அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நீலமுகில் ஆன (கோடி ---
குழகர் கோயில்)
முருகா!
மெய்யடியார்களுடன் கூடி
வழிபட்டு உய்ய அருள்.
தானதன
தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
நீலமுகி
லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு ...... முழலாமல்
நீடுபுவி
யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென ...... முயலாமற்
காலனது
நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ ...... அணுகாமுன்
காதலுட
னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு ...... மருள்தாராய்
சோலைபரண்
மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட ...... னுறவாடிச்
சோரனென
நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா
கோலவழல்
நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே
கோடுமுக
வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நீலமுகில்
ஆன குழல் ஆன மடவார்கள் தன
நேயம் அதிலே தினமும் ...... உழலாமல்,
நீடுபுவி
ஆசை, பொருள் ஆசை, மருள் ஆகி, அலை
நீரில்உழல் மீன் அது என, ...... முயலாமல்,
காலனது
நா அரவ வாயில் அடு தேரை என,
காயம் மருவு ஆவி விழ ...... அணுகாமுன்,
காதலுடன்
ஓதும் அடியார்களுடன் நாடி, ஒரு
கால் முருகவேள் எனவும் ...... அருள்தாராய்.
சோலை
பரண் மீது நிழலாக தினை காவல் புரி
தோகை குறமாதினுடன் ...... உறவாடி,
சோரன்
என நாடி வருவார்கள் வனவேடர் விழ
சோதிகதிர் வேல் உருவு ...... மயில்வீரா!
கோல
அழல் நீறுபுனை ஆதி சருவ ஈசரொடு
கூடி விளையாடும் உமை ...... தருசேயே!
கோடுமுக
ஆனை பிறகு ஆன துணைவா! குழகர்
கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.
பதவுரை
சோலை பரண் மீது
நிழலாக தினை காவல்புரி தோகை குறமாதினுடன் உறவாடி --- (வள்ளிமலையில்
உள்ள) சோலையின் இடையில் அமைக்கப்பட்ட பரண் மீது நிழலில் நின்று, தினைப்புனத்தைக் காவல் செய்து வந்த, மயில் போலும் சாயலை
உடைய குறமகளாகிய வள்ளிநாயகியுடன் உறவாடி,
சோரன் என நாடி
வருவார்கள் வனவேடர் விழ சோதி கதிர்வேல் உருவு(ம்) மயில் வீரா --- கள்வன் என்று உம்மைத்
தேடி வந்தவர்களான வனவேடர்கள் எல்லோரும் மடிந்து விழ, மிக்க ஒளி வீசும் வேலாயுதத்தை விடுத்து
அருளிய மயில் வீரரே!
கோல அழல் நீறு புனை --- அழகு
பொருந்தியதும், வினைகளை
அழிக்கும் நெருப்புப் போன்றதுமான நிருநீற்றைப் புனைந்துள்ளவரும்,
ஆதி --- முதற்பொருளானவரும்,
சருவ ஈசரொடு கூடி விளையாடும் உமை தரு
சேயே ---
எங்கும்
நிறைந்துள்ளவரும் ஆன சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமாதேவியார் பெற்றருளிய
குழந்தையே!
கோடு முக ஆனை பிறகான
துணைவா
--- தந்திமுகர் ஆன மூத்தபிள்ளாயார் பின் அவதரித்த இளையபிள்ளையாரே!
குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே
--- குழகர் என்னும் திருநாமத்துடன்
சிவபெருமான் வீற்றிருக்கும் கோடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருக்கும்
பெருமையில் மிக்கவரே!
நீலமுகில் ஆன குழல்
ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் --- கரிய மேகம்
போன்ற கூந்தலை உடைய மாதர்களின் மார்பகத்தின் மேல் உண்டாகும் இச்சையால் நாள்
தோறும் பெண்ணாசை கொண்டு அடியேன் அலையாமல்,
நீடு புவி ஆசை --- பெரிய இந்த மண்ணின் மேல் ஆசையும்,
பொருள்
ஆசை --- பொருளின் மேல்
ஆசையும் கொண்டு,
மருள் ஆகி --- அறிவு மயக்கம் கொண்டு,
அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல்
--- அலை மிகுந்த கடல் நீரில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உழலுகின்ற மீனைப்
போல இரையையே தேடி உழலாமல்,
காலனது நா அரவ வாயில்
இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் --- என்னைப் பற்ற
வரும் இயமனுடைய பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல ஆகி, எனது உடலில்
பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக,
காதலுடன் ஓதும்
அடியார்களுடன் நாடி ஒரு கால் முருகவேள் எனவும் அருள் தாராய் --- அன்புடன்
தேவரீரது திருப்புகழை ஓதுகின்ற அடியார்களை நாடிச் சென்று, உமது திருநாமத்தை ஓதும்படியாகத் திருவருளைத்
தந்து அருள்வாயாக.
பொழிப்புரை
வள்ளிமலையில் உள்ள சோலையின் இடையில்
அமைக்கப்பட்ட பரண் மீது நிழலில் நின்று, தினைப்புனத்தைக்
காவல் செய்து வந்த, மயில் போலும் சாயலை
உடைய குறமகளாகிய வள்ளிநாயகியுடன் உறவாடி,
திருடன் என்று உம்மைத் தேடி
வந்தவர்களான வனவேடர்கள் எல்லோரும் மடிந்து விழ, மிக்க ஒளி வீசும் வேலாயுதத்தை விடுத்து
அருளிய மயில் வீரரே!
அழகு பொருந்தியதும், வினைகளை அழிக்கும் நெருப்புப் போன்றதுமான
நிருநீற்றைப் புனைந்துள்ளவரும், முதற்பொருளானவரும், எங்கும் நிறைந்துள்ளவரும் ஆன சிவபெருமானோடு
கூடி விளையாடுகின்ற உமாதேவியார் பெற்றருளிய குழந்தையே!
தந்திமுகர் ஆன மூத்தபிள்ளாயார் பின்
அவதரித்த இளையபிள்ளையாரே!
குழகர் என்னும் திருநாமத்துடன் சிவபெருமான்
வீற்றிருக்கும் கோடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமையில்
மிக்கவரே!
கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய
மாதர்களின் மார்பகத்தின் மேல் உண்டாகும் இச்சையால் நாள் தோறும் பெண்ணாசை கொண்டு அடியேன்
அலையாமல், பெரிய இந்த மண்ணின் மேல் ஆசையும், பொருளின் மேல் ஆசையும் கொண்டு, அறிவு மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல்
நீரில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உழலுகின்ற மீனைப் போல இரையையே தேடி
உழலாமல், என்னைப் பற்ற வரும் இயமனுடைய
பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல ஆகி, எனது உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன்
கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை
அணுகுவதற்கு முன்பாக, அன்புடன் தேவரீரது
திருப்புகழை ஓதுகின்ற அடியார்களை நாடிச் சென்று, உமது திருநாமத்தை ஓதும்படியாகத் திருவருளைத்
தந்து அருள்வாயாக.
விரிவுரை
நீலமுகில்
ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல், நீடு புவி ஆசை, பொருள் ஆசை, மருள் ஆகி ---
பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்னும்
மூவாசைகளால் அறிவு மயக்கம் கொண்டு அலைதல் கூடாது என்று முருகன் அருளை
வேண்டுகின்றார் அடிகளார்.
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று
ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலே பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாசங்களில்
அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.
பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள்
மனதில் எழும்.
1. உள்ள பொருளில்
வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.
2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.
3. பிறர் பொருளை
விரும்பி நிற்பது ஆசையாகும்.
4. எத்தனை வந்தாலும்
திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை
என்று பெயர்.
எந்தப்
பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.
பற்றுஅற்ற
கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று
நிலையாமை
காணப் படும். --- திருக்குறள்.
‘அற்றது பற்றெனில்
உற்றது வீடு’ --- திருவாய்மொழி
உள்ளது
போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர்
துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.
அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்
பிறப்பு ஈனும் வித்து. --- திருக்குறள்.
அவா
இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது
மேல்மேல் வரும். --- திருக்குறள்.
அவா
என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி
இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.
இன்பம்
இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள்
துன்பம் கெடின். --- திருக்குறள்.
பிறர்
பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.
பிறருடைய
மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால்
மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது
பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.
உலகமெல்லாம்
கட்டி ஆள வேண்டும். தொட்டன எல்லாம் பொன்னாக வேண்டும். கடல் மீதும் நமது ஆணை
செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து
ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.
கொடும்
கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது
சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற
உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால்
புண்ணியம்” என்றான்.
கேட்டவன்
வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது சென்றவன்
பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.
‘ஐயா! குதிரையில்
செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன்.
அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.
குதிரை
மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.
நடப்பவன்
மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து,
“ஐயா!
தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து
குதிரையையும் கொடுங்கள்” என்றான்.
குதிரை
மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும்
சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.
“நான் அடிக்கிறேன். நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.
“இவ்வாறு கேட்டு
அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும்.
செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக்
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது
கேட்டேன். நீர் குதிரையைக்
கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி
அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.
கடல்
என்ற புவிமீதில் அலை என்ற உருக்கொண்டு,
கனவு
என்ற வாழ்வை நம்பி,
காற்று
என்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு, நித்த நித்தம்
உடல்
என்ற கும்பிக்கு உணவவு என்ற இரைதேடி,
ஓயாமல்
இரவு பகலும்
உண்டு
உண்டு உறங்குவதைக் கண்டதே அல்லாது
ஒருபயனும்
அடைந்திலேனை
தடம்
என்ற மிடிகரையில் பந்தபாசங்கள் எனும்
தாவரம்
பின்னல் இட்டு
தாய்என்று
சேய்என்று நீ என்று நான் என்று
தமியேனை
இவ்வண்ணமாய்
இடை
என்று கடைநின்று ஏன் என்று கேளாது
இருப்பது
உனக்கு அழகாகுமா?
ஈசனே
சிவகாமி நேசனே
எனை
ஈன்ற தில்லைவாழ் நடராஜனே! --- நடராசர்
பத்து.
ஆசைக்குஓர்
அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து
ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே
இனும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும்
வேளையில், பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே
போதும், நான் நான்எனக்
குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக்
கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்,
பார்க்கும்இடம்
எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே. --- தாயுமானார்.
ஆசைச்
சுழல் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப்
புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. --- தாயுமானார்.
ஆசைஎனும்
பெருங் காற்று ஊ டுஇலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம்
வரும், இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கு ஆன
நேசமும்
நல் வாசமும் போய், புலனாய்இல்
கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசு
பழுத்து அருள் பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?
--- தாயுமானார்.
“பேராசை எனும்
பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ” ---
கந்தரநுபூதி
கடவுளுக்கும்
நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன்
ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு
தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.
சங்கிலி
பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால்
அதன் நீளம் குறையும். அதுபோல், பலப்பல பொருள்களின்
மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும்
உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம்
பொருளை அடையலாம்.
யாதனின்
யாதனின் நீங்கியான், நோதல்
அதனின்
அதனின் இலன். --- திருக்குறள்.
“ஆசா நிகளம் துகள் ஆயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே” --- கந்தரநுபூதி
ஆசையால்
கோபமும், கோபத்தால் மயக்கமும்
வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும்
நீங்கினல்தான் பிறவி நீங்கும்.
“காமம் வெகுளி மயக்கம்
இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” ---
திருக்குறள்.
அலை
நீரில் உழல் மீன் அது என முயலாமல் ---
அலை
மிகுந்த நீரில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உழலுகின்ற மீனைப் போல இரையையே
தேடி உழலாமல் இருக்க அருள்
புரிய வேண்டுகின்றார் அடிகளார்.
அலை
மிகுந்துள்ள நீரில் அங்கும் இங்குமாக அலைந்து அலைந்து, அசுத்தப் பொருள்களையே
உண்டு உண்டு மயங்கும் மீனானது, தனக்கு வைப்பட்ட தூண்டிலில் உள்ள பொருளையும்
தனக்குக் கிடைத்த இரை என்று கருதிச் சென்று, மாண்டது.
அலை
மிகுந்த நீர் என்றது, உலகபசுகாச தொந்தங்களை. உலகியலில் உழன்று, உலக இன்பங்களையே
தேடித் தேடி அலைந்து, அந்த உலக இன்பங்களாலேயே துன்பத்தை அடைந்து, கிடைத்தற்கு
அரிய உடலையும்,
வாழ்நாளையும்
வீணுக்கு ஆக்கி,
மடிகின்றவன்
மனிதன்.
"கலகவிழி மாமகளிர் கைக்குளே ஆய், பொய்
களவுமதன் நூல்பல படித்து, அவா வேட்கை
கனதனமும் மார்பும் உறல்
இச்சையால் ஆர்த்து ..... கழுநீர்ஆர்
கமழ்நறை சவாது புழுகைத் துழாய் வார்த்து
நிலவரசு நாடு அறிய கட்டில்
போட்டார்ச் செய்
கருமம் அறியாது, சிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே,
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து,
நிறைபவுசு வாழ்வு அரசு சத்யமே
வாய்த்தது
என உருகி ஓடி, ஒரு சற்றுளே வார்த்தை ..... தடுமாறித்
தழுவி, அநுராகமும் விளைத்து, மாயாக்கை
தனையும் அரு நாளையும் அவத்திலே
போக்கு
தலைஅறிவு இலேனை நெறி நிற்க நீ தீட்சை.....தரவேணும்"
என்கின்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
உயிர்கள்
தமக்குள்ள அறிவு மயக்கத்தால், உலகியல் இன்பங்களையே தேடித் தேடி அலைந்து, திருவருள்
இன்பத்தைத் தெளியாமை குறித்து, திருவருட்பயன் என்னும் மெய்கண்ட சாத்திர நூலில்
இது குறித்துக் கூறப்பட்டுள்ளது காண்க.
பால்ஆழி
மீன் ஆளும் பான்மைத்து, அருள் உயிர்கள்
மால்
ஆழி ஆழும் மறித்து. --- திருவருட்பயன்.
இதன்
பொருள்
---
திருவருளை
ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர
அறியாமல், மாயையின் காரியமாகிய
உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை
உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும்
நிலையைப் போன்றது.
அருள்
உயிர்கள்
--- திருவருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள்
(அவ்வருளை அறிந்து அனுபவியாமல்)
மால்
ஆழி -
(மாயை காரியமாகிய இழிந்த உலகப் பொருள்களையே
விரும்பி அனுபவித்து) மயக்கமாகிய கடலில்
மறித்து
ஆழும்
- மீண்டும் மீண்டும் ஆழ்ந்து உள்ளன.
(இது
எது போலும் என்றால்)
பால்
ஆழி மீன் ஆளும் பான்மைத்து --- பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை நுகர அறியாமல், அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து
உண்ணும் தன்மை போன்றது.
மாயை
உலகமாக விரிந்து நின்று, உயிர்களைக் கவர்ந்து
வசப்படுத்துகிறது. மாயையின் கவர்ச்சித் தன்மையை நோக்கி அதனை "மோகினி"
என அழைப்பர். நாடகமேடையில் கண்ணைக் கவரும் ஆடை அணிகளோடு ஓர் அழகு மங்கை தோன்றி
ஆடுகிறாள். அவளது அழகும் ஆடலும் பார்ப்பவரைக் கவர்ந்து அவரது அறிவை வேறெங்கும்
செல்லாதவாறு தடுத்துத் தம் வசப்படுத்தி விடுகின்றன. அவர்கள் தம்மை மறந்து
அக்காட்சியில் ஈடுபட்டு நிற்கின்றனர். அந்நடன மங்கையைப் போல, மாயை தனது காரியமாகிய உலகப் பொருள்களால்
மாந்தரின் அறிவை மயக்கி நிற்கிறது.
மாந்தர்
உலக வாழ்வில் மயங்கி, இறைவனது அருளைப்
பெறவேண்டும் என்ற தெளிவு இல்லாமல்,
உலகப்
பொருள்கள் மீது மேலும் மேலும் ஆசையைப் பெருக்கிக் கொள்கிறார்கள். நெடுகிலும்
வாங்கிப் போட்ட நிலங்கள், வீடுகள், கணக்கு இல்லாத பணம் ஆகிய இவற்றை உடைய
வாழ்க்கையைத்தான் சிறந்த வாழ்க்கை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் ஓர் உண்மையை
மறந்து விடுகிறார்கள். இவ்வாறு தேடிய பொருள்கள் அமைதியைத் தருவதில்லை என்பதுதான்
அந்த உண்மை. கணக்கில் வாராத பணத்தை எப்படி மறைத்து வைத்துக் காப்பது என்ற கவலை
பலருக்கு. போற்றிப் பாதுகாக்கும் பொருள் நம்மை விட்டுப் போய் விடுமோ என்ற
அச்சத்தினால் மன அமைதி போய் விடுகிறது. பொருள் இருந்தால் எல்லாவிதமான
இன்பங்களையும் எய்தலாம் என்று எண்ணத் தோன்றும். மயக்கத்தினால் அவ்வாறு நினைத்தே
பொருள்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அந்தப் பொருள்கள் நிலையானவை அல்ல.
ஆதலால் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் போய்விடலாம். நாம் பெறுகிற
இன்பம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், என்றைக்கும்
நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். எல்லா இன்பத்திற்கும் காரணமானதும்
என்றும் நிலையானதுமான ஒன்றைப் பெற நாம் முயல வேண்டும். இறைவன் திருவருள்தான் அது.
அதை மறந்து விட்டு, நிலையில்லாத
பொருளுக்காக அலைகிறோம். "செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்" என
மணிவாசகப் பெருமான் அருளி உள்ளது அறிக.
எத்தனையோ
காலமாக, எத்தனையோ பெருமக்கள்
திருவருளின்பம் தான் நிலையானது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அருள்மொழிகளில் நமக்கு
நம்பிக்கை வரவில்லை. யார் யாரோ சொல்வதை எல்லாம் நம்பி விடுகிறோம். வானிலை
அறிவிப்பாளர் அடுத்த 24 மணி நேரத்தில்
சிற்சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று அறிவித்தால் அதை அப்படியே நம்பி
விடுகிறோம். தேர்தலில் நிற்போர் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து
விடுகிறோம். ஆனால், பல பெரியவர்கள்
திருவருள் இன்பத்தை அனுபவமாக உணர்ந்து சொல்லியும் நாம் நம்புவதாக இல்லை. இந்த
உலகம் ஐம்புல நுகர்ச்சிக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கண்
முன்னாலே பார்க்கிறோம். கண்ணுக்குத் தெரியும் அப்பொருள்களிடத்திலே ஆசையும்
நம்பிக்கையும் உண்டாகிறது. ஆனால்,
திருவருள்
அனுபவம் அத்தகையது அல்ல. அது நமது புலன்களுக்கு எட்டாதது. அதனாலேயே அதனிடத்தில்
நம்பிக்கை உண்டாகவில்லை.
மாந்தர்
உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை அறியாமல், இழிந்தனவாகிய உலக போகங்களில் விருப்பம்
கொண்டு வாழ்கின்றனர். இன்பத்தை அடையப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டு துன்பத்தை
அடைகின்றனர். இந்நிலைமையை விளக்கிக் காட்டவே பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை
உண்டு வாழாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ண அலைவதை உவமையாகக் காட்டப்பட்டது.
காலனது
நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் ---
காலனது
நாவானது பாம்பின் வாயாகவும், உயிர்
தங்கியுள்ள உடம்பானது தேரையாகவும் காட்டப்பட்டது. பாம்பின் வாயில் அகப்பட்ட
தேரையானது பிழைத்து இருக்காது. இயமன் கையில் அகப்பட்ட உயிரானது இந்த உலக வாழ்வில்
இருக்காது.
பாம்பின்
வாயில் அகப்பட்ட இருக்கும் தேரையின் நிலையை விளக்கும் அருட்பாடல்களைக் காண்போம்.
செடிகொள்நோய்
யாக்கைஐம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை
கடிகொள்பூந்
தேன்சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதி னாயே
முடிகளால்
வானவர் முன்பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண்
அடிகள்ஆ
ரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.
--- திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
---
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின்
வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து
இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள்
முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால்
உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!
பாம்பின் வாயில்
தேரை. தேரையின் வாயில் சிறுபறவை (வண்டு). அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி.
அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அச்சிறு பறவைக்கும், அதை உண்ணும் தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும்
அவ்வவ்வுணவால் எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும்
உவமை. உயிர்கள் விரும்பும் உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று
தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற்
செலுத்தாமையால், அடையப்பெறாத
உண்மையின்பத்தின் பெருமையும் உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது
போல்வதொரு பெருங்கேடு யாக்கையின் செடி கொள்நோய். நோய் பாம்பைக்கொல்லும், பாம்பு தேரையைக்கொல்லும், தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில்
பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு தேன்றுளியால்
முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின்
உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன. இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி, நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன்
உட்கோள்.
ஓம்பினேன்
கூட்டை வாளா உள்ளத்துஓர் கொடுமை வைத்துக்
காம்புஇலா
மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்,
பாம்பின்வாய்த்
தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ
உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான
செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில்
பாதுகாத்துக்கொண்டு , காம்பு இல்லாத அகப்பை
முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல , உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த
பேறுகளைப் பெற இயலாதேனாய், பாம்பின் வாயில்
அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம்
நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி
அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும்.
கன்றில்
உறு மானை வென்ற விழியாலே,
கஞ்சமுகை மேவும் ...... முலையாலே,
கங்குல்செறி
கேசம் மங்குல் குலையாமை
கந்தமலர் சூடும் ...... அதனாலே,
நன்றுபொருள்
தீர வென்று, விலை பேசி
நம்பவிடு மாத ...... ருடன் ஆடி,
நஞ்சு
புசி தேரை அங்கம் அது ஆக
நைந்து விடுவேனை ...... அருள்பாராய்.
---
திருப்புகழ்.
அவா
மருவு இனா வசுதை காணும் மடவார் எனும்
அவார், கனலில் வாழ்வு என்று ...... உணராதே,
அரா
நுகர வாதை உறு தேரை கதி நாடும்
அறிவாகி, உள மால்கொண்டு, ...... அதனாலே
சிவாய
எனும் நாமம் ஒருகாலும் நினையாத, தி-
மிர ஆகரனை வாஎன்று......அருள்வாயே.
திரோத
மலமாறும் அடியார்கள், அருமாதவர்
தியானம் உறு பாதம் ...... தருவாயே. --- திருப்புகழ்.
தேரை
விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை
விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை
விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை
விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. --- கந்தர் அந்தாதி.
இதன்
பதவுரை -----
தேரை --- தேவர்கள் எல்லாம் கூடிச் செய்த
தேரை, விட --- அச்சு
முறியும்படி, பணி --- செய்து, ஏறு --- இடப வாகனத்தின்மேல், ஏறி --- இவர்ந்து, முப்புரம் --- திரிபுரத்தை, செற்ற --- நகைத்து எரித்த, பிரான் --- பரமசிவனுக்கு, தேர் --- பிரணவப் பொருள் தெளியச் செய்த, ஐ --- சுவாமியே, விள் --- சொல்லத்தக்க, தப்பு --- குற்றத்தால், அணி --- நெருங்கிய, சூராரி --- சூர சங்காரனே, என்க --- என்று துதிக்கக் கடவீர்கள், தெரிவையர்பால் --- காமவாஞ்சையால்
பரத்தையர் இடத்தில், தேரை --- தேரையானது, விட --- விடத்தை உடைய, பணி --- பாம்பினது, வாய் --- வாயில், படுமாறு --- அகப்பட்டால் போலும், செறிந்து --- சிக்கிக் கொண்டு, அலகைத் தேரை ---
பேய்த்தேர் என்னும் கானலை, விடு --- ஊறுகின்ற, அப்பு --- தண்ணீரானது, அணித்தென்று --- அண்மையில்
இருக்கிறதென்று, என்றும் ஓடி ---
எப்போதும் ஓடியோடி, திரிபவரே --- அலைந்து
திரிகின்றவர்களே.
தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த
ரதத்தை, அச்சு முறியும்படி
பண்ணி, திருமாலாகிய
ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும்
சிரித்து அழித்த, பெருமானாகிய
சிவனுக்கு, பிரணவப் பொருள்
தெரியும்படி உபதேசித்த, சுவாமியே! சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட
குற்றத்தை, தரித்திருந்த, சூரனை அழித்தவனே! என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால் விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக்
கொண்டு, பேய்த் தேரையாகிய
கானல் நீரை, ஊறுகின்ற நீரானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து
ஓடி ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே.
கொண்டு
விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட
நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை,
மண்டு
தேரையின் வாயினில் அகப்படு வண்டு,
வண்டு
தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம். --- விவேகசிந்தாமணி.
இதன்
பொருள் ---
அடுத்துவரும்
மரணம் முதலிய இன்னல்களுக்கு உட்பட்டு இருந்து, அற்பமாகிய போகங்களை
அனுபவிக்கும் மனிதருடைய நிலையற்ற சுகமானது எத்தகையது என்றால், தேனைப் பருகுவதற்கு
வாயில் கொண்டு ஒரு வண்டு, ஒரு தவளையின் வாயில் அகப்பட, அத் தவளை அவ் வண்டைக்
கவ்வியபடியே ஒரு பாம்பின் வாயில் சிக்க, அப் பாம்பு, அத் தவளையைக் கவ்வியபடியே
ஒரு கருடன் வாயில் அகப்பட, அக் கருடன் எல்லாவற்றுடனும் அப் பாம்பைத் தூக்கிச்
செல்லும்போது,
அவ்வாறு
வாயில் கவ்விக்கொண்டு வானில் பறந்து செல்லும் கருடனின் வாயில் அகப்பட்ட பாம்பும், அப் பாம்பின் வாயில்
சிக்கிப் பயந்து தவித்த அத் தவளையும், அத் தவளை வாயில் சிக்கிய தேனை வாயில் கொண்ட
வண்டும் அனுபவிக்கும் அற்ப சுகங்களைப் போன்றதாகும்.
அருள் தாராய் ---
அடியார்கள்
எப்போதும் இறைவனது திருப்புகழை ஓதிக் கொண்டே இருப்பர்.அதனால் அவர்கள், கரப்பண்பும், சிரப்பண்பும், மொழிப்பண்பும், விழிப்பண்பும்,மனப்பண்பும் உடையவராவர். பண்பில்லாதவர்
மனிதராக மாட்டார்.
“அரம்போலுங்
கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட்பண்
பில்லாதவர்” --- திருக்குறள்
“பழி பிறங்காப்
பண்புடை மக்கள்”
என்ற
திருவள்ளுவ தேவருடைய திருவாக்கைச் சிந்திக்க. கரப்பண்பு - அறஞ் செய்தல்; சிரப்பண்பு - ஈசனை வணங்குதல்; மொழிப் பண்பு - உண்மை பேசுதல்; விழிப் பண்பு - பிறன்மனை நோக்காது இருத்தல்; மனப் பண்பு - பிறருக்குத் தீங்கு
நினையாது நன்மையை நினைத்தல்.
பண்பு
பெற்ற அடியார்களுடன் கூடி அவர்களது குறிப்பின் வழி ஒழுகினால் அப்பண்பு பெற்று உய்யலாம்.
ஆதலின் அரிதின் முயன்று நல்ல அடியாருடன் கலந்து ஒழுகவேண்டும்.
“மனநலம் நன்குஉடையர் ஆயினும்
சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. --- திருக்குறள்.
“துரும்பனேன் என்னினும்
கைவிடுதல் நீதியோ,
தொண்டரொடு கூட்டு கண்டாய்” ---
தாயுமானார்.
சோலை
பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குறமாதினுடன் உறவாடி, சோரன் என நாடி
வருவார்கள் வனவேடர் விழ சோதி கதிர்வேல் உருவு(ம்) மயில் வீரா ---
வள்ளிமலையில் தினைப்புனத்தில் பரண்மீது தினைப்புனம் காவல் புரிந்த
வள்ளியம்மைபால் முருகவேள் சென்று பலப்பல திருவிளையாடல் புரிந்து மருவினர். ஞானமே வடிவாகியவரும், காமனை எரித்த கனல் கண்ணிலே உதித்த
அருட்பெருஞ்சோதி ஆகிய பரம்பொருள் இன்ப சத்தியாகிய வள்ளியம்மையை மணந்தது ஆன்மாக்கள்
இன்புறும் பொருட்டே.
செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான் இறவான்,
"சும்மாஇரு சொல்அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. --- கந்தர் அநுபூதி.
"குறவர் குறிஞ்சியூடே சேண் ஒணாயிடும் இதண் மேல் அரிவையை மேவியே, மயல் கொள லீலைகள் செய்து சேர நாடிய திருடா" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது
காண்க.
வேடர்கள் மீது வேல் ஏவி, எம்பெருமான், அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியை
திருமணம் புணர்ந்த வரலாறு.
தீய
என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு
வடபுறத்தே,
மேல்பாடி
என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர்
இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி
என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக
வருந்தி,
அடியவர்
வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு
அயர்ந்தும்,
பெண்
மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.
கண்ணுவ
முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன்
நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம்
சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார்.
பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால்
முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப்
புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில்
நிலைபெற்று நின்றார்.
ஆங்கு
ஒரு சார், கந்தக்
கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு
இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின்
வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய்
நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த
குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக்
குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக
இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.
அதே
சமயத்தில்,
ஆறுமுகப்
பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு
பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய
அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில்
பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது
என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய
கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு
அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும்
சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில்
இட்டு,
முருகப்
பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை
அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக
மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.
வேடுவர்கள்
முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர்
குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில்
உலாவியும், சிற்றில்
இழைத்தும்,
சிறு
சோறு அட்டும்,
வண்டல்
ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது
வளர்ந்து, கன்னிப்
பருவத்தை அடைந்தார்.
தாயும்
தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய
ஆசாரப்படி,
அவரைத்
தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும்
காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள்
தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில்
இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.
வள்ளி
நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை
மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத்
தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப்
பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின்
திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை
மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார்.
வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும்
அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள்
புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத்
திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில்
வீரக்கழலும்,
கையில்
வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை
மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த
நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான்
வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள
மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது
தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து
விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப்
போகும் வழி எது?
என்று
வினவினார்.
நாந்தகம்
அனைய உண்கண்
நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு
எல்லாம்
இறைவியாய் இருக்கும்நின்னைப்
பூந்தினை
காக்க வைத்துப்
போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும்
உணர்ச்சி ஒன்றும்
அயன் படைத்திலன்கொல் என்றான்.
வார்
இரும் கூந்தல் நல்லாய்,
மதி தளர்வேனுக்கு உன்தன்
பேரினை
உரைத்தி, மற்று உன்
பேரினை உரையாய் என்னின்,
ஊரினை
உரைத்தி, ஊரும்
உரைத்திட முடியாது என்னில்
சீரிய
நின் சீறுர்க்குச்
செல்வழி உரைத்தி என்றான்.
மொழிஒன்று
புகலாய் ஆயின்,
முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று
நோக்காய் ஆயின்
விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி
ஒன்று காட்டாய் ஆயின்,
மனமும் சற்று உருகாய் ஆயின்
பழி
ஒன்று நின்பால் சூழும்,
பராமுகம் தவிர்தி என்றான்.
உலைப்படு
மெழுகது என்ன
உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான்
போல
வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள்
கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு
தன்மைத்து அன்றோ
அறுமுகன் ஆடல் எல்லாம்.
இவ்வாறு
எந்தை கந்தவேள், உலகநாயகியிடம்
உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள்
சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை
மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம்
நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது
வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
நம்பி
சென்றதும்,
முருகப்
பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே
புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை
மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத்
தருகின்றேன். தாமதிக்காமல் வா"
என்றார். என்
அம்மை வள்ளிநாயகி நாணத்துடன்
நின்று,
"ஐயா, நீங்கு உலகம்
புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள்
என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக்
கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி
நடுங்கி,
"ஐயா!
எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி
உய்யும்" என்றார். உடனே, முருகப்
பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
நம்பி, அக் கிழவரைக்
கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி
உண்டாகுக.
உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப்
பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில்
விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு
வேண்டியது யாது?" என்று
கேட்டான்.
பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது
கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள
குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள்
கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது
குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும்
துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக்
கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச்
சேர்ந்தான்.
பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும்
பசி" என்றார். நாயகியார் தேனையும்
தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார்.
"சுவாமீ!
ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில்
சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி
காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார்
பெருமான்.
(இதன்
தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் -
ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம்
பெற,
பக்குவப்படாத
ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத்
தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம்
என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி
தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப்
பிராட்டியார்,
பக்குவப்
படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா
என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார் என்று கொள்வதும் பொருந்தும்.)
வள்ளிநாயகியைப்
பார்த்து,
"பெண்ணே!
எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச்
செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும்
என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை
அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும்
வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று
கூறி,
தினைப்புனத்தைக்
காக்கச் சென்றார்.
தனக்கு
உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான், தந்திமுகத் தொந்தியப்பரை
நினைந்து,
"முன்னே
வருவாய், முதல்வா!"
என்றார்.
அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர்.
அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத்
தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய
அவரும் நீங்கினார்.
முருகப்
பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு
ஆனந்தமுற்று,
ஆராத
காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத்
திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து
அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள்மழை
பொழிந்து, "பெண்ணே! நீ
முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க
வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம்
செல். நாளை வருவோம்" என்று மறைந்து
அருளினார்.
அம்மையார்
மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள
புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து, "அம்மா!
தினைப்புனத்தை
பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச்
சென்றேன்" என்றார்.
"அம்மா!
கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது.
முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை
இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.
மை
விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய்
வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை
வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை
இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.
இவ்வாறு
பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது
குறை கூறுதல் தக்கதோ?" என்றார்.
வள்ளியம்மையாரும்
பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார்
போல வந்து,
"பெண்மணிகளே!
இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி
அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது
முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும்
உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று
எண்ணி,
புனம்
சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன்
தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை
வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்"
என்றாள்.
தோட்டின்
மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்
கூட்டிடாய்
எனில், கிழிதனில் ஆங்கு அவள்
கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது"
என்று உரைத்தான்.
பாங்கி
அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல்
ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்"
என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி
வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப்
பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு
மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி
நீங்கவும், பரமன்
வெளிப்பட்டு,
பாவையர்க்கு
அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச்
செல்" என்று கூறி நீங்கினார்.
இவ்வாறு
பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி
மகிழ்ந்து,
வள்ளியம்மையை
நோக்கி,
"அம்மா!
மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.
வள்ளிநாயகி
அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி
தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு
குடிலுக்குச் சென்றார்.
வள்ளிநாயகியார்
வடிவேற்பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர்.
பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள
தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர்
உள்ளம் வருந்தி,
முருகனை
வழிபட்டு,
வெறியாட்டு
அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம்
இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று
குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.
முருகவேள்
தினைப்புனம் சென்று, திருவிளையாடல்
செய்வார் போல்,
வள்ளியம்மையைத்
தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த
பாங்கி,
வெளி
வந்து,
பெருமானைப்
பணிந்து,
"ஐயா!
நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள்.
இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம்
ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி
வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.
தாய்துயில்
அறிந்து,
தங்கள்
தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில்
அறிந்து,
மற்றுஅந்
நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில்
கொள்ளும் யாமப்
பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில்
கதவை நீக்கி
வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.
(இதன்
தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில்
திருவருளாகிய பாங்கி, பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப்
பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில்
மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)
வள்ளி
நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு
இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று
தொழுது நின்றார்.
பாங்கி
பரமனை நோக்கி,
"ஐயா!
இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும்.
இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து
அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத்
தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன்
சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி
விடுத்து,
குகைக்குள்
சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில்
தங்கினார்.
விடியல்
காலம்,
நம்பியின்
மனைவி எழுந்து,
தனது
மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான்
அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம்
கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, "எம்பெருமானே! பல
ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.
முருகவேள், "பெண்ணரசே!
வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள்
போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி
வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து
அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி
வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக்
கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை
விட்டு நீங்க,
அம்மையாரும்
ஐயனைத் தொடர்ந்து சென்றார்.
இடையில்
நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக்
கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும்
சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு
வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார்
"அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன்
எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு
திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின்
அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே
இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள்
என்ன செய்வோம்? தாயே தனது
குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குலதெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக
எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப்
பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.
கந்தக்
கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார்
தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட
நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த
தவப்பேறு" என்று மகிழ்ந்தனர். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம்
புணர்ந்து,
திருத்தணிகையில்
வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.
முருகப்
பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள்
பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள்
வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.
கோல
அழல் நீறு ---
கோலம்
- அழகு. அணிவோர்க்கு அழகைத் தருவது திருநீறு.
"சுந்தரமாவது நீறு" என்றும் "காண இனியது நீறு கவினைத்
தருவது நீறு பேணி அணிபவர்க்கு
எல்லாம் பெருமை கொடுப்பது நீறு" என்றும் அருளினார் திருஞானசம்பந்தப்
பெருமான்.
அழல்
- நெருப்பு,
அடிவர்களின்
வினைக் குப்பையை அழிக்கும் நெருப்பு திருநீறு. அழித்து, "அவலம் அறுப்பது நீறு, வருத்தம் தணிப்பது நீறு" என்று திருஞானசம்பந்தப்
பெருமான் அருளியது அறிக.
"அழல்
நீறு" என்பதை, "சுடு நீறு"
என்றும்,
"வெங்கனல்
வெண் நீறு" என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளினார் என்பதைப் பின்வரும் தேவாரப்
பாடல்களில் காண்க...
வாசம்
மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசும்
"சுடுநீறு" புனைந்தான் விரிகொன்றை
ஈசன்
எனஉள்கி எழுவார் வினைகட்கு
நாசன்
நமை ஆள்வான் நல்லம் நகரானே.
பொழிப்புரை
---
மணம்
கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு
அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை
மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை
நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடிசெய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும்
நகரில் எழுந்தருளியுள்ளான்.
பொங்குஇ
ளம்கொன் றையினார்
கடலில் விடம்உண்டு
இமையோர்கள்
தங்களை
ஆர்இடர் தீர
நின்ற தலைவர்
சடைமேல்ஓர்
திங்களை
வைத்துஅனல் ஆட
லினார்திரு நாரை
யூர்மேய
"வெங்கனல்
வெண் நீறு" அணிய
வல்லார் அவரே
விழுமியரே.
பொழிப்புரை
---
சிவபெருமான், செழித்து விளங்கும் இளங் கொன்றை மலரைச்
சூடியவர். பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த
தலைவர். சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர்.
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். வெங்கனலால்
நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர்.
கோடு
முக ஆனை பிறகான துணைவா ---
கோடு
- தந்தம்.
தந்திமுகர்
ஆன மூத்தபிள்ளாயார் பின் அவதரித்த இளையபிள்ளையார் முருகப் பெருமான்.
குழகர்
கோடி நகர் மேவி வளர் பெருமாளே ---
சுந்தரமூர்த்தி
சுவாமிகள் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்ற திருத்தலம். குழகர்கோயில் என்று திருமுறையில் வழங்கப்படுவது.
கோடியக்கரை, கோடிக்கரை என்று இக் காலத்தில்
வழங்கப்படுவது.
இறைவர்
--- அமுதகடேசுவரர், குழகேசுவரர்.
இறைவியார்
--- அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி.
தல
மரம் --- குரா மரம்.
தீர்த்தம் --- அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.
இத்
திருத்தலத்திற்கு வேதாரண்யத்திலிருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.
திருப்பாற்கடலைக்
கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது
அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக
ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.
குழகர்
கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம்
கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.
சேரமான் பெருமாள் நாயனாருடன்
இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே
தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்திப் பாடிய திருப்பதிகம் ஓதுதற்கு இனிமையானது.
தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல
தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
இத்தலத்து
முருகப்பெருமான் ஓரு முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில்
அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம்
தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்".
கடற்கரையிலுள்ள
சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலித் தலம் எனப்படுகிறது.
கருத்துரை
முருகா! மெய்யடியார்களுடன்
கூடி வழிபட்டு உய்ய அருள்.
No comments:
Post a Comment