027. தவம் - 02. தவமும் தவமுடையார்க்கு





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "பயனே இல்லாமல் தவம் உண்டாவதும், முன்னைப் பிறப்பில் தவத்தைப் புரிந்தார்க்கே, இப்பிறப்பில் அது செய்தலும் கைகூடும். முன்னைத் தவம் இல்லாதவர், அதனைச் செய்யத் தொடங்குவது, வீண்முயற்சி ஆகவே முடியும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

தவமும் தவம் உடையார்க்கு ஆகும், அவம் அதனை
அஃது இலார் மேற் கொள்வது. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தவமும் தவம் உடையார்க்கு ஆகும் --- பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே,

     அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் --- ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.

         (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாரும்அணு கச்சிலர்தாம்
தூரநெறி நின்றுஅயர்ந்தார், சோமேசா! - ஓரில்
தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃது இலார் மேற்கொள் வது.

         தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயிலஸ் நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து, பிற உயிர்களை ஓம்புதல்.

இதன் பதவுரை ---

         சோமேசா! ஓரில் --- ஆராயுமிடத்து, தவமும் தவம் உடையார்க்கு ஆகும் --- பயனே அன்றித் தவம் தானும் உண்டாவது முன்னைத் தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொல்வது அவம் --- ஆகலான், அத் தவத்தை அம் முன்தவம் இல்லாதார் முயல்வது பயனில் முயற்சியாம்... 

         மணநல்லூர் ஏர் சுடருள் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருமணம் நடந்த நல்லூரில் தோன்றிய அழகிய சோதியினுள்ளே, யாவரும் அணுக --- அந்தத் திருமணம் காண வந்திருந்த யாவரும் சேர, சிலர் தூரநெறி நின்று அயர்ந்தார் --- சிலர் தூரவழியில் நின்று அப்போது சேரப் பெறாது மனம் சோர்ந்தார்கள் ஆகலான் என்றவாறு.

     திருஞானசம்பந்தர் சீர்காழியிலே இருந்த காலத்தில் அவருக்குத் திருமணம் செய்வித்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருடைய தந்தையார் சிவபாதஇருதயருக்கு உண்டாயிற்று. சுற்றத்தார் எல்லோரும் கூடிப் பிள்ளையாருக்கு அக் கருத்தைத் தெரிவித்தனர். பிள்ளையார் இணங்கவில்லை. அவர்கள் பிள்ளையாரைத் தொழுது, "உலகு உய்யத் தோன்றிய பெருமானே! உலகு உய்ய மணம் செய்து காட்டுதல் வேண்டும்" என்று வேண்டினார்கள். பிள்ளையார் திருவருளை நினைந்து, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கினார். சிவபாத இருதயரும் மற்றவரும் மகிழ்வு எய்தினர். அவர்கள் எல்லோரும் ஒருங்கே சிந்தித்து, "திருநல்லூரில் உள்ள நம்பாண்டார் நம்பியின் திருமகளே பிள்ளையாருக்கு உரியவள்" என்னும் முடிவிற்கு வந்தனர். திருநல்லூருக்குப் போய்த் தங்கள் விருப்பத்தை நம்பாண்டார் நம்பிக்குத் தெரிவித்தனர். அவரும், "நான் உய்ந்தேன். என் குலமும் உய்ந்தது. பிள்ளையாருக்கு என் மகளைக் கொடுக்க என்ன தவம் செய்தேன்" என்று ஆனந்தக் கூத்தாடினார். உடன்பட்டார். சிவபாத இருதயரும் மற்றோரும் சீர்காழிக்குத் திரும்பி, பெருமானிடத்தில் நம்பாண்டார் நம்பியின் விருப்பத்தைத் தெரிவித்தனர். திருமண நாள் குறிக்கப்பட்டது.

         குறிப்பிட்ட நாளில் பிள்ளையார் திருமணம் நிகழவிருக்கும் திருநல்லூருக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பி, பிள்ளையாரைச் சிவமாகவே கருதி பாலும் நீரும் கொண்டு பிள்ளையாரின் திருவடிகளை விளக்கி, தாமும் தெளித்து, உள்ளும் பருகி, மற்றவர் மீதும் தெளித்தார். பிள்ளையாரின் திருக்கரத்திலே நீரைச் சொரிந்து, "என் மகளை உமக்கு அளித்தேன்" என்றார்.

         பெண்மணிகள் மணமகளை அழைத்து வந்து பிள்ளையாரின் வலப்பக்கத்திலே அமர்த்தினார்கள். திருநீலநக்க நாயனார் திருமணச் சடங்குகளைச் செய்தார். எரியிலே பொரி இடப்பட்டது. எரியை வலம் வரவேண்டி, பிள்ளையார் அம்மையாரின் திருக்கரத்தைப் பற்றலானார். அவ் வேளையில், பிள்ளையார், "விருப்புறும் அங்கி ஆவார் விடை உயர்த்தவரே அன்றோ" என்று நினைந்தார். "இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே, இனி இவள் தன்னோடும் அந்தம் இல் சிவன் தாள் சேர்வன்" என்று திருப்பெருமணக் கோயிலுக்குச் சென்றார். எல்லோரும் தொடர்ந்து சென்றனர். பிள்ளையார் இறைவனை வேண்டி, "நாதனே!  நல்லூர் மேவும் பெருமண நம்பனே!  உன் பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் இது" என்று, "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

         இறைவன் திருவருள் புரிந்து, "நீயும் பூவை அன்னாளும், இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும்" என்றார். திருக்கோயில் ஒளிப்பிழம்பாக மாறியது. அதன்கண் ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. அது கண்ட பிள்ளையார், "காதலாகிக் கசிந்து" என்று தொடங்கும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். "இம் மணத்தில் வந்தோர் ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக" என்று பிள்ளையார் அருள் புரிந்தார். அவ்வாறே சோதியில் எல்லாரும் புகுந்தனர். திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி, திருநாலகண்ட யாழ்ப்பாணர், முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களுடனும், சுற்றத்தவர்களுடனும் புகுந்தார்கள். முத்துச் சிவிகை முதலியவற்றைத் தாங்கி வந்தவர்களும், மற்ற அடியவர்களும், அறுவகைச் சமயத்தவர்களும், முனிவர்களும் புகுந்தார்கள். எல்லாரும் புகுந்த பின், திருஞானசம்பந்தப் பெருமான் தம் காதலியைக் கைப்பற்றிச் சிவசோதியை வலம் வந்து அதனுள் நுழைந்து இரண்டறக் கலந்தார். சோதி மறைந்தது. திருக்கோயில் பழையபடி ஆனது. சோதியுள் கலக்கப் பெறாதவர்கள் கலங்கி நின்றார்கள். தேவர்கள் போற்றி நின்றார்கள்.

பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க...

ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
         நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
         திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
         அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
         யாவரும் புகுக என்ன.

         பொழிப்புரை : மெய்ம்மை பொருந்திய ஞான நெறிதான் யாவர்க்கும், `நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்தாலாய சொல்லே ஆகும் என்று, ஆக்கம் பொருந்திய சிறப்புக் கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை, அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்குமாறு அருள் செய்து, `இம் மணத்தில் வந்தவர் எல்லோரும் இழிவான பிறவி நீங்க யாவரும் இவ்வொளியில் புகுக' என்று ஆணையிட்டருள,


வருமுறைப் பிறவி வெள்ளம்
         வரம்புகா ணாத ழுந்தி
உரு எனும் துயரக் கூட்டில்
         உணர்வு இன்றி மயங்கு வார்கள்
திருமணத்துடன் சேவித்து
         முன்செலும் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
         மன்னு சோதியினுள் புக்கார்.

         பொழிப்புரை : முறையாய் இடையறாது வரும் பிறவி என்னும் பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி `உடல்' என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள் தாமும், பிள்ளையாரின் திருமணக்கோலத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அப் பேரொளியில் புகுந்தார்கள்.


சீர்பெருகு நீலநக்கர்
         திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
         இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
         மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
         பன்னிகளோ டுடன்புக்கார்.

         பொழிப்புரை : சிறப்பு மிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், முதலிய தொண்டர்களும், தவ ஒழுக்கத்தின் பொலிவு மிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பிகளும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்களும் சூழ்ந்து வரத் தத்தம் மனைவியர்களுடன் புகுந்தனர்.


அணிமுத்தின் சிவிகைமுதல்
         அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
         மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
         பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
         தொழுதுடன்புக் கொடுங்கினார்.

         பொழிப்புரை : அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்றவரும், மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அழகுசெய்த மங்கையரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர்களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்து, உணர்வு உடையவராய்ப் பிள்ளையாரை வணங்கியவாறே உடன்புகுந்து அப்பேரொளியுள் ஒடுங்கினர்.


ஆறுவகைச் சமயத்தின்
         அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும்
         கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால்
         வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள்
         எல்லாரும் புக்கதற்பின்.

         பொழிப்புரை : சைவ சமயத்தில் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியிலும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், மறை வழி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கரத்துடன் வந்து சேர்ந்தவர்களும், முன்சொன்னவாறன்றி எக்காரணமும் அறிய இயலாது திருவருள் வயத்தால் வந்தவர்களும், எல்லை இல்லாத பெரிய சிவப் பேரொளியுள் எல்லாருமாகப் புகுந்தபின்,


காதலியைக் கைப்பற்றிக்
         கொண்டுவலம் செய்து அருளித்
தீது அகற்ற வந்தருளும்
         திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி
         நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப்
         புக்கு ஒன்றி உடனானார்.

         பொழிப்புரை : மனைவியாரைக் கைப்பிடித்தவாறே அச் சோதியை வலம் வந்து, உலகில் உள்ள தீமைகளைப் போக்கிச் சைவநெறி தழைத்தற்கென்றே தோன்றியருளிய திருஞானசம்பந்தர், சிவபெருமானின் அழகினதாய் வளர்ந்து எழுகின்ற பேரொளியை அடைந்து, அதனுள் புகுபவராய், ஓரொருகால் உலகியலைத் தழுவி நிற்கும் ஒருப்பாடு நீங்கியதால், உள்ளே புகுந்து, ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையில் வீடுபேற்றை எய்தினார்.

         குறிப்புரை : போத நிலை என்பது மூன்றாண்டு வரை உலகியல் வயப்பட்ட குழந்தையாய் வளர்ந்ததும், ஞானம் பெற்ற பின்பும், கொல்லி மழவன் மகளார், வணிகர் இருவரின் மகளார் போன்றவர்களுக்கு அருளுதற் பொருட்டும், உலகியல் வயப்பட்டு வீழிமிழலையிலும், தாதையார் வயப்பட்டுத் திருவாவடுதுறையிலுமாகப் பொருள் வேண்டப் பெற்றும் வந்தன போன்ற சூழல்களாம்.


பிள்ளையார் எழுந்தருளிப்
         புக்கதற்பின், பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
         குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
         மணக்கோயில் தோன்றுதலும்.
தெள்ளுநீர் உலகத்துப்
         பேறு இல்லார் தெருமந்தார்.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தர் உட்புகுந்து உடனாகிய பின்னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த பேரொளிப் பெருவடிவையும், அதன் உட்புகக் காட்டிய வாயிலையும் மறையுமாறு செய்ய, சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத்தில் இவ்வரிய பேற்றைப் பெறாதவர் பலரும் மயங்கி வருந்தினர்.

         குறிப்புரை : தவமும் தவமுடையார்க்கன்றி ஆகுமோ? ஆகாதன்றே.


கண்ணுதலார் திருமேனி
         உடன்கூடக் கவுணியனார்
நண்ணி இது தூரத்தே
         கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
         விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
         தீரஎடுத் தேத்தினார்.

         பொழிப்புரை : நெற்றியில் விழியையுடைய சிவபெருமானின் திருமேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் சென்று சேர்ந்ததைத் தாம் தாமும் தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் ஆகிய எண்ணில்லாதவர்கள் தம் வருத்தம் நீங்கப் பெருமானைப் போற்றினர்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணாலம்...

அகத்தாரே வாழ்வார்என்று அண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     மேலைத் தவத்தால் --- முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் --- மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் --- இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி --- என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் --- தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி --- தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் --- தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர்.

         இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர்.


முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
முதல் இலார்க்கு ஊதியம் இல். ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     முன் --- முற்பிறப்பின்கண், பெரிய நல்வினை --- மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை, முட்டு இன்றி --- தடையில்லாது, செய்யாதார் --- செய்யாதவர்கள், பின் --- பிற்பிறப்பின் கண், பெரிய செல்வம் பெறலாமோ --- மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ?, வைப்போடு --- பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு, இகலி பொருள்செய்ய எண்ணியக்கால் --- மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால், என் ஆம் --- எங்ஙனம் முடியும், முதல் இல்லார்க்கு --- வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு, ஊதியம் இல் --- (அதனால் வரும்) பயனில்லையாதலால்.

         முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாதாம்.

இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்துஇந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரியோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரியோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.






No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...