027. தவம் - 01. உற்றநோய் நோன்றல்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல், நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம், பல விரதங்களை மேற்கொண்டு, உணவைச் சுருக்கிக் கொள்ளுதலும், கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும், மழைக் காலத்தில், மழையிலும், பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும், நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய நல்ல செயல்களைக் கடைப்பிடித்து, அச் செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவமாம்.

     சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை உள்ள வெயில் காலத்தில், வெயில்படும் இடத்தில் நின்றுகொண்டு இருத்தல். வெயில் நிலை நிற்றல் என்றதனால், நாற்புறமும் தீயானது சூழ, மேலே சூரியனின் கதிர்கள் படுவதான பஞ்சாக்கினி மத்தியில் இருத்தல் என்பதும் கொள்ள வேண்டும்.

     ஆவணி மாதம் முதல், கார்த்திகை மாதம் வரை உள்ள மழைக் காலத்திலும், மார்கழி மாதத்துப் பனியிலும் ஏரி, மடு, ஆறு போன்ற நீர்நிலைகளில் நின்றுகொண்டு இருத்தல்.

     இவை அல்லாமல், ஈரத் துணியைப் போர்த்திக் கொண்டு இருத்தல், பட்ச உபவாசம், மாத உபவாசம் இருத்தல், மரத்தின் கீழ் வசித்தல் ஆகியவை தவநிலையில் அடங்கும்.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "உணவைச் சுருக்குதல் முதலியவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவத்திற்கு வடிவம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

     மற்ற விரதங்கள் எல்லாம், உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் என்னும் இந்த இரண்டிலே அடங்குவதால், இதுவே தவத்திற்கு இலக்கணம் ஆக வைக்கப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தவத்திற்கு உரு --- தவத்தின் வடிவு;

      உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே --- உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று

         (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இதனை விளக்குவதாக அமைந்துள்ளமை காணலாம்...

இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே,
இருந்து இந்திரனே எவரே எனினும்
திருந்தும் தம் சிந்தை சிவனவன் பாலே.  ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     பொறி புலன்களை அடக்கி இருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி, உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரியோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத் தேவரேயாக எதிர் வரினும் அப் பெரியோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.


உயிர்நோய் செய்யாமை, உறுநோய் மறத்தல்,
செயிர்நோய் பிறர்கண் செய்யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளியினை விடுவான் ஆயின்
இழிவு அன்று இனிது தவம்.    --- சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     உயிர் நோய் செய்யாமை --- பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யாமையும், உறு நோய் மறத்தல் --- தனக்குப் பிறரால் வருந் துன்பத்தை, - மறத்தலும், செயிர்நோய் பிறர்கண் செய்யாமை --- கோபத்தால் உண்டாகுந் துன்பத்தைப் பிறரிடத்துச் செய்யாமையும், செயிர்நோய் விழைவு வெகுளி ஆகிய இவை விடுவான் ஆயின் --- குற்றத்தைச் செய்யுந் துன்பத்தைத் தருகின்ற அவாவும் கோபமும் ஆகிய இவற்றை விட்டுவிடுவானே யானால்,  தவம் இழிவு அன்று இனிது --- அவனால் செய்யப்படும் தவமானது தாழந்ததன்று, இனிமையுடையதாகும்.

         பிறிதோருயிர்க்கு ஒரு நோயும் செய்யாமை, தனக்குப் பிறரால் வந்து உற்ற நோயை மறத்தல், கோபத்தால் தான் பிறர்மாட்டு இன்னாதன செய்யாமை, குற்றத்தைச் செய்யும் நோயைப் பண்ணும் காதலையும், மனத்தின்கண் பிறர்மேலுள்ள செற்றத்தையும் விடுவானாயின், அவன் செய்யும் தவம் இழிவன்றி இன்பத்தைத் தரும்.

         உயிர்கொலை முதலியற்றை விட்டவனின் தவமே சிறப்புடையது. இதனை, ''உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு,'' என்ற வள்ளுவர் வாய்மொழியானும் தெளிக. விழைவும் வெகுளியும் பல குற்றங்களையும் துன்பங்களையும் விளைவிப்பனவாதலின், ''செயிர் நோய் விழைவு வெகுளி'' என்றார்.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள் உடையத்
தாக்க அருந் துன்பங்கள் தாம் தலை வந்தக்கால்,
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.          ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய --- முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலை வந்தக்கால் --- போக்குதற்குரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே --- எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, நல்லொழுக்கம் காக்கும் திருவத்தவர் --- துறவொழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறுடையவராவர்.

         இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.


தூய்மை உடைமை துணிவாம், தொழில் அகற்றும்
வாய்மை உடைமை வனப்பாகும், - தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை, மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.        --- திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     தூய்மை உடைமை --- மனத் தூய்மையினை உடையராய் இருத்தலும்; துணிவு ஆம் தொழில் அகற்றும் வாய்மையுடைமை --- மெய்நூல்களாலே துணியப் பட்ட நற்செய்கையை விரிக்கின்ற உண்மை உடையவனாய் இருத்தலும்;  வனப்பு ஆகும் தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை --- மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவதனை மனத்தால் நினையாமையும் வாயால் சொல்லாமையும்; மூன்றும் தவத்தில் தருக்கினார் கோள் --- ஆகிய இம் மூன்றும் தவத்திலே செருக்கி நின்றவர்களுடைய கொள்கையாம்.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...