திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
33 -- கொல்லாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம்
திருக்குறளில், "பிறப்பு நின்ற
நிலையை அஞ்சி, பிறவாமைப்
பொருட்டு,
மனைவாழ்க்கையை
விட்டுத் துறவறத்தை மேற்கொண்டாருள் எல்லாம், கொலைப் பாவத்திற்கு
அஞ்சி,
ஓர்
உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதன் உயர்ந்தவன் ஆவான்" என்கின்றார்
நாயனார்.
பிறப்பு நின்ற நிலை --- மனிதர் முதலாகிய
சரமும், மரம் முதலாகிய அசரமும்
ஆகிய இருவகைப் பிறப்பிலும், இன்பம் என்பது ஒன்று இல்லாமல், துன்பமே மிக்கு
உள்ளதாகிய நிலை.
திருக்குறளைக்
காண்போம்...
நிலைஅஞ்சி
நீத்தாருள் எல்லாம், கொலைஅஞ்சிக்
கொல்லாமை
சூழ்வான் தலை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் ---
பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார்
எல்லாருள்ளும்,
கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை ---
கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன்.
(பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப்
பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு
ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்
பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன்
உயர்ச்சி கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
தத்தி
நடந்து எவ்வுயிர்க்கும் தாங்கு தயையால் பரதர்
முத்தரின்
மேம்பட்டார், முருகேசா! - மெத்து
நிலையஞ்சி
நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை
சூழ்வான் தலை.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, பரதர் --- பரதர் என்பவர், எவ்வுயிரும் தாங்கு தயையால் ---
எவ்வுயிரையும் பாதுகாக்க வேண்டும் என்னும் அருளினால், தத்தி நடந்து --- தாண்டித் தாண்டி
நடந்து, முத்தரின்
மேம்பட்டார் --- முத்தர்களைப் பார்க்கிலும் சிறந்தவரானார். மெத்து --- மெதுவான, நிலை அஞ்சி --- வாழ்க்கை நிலைக்கு
அச்சமுற்று, நீத்தாருள் எல்லாம் ---
துறவை மோற்கொண்டவர்களில் எல்லாம்,
கொலை
அஞ்சி --- பிறவுயிரைக் கொலை செய்தற்கு அஞ்சி, கொல்லாமை சூழ்வான் --- கொல்லா நோன்பை
மேற்கொண்டு நடப்பவன், தலை --- தலை
சிறந்தவனாவான்.
பரத முனிவர் என்பவர் பிற
உயிர்களிடத்திலே கொண்ட அருளினால் தாண்டித் தாண்டி நடந்து, முத்தர்களினும் சிறந்து விளங்கினார்.
உலக நிலையாமைக்கு அஞ்சித் துறவை மேற்கொண்டவர்கள் எல்லாரினும் கொலைத்தன்மைக்கு
அஞ்சிக் கொல்லாமையை மேற்கொண்டொழுகுபவர்களே சிறந்தவர்கள் என்பதாம்.
பரத முனிவர் கதை
பரத முனிவர் என்பவர் நீராடும்
பொருட்டுக் கண்டகி ஆற்றுக்குச் சென்றார். அங்கு நீர்ப் பெருக்கிலே மான் கன்று
ஒன்று மிதந்து வந்தது. அதனை எடுத்துச் சென்று அதனிடம் அன்பு பாராட்டினார். இறுதிக்
காலத்திலும் அதன்மீது எண்ணம் கொண்டவராய் உடலை விட்டார். மறுபிறப்பிலும் மெய்யறிவு
உடையவராய்த் திகழ்ந்தார். நிலத்தில் அடிபாவுமாறு நடந்தால் உயிர்த் தொகைகள் மடியுமே
என்று அஞ்சித் தாண்டித் தாண்டி நடந்து கொண்டிருந்தார். ஒருநாள் இரகுகணன் என்னும்
அரசன் கபிலமுனிவருடைய இருப்பிடத்திற்குச் சென்றான். அவன் சென்ற சிவிகையைத்
தாங்கிச் சென்றோர் வழியில் நின்ற இவரையும் பிடித்துச் சிவிகையைத் தாங்குமாறு
செய்தனர். முனிவர் தாண்டித் தாண்டிச்
சென்றமையால் சிவிகை ஆடியது. அசரன் சிவிகை
ஆடியதனால், பரத முனிவருடைய
செய்தியை அறிந்து, அவரைப் போற்றிப்
பாராட்டி அருள் பெற்றான்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை
காண்க...
கொன்று
ஊன் நுகரும் கொடுமையை உள்நினைந்து
அன்றே
ஒழிய விடுவானேல், --- என்றும்
இடுக்கண்
என உண்டோ? இல்வாழ்க்கைக்கு உள்ளே
படுத்தானாம்
தன்னைத் தவம். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
கொன்று --- உயிர்களைக் கொன்று, ஊன் நுகரும் --- புலால் உண்ணும், கொடுமையை --- தீச்செயலை, உள் நினைந்து ---மனத்தால் ஆராய்ந்து, அன்றே --- அப்பொழுதே, ஒழிய விடுவானேல் --- புலால் உண்ணலை
முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என
உண்டோ ---எக்காலத்தும் அவனைத் துன்பங்கள் அணுகா, இவ்வாழ்க்கைக்கு உள்ளே படுத்தானாம்
தன்னைத் தவம் --- அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியினின்று தவஞ் செய்வாரை
நிகர்வன்.
No comments:
Post a Comment