திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
33 -- கொல்லாமை
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம்
திருக்குறளில், "காண்பதற்கு
இயலாத நோய்கள் மலிந்த உடம்பினோடும், வறுமையோடும், இழிவான தொழில்களைப்
புரிந்து வாழ்பவர், முற்பிறவியில், உடல்களில் இருந்து உயிர்களை நீக்கியவர்கள் ஆவர்
என்று வினை விளைவுகளை அறிந்தோர் கூறுவர்" என்கின்றார் நாயனார்.
கொலைத் தொழில் புரிவோர், மறுமையில், வறுமையையும், கொடிய பிணியையும்
அடைவர்.
திருக்குறளைக்
கோண்போம்...
உயிர்உடம்பின்
நீக்கியார் என்ப, செயிர் உடம்பின்
செல்லாத்
தீ வாழ்க்கை அவர்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர்
--- நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை,
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப ---
இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று
சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர்.
(செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக்
கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை
யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும்
எய்துவர் என்பதாம்.
அருள்
உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும்
அடங்கும்; அஃது அறிந்து
அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்துள்ளமை காண்க...
அக்கேபோல்
அங்கை ஒழிய விரல் அழுகித்
துக்கத்
தொழுநோய் எழுபவே, - அக்கால்
அலவனைக்
காதலித்துக் கால் முரித்துத் தின்ற
பழவினை
வந்து அடைந்தக் கால். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
அக்கால் அலவனைக் காதலித்துக் கால் முரித்துத்
தின்ற பழவினை வந்தடைந்தக்கால் --- முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன்
கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், அக்குபோல் அங்கை ஒழிய விரல் அழுகித்
துக்கத் தொழிநோய் எழுப --- சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க
ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப்
பெறுவர்.
ஊன் உண்ணும் தீவினைக்கு அஞ்சி அதனைவிடல்
வேண்டும்.
No comments:
Post a Comment