திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
31 --- வெகுளாமை
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறளில், "அருளினால் உண்டாகும்
முகமலர்ச்சியையும், அகமலர்ச்சியையும் அழிக்கின்ற சினத்தைப் பார்க்கிலும் வேறு பகை
ஒருவனுக்கு இல்லை" என்கின்றார் நாயனார்.
நகை ---
முகமலர்ச்சி. உவகை --- அகமலர்ச்சி.
திருக்குறளைக்
காண்போம்...
நகையும்
உவகையும் கொல்லும் சினத்தின்,
பகையும்
உளவோ பிற.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் ---
துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும்
கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது,
பிற பகையும் உளவோ --- அதனின் பிறவாய
பகைகளும் உளவோ? இல்லை.
(துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய்
நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை
யாயிற்று.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
நஞ்சு
இனத்தில் கொடிதாக "நகையும் உவகையும் கொல்
லும் சினத்தில் பகையும் உளவோபிற" என்று உரைத்த
வெஞ்சினத் தீமை எனை மேவிடாது உனை வேண்டினன்மெய்
மஞ்சு இனத்ததா புல்லை வந்தாய் சுகாநந்த வாரிதியே.
லும் சினத்தில் பகையும் உளவோபிற" என்று உரைத்த
வெஞ்சினத் தீமை எனை மேவிடாது உனை வேண்டினன்மெய்
மஞ்சு இனத்ததா புல்லை வந்தாய் சுகாநந்த வாரிதியே.
இதன்
பொருள் ---
மேக வண்ணத் திருமேனி கொண்டு திருப்புல்லாணி
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமாலே! சுகானந்தக் கடலே! நஞ்சு எனச்
சொல்லப்பட்ட வகைகளிலும் கொடியதாக இருந்து, அகமலர்ச்சியையும், முகலர்ச்சியையும்
கொல்லுகின்ற சினத்தினை விடத் தீயது ஒன்றும் இல்லை என்று சொல்லப்படுவதால், அந்தக்
கொடுமையான சினம் என்னும் தீமையானது என்னை வந்து பொருந்தாதபடிக்கு அருள் புரியுமாறு
உன்னை வேண்டுகின்றேன்.
நஞ்சு இனத்தில் --- நஞ்சு வரிசையில். எனை
மேவிடாது --- என்னை அடையாமல். மஞ்சு இனத்தாய் --- உடல் வண்ணத்தில் முகிலின்
வரிசையைச் சேர்ந்தவனே. சுகாநந்த வாரிதி --- பேரின்பக் கடல்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
உள்ளம்
கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும்
குணமே குணம் என்க, - வெள்ளம்
தடுத்தல்
அரிதோ? தடங்கரைதான்
பேர்த்து
விடுத்தல்
அரிதோ? விளம்பு. --- நன்னெறி.
இதன்
பொருள் ---
மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி
வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற குணமே மேலான குணம் என்று அறிவாயாக.
பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோ, முன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து
அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ, நீயே சொல்வாயாக.
கவர்ந்து --- வயப்படுத்திக் கொண்டு.
ஓங்கு --- மேன்மேல் உயருகின்ற; இங்குப் பெருகுகின்ற.
தடங்கரை --- பெரியகரை.
கோபமே
பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை;
கோபமே குடிகெ டுக்கும்;
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது;
கோபமே துயர்கொ டுக்கும்;
கோபமே
பொல்லாது; கோபமே சீர்கேடு;
கோபமே உறவு அறுக்கும்;
கோபமே பழிசெயும்; கோபமே பகையாளி;
கோபமே கருணை போக்கும்;
கோபமே
ஈனமாம்; கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும்;
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்;
ஆபத்து
எலாந் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
இதன்
பொருள் ---
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே --- இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!,
அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள்,
எப்போதும்
உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
கோபமே
பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை --- சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும்
அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும்
--- சினமே குடியைக் கெடுக்கும்,
கோபமே
ஒன்றையும் கூடிவரவொட்டாது --- சினமே எதனையும் அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் --- சினமே
துயரந்தரும், கோபமே பொல்லாது ---
சினமே கெட்டது, கோபமே சீர்கேடு ---
சினமே புகழைக் கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும்
--- சினமே உறவைத் தவிர்க்கும், கோபமே பழி செயும் ---
சினமே பழியை உண்டாக்கும், கோபமே பகையாளி ---
சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும்
--- சினமே அருளைக் கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் ---
சினமே இழிவாகும், கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும் --- சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில்
தள்ளும் --- சினமே காலன்முன் இழுத்துச் சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.
No comments:
Post a Comment