திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
31 --- வெகுளாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "தன்னைச் சேர்ந்தவரையும்
கொல்லுகின்ற சினமானது, தனக்கு இனமாக உள்ள வலிய தெப்பத்தையும் அழித்துவிடும்"
என்கின்றார் நாயனார்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றதனால், சேர்ந்த
இடத்தைக் கொல்லும் நெருப்புப் போல் அல்லாமல், கோபக் கனலானது சேராத
இடத்தையும் சுடும் என்பது பெறப்படும்.
சினமானது பிறவி என்னும் கடலில் வீழ்த்துவதோடு
அல்லாமல்,
அதில்
இருந்து எடுத்துக் காப்பாரையும் நீக்கிவிடும்.
பிறவிக் கடலில் அழுந்தாதவாறு, முத்திக்
கரையில் சேர்ப்பது புணை அல்லது தெப்பம் எனப்படும்.
திருக்குறளைக்
காண்போம்...
சினம்
என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம்
என்னும்
ஏமப்
புணையைச் சுடும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி ---
சினம் என்னும் நெருப்பு;
இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் ---
தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப் புணையையும் சுடும்.
('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய
பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்,
'சினமென்னும்
நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான்
சேர்ந்த இடத்தையே , இந்நெருப்புச் சேராத
இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து
தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச்
சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை -
ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச
உருவகத்தால், 'பிறவிக் கடலுள்
அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை
விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.)
இதற்குப் பின்வரும் பாடல்கள் ஒப்பாக
அமைந்துள்ளமை காண்க...
அவ்வித்து
அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச்
செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம்
கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார்
விடுதல் இனிது. --- இனியவை நாற்பது.
இதன்
பதவுரை ---
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது ---
மனக்கோட்டஞ் செய்து, பொறாமைச் சொற்களைச்
சொல்லாமை, - மிக இனிது; செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு
இனிது --- மனக்கோட்டம் இலனாய், கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது; கவ்விக்கொண்டு தாம் கண்டது காமுற்று வவ்வார்
விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள்
கண்ட பொருளைப் பெற விரும்பி, (சமயங்கண்டு)
அபகரியரதவராய், (அதனை மறந்து)
விடுதல் இனிது -.
"அழுக்கா றெனவொரு பாவி
திருச்செற்றுத்
தீயுழி
யுய்த்து விடும் " (குறள்
- 168)
ஆகலின், ‘அழுக்கா றுரையாமை முன்னினிதே' எனவும்;
"சினமென்னுஞ்
சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும்
ஏமாப்
புணையைச் சுடும்" (குறள்
- 39)
ஆகலின், ‘செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே' எனவும்,
"நடுவின்றி
நன்பொருள்வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு
மாங்கே தரும்" (குறள்
- 171)
கர்ப்பத்தால்
மங்கையருக்கு அழகு குன்றும்,
கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழ் ஆம்,
துர்ப்புத்தி
மந்திரியால் அரசுக்கு ஈனம்,
சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்,
நற்புத்தி
கற்பித்தால் அற்பர் கேளார்,
நன்மை செய்ய, தீமை உடன் நயந்து செய்வார்,
அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்,
அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே! --- விவேக சிந்தாமணி.
இதன்
பொருள் ---
திருமணம் ஆன பெண்களுக்கு, கர்ப்பம் அடைந்தால், அழகு சற்றே
குறையும். விசாரித்து அறியாத அரசன் இருந்தால், அவனால் ஆளப்படுகின்ற
உலகம் செழிக்காது. கெட்ட புத்தியினை உடைய அமைச்சன் ஒருவன் இருந்தால், அவனால்
அரசுக்குக் கேடு உண்டாகும். தாய் தந்தையர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி
நடவாத மகன்களால் குலப் பெருமை கெடும். கீழ் மக்களுக்கு நல்ல புத்திமதிகளைச்
சொன்னால் கேட்க மாட்டார்கள். அந்தக் கீழ் மக்களுக்கு நன்மை தருபவற்றைச் செய்தால், அதற்கு நன்றி
பாராட்டாமல்,
உடனே
அந்த நன்றியினை மறந்து, தீமைகளை விரும்பிச் செய்வார்கள். இத்தகைய
புல்லறிவாளரோடு நட்புப் பூண்டு பழகினால், அவ்வாறு நட்புக் கொண்டவருடைய பெருமை
சிறுமை உறும். சினத்தால், செய்தற்கு அரிய தவமானது அழிந்து போகும். விசாரித்து
அறியாமல் முறை செய்தால் நாட்டுக்குக் கேடு என்பது.
மூங்கிலில்
பிறந்த முழங்குதீ மூங்கில்
முதல் அற முருக்குமா போல்
தாங்க
அரும் சினத்தீ தன்னுளே பிறந்து
தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,
ஆங்கு
அதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனை உள்ளடக்கவும் அடங்காது
ஓங்கிய
கோபத் தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறு உண்டோ? --- விவேக
சிந்தாமணி.
இதன்
பொருள் ---
மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில்
காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு
மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும்.
அதுபோல,
ஒருவனிடத்தில்
வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய
சுற்றத்தையும் அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட
உள் பகை வேறு இல்லை.
கோபத்தால்
கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,
கோபத்தால்
நகுடனும் கோலம் மாற்றினான்,
கோபத்தால்
இந்திரன் குலிசம் போக்கினான்,
கோபத்தால்
இறந்தவர் கோடி கோடியே. --- விவேக சிந்தாமணி.
இதன்
பொருள் ---
விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே
வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன்
நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம்
தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை
இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர்
புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர்
துறந்தனர்.
கோபமே
பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே
பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவ றுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே
ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்தெ
லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
இதன்
பொருள் ---
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே --- இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!,
அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள்,
எப்போதும்
உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரியில் எழுந்தருளிய
அறப்பளீசுர தேவனே!, கோபமே பாவங்களுக்கு
எல்லாம் தாய் தந்தை --- சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும் அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும் --- சினமே
குடியைக் கெடுக்கும், கோபமே ஒன்றையும்
கூடிவரவொட்டாது --- சினமே எதனையும் அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் --- சினமே
துயரந்தரும், கோபமே பொல்லாது ---
சினமே கெட்டது, கோபமே சீர்கேடு ---
சினமே புகழைக் கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும்
--- சினமே உறவைத் தவிர்க்கும், கோபமே பழி செயும் ---
சினமே பழியை உண்டாக்கும், கோபமே பகையாளி ---
சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும்
--- சினமே அருளைக் கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் ---
சினமே இழிவாகும், கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும் --- சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில்
தள்ளும் --- சினமே காலன்முன் இழுத்துச் சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.
No comments:
Post a Comment