027. தவம் - 08. தன்உயிர் தான்அற






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "தனது உயிரை, தவம் ஆகிய தனது கருமத்தைச் செய்யப் பெற்றவனை, அது பெறாதனவாகிய நிலைபேறு உடைய உயிர்கள் எல்லாம் வணங்கும்" என்கின்றார் நாயனார்.

     இளமை கழி, மூப்பும் பிணியும் வரும் என்று எண்ணி, பேரறிவு உடையவராய்த் தமது கருமம் ஆகிய தவத்தைச் செய்தவர்கள், இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆகாது, ஞானத்தைப் பெற்று உயர்ந்து விளங்குவதால், அவர்களைப் பிற உயிர்கள் எல்லாம் வணங்கும்.

     தான் அறப் பெற்றானை என்பது, தவமாகிய தனது கருமத்தைச் செய்து, அவத்தில் இருந்து நீங்குதல். எவன் ஒருவன் தன் உயிரைத் தனக்கு உரியதாகப் புலன்களின் மேல் செல்லாது அடக்கிக் கொள்ளுகின்றானோ, அவனை, அவ்வாறு தவம் செய்யாத உயிர்கள் எல்லாம் வணங்கும் என்றதனால், தவம் செய்வான் தன்னுடைய கருமத்தைச் செய்பவனும், அத் தவத்தின் முதிர்ச்சியால் சாபத்தினையும், அருளையும் பொழியக் கூடிய இரண்டு வல்லமையும் உடையவன் ஆகின்றான். அவனை எல்லா உயிர்களும் நன்கு மதித்து, தமக்கு அவ்விதத் தகுதி இல்லாமையை எண்ணி, அவனை அடைந்து, அவனை வழிபட்டு வணங்கவேண்டியது ஆயிற்று.

திருக்குறளைக் காண்போம்...

தன்உயிர் தான் அறப் பெற்றானை, ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் உயிர் தான் அறப் பெற்றானை --- தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை,

     ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் --- பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.

         (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)

     பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


நின்னை அறப்பெறு கிற்கிலேன், நன்னெஞ்சே!
பின்னை யான் யாரைப் பெறுகிற்பேன்,--நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன், மற்று ஈண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ்.      --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     நல் நெஞ்சே நின்னை அறப் பெறுகிற்கிலேன் --- நல்ல நெஞ்சே! உன்னைச் சிறிதும் என் வசமாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றேன்; பின்னை --- இனி, யான் --- உன்னையே வசமாக்கிக் கொள்ளாத யான், யாரைப் பெறுகிற்பேன் --- மற்றையவர்களை எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!, நின்னை அறப்பெறுகிற்பேனேல் --- உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின், துறக்கம் திறப்பது ஓர் தாழ் ---துறக்க உலகத்தினைத் திறந்துவிட வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை, ஈண்டே பெற்றேன் --- இம்மையிலேயே பெற்றவனாவேன்.


மை அறு விசும்பில், மண்ணில்,
     மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி
     மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்;
     மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக,
     தேவரின் முனிவர் போனார்.  ---  கம்பராமாயணம், கங்கைகாண் படலம்.

இதன் பதவுரை ---

     (இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் --- முனிவர்கள்; கீழோர் செய்வினை நாவாய் --- கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற தொழில் அமைந்த மரக்கலத்தை; ஏறித் தீண்டலர் --- தீண்டி ஏறாதவர்களாய்; மனத்தில் செல்லும் மொய் விசும்பு ஓடமாக --- மனத்தால் நினைத்த மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி; தேவரின் --- தேவர்களைப் போல; போனார் --- வான் வழியே சென்றார்கள்; மை அறு விசும்பில் --- குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் --- மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் --- வேறோர் உலகிலும்; மெய்வினை - உண்மையான தொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ --- தவமே அல்லாமல் அதற்கு மேற்பட்டதாகவேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை என்றபடி,

     வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் (குறள்265) என்றவள்ளுவர் கூற்றும் காண்க! முனிவர்கள் வான்வழியே சென்றார்கள் என்ற சிறப்புப் பொருளைத்தவத்திற் சிறந்தது எவ்வுலக்திலும் இல்லை என்ற உலகறிந்த பொதுப் பொருளால் முடித்தமையின், இது வேற்றுப் பொருள் வைப்பணி. முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப், பின்னொடுபொருளை உலகறி பெற்றி, ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே (தண்டி. 47) என்பவாதலின், மற்றும் ஒர் உலகு - கீழ் உலகுமாம். தவம் செய்வார் தம் கருமம் செய்வார்(குறள் 266) என்பது கருதி மெய் வினை தவமே என்றார்.    

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...