கணும் பரவிற்று.
அரசன் ஆணைப்படி வேவு காரர்கள் திருடர்களைத் தேடத் தொடங்கினார்கள். ஊர்ப் புறத்தேயுள்ள
குறுங் காட்டுவழிச் சென்ற வேவுக்காரர்களிற் சிலர் விநாயகர் ஆலயத்தினுள் நிஷ்டை செய்து
கொண்டிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில்,
வேந்தன்
மாணிக்கமாலை பொலிதலைக் கண்டு அவரைப் பற்றிப் பலவாறு துன்புறுத்தினார்.
சுவாமிகள் நிஷ்டை கலைந்து வேவுகாரர்களைத் திருநோக்கஞ்
செய்தருளினார். அவர்கள் அடிகளைப் பிடித்துத் தள்ளிக் கொண்டுபோய் அரசன் முன்னிலையில்
நிறுத்தினார்கள். பத்திரகிரி மன்னர் தீர விசாரியாது பட்டினத்தாரைக் கழுவேற்றுமாறு கட்டளையிடத்
தண்டவினைஞர்கள் சுவாமி களைக் கழுமரத்தருகே அழைத்துச் சென்றார்கள். பெருமான் கழுமரத்தைத்
திருநோக்கஞ் செய்தருளி “என்செயலாவ தொன்று மில்லை” என்னுந் திருப்பாசுரத்தைத் திருவாய் மலர்ந்தருளினார்.
உடனே கழுமரம் அக்கினியால் எரியுண்டு சாம்பராயிற்று. இச்செய்தி கேள்வியுற்ற அரசர்பெருமான்
விரைந்து ஓடிவந்து சுவாமிகள் திருவடிக்கமலங்களில் அடியற்ற பனைபோல் விழுந்து தங்குற்றத்தை
மன்னித்தருளுமாறு வேண்டினார்.
பட்டினத்தடிகள் ஞானதிருஷ்டியால் பத்திகிரியாரது
சத்திநிபாத நிலையை உணர்ந்து “நாய்க்கொரு சூலும்” என்னுந் திருப்பாடலை அருளிச்செய்து ஞானதீட்சை
செய்தருளினார். பத்திரகிரியாரும் உள்ளத் துறவடைந்து ஞானாசிரியராகிய பட்டினத்தார் ஆணைவழி
நிற்பாராயினர். பட்டினத்துச் சுவாமிகள் பத்திரகிரியாரை நோக்கி “திருவிடைமருதூருக்குச் செல்க” என்று கட்டளையிட்டுத் தாம் திருத்தல யாத்திரை
செய்யச் சென்றுவிட்டார். பத்திரகிரியார் குருவின் ஆணைப்படி திருவிடைமருதூரை அடைந்து
சிவயோகத்தில் அமர்ந்திருந்தனர். பட்டினத்தார் பல தலங்களைத் தரிசித்துப் பலவகைப் பாக்களைப்
பாடித் திருவிடைமருதூர் சேர்ந்தனர். பத்திரகிரியார் வீடுகள் தோறுஞ் சென்று பிச்சை
ஏற்றுக் குருராயனை உண்பித்துச் சேடத்தைத் தாமுண்டு குருவின் திருவுள்ளக் குறிப்பின்படி
மேலைக்கோபுர வாயிலில் இருந்து குருநாதனை வழிபட்டு வந்தனர். வரும் நாளில், ஒருநாள் பத்திரகிரியார்
பிச்சையேற்று ஆசாரியாருக்கு நிவேதித்துத் தாஞ்சேடத்தை உண்ணப் புகுங்கால், ஒரு பெட்டைநாய் பசியால் மெலிவுற்று வாலைக்
குழைத்துக் கொண்டு வந்தது.
அதனைக் கண்டதும் பத்திரகிரியார் இரக்கமுற்று அதற்குச்
சிறிது அமுதிட்டனர். அன்று தொட்டு அந்நாய் அவரை விட்டுப் பிரியாமல் அவ்விடத்திலேயே
தங்கிவிட்டது. அந்நாய் முற்பிறப்பிலே அங்க தேசத்திலே விலைமாது வடிவந்தாங்கி இருந்தது.
அவ் விலைமாது இளையர், முதியர் என்னும் வேற்றுமையின்றிக்
கூடிக் கலந்து பொருளீட்டி மது உண்டு தீயொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினாள். ஒருநாள்
ஒரு பிரமசாரி குருவாணைப்படி அமுது நாடி அத் தாசி இல்லம் போந்தான். அவள் தான் தூர்த்தர்களோடு
உண்டு மிகுந்த சேடத்தை அப் பிரம்சாரிக்கு அன்பின்றி விளையாட்டாகத் தந்தாள். பிரமசாரி
அதையுண்டு சென்றான். அவ்விலைமாது தான்புரிந்த பாவச்செயல்களின் காரணமாகப் பெட்டை நாயாகப்
பிறந்தாள். அவள் பிரமசாரிக்குச் சேடம் ஈந்ததன் பயனாகப் பத்திரகிரியார்பால் உறைந்து
அவர் அளிக்குஞ் சேடத்தை உண்ணும் பேறுபெற்றாள். பத்திரகிரியார் அந்நாயைப் பாதுகாத்து
வந்தனர். வருங்கால், ஒருதினம் மருதவாணர் ஒர்
ஏழை வடிவந்தாங்கிப் பட்டினத்தடிகளிடம் சென்று “ஐயா! பசியால் வருந்துகிறேன்; அன்னமிடும்”என்று கேட்டார். அதற்குச்
சுவாமிகள் “மேலைக் கோபுர வாயிலில்
ஒரு குடும்பி இருக்கின்றான்; அங்குச் செல்க” என்றார். ஏழைக் கோலந் தாங்கிவந்த ஏழை பங்காளன், அங்ஙனே மேலைக் கோபுர வாயிலை
அடைந்து அங்கிருந்த பத்திரகிரியாரைக் கண்டு “ஐயா! கீழைக்கோபுர வாயிலில் ஒருவர் இருக்கின்றார்.
அவரை என் பசிக்கு அன்னமிடுமாறு கேட்டேன். அவர் ‘மேலைக் கோபுர வாயிலில் ஒரு குடும்பி இருக்கின்றான்; அங்கே செல்க’ என்று சொன்னார். அவர் சொற்படி யான் இங்கு
வந்தேன். என் பசியை ஆற்றும் என்றார். அது கேட்ட பத்திரகிரியார் “அந்தோ! பிச்சையே ஏகும் இந்த ஓடும், எச்சில் தின்னும் இந்த நாயுமோ என்னைக் குடும்பி
ஆக்கின” என்று கையிலிருந்த ஓட்டையெறிந்தார். அது
நாயின் தலையிற்பட்டது. படவே ஓடும் உடைந்தது. நாயும் மாண்டது. மருதவாணரும் மறைந்தனர்.
மாண்டநாய் ஞானி எச்சிலை உண்ட விசேடத்தால், காசி மகாராஜனுக்குப் பெண்ணாகப்
பிறந்தது. அரசன் பேரன்போடு ஞானவல்லியென்று நாமஞ்சூட்டி வளர்த்து வந்தான்.
ஞானவல்லி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தாள். அரசன் ஞானவல்லியின் அறிவு குணஞ் செயலுக்கேற்ற
ஒரு நாயகனைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தான். அதனை அறிந்த ஞானவல்லி ஒருநாள் தந்தைபால்
சென்று “ஐயனே! யான் யாருடைய வாழ்க்கைக்கும்
உரியவள் அல்ல; திருவிடைமருதூரிலே மேலைக்
கோபுர வாயிலிலே எழுந்தருளியுள்ள தவசீலருக்கே உரியவள்”என்று கூறினள். மன்னவன்
பெண்ணின் மன உறுதியைக்கண்டு தெளிந்து அவள் விரும்பியவாறே அவளைத் திருவிடைமருதூருக்கு
அழைத்துச் சென்றான். அங்கே ஞானவல்லி பத்திரகிரியாரைக் கண்டு வணங்கி “அடிநாய் மீண்டுந் திருவடி நாடி வந்தது” என்றாள். பத்திரகிரியார் அவளது பக்குவநிலையை
அறிந்து அவளது கையைப் பற்றிக் கொண்டு சென்று கீழைக்கோபுர வாயிலில் வீற்றிருந்தருளும்
தமது ஞான குருவள்ளல் திருமுன் நிறுத்தி “சுவாமி!
தேவரீர் எச்சில் உண்ட நாயினுக்கு இவ்விழி “பிறவி எய்தலாமோ” என்று விண்ணப்பித்தார். பட்டினத்தடிகள் “எல்லாஞ் சிவன் செயல்” என்று திருவருளைத் தியானஞ் செய்ய, ஆண்டு ஒரு பெருஞ் சோதி தோன்றிற்று. அதில் பத்திரகிரியார் அப் பெண்ணுடன் புகுந்து
இரண்டறக் கலந்தார்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்துள்ளமை காண்க...
‘இறப்பு எனும் மெய்ம்மையை,
இம்மை யாவர்க்கும்,
மறப்பு
எனும் அதனின்மேல் கேடு
மற்று உண்டோ?
துறப்பு
எனும் தெப்பமே
துணை செய்யாவிடின்,
பிறப்பு
எனும் பெருங் கடல்
பிழைக்கல் ஆகுமோ? --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
இம்மை யாவர்க்கும் --- இப்பிறப்பிலே எவர்க்கும்; இறப்பு எனும் மெய்ம்மையை
--- சாவு உண்டு என்னும் உண்மையை ; மறப்பு எனும் அதனின்மேல் --- மறத்தல் என்னும்
அதற்கு மேற்பட ; கேடு மற்று உண்டோ --- கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ; துறப்பு எனும் தெப்பமே
--- துறத்தல் என்னும் மிதவையே ; துணை செய்யாவிடின் --- உதவி செய்யாவிட்டால்
; பிறப்பு எனும் பெருங்கடல் --- பிறப்பு என்னும்
பெரிய கடலினின்று ; பிழைக்கல் ஆகுமோ --- தப்புதல் இயலுமேடா? இயலாது.
யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால், அது பிறவியை ஒழித்தற்கு
இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச் செய்யும்; செய்யவே, பிறவிப் பெருங்கடல் கடத்தலாகும் என்பது கருத்து.
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடல்
என்றார்.
No comments:
Post a Comment