034. நிலையாமை - 01. நில்லாதவற்றை

திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 34 -- நிலையாமை

     துறவற இயலின் இரண்டாம் பகுதியாகி, நிலையாமை முதல் அவா அறுத்தல் முடிய நான்கு அதிகாரங்களில், முன்னர் அருளுடைமை முதல் கொல்லாமை ஆகிய அதிகாரங்களில் சொல்லப்பட்ட விரதங்களை அனுட்டித்ததன் பயனாக அடையப்படும் ஞானத்தைக் குறித்து இனி அருளுகின்றார் நாயனார். ஞானமாவது வீட்டினைக் கொடுக்கும் ஓர் உணர்வு.

     வீட்டின்பத்தைத் தருவது ஞானமே. "ஞானம் அலது கதி கூடுமோ" என்று தாயுமானார் அடிகளும், "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை" என்று நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனாரும் அருளியது காண்க.

     அவற்றுள் நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

     நிலையாமை என்னும் இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை" என்கின்றார் நாயனார்.

     தோற்றம் உடைய பொருள்கள் நாசம் அடையாது நிலைத்து இருப்பன என்று உணரும் அற்ப புத்தியால், அப் பொருள்களின் மீது பற்று உண்டாவது, பிறவித் துன்பத்திற்குக் காரணம் ஆகும். அற்ப அறிவினை உடையவர் பெரும்பான்மையும் பற்றுக் கொள்வது, சிற்றின்பத்திற்குக் காரணம் ஆகிய செல்வத்திலும், அதனை அனுபவித்தற்கு இடமாக உள்ள உடம்பிலும். எனவே, அந்த இரண்டின் நிலையாமையை அறிவுறுத்துகின்றார்.

     தோன்றிய யாவும் நிலைத்து இருப்பன என்னும் அற்ப அறிவு உடையாரை நோக்கி,

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்"

என்று பட்டினத்தடிகள் அறிவுறுத்தியது காண்க.

திருக்குறளைக் காண்போம்...

நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை, கடை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை --- நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்;

     கடை --- துறந்தார்க்கு இழிபு.

         (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித் துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்
தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! - நோக்கியிடில்
நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

இதன் பொருள்---

         சோமேசா! நோக்கியிடில் --- ஆராயுமிடத்து, நில்லாதவற்றை --- நிலையுதல் இலவாகிய பொருள்களை, நிலையின என்று --- நிலையுதலை உடையன என்று, உணரும் --- கருதுகின்ற, புல் அறிவு ஆண்மை --- புல்லிய அறிவினை உடையராதல், கடை --- இழிபாம்

         சூரன் --- சூரபன்மன், ஆக்கையும் --- தன் உடம்பும், ஆயிரத்தெட்டு அண்டங்களும் --- தன் அரசாட்சிக்குரித்தாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையாத் தூக்கி --- நிலையுடையவெனக் கருதி, அழிந்தான் --- அழிந்தொழிந்தான் ஆகலான் என்றவாறு.

         செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை என நிலையாமை பகுக்கப்படும். நிலையாமைகளை நன்கு உணர்ந்தாலன்றி நிலையுடைய பொருளின்கண் பற்று விளையாது,  நிலையாமையை அறிந்து பொருளில் பற்றினை விடவேண்டும் என்பது கருத்து.

     இளமைக்குப் பிராயம் முப்பது என்றும், உடம்புக்குப் பிராயம் நூறு என்றும் ஒரு காலவரையறை இருப்பதுபோல், செல்வம் இவ்வளவு காலத்துக்குத்தான் இருக்கும் என நியமம் செய்ய இயலாது. இதனை,

         "நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
         நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
         எழுத்தாகும் யாக்கை நமரங்காள், என்னே
         வழுத்தாதது எம் பிரான் மன்று".

என்றருளினர் குமரகுருபர சுவாமிகள்.

         "மாயையின் வலியோன் ஆகி
                  மால்முத லோரை வென்றே
         ஆயிரத் தெட்டுஓர் அண்டம்
                  அரசு செய்து உகம் நூற்றெட்டுக்
         காயமது அழிவுஇன்று ஆகி
                  கடவுளர்க்கு அலக்கண் செய்த
         தீயசூர் முதலைச் செற்ற
                  குமரன்தாள் சென்னி சேர்ப்பாம்"

என்பது கந்தபுராணம்.

         அசுரேசனுடைய மகளாகிய மாயை என்பாளிடம் காசிப முனிவர் அருளால் பிறந்த சூரபதுமன், தனது தாயின் மொழியைக் கொண்டு சிங்கமுகன், தாரகன் என்னும் தன் தம்பியருடன் வடதிசையில் புக்குச் சிவபெருமானைக் குறித்து அரியதொரு வேள்வியை நெடுங்காலம் செய்தும் அவ் வேள்வித் தீயில் தன் உடல் தசைகளை எல்லாம் அரிந்து அரிந்து சொரிந்தும் பெருவேள்வியினைச் செய்தான்.  சிவபெருமான் பார்வதி சமேதராய்த் தோன்றி அவன் உயிர்பெற்று எழும்படி அனுக்கிரகம் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகமளவும் ஆள வரமளித்துப் பாசுபத அத்திரம் முதலியனவும் உதவிச் சென்றார். சூரபதுமன் தான் பெற்ற வரபலம் முதலியவற்றால் மயங்கித் தேவர்களை மீன் சுமத்தல் முதலிய ஏலாத குற்றேவல்களும் செய்ய ஏவி, அவர்களை மிக வருத்த, வருத்தம் பொறாத அத் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவகுமரனாய்த் தோன்றிய சுப்பிரமணியக் கடவுளைப் பாலன் என எள்ளிப் போரில் எதிர்த்துப் பலவற்றையும் இழந்து முடிவில் தானும் அழிந்தான். 

நீள்வாரிதியின் நெடுமீன் பல சுமந்து
தாழ்வாம் பணிபலவும் செய்தும் தளர்ந்து உலகில்
வாழ்வாம் எனவே மதித்திருந்தோம், மற்றுஅதுஅன்றி
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே,

மீனும் வடியும் வியன்தசையும் தான்சுமந்த
ஈனம் அதுஅன்றி ஈதோர் பழி சுமக்கின்
மானம் அழிய வருமே அது அன்றி
தீனம் உறுசிறையும் தீராது வந்திடுமே

என்னும் கந்தபுராணப் பாக்கள் காண்க.

புல்லறிவு ஆண்மை --- அற்ப அறிவை ஆளும் தன்மை. 

"பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய் என்று எண்ணும், வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்" என்னும் சுந்தரர் தேவாரம் தெளிவு தரும்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

அட்டகோணத்தன் உடல் அத்திரம் என்றான் திசைகள்
எட்டும் பரவும் இரங்கேசா! - மட்டினால்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

இதன் பதவுரை ---

     திசைகள் எட்டும் --- எட்டுத் திக்குகளிலும் உள்ளவர்கள், பரவும் --- போற்றுகின்ற, இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

     அட்டகோணத்தன் உடல் --- அட்டகோண மகரிஷி தன் உடலை, அத்திரம் என்றான் --- நிலையற்றது என்று சொன்னான், (ஆகையால், இது) மட்டினால் --- ஓர் அளவினால், நில்லாதவற்றை --- நில்யில்லாதவைகளை, நிலையின என்று உணரும் --- நிலையுடையவைகள் என்று நினைக்கும்,  புல்லறிவு ஆண்மை கடை --- அற்ப புத்தியைப் பெற்றிருத்தல் இழிவு (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- இவ் உலக வாழ்க்கை என்றும் சதமன்று.

         விளக்கவுரை ---  முப்பத்து நான்கு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் வருடம் கொண்டது கிரேதாயுகம். பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடம் கொண்டது திரேதாயுகம். எட்டு இலட்சத்து பதினான்கு ஆயிரம் வருடம் கொண்டது துவாபரயுகம். நான்கு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடம் கொண்டது கலியுகம். ஆக யுகம் நாலுக்கு அறுபத்துநான்கு இலட்சத்து முப்பது ஆயிரம் வருடம் கொண்டது ஒரு சதுர்யுகம். இந்தச் சதுர்யுகம் பிரமனுக்கு ஒருநாள். இந்நாள் முப்பது கொண்டது ஒரு மாதம்.  இம் மாதம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருடம். இப்படி நூறு வருடம் கொண்டது பிரமனுக்கு ஆயுள் அளவு.

         ஒரு காலத்தில் பிரமனுக்குத் தன் ஆயுள் அளவின் நீட்சியைப் பற்றி அகந்தை உண்டாயிற்று. அந்த அகந்தையை அடக்க அரியாம் திருநெடுமால், அவனை அழைத்துக் கொண்டு உரோம மகரிஷியிடத்தில் போய், ", முனியே! உமக்கு ஆயுள் அளவு என்ன" என்றார். அதற்கவர், "ஒரு பிரமன் இறந்தால் என் தேகத்தில் ஒரு மயிர் உதிரும். இப்படி மூன்றரை கோடி பிரமர் இறந்தால், என் தேகத்தில் உள்ள மூன்றரை கோடி மயிரும் உதிர்ந்து எனக்கு மரணம் உண்டாகும்" என்றார். அது கேட்ட பிரமனுக்குக் கொஞ்சம் கர்வம் அடங்கிற்று. பிறகு திருமால் அவனை அழைத்துக் கொண்டு, அட்டகோண மகரிஷியின் ஆசிரமத்திற்குப் போய் அவரைக் கண்டு, "முனிவரே! உமக்கு ஆயுள் அளவு என்ன" என்று கேட்டார். அதற்கவர், "இப்போது நீர் கண்டுவந்த உரோம ரிஷி ஒருவர் இறந்தால் எனக்கு ஒரு கோணல் நிமிரும். அப்படி எட்டு ரிஷிகள் இறந்தால் எனக்கு எட்டுக் கோணமும் நிமிர்ந்து மரணம் உண்டாகும்" என்றார். அது கேட்ட மாயவன், "இப்படி பல்லாண்டு வாழும் நீர் மச்சு வீடு கட்டி வாழாமல், குச்சு வீடு கட்டிக் குடியிருக்கின்றீர். அதினும் உள்ளே ஒருகாலும் வெளியே ஒருகாலுமாய் இருக்கிறீரே, இது என்ன விந்தை" என்று கேட்டார். அதற்கு அம் முனிபுங்கவர், "சரீரம் நீர்மேல் குமிழி போல் நிலையில்லாதது. இதை நம்பி மச்சு வீடும் மாடி வீடும் கட்டிக் கொள்வதால் என்ன பிரயோசனம்"

"பொய்வீடு கட்டிப் புலால் வீட்டைப் போஷித்து
மெய்வீட்டினை இழந்த மேடங்காள்! -- பொய்வீடு
போ என்னும், உங்கள் புலால் வீட்டை உண்பதற்கு
வா என்னும் நல்ல வனம்".

என்றார் பெரியவரும். "ஆகையால், நித்தியானந்த வாழ்க்கைக்கு வேண்டிய மெய்வீடு வேறு இருக்கின்றது" என்று முடித்தார்.  பிரமதேவன் அகந்தை அடங்கிற்று.

     அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தக்கன்மதர்த்து எச்சம்ஒன்று தான்செய்து அயச் சென்னிபெற்றான்
முக்கணனை எள்ளி, முருகேசா! - உக்கமின்போல்
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை. 

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, தக்கன் --- தக்கன் என்பவன், மதர்த்து --- ஆணவம் கொண்டு, முக்கணனை எள்ளி --- சிவபிரானை இகழ்ந்து, தான் எச்சம் ஒன்று செய்து --- தான் வேள்வி ஒன்றைப் பிரிந்து, அயச் சென்னி பெற்றான் --- ஆட்டின் தலையை அடைந்தான். உக்க மின் போல் --- சிதறுகின்ற மின்னலைப் போல், நில்லாதவற்றை --- நிலையில்லாத பொருள்களை, நிலையின என்று உணரும் --- என்றும் நிலைபெறத் தக்கவை என்று அறியும், புல்லறிவு ஆண்மை கடை --- அற்ப அறிவுடையவராக இருக்கும் தன்மை இழிந்ததாகும்.

         தக்கனானவன் ஆணவம் கொண்டு சிவபெருமானை இகழ்ந்து ஒரு வேள்வியைச் செய்து அதனால் ஆட்டுத் தலையைப் பெற்றான். மின்னலைப் போல் விரைந்து
அழியும் பொருள்களை நிலையுடையன என்று எண்ணும் அறிவானது மிக இழிந்ததாகும் என்பதாம்.

தக்கன் ஆட்டுத் தலை பெற்ற கதை

         தக்கன் என்பவன் சிவபிரானைக் குறித்துத் தவம் செய்து பல சிறப்புக்களையும் அடைந்தது மட்டுமல்லாமல், இறைவியே தனக்கு மகளாகத் தோன்றும் பேற்றையும் பெற்றான். ஒருநாள் திருக்கயிலைக்குச் சென்றபோது மருகனாகிய சிவபிரான் தன்னை வணங்கிப் போற்றவில்லை என்று சினம் கொண்டான். நிலைபேறு இல்லாத தன்னுடைய செல்வம் என்று நிலைத்து நிற்கக் கூடியது என்று மாறுபாடாக எண்ணிச் சிவபிரானை இகழ்ந்து வேள்வி ஒன்றைச் செய்தான். சிவபிரானுடைய சினத்தில் தோன்றிய வீரபத்திரக் கடவுள் தக்கனுடைய தலையை அறுத்து வீழ்த்தினார். பிறகு அத் தலைக்குப் பதிலாக ஆட்டுத்தலை ஒன்று தக்கனுக்கு உண்டாகியது. தக்கன் ஆட்டுத் தலையோடு விளங்குதலைக் கண்டவர்கள் எள்ளி நகையாடினார்கள்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

எங்கும் இறவான் இறந்தது ஒரு தூண் ஈன்ற
சிங்கத்தால் அன்றோ? சிவசிவா! --- தங்கிநிலை
நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை.

         இரணியாட்சன் என்பவன் நிலத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு பாதலத்திற்குச் சென்றான். திருமால் பன்றியுருவம் எடுத்துக் கொண்டு அவனைக் கொன்றார். இரணியகசிபு என்னும் மூத்தமகன் திருமாலிடத்திலே பகை கொண்டு நான்முகனைக் குறித்துத் தவம் செய்தான். உலகங்களை ஆக்கல், காத்தல், அழித்தல் முதலிய காரியங்களைத் தானே செய்தல் முதலிய பல வரங்களையும், மும்மூர்த்திகள் தமக்குரிய உருவத்தோடு படைக்கலம் உடையவர் எதிர்த்தாலும், பகல் இரவு என்னும் காலங்களிலும், மண், விண், உள், புறம் என்னும் இடங்களினும் அழியாமையும் பிறவும் பெற்று எல்லோரும் தன்னையே வழிபடுமாறு செய்தான். இந்திரன் முதலானவர்கட்குத் துன்பம் விளைவித்தான். இவ்வாறு கொடுங்கோலனாக அரசியற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அவனுடைய புதல்வர் நால்வருக்கும் சுக்கிராசாரியார் புதல்வர்கள் இருவர் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தனர். அந் நால்வருள் மூத்தவனாகிய பிரகலாதன் திருமாலையே பரம்பொருளாகக் கொண்டமையை அறிந்து சினந்தான். அவனைக் கொல்லும் பொருட்டுப் பல துன்பங்களைச் செய்தான். எதற்கும் பிரகலாதன் இறவாமையைக் கண்டு மனம் புழுங்கினான். ஒருநாள் மாலையில் மகனை அழைத்து, நீ கூறியபடி திருமால் எங்கும் உள்ளவனாயிருப்பின் இத்தூணில் காட்டுவாயாக எனக் கூறி ஒரு தூணைப் புடைத்தான்.  அதிலிருந்து தோன்றிய நரசிங்கமூர்த்தியோடு எதிர்த்து அவரால் மாண்டான்.

     இறவா வரம் பெற்ற இரணியன், ஒரு சிங்கத்தால் அழிந்தான் என்பதை எண்ணும்போது, நிலைத்திருக்கும் என்பது எல்லாம் நிலையில்லாமல் ஒருநாள் அழியும் என்பது பெற்றப்படும்.

     இறவான் --- இறவா வரம் பெற்ற இரணியன். சிங்கம் --- திருமால். நரசிங்கம் தூணில் தோன்றியது.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

ஊன்மிசை உதிரக் குப்பை
     ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
     மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
     வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்,
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
     அப்பனே! அஞ்சி னேனே.         --- சுந்தரர் தேவாரம்.

இதன் பொழிப்புரை ---

     வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவனே! திருவாரூரில் உள்ள தந்தையே! இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன் .

பொய்த் தன்மைத்து ஆய மாயப்
     போர்வையை மெய் என்று எண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
     வேண்டிநான் விரும்ப கில்லேன்,
முத்தினைத் தொழுது நாளும்
     முடிகளால் வணங்கு வாருக்கு
அத்தன்மைத்து ஆகும் ஆரூர்
     அப்பனே அஞ்சி னேனே.         --- சுந்தரர் தேவாரம்.

இதன் பொழிப்புரை ---

     முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது , தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மைய தாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மை இல்லேன் ; அதற்கு, அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலைஎன்று உணர்வீர்காள்!
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே. --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     நிலைபெறாத இயல்பினை உடைய பொருள்களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக்கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையே. ஆயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.


நில்லாது சீவன், நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்;
கல்லா மனித்தர் கயவர், உலகினில்
பொல்லா வினைத்துயர் போகம் செய்வாரே.  --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---
    
     வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள்கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.


நில்லாப் பொருளை நினையாதே நின்னை உள்ளோர்
சொல்லாப் பொருள் திரளைச் சொல்லாதே - கல்லாத
சிந்தை குழைந்து சுகஞ் சேரக் குருவருளால்
வந்தவழி நல்ல வழி.            --- தாயுமானார்.

இதன் பொருள் ---

     நிலையில்லாத மாயாகாரியப் பொருள்களைச் சிறிதும் நினையாதே.  உன்னைத் தமக்கு உட்படுத்தி உன்னோடு உள்ளார் சொல்லத் தகாத பொருள் கூட்டங்களைப் பேசாதே; உண்மைகளைக் கற்றுக்கொள்ளாத மனம் குழைந்து உருகி அழியாப் பேரின்பப் பேறு பெற்று இன்புறச் சிவகுருவானவர் திருவாய் மலர்ந்தருளிய அருளின் வழி எதுவோ? அதுவே நன்னெறியாகும். (அவ்வழியையே கைக்கொண்டு உறுதியுடன் நிற்பாயாக)

படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்று உணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார் யார் நீணிலத்தின் மேல்.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     படு மழை மொக்குளின் --- மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப் போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை --- பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது. என்று எண்ணி --- என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை --- இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் --- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை.

         யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர்.

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப் -- பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக் குற்று உண்பார் பலர்.       ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தெரிவு இல் இளமையும் --- பொருள்களை ஆராய்தற்கு ஏலாத இளமைப் பருவத்தையும், தீப்பிணியும் --- கொடிய நோய்களையும், மூப்பும் --- கிழத்தன்மையையும், பிரிவும் ---உற்றாரைப் பிரிதலையும், துயிலும் --- மரணத்தால் வருந் துன்பங்களையும், உறீஇ --- அடைந்து, பருவந்து --- வருந்தி, பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு --- பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, வித்துக் குற்று உண்பார் பலர் --- உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.


நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம்  
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள், - நீரில்  
எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்! என்னே  
வழுத்தாதது எம்பிரான் மன்று?   ---  நீதிநெறி விளக்கம்.

1.                               இதன் பதவுரை ---
2.                                
3.                                    இளமை நீரில் குமிழி --- நீரில் தோன்றி அழியும் கொப்புளம் போன்று இளமைப் பருவம் (நிலையில்லாது அழிவது ஆகும்).  நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள் --- தேடிச் சேர்த்து வைத்துள்ள குளைவில்லாத பெரும் செல்வமானது, நீரிலே காற்றினால் காற்றினால் சுருட்டப்படும் நெடிய அலைகள் (போன்று நிலையில்லாது அழிவது ஆகும்) யாக்கை நீரில் எழுத்து ஆகும் --- உடம்பானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போன்று  (நிலை இல்லாது அழியும் இயல்பை உடையது) ஆகும். இவ்வாறு இளமையும், செல்வமும், உடம்பும் நிலையில்லாது அழியும் இயல்பினை உடையவையாய் இருக்க, நமரங்காள் --- நம்மவர்களே!  எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே --- எமது பெருமான் ஆகிய அம்பலவாணப் பெருமான் எழுந்தருளி ஆனந்தத் திருநடனம் புரியும் பொன்னம்பலத்தை வாழ்த்தி வணங்காமல் காலம் போக்கி இருப்பது ஏனோ?
4.                                
5.                                    "இளமை நீரில் குமிழி. நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள். யாக்கை நீரில் எழுத்து ஆகும். நமரங்காள்! எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே" என்கின்றார் குமரகுருபர அடிகள்.
6.                                
7.                                    ஆன்மாக்கள் இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதற்கு இளமைப் பருவம் வாய்த்தது. அதற்குச் சாதனமாக அமைந்தவை செல்வமும், உடம்பும். இளமைப் பருவத்தை அடைந்து, பொருளைத் தேடிப் பாடுபட்டு, தொகுத்து பொருளை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே, உடம்பை விடுகின்றோம். இளமை தோன்றி அழிவதால், நீரில் தோன்றும் குமிழியை இளமை என்றார். நீரில் அலைகள் தோன்றும் போது சிறிது சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, வரவரச் சுருங்குவது போல, செல்வமும் சிறிது சிறிதாக ஈட்டப்பட்டு, பின் பெருகி வளர்ந்து, இறுதியில் அழிந்து போவதால், அதை நீரில் தோன்றும் அலைகளைப் போன்றது என்றார்.  நீரில் எழுதிய எழுத்து, அப்போதே அழிவதால், உடம்பை நீரில் எழுதிய எழுத்து என்றார்.
8.                                
9.                                    புல்லறிவு படைத்தவர்கள் கண்டவுடனே மயங்குவது இளமையே என்பதால், அதனை முன்னே வைத்து, நீரில் உடனே தோன்றி மறையும் குமிழியைக் காட்டினார்.  குமிழியானது பளபள என மின்னிக் காணப்பட்டு, சிறிது நேரத்தில் பொட்டென அழிவது போல், இளமையும் தொடக்கத்தில் மிகவும் அழகு உடையதாய் இருந்து, சிறிது காலத்தில் அழிந்து ஒழிவதால், இளமையை நீர்க்குமிழி என்றார்.
10.                            
11.                                இளமைப் பருவத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்குத் துணையாக அமைவது செல்வமே. ஆதலால், அதனை இளமையின் பின் வைத்து, காற்றின் வேகத்தால் சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, இறுதியில் ஒன்றும் இல்லாது அழிவதைப் போன்ற அலைகளைக் காட்டினார். நீரில் அலைகள் பலமுறையும் தோன்றி, அழிவதும் அல்லாமல், ஓரிடத்தில் நில்லாது, பல இடத்திலும் சென்று, மறிந்து மறிந்து விழுந்து அழிவதைச் செல்வத்துக்குக் காட்டினார்.
12.                            
13.                                இளமை, செல்வம் இரண்டும் போன பின்பு உடம்பும் விழுவதால், அதனை நீர்மேல் எழுத்து என்றார். நீரில் எழுதிய எழுத்தானது எழுதிய போதே அழிந்து போகும். எழுதிய இடமும் தெரியாது. மக்கள் உடம்பும், விரைந்து அழியும் தன்மையை உடையது. அழிவதோடு அல்லாமல் இருந்த இடமும் தெரியாது ஒழியும்.
14.                            
15.                                எனவே, இளமையில் கற்கவேண்டிய நூல்களைக் கற்று, நல்லறிவு பெற்று, முயன்று தேடிய செல்வத்தைத் தாமும் துய்த்துப் பிறர்க்கும் உதவி, அழிந்து போகக் கூடிய உடம்பால் ஆன பயனைப் பெற, இறைவனைத் தொழுது உய்யவேண்டும்.
16.                            
17.                                நிலையில்லாத இளமை, செல்வம், உடம்பு ஆகியவற்றைப் பெற்று, நிலையான இன்பத்தைத் தரக்கூடிய இறைவனைத் தொழுது உய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
18.                            

அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா
மனித்தருடன் கூடி மருவார் --- தனித்துஇருந்து
மோனந்தமாம் சிவத்துள் மூழ்கி, மலத்தை அறுத்து
ஆனந்தமாய் அழுந்துவார்.               ---  சிவபோகசாரம்.

இதன் பொழிப்புரை ---

     தனித்து இருந்து நிட்டை கூடி, சிவத்தில் அழுந்தி, சிவானந்த வடிவாய் நிற்கும் சீவன்முத்தர், உலகில் உள்ள நிலையில்லாத பொருள்களையே நிலைத்து இருப்பன என்று பிறழ உணர்ந்து, பற்றுக் கொண்டு, பிறவியில் அழுந்ததுவாரோடு எப்போதும் கூடி இருக்கமாட்டர்.


"நின்றும், சென்றும், வாழ்வன
    யாவும் நிலையாவால்;
பொன்றும்" என்னும் மெய்ம்மை
     உணர்ந்தாய்; புலை ஆடற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை
     கொள்ளாய்; உயர் செல்வத்து,
என்றும், என்றும், வைகுதி;
     ஐயா! இனி' என்றான்.    --- கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

இதன் பதவுரை ---

      'நின்றும் சென்றும் வாழ்வன யாவும் --- தாவர சங்கமம் என்று கூறப்படும் நிலையியல் இயங்கியல் பொருள்கள் எவையும்; நிலையா --- நிலைத்து நிற்கமாட்டா; பொன்றும் --- அழிந்தே தீரும்; என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் --- என்னும் உண்மையை நீ உணர்ந்திருக்கிறாய்; புலை ஆடற்கு ஒன்றும் உன்னாய் --- தீயன செய்தற்குச் சிறிதும் சிந்தியாதவனாய்; என் உரை கொள்ளாய் --- என் பேச்சைக் கேட்பாயாக; இனி ஐயா-- - இனிமேலேனும், தலைமைக்கு உரியாய்; உயல் செல்வத்து --- ஓங்கிய செல்வங்களோடு; என்றும் என்றும் வைகுதி --- எப்போதும் எந்நாளும் இனிதே வாழ்வாயாக; என்றான் --- என (மாரீசன்) எடுத்துரைத்தான்.

        'உலகில் எப்பொருளும் நிலையாமையை உணர்ந்து நன்னெறி நின்று நலமுடன் வாழ்க' என வேண்டினான் மாரீசன். இராவணனின் அருந்தவம், அது தந்த பெரு வாழ்வு. அறநெறி தவறுதலால் விளையும் அழிவு, இந்திரன் போன்றோர் காமத்தால் வீழ்ந்தமை, கரன் முதலியோரை அழித்த இராமன் வலிமை எனப் பல நிலைகளிலும் மாரீசன் சிந்தித்து அறிவுரை கூறினான்.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...