037. அவா அறுத்தல் - 02. வேண்டுங்கால் வேண்டும்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "பிறவியானது துன்பமாய் இருத்தலை அறிந்தவன், ஒன்றை வேண்டுவானாகில், பிறவாது இருத்தலையே வேண்ட வேண்டும். அது, தான் ஒரு பொருளிலும் பற்றுக் கொள்ளாமையால், அவனுக்குத் தானே உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

     பிறப்பானது துன்பத்தையே தரும் என்பதை அறிந்த ஒருவனுக்கு விருப்பம் என்று ஒன்று இருந்தால், அது பிறவாமை என்னும் விருப்பமாகவே இருத்தல் வேண்டும். அநாதியாகவே உயிரானது பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, நோய் ஆகியவற்றால் துன்பத்தை அடைந்து வருகின்றது. எனவே, மீண்டும் மீண்டும் துன்பத்தில் உழல விரும்பாது. விரும்புவது இன்பமாகவே இருக்கும். அந்த இன்பமானது பிறவாமையால் உண்டாகும் இன்பமே ஆகும். ஒரு பொருளின் மீது ஆசையை வைப்பதால், அந்த ஆசையானது பிறப்பினைக் கொடுக்கும் வித்தாகும் என்பதால், உண்மையான வீட்டின்பத்தை விரும்புகின்ற ஒருவன், ஆசையை விட்டுவிடுதல் வேண்டும்.

     "ஆசை படப்பட ஆய் வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்று நமது கருமூலத்தை அறுக்க வந்த, திருமூல நாயனார் அருளியதன் அருமையை உணர்க.


திருக்குறளைக் காண்போம்...


வேண்டும்கால் வேண்டும் பிறவாமை, மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்.                  

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்,

     அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.

          (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒரு பொருளை அவாவின், அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேண்டாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது
தூய பிறவாமை ஒன்றே, சோமேசா! --- ஆயதனால்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

இதன் பொருள்---

         சோமேசா! தாய் கருவில் வாழ் குழவி --- தாயின் கர்ப்பத்தில் வாழ்கின்ற குழந்தைகள் எல்லாம், வேண்டுவது --- விரும்புவது, தூய பிறவாமை ஒன்றே --- தூயதாய பிறவி இல்லாதிருப்பது ஒன்றேயாம்,  ஆயதனால் --- அதனால்,

         வேண்டுங்கால் --- பிறப்புத் துன்பம் தருவதாம் என்னும் உண்மையை உணர்ந்தவன் ஒன்றை விரும்புவானாயின், பிறவாமை வேண்டும் --- பிறவாத தந்மை ஒன்றையே வேண்டுவான், அது --- அப் பிறவாமையாவது, வேண்டாமை வேண்ட வரும் --- தான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்டத் தானே உண்டாம் என்றவாறு.

         பொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம் வேட்கையாம்.  அந்தப் பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசையே ஆவாவாம். யான் எனது என்னும் இருவகைப் பற்றும், அவாவும், அதன் மூலமாகிய மயக்கமும் தொடர்ப்பாடு அறுதலான் பிறப்பும் அறும் என்க. "வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே" (திருவாசகம் - பிரார்த்தனைப் பத்து). "வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" (பெரிய புராணம் - திருக்கூட்டச் சிறப்பு).

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்ட வரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

என வரும் திருக்களிற்றுப்படியார் பாடலையும்,

இறவாத இன்பஅன்பு
         வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
         பிறப்பு உண்டேல் உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
         வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீஆடும் போதுஉன்
         அடியின்கீழ் இருக்க என்றார்.

என வரும் பெரியபுராணப் பாடலையும் நோக்குக.


     அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

பற்று அறுத்து வாமதேவன் பிறவாப் பான்மைபெற்றான்
முற்றிஅரன் பூசை, முருகேசா! - கற்று உணர்ந்தோர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

இதன் பொருள் ---

     முருகேசா --- முருகப் பெருமானே, வாமதேவன் --- வாமதேவ முனிவர், பற்று அறுத்து --- எல்லாப் பற்றுக்களையும் விட்டு, அரன் பூசை முற்றி --- சிவபெருமானைப் பூசித்து, பிறவாப் பான்மை பெற்றான் --- பிறவாத நெறியை அடைந்தார். கற்று உணர்ந்தோர் --- அறிவு நூல்களை ஓதி உணர்ந்தவர்கள், வேண்டுங்கால் --- ஒன்றை விரும்புமிடத்து, பிறவாமை வேண்டும் --- பிறவா நிலையை விரும்புதல் வேண்டும், மற்றது --- அந்நிலை, வேண்டாமை வேண்ட வரும் --- அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
        
     வாமதேவ முனிவர் என்பவர் பற்றுக்களை எல்லாம் விட்டுச் சிவபெருமானை வழிபட்டுப் பிறவாநிலையை அடைந்தார்.  ஒன்றை விரும்பினால் பிறவாமையையே விரும்புதல் வேண்டும். அந் நிலையானது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும் என்பதாம்.

                                                     வாமதேவர் கதை

         வாமதேவ முனிவர் என்பவர் தாயினுடைய கருப்பத்தில் இருக்கும்போதே பிறவிக்கு அஞ்சிச் சிவபெருமானை மனத்தாலே வழிபட்டுப் போற்றினார். அப் பெருமான் தோன்றி அருள் செய்தார். அதன்பிறகு உலகத்தில் பிறந்து எல்லாப் பற்றுக்களையும் ஒழித்துச் சிவபூசை செய்து பிறவா நிலையை அடைந்தார்.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்
ஏக! நின்கழல் இணை அலாது இலேன்என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை ஆ தாக ஐயனே.   --- திருவாசகம்.

இதன் பதவுரை ---

     ஏக --- ஏகனே, என் எம்பிரான் --- என் தலைவனே, ஐயனே --- அப்பனே, போகம் வேண்டி --- சிற்றின்பத்தை விரும்பி, புரந்தரன் ஆதி இன்பமும் --- இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களையும், வேண்டிலேன் --- விரும்புகின்றேன் இல்லை; நின் --- உன்னுடைய, கழல் இணை அல்லாது --- திருவடி இரண்டும் அன்றி, இலேன் --- வேறு யாதும் பற்று இல்லேன்; (ஆகவே, அந்நிலையிலேயே) ஆகம் விண்டு --- உடல் நெகிழ்ந்து, கம்பம் வந்து --- நடுக்கம் உண்டாகி, என்கை --- என்னுடைய கைகள், குஞ்சி அஞ்சலிக்கண் ஆக --- சிரத்தின் மீது கும்பிடும் தொழிலின்கண் நிற்பதாக, கண்கள் தாரை ஆறதாக --- கண்கள் நீர்த்தாரையாகிய ஆற்றினை உடையனவாக.


ஐய நின்னது அல்லது இல்லை
     மற்றோர் பற்று, வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை,
     பொய்மையேன், என் எம்பிரான்,
மைக லந்த கண்ணி பங்க!
     வந்து நின்க ழற்கணே
மெய்கலந்த அன்பர் அன்பு
     எனக்கும் ஆக வேண்டுமே.   ---  திருவாசகம்.

இதன் பதவுரை ---

     ஐய --- ஐயனே, என் எம்பிரான் --- என் தலைவனே, மை கலந்த கண்ணி பங்க --- மை தீட்டிய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, நின்னது அல்லது --- உன்னுடைய ஆதரவன்றி, மற்றோர் பற்று இல்லை --- வேறோர் ஆதரவு இல்லை; வஞ்சனேன் --- வஞ்சகத்தையுடைய யான், பொய் கலந்தது அல்லது --- பொய்யோடு கூடியிருப்பதன்றி, இல்லை --- மெய்யோடு கூடியிருத்தல் இல்லை; (ஆகையால்) பொய்மையேன் --- யான் பொய்மையை உடையவனே ஆகின்றேன்; (ஆயினும்) நின் கழற்கண் வந்து --- உன் திருவடி நிழலிலே சேர்ந்து, மெய் கலந்த --- மெய்யான பேற்றைப் பெற்ற, அன்பர் அன்பு --- மெய்யன்பரது அன்பு போன்ற அன்பு, எனக்கும் ஆக வேண்டும் --- எனக்கும் உண்டாதல் வேண்டும்.


வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்,
         வேண்டேன் மண்ணும் விண்ணும்,
வேண்டேன் பிறப்பு இறப்பு, சிவம்
         வேண்டார்தமை நாளும்
தீண்டேன், சென்று சேர்ந்தேன்மன்னு
         திருப்பெருந்துறை, இறைதாள்
பூண்டேன், புறம் போகேன், இனிப்
         புறம்போகல் ஒட்டேனே.        ---  திருவாசகம்.

இதன் பதவுரை ---

     பிறப்பு இறப்பு வேண்டேன் --- நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்பவில்லை; ஆகையால், புகழ் வேண்டேன் --- புகழை விரும்பேன்; செல்வம் வேண்டேன் --- பொருளை விரும்பேன்; மண்ணும் விண்ணும் வேண்டேன் --- மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன்; சிவம் வேண்டார்தமை --- சிவத்தை விரும்பாத புறத்தாரை, நாளும் தீண்டேன் --- ஒரு நாளும் தொடமாட்டேன்; மன்னு --- நிலைபெற்ற, திருப்பெருந்துறை இறைதாள் --- திருப்பெருந்துறை இறைவனது திருவடியை, சென்று சேர்ந்தேன் --- சென்று அடைந்தேன்; பூண்டேன் --- அதனையே அணிந்து கொண்டேன், இனிப் புறம் போகேன் --- இனிமேல் அதனை விட்டு நீங்கேன்; புறம் போகல் ஒட்டேன் --- என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

வேண்டும்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது ---  வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும் அவன்பால். ---  உண்மை விளக்கம்.

இதன் பொருள் ---

     வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்ட வேணும் என்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமை ஒன்றுமே வேண்டுவது. விரும்பாமையை விரும்ப விரும்பினது வரும் என்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக.
                                                                       

இறவாத இன்ப அன்பு
     வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும், மீண்டும்
      பிறப்புஉண்டேல் உன்னைஎன்றும்
மறவாமை வேண்டும், இன்னும்
     வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது உன்
     அடியின் கீழ்இருக்க என்றார்.    ---  பெரியபுராணம்.

இதன் பொருள் ---

     என்றும் கெடுதல் இல்லாத இன்ப அன்பினை வேண்டிப் பின்னும் வேண்டுவாராய், `இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும், இவற்றோடு இன்னும் ஒன்று வேண்டும், அது, அறவா! நீ ஆடும்போது, நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்கவும் வேண்டும்` என்று வேண்டினார்.


அருளால் அறம்வளரும், ஆள்வினையால் ஆக்கம்,
பொருளால் பொருள்வளரும், நாளும்--தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம் அக் காம
விழைவு இன்மையால் வளரும் வீடு.  ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     அருளல் அறம் வளரும் --- துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள் செய்வதால் அறமானது வளரும், ஆள்வினையால் ஆக்கம் --- முயற்சியால் பெருவாழ்வு உளதாம், நாளும் பொருளால் பொருள் வளரும் --- எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம், தெருளா விழைவு இன்பத்தால் காமம் வளரும் --- மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம விழைவு இன்மையால் வீடு வளரும் --- ஆசையை விட வீடுபேறு உளதாம்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...