036. மெய் உணர்தல் - 02. இருள்நீங்கி இன்பம்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "அஞ்ஞானத்தினின்றும் நீங்கி, மெய்யறிவினை உடையார்க்கு, அம் மெறய்யறிவானது, பிறவித் துன்பத்தை நீக்கி, முத்தி இன்பத்தை அளிக்கும்" என்கின்றார் நாயனார்.

     இருள் --- நரகம். பிறவித் துன்பம். மாசறு காட்சி --- கேவல ஞானம்.

     இருள்சேர் இருவினையும் என்னும் திருக்குறளின் உரையில், "இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை இருள்" என்று கூறி இருத்தலால், இன்ன தன்மைத்து என்று ஒருவராலும் கூறப்படாத அறியாமையாகிய இருள் என்னும் நரகத் துன்பத்திற்குக் காரணம் ஆனது.

     "இருள் என்பது ஓர் நரக விசேடம்" என்று அடக்கம் உடைமை அதிகாரத்தின் முதல் திருக்குறளில் கூறப்பட்டது காண்க.

     இருளுக்குக் காரணம் ஆனவை இருவினைகளும். "இருள்சேர் இருவினை" என்று நாயனார் முதல் அதிகாரத்தில் அருளியது உணர்க.

     வீடு என்பதை "நிரதிசய இன்பம்" என்றார். அது பேரின்பம் ஆகும். பேராத இன்பம் பேரின்பம் ஆகும். அதாவது அதிசயம் அற்ற இன்பம். அதிசயம் --- மாறுபாடு, பேதம். "பேதம் இல்லதோர் கற்பு அளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே" என்னும் மணிவாசகத்தை உணர்க.

     கேவல ஞானம் --- பரஞானம், மெய்யறிவு. சிவஞானம். பதிஞானம்.

திருக்குறளைக் காண்போம்...

இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி
மாசு அறு காட்சி அவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு --- அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு,

     இருள் நீங்கி இன்பம் பயக்கும் --- அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும்.

         (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மதி இருளை நீங்கின், மல இருளும் நீங்கும்,
பதிஅருள் ஆம் என்று, சைவர் பார்த்து --- மொழிவது,
இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி
மாசு அறு காட்சி அவர்க்கு.

         மதி --- புத்தி. மலஇருள் --- ஆணவம் முதலிய மலங்கள் என்னும் இருள். மெய்ஞ்ஞானம் கொண்டவர் மெய்ஞ் ஞானத்தாலேயே மோட்சம் அடைவர். பின்வரும் சிவஞானசித்தியார் பாடல்களைக் காண்க.


பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
         பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
         நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகம்எலாம் அலகைத் தேராம் என்று
         அறிந்து அகல, அந்நிலையே ஆகும், பின்னும்
ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
         உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.
                                    --- சிவஞானசித்தியார்.

         சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.


வேதம் சாத்திரம் மிருதி புராணம் கலைஞானம்
         விரும்பு அசபை வைகரி ஆதித் திறங்கள் மேலாம்
நாத முடிவான எல்லாம் பாசஞானம்;
         நணுகிஆன்மா இவை கீழ் நாடலாலே
காதலினால் நான்பிரமம் என்னும் ஞானம்
         கருது பசுஞானம், இவன் உடலில் கட்டுண்டு
ஓதிஉணர்ந்து ஒன்றுஒன்றாய் உணர்ந்திடலால் பசு ஆம்
         ஒன்றாகச் சிவன் இயல்பின் உணர்ந்திடுவன் காணே.
                                    --- சிவஞானசித்தியார்.

         மறைகள், சாத்திர நூல்கள், மிருதி நூல்கள், புராண வரலாறுகள், உயர்ந்த கலை ஞானங்கள், விரும்பத் தக்க அசபை என்ற மந்திரம் வைகரி முதலிய நால் வகை வாக்குகள், மண் முதல் நாதம் முடிவாக உள்ள தத்துவங்கள் ஆகிய இவற்றினால் உயிர் பெறும் அறிவு பாச ஞானம் எனப்படும். ஏனெனில் இவற்றால் விளைந்த அறிவு உலகியல் பற்றைத் தோற்று வித்து அதனால் உயிரை மீண்டும் பிறப்புக்கு உட்படுத்தும். உயிர் தன் முனைப்போடு நானே பிரமம் என்று கூறிக் கொள்ளும் அறிவு பசு ஞானம் எனப்படும். ஏனெனில் ஆன்மா ஆகிய இவன் உடல்களில் கட்டுண்டு நிற்பவன். தானாக அறியாமல் உணர்த்த உணரும் அறிவினை உடையவன். தானே அறியாமல் பொறிகளின் துணையால் ஒவ்வொன்றாய் உணர்ந்து வரும் இயல்பினை உடையவன். எனவே இவனைப் பசு என்றும் இவனது அறிவைப் பசுஞானம் என்றும் பெரியோர் கூறுவர். இறைவனோ தன் வயமுடைய முற்றறிவினன். எனவே தான் இறைவன் பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் காண்டற்கு அரியவன் என்பர் மேலோர்.


     இத் திருக்குறளுக்கு மேலும் விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் மற்றொரு பாடல்...


இருள் பலவாக் கோடல் இறை நூலுக்கு அன்றி
அருகர் பிறர்க்கு ஆகாது என்னும் ---  உரைகேள்
இருள் நீங்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி
மாசு அறு காட்சி அவர்க்கு.

         இருள் பல ஆவன --- ஆணவம்,மாயை,  கன்மம், திரோதம்,  மாயேயம் என்னும் ஐந்து. மலங்கள் ஐந்து என்பது, "மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்துறவே" என்ற திருவாசகத்தால் பெறப்படும். "பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறு" எனவரும் கந்தர் கலிவெண்பா வரிகளையும் நோக்குக. இக் கருத்து சைவசித்தாந்தம் ஒன்றுக்கே உடன்பாடானது. அருகர் முதலானவர் இதை மறுப்பர். இந்த ஐந்து மலமும் நீங்கினால் ஒழியச் சிவனருள் சித்திக்காது என்பதனை,
        
"மோகம் மிக உயிர்கள் தொறும் உடனாய் நிற்கும்
         மூல ஆணவம் ஒன்று, முயங்கி நின்று
பாகம் மிக உதவு திரோதாயி ஒன்று,
         பகர் மாயை ஒன்று, படர் கன்மம் ஒன்று,
தேகம் உறு கரணமொடு புவனபோகச்
         செயல்ஆரும் மாமாயைத் திரட்சி ஒன்று என்று,
ஆக மலம் ஐந்து என்பர்,  ஐந்தும் மாறாது
         அருள் என்பது அரிது என்பர் அறிந்துளோரே"

என்னும் சிவப்பிரகாசம் 32-ஆம் செய்யுளால் அறிக.

இச் சிவப்பிரகாசச் செய்யுளின் பொருள் ---

     உயிர்கள் தோறும் தோற்றமில் காலம் தொட்டே அறிவை மறைத்துக் கொண்டு உடனாக நிற்கும் மூலமலமாகிய ஆணவமலம் ஒன்று. உயிரோடு கலந்து நின்று அதற்குப் பக்குவம் ஏற்படுமாறு உதவுகின்ற திரோதாயி ஒன்று, சொல்லப்பட்ட மாயை ஒன்று, உயிர்தோறும் படர்ந்து நிற்கும் கன்மம் ஒன்று, உடல் கருவி உலகு நுகர்ச்சிப்பொருள் என்று கூறப்படும் மாயையின் காரியமான மாயேயம் ஒன்று. ஆக மொத்தம் ஐந்து மலங்கள் உள என்பர். இந்த ஐந்து மலங்களும் ஒழியாமல் இறைவன் அருள்பாலிப்பது என்பது நிகழாது என்று அறிஞர் கூறுவர்.


     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திருநாவுக்கரசர் வரலாற்றை வைத்து, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், குமார பாரதி என்பார் பாடிய பாடல் ஒன்று....

மருள் நீக்கியார் தரும சேனருமாய், நாவுக்கு
அரசர், அப்பர் ஆகி, இன்பம் ஆனார், - அருளால்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.

         "மருள்நீக்கியார்" என்பது திருநாவுக்கரசு நாயனாரின் பிள்ளைத் திருநாமம். "தருமசேனர்" என்பது சமண சமயத்துத் தலைவராயிருந்த காலத்துப் பெற்றது. "நாவுக்கரசர்" என்பது சிவபெருமான் அருளியது. "அப்பர்" என்பது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் அழைக்கப் பெற்றது.  சிவஞானப் பெருக்கு உடையாராய்ப் பேரானந்தப் பெருவாழ்விலே திளைத்து இருந்தார் சைவசமயாசாரியருள் ஒருவராகிய வாகீசர். 

         அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வு உடையராய் ஆயினாருக்கு அம் மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி வீட்டினைக் கொடுக்கும் என்றார் திருவள்ளுவ நாயனார்.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...


இருள்ஆய உள்ளத்தின் இருளை நீக்கி
         இடர்பாவம் கெடுத்துஏழை யேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல்
         சிவலோக நெறிஅறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து உளானை
         ஆறுஅங்க நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.  ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.


இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     `ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனை விடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காது நின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.


கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்     
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்     
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்     
இறந்தஎலாம் துன்பம்அலாது இல்.         ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     கற்றுத் துறைபோய காதலற்கு --- கற்க வேண்டிய நூல்களெல்லாம் கற்றுக் கற்றதற்குத் தக நிற்குங் கணவனுக்கு, கற்பினாள் --- கற்புள்ள மனைவி, பெற்றுக் கொடுத்த தலைமகன் போல் --- பெற்றுக் கொடுத்த முதல் மகனைப் போல், முற்றத் துறந்தார்க்கு --- இருவகைப், பற்றினையும் அறவே யொழித்த துறவிகட்கு, மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் --- அவர்களின் மெய்யுணர்வில் தோன்றுகின்ற இன்பமே மிகுந்த இன்பமாகும். இறந்த எலாம் துன்பம் அலாது இல் --- அஃதொழித்த பிறவெல்லாம் (அவர்கட்குத்) துன்பமன்றி வேறில்லை.


தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது - மாரிப் பேர் இருள்.   ---  கம்பராமாயணம், கார்காலப் படலம்.

இதன் பதவுரை ---

     தீவினை நல்வினை என்ன --- பாவச்செயலை நல்ல செயல் என்று எண்ணுமாறு செய்யும்; பேய்வினை --- பேயின் செயல்களைத் தூண்டும்; பொருள் தனை --- செல்வத்தின் தன்மையை; அறிந்து --- உணர்ந்து; பெற்றது ஓர் --- அடையப் பெற்றதான ஒப்பற்ற; ஆய் வினை மெய்யுணர்வு --- ஆராய்தலினால் கிடைக்கின்ற மெய்ஞ்ஞானத்தால்; அணுக --- (பொருட்பற்றை விட்டுப் பரம்பொருளைச்) சார; ஆசு அறும் --- குற்றமற்ற; மாயையின் --- மாயை நீங்குதல் போல; மாரிப் பேரிருள் --- மழைக்காலத்தில் தோன்றிய பெரிய இருள்; மாய்ந்தது --- மறைந்தது.

     பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச்செய்யும். மெய் உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும். அதுபோல முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச் செறிந்த இருள் நீங்கியது என்பது உவமையின் கருத்து. பணம் பல கேடுகளைச் செய்யும் என்பதால் அதனைப் 'பேய்வினை' என்றார். 'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வத்தைச் சிறிதும் பேணார்; சொல்வதை அறிந்து சொல்லார்; சுற்றமும துணையும் நோக்கார்'' (வில்லி. பாரதம். கிருட்டி - 143); 'இன்னாதே கல்லார்கள் பட்ட திரு' (குறள் - 408) என்றதும் காண்க.  மெய்யுணர்வு - தத்துவஞானம். அதாவது இருவினைப் பயன்களையும் பிறப்பு வீடுகளையும் கடவுளின் இயல்பு பற்றியும் ஐயம் திரிபற உள்ளபடி உணர்தலாகும்.  நல்லாசிரியரிடத்து உபதேசம் கேட்டுத் தெளிந்தே மெய்யுணர்வு பெறலாகும் என்பதால் அதற்கான முயற்சியை 'ஆய் வினை' என்றார்.  மெய்யுணர்வு தோன்றிய மாத்திரத்தே அவர் மனம் பற்று நீங்கிப் பரம்பொருளைச் சார, அவரிடம் முன்பிருந்த மாயை தானே நீங்கிப்போம்.  'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி, மாசறு காட்சியவர்க்கு' என்பது வள்ளுவம்.  (குறள் - 352) மருள், மயக்கம், அவித்தை, மாயை என்பன ஒரு பொருட் சொற்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...