திரு மறைக்காடு - 0849. நூலினை ஒத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நூலினை ஒத்த (திருமறைக்காடு --- வேதாரணியம்)

முருகா!
தவத்தைப் புரிந்து சிவத்தை அடையத் திருவருள் புரிவாயாக.


தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான


நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்

நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்
     நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும்

சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள்
     தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச்

சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
     தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ

வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை
     வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே

மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து
     வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன்

மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து
     வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே

மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து
     வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நூலினை ஒத்த மருங்குல், தேரினை ஒத்த நிதம்பம்,
     நூபுரம் மொய்த்த பதங்கள், ...... இவையாலும்,

நூல் திசை பெற்ற பதங்கொள் மேருவை ஒத்த தனங்கள்,
     நூல்வல் மலர்ப் பொரு துண்டம் ...... அவையாலும்,

சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள்,
     தேன் இதழ் பற்றும் ஒர்இன்ப ...... வலைமூழ்கி,

சீலம் அனைத்தும் ஒழிந்து, காம விதத்தில் அழுந்தி,
     தேறு தவத்தை இழந்து ...... திரிவேனோ?

வால இளப் பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை
     வாசுகியைப் புனை நம்பர் ...... தருசேயே,

மாவலியைச் சிறை மண்ட, ஓர்அடி ஒட்டி அளந்து,
     வாளி பரப்பி இலங்கை ...... அரசானோன்

மேல்முடி பத்தும் அரிந்து, தோள் இரு பத்தும் அரிந்து,
     வீரம் மிகுத்த முகுந்தன் ...... மருகோனே!

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து,
     வேதவனத்தில் அமர்ந்த ...... பெருமாளே. 

பதவுரை


      வால இளப் பிறை --- பால இளம் பிறைச் சந்திரன்,

     தும்பை --- தும்பை மலர்

     ஆறு --- கங்கை நதி

     கடுக்கை --- கொன்றை மலர்,

     கரந்தை --- திருநீற்றுப் பச்சை

     வாசுகியைப் புனை நம்பர் தரு சேயே ---  வாசுகி என்னும் பாம்பு ஆகியவைகளைத் திருமுடியில் தரித்துள்ள சிவபெருமான் அருளால் அவதரித்த குழந்தையே!

      மாவலியைச் சிறை மண்ட, ஓர் அடி ஒட்டி அளந்து --- (வாமனாவதாரத்தை மேற்கொண்டு) மாவலிச் சக்கரவர்த்தியைத் தனது திருவடியாகிய சிறையில் ஒடுங்குமாறு, தான் கேட்டுக் கொண்டபடி அளித்த ஓர் அடியால் அளந்தும்,

     வாளி பரப்பி  --- (இராமபிரானாக அவதரித்து) கணையை விடுத்து,

     இலங்கை அரசானோன் மேல் முடி பத்தும் அரிந்து --- இலங்கைக்கு அரசனான இராவணனின் திருமுடிகள் பத்தையும் அரிந்தும்,

      தோள் இரு பத்தும் அரிந்து --- அவனுடைய தோள்கள் இருபத்தையும் அரிந்தும்,

     வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே --- வீரம் விளைத்து நின்ற (இராமபிரானாக அவதரித்த) திருமாலின் திருமருகரே!

      மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து --- பொருந்திய திருத்தணிகை, திருச்செந்தில் மற்றும் பெருமைக்கு உரிய திருப்பழநி ஆகிய திருத்தலங்களில் விருப்போடு எழுந்தருளி இருந்து,

     வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே --- வேதவனம் என்னும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

       நூலினை ஒத்த மருங்குல் --- நூலினை ஒத்த இடை,

     தேரினை ஒத்த நிதம்பம் --- தேர்த் தட்டினை ஒத்த அல்குல் தடம்,

     நூபுரம் மொய்த்த பதங்கள் --- சிலம்பு அணிந்த பாதங்கள்,

     இவையாலும் ---  ஆகிய இவைகளாலும்,

      நூல் திசை பெற்ற பதம்கொள் மேருவை ஒத்த தனங்கள் --- நூல்களிலும் திசைகள் தோறும் சொல்லப்பட்ட தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற மார்பகங்கள்,

     நூல் வல் மலர்ப் பொரு துண்டம் --- தாமரை மலரையும் மிஞ்சும் அழகிய முகம்,

     அவையாலும் --- ஆகிய அவைகளாலும்,

      சேலினை ஒத்திடு கண்களாலும் --- சேல் மீனைப் போன்ற கண்களாலும்,

     அழைத்திடு பெண்கள் --- (காமுகர்களைக் கவர்ந்து, பொருள் கருதி, அவர்க்குக் காம சுகத்தைத் தர) அழைக்கின்ற விலைமாதர்களின்,

     தேன் இதழ் பற்றும் ஒர் இன்ப வலை மூழ்கி --- தேன் போல இனிக்கின்ற வாயிதழைப் பற்றி அனுபவிக்கும் சிற்றின்ப வலையில் முழுகி,

     சீலம் அனைத்தும் ஒழிந்து --- ஒழுக்கம் அத்தனையும் ஒழிந்து,

     காம விதத்தில் அழுந்தி --- காம விளையாட்டில் அழுந்தி,

     தேறு தவத்தை இழந்து திரிவேனோ --- தெளிந்த தவத்தினைப் புரிதலை இழந்து நான் அலைவேனோ?

பொழிப்புரை

     பால இளம் பிறைச் சந்திரன், தும்பை மலர், கங்கை நதி, கொன்றை மலர், திருநீற்றுப் பச்சை, வாசுகி என்னும் பாம்பு ஆகியவைகளைத் திருமுடியில் தரித்துள்ள சிவபெருமான் அருளால் அவதரித்த குழந்தையே!

     வாமனாவதாரத்தை மேற்கொண்டு, மாவலிச் சக்கரவர்த்தியைத் தனது திருவடியாகிய சிறையில் ஒடுங்குமாறு, தான் கேட்டுக் கொண்டபடி அளித்த ஓர் அடியால் அளந்தும், இராமபிரானாக அவதரித்து, கணையை விடுத்து, இலங்கைக்கு அரசனான இராவணனின் திருமுடிகள் பத்தையும் அரிந்தும்,  அவனுடைய தோள்கள் இருபத்தையும் அரிந்தும், வீரம் விளைத்து நின்ற திருமாலின் திருமருகரே!

     பொருந்திய திருத்தணிகை, திருச்செந்தில் மற்றும் பெருமைக்கு உரிய திருப்பழநி ஆகிய திருத்தலங்களில் விருப்போடு எழுந்தருளி இருந்து, வேதவனம் என்னும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே!

         நூலினை ஒத்த இடை, தேர்த் தட்டினை ஒத்த அல்குல் தடம், சிலம்பு அணிந்த பாதங்கள், ஆகிய இவைகளாலும், நூல்களிலும் திசைகள் தோறும் சொல்லப்பட்ட தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற மார்பகங்கள், தாமரை மலரையும் மிஞ்சும் அழகிய முகம் ஆகிய அவைகளாலும், சேல் மீனைப் போன்ற கண்களாலும், காமுகர்களைக் கவர்ந்து, பொருள் கருதி, அவர்க்குக் காம சுகத்தைத் தர அழைக்கின்ற விலைமாதர்களின் தேன் போல இனிக்கின்ற வாயிதழைப் பற்றி அனுபவிக்கும் சிற்றின்ப வலையில் முழுகி, ஒழுக்கம் அத்தனையும் ஒழிந்து, காம விளையாட்டில் அழுந்தி, தெளிந்த தவத்தினைப் புரிதலை இழந்து நான் அலைவேனோ?


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர் புரியும் சாகசத்தையும், அவரால் விளையும் ஒழுக்கக் கேட்டையும் அடிகளார் காட்டி அறிவுறுத்துகின்றார்.

விலைமாதர்கள் தமது, நூல் போலும் மெல்லிய இடை அசைய, கூந்தல் தவழ, காலில் சிலம்பு கலன் கலின் என ஒலிக்க வந்து, தமது மார்பகங்களை மூடி உள்ள துகிலைச் சற்றே சரி செய்வது போலப் பாசாங்கு செய்து, தமது முகத்தை மஞ்சள் முதலிய பூச்சுக்களால் அழகு படுத்திக் காட்டி, கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசம் ஆக்குவார்கள்.

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். அவர் வேண்டும் பொருளைக் கொடுத்துக் கலவி இன்பத்தில் மூழ்கி இருந்து, தான் முன்பு கொண்டிருந்த ஒழுக்கம் அனைத்தும் குன்றி, உடல் வலியும் குன்றி, அறிவு மயக்கம் கொண்டு, பின் வரப்போகும் துன்பத்தைச் சிறிதும் எண்ணாமல், காம மயக்கம் கொண்டு இருப்பார்கள். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

"துறந்தோர் உளத்தையும் வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்களை உடையவர்கள் விலாமாதர்கள்.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?          
                                                                                           ---  கந்தர் அலங்காரம்.

வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.            ---  திருவாசகம்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.  --- திருப்புகழ்.

மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?   --- திருப்புகழ்.


பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?.  ---  கந்தர் அலங்காரம்.

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. --- பட்டினத்தார்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!--- பட்டினத்தார்.

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!  --- பட்டினத்தார்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.      ---திருப்போரூர்ச் சந்நிதி முறை                                         

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.      --- பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.


மாவலியைச் சிறை மண்ட, ஓர் அடி ஒட்டி அளந்து ---

பிரகலாதருடைய மகன் விரோசனன் விரோசனனுடைய மகன் மகாபலிச் சக்ரவர்த்தி. அவன் பேராலேயே மகாபலி பெரிய ஆற்றல் படைத்தவன் என்பது விளங்கும். மாபலி மூன்று உலகங்களையும் வென்று, இந்திர வாழ்வையும் பெற்று, ஒப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்தவன். அவனை அடக்கி இந்திரனுக்கு வாழ்வு தரும் பொருட்டு, திருமால் அதிதி வயிற்றில் வாமனனாகத் தோன்றி, மாவலி புரியும் யாகசாலையில் சென்று மூன்று அடி மண்ணைத் தானமாகக் கேட்டு, மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து, “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்றார். மாவலி “அடியேன் சிரம்” என்றான்.

திருவிக்கிரம மூர்த்தி மாவலியின் சிரத்தில் திருவடியை வைத்து அவனை அதல உலகத்தில் வைத்தருளினார். அவனுடைய வேண்டுகோளின்படி, வாசலில் காவல் புரிபவராகவும் நின்றார்.

வாமன அவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி.  சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான் என்னும் சுக்கிராச்சாரியார், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ? கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

வாளி பரப்பி இலங்கை அரசானோன் மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே  ---

இராமாவதாரம் புரிந்து, பல திருவிளையாடல்களைப் புரிந்து, சேதுவில் அணை கட்டி, கடலைக் கடந்து, இலங்காபுரிக்குச் சென்று, ஒப்பற்ற கணை ஒன்றினை விடுத்தருளி, இலங்கைக்கு அரசனான இராவணனின் திருமுடிகள் பத்தையும், இருபது தோள்களையும் அரிந்து வீரம் விளைத்து நின்று, அறத்தை நிலைநிறுத்தியவர் திருமால்.

வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே ---

(திரு)மறைக்காடு என்னும் தூய தமிழ்ச்சொல், வேதாரணியம் என்றும் வேதவனம் என்றும் ஆயது.

இறைவர்  --- வேதாரண்யேசுவரர், மறைக்காட்டுமணாளர்
இறைவியார் --- யாழைப்பழித்த மொழியாள்
தல மரம் --- வன்னி

நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அகத்தியான்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.

பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளை அருளிச் செய்த மூவர் முதலிகள் வழிபட்ட அற்புதமான திருத்தலம்.

ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான திருத்தலம் என்ற பெருமையை உடைய திருமறைக்காடு தற்போது வேதாரணியம் என்று வழங்கப்படுகின்றது.

சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம்.

இத்தலத்து மூலவர் மறைக்காட்டுமணாளர், ஒரு சுயம்பு இலிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும்.
அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி திருமணக் கோலச் சுதை அமைந்திருக்கிறது.

இக்கோயிலில் இரண்டு திருச்சுற்றுக்களும், இரண்டு தலமரங்களும் உள்ளன. முதல் திருச்சுற்றில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோயிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் விசேஷமாக கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள சிவனைப் பூசித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. வேதங்கள் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் தொடங்குவதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்று உணர்ந்த வேதங்கள் கோயிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

          திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். அங்குள்ள அடியார்கள் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார்கள். இருவரும் அன்பர்களுடன் திருக்கோயிலுக்குச் சென்றனர். திருக்கதவு மூடப்பட்டு இருந்ததைக் கண்டனர். "இத் திருக்கதவை வேதங்கள் பூசித்துத் திருக்காப்பு இட்டன. அன்றுதொட்டு இது மூடப்பட்டே கிடக்கிறது. அவ் வேதம் ஓதித் திறப்பார் ஒருவரும் இங்கே வரவில்லை. தொழுகைக்குச் செல்வோர் வேறு ஒரு வாயில் கோலி, அதன் வழியாகச் செல்கின்றனர்" என்று அன்பர்கள் தெரிவித்தனர். திருஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பெருமானை நோக்கி, "அப்பரே! இந் நேர்வழியாகவே நாம் போய் இறைவனைத் தொழுதல் வேண்டும். ஆதலால், இக் கதவு திறக்க  நீரே பாடும்" என்றார்.  திருநாவுக்கரசரும் "பண்ணின் நேர் மொழியாள்" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். திருப்பதிக நிறைவில் கதவு திறந்துக் கொண்டது.  இருவரும் உள்ளே சென்று, இறைவனைப் பாடிப் பரவி வெளியே வந்தனர்.  திருநாவுக்கரசர் பெருமான் திருஞானசம்பந்தப் பெருமானைப் பார்த்து, "இத் திருக்கதவு நாள்தோறும் திறக்கவும் அடைக்கவுமாக வழக்கத்தில் வருதல் நலம். ஆகவே, இத் திருக்கதவை அடைக்க நீர் பாடும்" என்றார். திருஞானசம்பந்தப் பெருமான், "சதுரம் மறை" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.  உடனே திருக்கதவு அடைந்தது. திருப்பதிகத்தைப் பாடி முடித்தார். எல்லாரும் வியப்பும் ஆனந்தமும் எய்தினர். அன்று முதல் அந்தத் திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் வருகிறது. அப்பர் பெருமானும்,  திருஞானசம்பந்தப் பெருமானும் திருப்பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

         இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி, பாண்டிய நாடு வரவேண்டும் என்று திருஞானசம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். அதுகேட்ட அப்பர் பெருமான், "சமணர்கள் பொல்லாதவர்கள். அவர்கள் வஞ்சனைகளை எல்லையின்றிச் செய்யவல்லவர்கள். கோள் நிலையும் நன்றாயில்லை. அதனால், பாண்டி நாட்டிற்குப் போதல் தகாது" என்று தடுத்தார். அதற்குத் திருஞானசம்பந்தப் பெருமான், "பரசுவத் நம்பெருமான் கழல்கள் என்றால், பழுது வந்து அணையாது", என்று சொல்லி, "வேயுறு தோளிபங்கன்" எனத் தொடங்கும், கோளறு திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.  அதற்குமேல் அப்பர் பெருமான் தடை கூறாது உடன்பட்டார்.

ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோயில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னை அறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்ததன் பயனனா, எலியானது அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. அப்பர் பெருமான் திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில், அதனை வியந்து பாடி உள்ளார்.

நிறைமறைக் காடு தன்னில்
         நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச்
         சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
         நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவுஅறக் கொடுப்பர்போலும்
         குறுக்கைவீ ரட்ட னாரே.

திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இத்தலத்தின் தான் அவதரித்தார்.

வேதாரண்யம் கோயில் விளக்கு அழகு என்பது பழமொழி.

கருத்துரை

முருகா! தவத்தைப் புரிந்து சிவத்தை அடையத் திருவருள் புரிவாயாக.


No comments:

Post a Comment

59. பலரில் அரியவர் ஒருவர்

  59. பலரில் அரியவர் ஒருவர் "பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!      பாடுவோர் நூற்றில் ஒருவர்!   பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி...