028. கூடா ஒழுக்கம் - 05. பற்று அற்றேம்





திருக்குறள்
அறுத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 28 -- கூடா ஒழுக்கம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "பிறர் தம்மை நன்கு மதித்தல் பொருட்டு, நாம் பற்று அற்றவர் என்று சொல்லுவாரது, மறைந்த ஒழுக்கமானது, அப்பொழுது இனிது போலத் தோன்றுமாயினும், பின்னர், என்ன செய்தோம், என்ன செய்தோம் என்று தாமே இரங்கும்படி, அவர்க்குப் பல துன்பங்களையும் தரும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம், எற்றுஎற்று என்று,
ஏதம் பலவும் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் --- தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம்,

     எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும்.
        
         (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.)
    
     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


அட்டுநரன் ஊன்இட்டு அரக்கன் பழிக்குஅரசைத்
தெட்டிவழி கொண்டான், சிவசிவா! - கிட்டினர்க்குப்
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.

         அட்டு --- சமைத்து. நரர் ஊன் --- மக்களிறைச்சி.  வேந்தனொருவன் தென்புலத்தார் பூசையில் வசிட்டனுக்கு ஊன்கலந்த அமுது படைத்தனன். அரக்கன் வஞ்சனையில் நரர் ஊனையும் சேர்த்துவிட்டான். நரர் ஊன் என்று கண்ட வசிட்டன், வேந்தனை அரக்கனாக என்று சபித்தான்.

     அயோத்தி மாநகரை ஆட்சி செய்தவன் கன்மாடபாதன். தர்ம மகாபிரபு. இந்நகரின் குருவான வசிஷ்டருக்கும், ராஜரிஷி விசுவாமித்திரருக்கும் கடும்பகை இருந்தது. ஒருமுறை கன்மாடபாதனை சந்திக்க வந்த விசுவாமித்திரர், ரிஷிகளுக்கென தனியாக தர்மசத்திரம் அமைக்க வேண்டினார். அதை ஏற்ற அரசன், அவ்வாறே செய்தான். ஒருமுறை அங்கு வசிட்டர் தர்மம் கேட்டு வந்தார். அவர் வந்த நேரத்தில், அவரது பரம எதிரியான விஸ்வாமித்திரர், அங்கிருந்த உணவுப் பொருட்களை பசுவின் கன்றுகளாக மாறும்படி செய்து விட்டார். தர்ம சத்திர அதிகாரி உள்ளே சென்றதும் இதைக் கண்டு அதிர்ந்தார். செய்வதறியாது விழித்த அவர், இதைச் சொன்னால் வசிட்டர் நம்புவாரோ மாட்டோரோ என்றெண்ணி, அவசர அவசரமாக ஒரு கன்றை சமைத்து படைத்து விட்டார்.

     சாப்பாட்டின் முன் அமர்ந்ததுமே, கெட்ட வாடை வீசியதால், கோபமடைந்த வசிட்டர் நேராக அரசனிடம் சென்றார். கன்றை சமைத்து உணவிட்டதற்காக அவனை நரமாமிசம் தின்னும் அரக்கன் ஆகும்படி சபித்தார். தவறே செய்யாத அரசன் விதியின் பிடியில் சிக்கி, அறியாமல் நடந்த சம்பவத்துக்காக, சாப விமோசனம் கேட்டான். வசிட்டர் பதில் பேசாமல் போய்விட்டார். அரசனின் உருவம் விகாரமாகி விட்டது. அவன் நாட்டை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்கு போய், சாப விமோசனம் பெறுவதற்காக யாகம் ஒன்றைத் துவங்குவதற்காக எமதர்மராஜாவை நோக்கி தவமிருந்தான். எமன் வந்தார். வசிட்டர் போன்ற மாமுனிவர்கள் கொடுத்த சாபம், என்னை நினைத்து செய்யப்படும் யாகத்தால் சரியாகாது என எமன் சொல்ல அரக்கனுக்குக் கோபம் வந்து விட்டது. எமனுடன் போராட்டத்தை துவக்கி விட்டார். எமனே! நீ பொய் சொல்கிறாய். நீ தான் உலகில் வாழ்பவர்களின் ஆயுள்காலத்தை நிர்ணயிப்பவன். உன்னால், முடியாதது ஏதுமில்லை. நீ என்னை சோதிக்க நினைத்தால், அச்சோதனைகளில் வெல்வேன், என்றான். எமன் எவ்வளவோ சொல்லியும் அரசர் கேட்கவில்லை. அவனுடன் யுத்தம் செய்து வென்று, எமலோகத்திற்கு தான் அரசனாகி, யாகத்தை நிறைவேற்றப் போவதாக கூறினார். இருவரும் யுத்தத்தை தொடங்கினர்.எமன், தன் கையிலிருந்த தெய்வாம்சம் பொருந்திய சூலம் ஒன்றை அரசர் மீது எய்தான்.

     அரச தர்மத்துக்கு அதிபதியான அந்த எமனையே வணங்கி, எமனே! தர்மத்துக்கு நீயே அதிபதி. நான் செய்த தர்மங்கள் உண்மை என்பது நிச்சயமானால், நீ எறிந்த இந்த சூலம், நொறுங்கி சுக்கு நூறாகட்டும், என்றான். சொன்னது போலவே சூலம் நொறுங்கியது. எமதர்மன் இதைக் கண்டு மனம்கலங்கி, ராஜாவுடன் மல்யுத்தம் செய்தான். அதிலும் ராஜா பிடி கொடுக்கவில்லை. பின்னர் அவனது ஆலோசனைப்படி, கன்மாடபாதனே! உன் சாபத்தை என்னால் தீர்க்க இயலாது. இதை தீர்க்கவல்லவர் விசுவாமித்திரர் மட்டுமே, என்று புதிருக்கான விடையை அவிழ்த்தான். பின்னர், கன்மாடபாதன் விசுவாமித்திரரை தேடிச் சென்று வணங்கினான். விசுவாமித்திரர் அவனிடம்,  நீ வசிஷ்டரின் நூறு பிள்ளைகளையும் விழுங்கி விடு. உனக்கு நரமாமிசம் சாப்பிடும் சாபத்தை அவர் தானே தந்தார்! அவரே அதற்குரிய வினையை அனுபவிக்கட்டும். அவ்வாறு செய்வதால், மேலும் அவரது கோபத்திற்கு ஆளாவோயோ என எண்ண வேண்டாம். ஏனெனில் அவரது சாபம் அவரையே தாக்குகிறது. வினை செய்தவர்கள் வினையின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். பிறகு என்னிடம் வா. சாபத்தை நானே நீக்கி விடுகிறேன், என்றார். அரசனும் அவ்வாறே செய்து விட்டு, விசுவாமித்திரரிடம் ஓடினான். அவர் அவனிடம், ஒரு காலத்தில் வசிட்டர் என் பிள்ளைகளை சாம்பலாகும்படி சபித்தார். அதுபோல, இப்போது அவரது பிள்ளைகளும் மாண்டு போனார்கள். என் பழி உன்மூலம் தீர்ந்தது. உனக்கு விமோசனம் பெற்றுத் தருகிறேன், எனக் கூறி, காட்டிலேயே சிவலிங்க பிரதிட்டை செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து, சிவனை வரவழைத்தார் விசுவாமித்திரர். சிவதரிசனம் கண்டு, அரசனுக்கும் எல்லையற்ற ஆனந்தம். அவன் சாபம் நீங்கப்பெற்று, சுயரூபம் பெற்றான். மீண்டும் நாடு சென்று மகனோடு நீண்டகாலம் இனிது வாழ்ந்து திருக்கயிலையை அடைந்தான்.

பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...
                                                     
இம்மைத் தவமும் அறமும் என இரண்டும்
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி, மறுமையும்
தம்மைத்தாம் ஆர்க்கும் கயிறு.   --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தம்மை உடையார் --- தம்மை வீட்டின்கண் செலுத்தும் விருப்பம் உடையார், இம்மை தவமும் அறமும் என இரண்டும் --- தாம் இப் பிறப்பின் கண்ணே செய்யும் தவமும் அறமும் ஆகிய இவ்விரண்டு நெறியின்கண்ணும், அவற்றை சலம் ஒழுகல் --- அவற்றை வஞ்ச மனத்தராய்ச் செய்தல், இம்மை பழியே  அன்றி --- இம்மையின் கண் பழியை உண்டாக்குதலே அல்லாமல், மறுமையும் --- மறுபிறப்பின்கண்ணும், தம்மை தாம் ஆர்க்குங் கயிறு --- நிரயத்தினின்றும் தாம் வெளியேறாதவாறு தம்மை இறுகக் கட்டி வீழ்த்தும் கயிறாகவும் ஆகும்.

     தவத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, புலி பசுவின் தோலைப் போர்த்து மேய்ந்தாற்போல, அதற்குரிய வேடம் புனைந்து அதற்காகாதன செய்தொழுகுதல்.

         அறத்தின்கண் வஞ்சமாய் ஒழுகுதலாவது, பிறர் அறியும் பொருட்டு ஆரவார நீர்மையராய் மனவிருப்பமின்றி அறஞ்செய்து ஒழுகுதல். இவ்விரண்டினும் பழியும், நிரயமும் வந்து எய்தும்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...