023. ஈகை - 09. இரத்தலின் இன்னாது





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வருமு ஒன்பதாம் திருக்குறளில், "பொருளின் குறையை நிரப்பவேண்டி, பிறருக்கு வழங்காமல் தாமே தனித்து உண்ணுவது, நிச்சயமாக, இல்லை என்று சென்று இரத்தலினும் துன்பம் தருவதாகும்" என்கின்றார் நாயனார்.

     பொருளின் குறையை நிரப்புவது என்பது, ஒரு தொகையைக் குறித்து வைத்து, அந்த அளவு பொருளை ஈட்டுவோம் என்று பொருளை ஈட்டுவதிலேயே குறியாக இருத்தல் மற்றும் யாருக்கும் உதவாது கஞ்சத்தனம் செய்தல்.

     இவறுதல் - கஞ்சத்தனம், உலோபம் செய்தல்.

திருக்குறளைக் காண்போம்...

இரத்தலின் இன்னாது மன்ற, நிரப்பிய
தாமே தமியர் உணல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நிரப்பிய தாமே தமியர் உணல் --- பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்,

     இரத்தலின் இன்னாது மன்ற --- ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.

         (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)

     இவறிக் கூட்டுதல் என்றார் பரிமேலழகர். உலோபத்தனம் செய்து பொருளைக் கூட்டுவோர் பற்றிக் காண்போம்....

புண்ணிய வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
     பொருளை ரட்சிக்க வேண்டும்
  புத்தியுடன் அது ஒன்று நூறாக வேசெய்து
     போதவும் வளர்க்க வேண்டும்;

உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ர ஆபரணம்
     உடலில் தரிக்க வேண்டும்;
  உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
     ஓங்கு புகழ் தேட வேண்டும்;

மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர் மோட்ச
     வழிதேட வேண்டும்; அன்றி,
  வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
     மார்க்கம் அறியாக் குருடராம்

அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
     அழகன்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!      --- அறப்பளீசுர சதகம்.

இதன் பொருள் ---

     அண்ணலே --- தலைவனே!,

     கங்கா குலத் தலைவன் மோழைதரும் அழகன் --- கங்கை மரபில் முதல்வனான மோழை ஈன்றெடுத்த அழகு மிக்கவனான,

     எமது அருமை மதவேள் --- எம் அரிய
மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- நாள்தோறும் உள்ளத்தில் கொண்டு வழிபடுகின்ற, - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     செல்வமது புண்ணிய வசத்தினால் வரவேண்டும் --- செல்வமானது ஒருவனுக்கு அவன் சென்ற நல்ல நெறியின் பயனாக வந்து சேர வேண்டும்.

     பொருளை ரட்சிக்க வேண்டும் --- அவ்வாறு சிறுச்சிறிதாக வந்த செல்வத்தைக் காப்பாற்தறி வைக்க வேண்டும்.

     புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து போதவும் வளர்க்க வேண்டும் --- அறிவோடு சிந்தித்து, அந்தப் பொருளை ஒன்று நூறாகுமாறு நன்றாகப் பெருக்கும் உபாயத்தைத் தேட வேண்டும்.

     உண்ண வேண்டும் --- உலோப குணம் இல்லாமல் வயிறு ஆர உண்ண வேண்டும்.

     பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில் தரிக்க வேண்டும் --- பிறகு அழகிய ஆடைகளையும், அணிகலன்களையும் உடலிலே தரித்துக் கொள்ள வேண்டும்.

     உற்ற பெரியோர், கவிஞர், தமர், ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் --- தம்மை அடைந்த பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்கும் கொடுத்து மிக்க புகழைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும் --- உலகிலே பல வகையான அறச் செயல்களையும் செய்தல் வேண்டும்.

     உயர் மோட்ச வழி தேட வேண்டும் --- மேலான வீடு பேற்றினை அடையும் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     அன்றி --- இவ்வாறு அல்லாமல்,

     வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் --- தேடிய செல்வத்தை வீணிலே மண்ணில் புதைத்து வைத்துவிட்டு (தானும் துய்த்து) பிறர்க்கு அளிக்காதவர்களே நெறி அறியாத குருடர்கள் ஆவர்.

          குறிப்பு --- கங்கை என்பது இங்கே தண்ணீரைக் குறிக்கும். வேளாளர்கள் தமது உழவுத் தொழிலுக்குத் தண்ணீரையே சார்ந்து இருப்பதனால் அவர்களை கங்கா குலத்தவர் என்றார்.


திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்
     தேடிப் புதைத்துவைப்பார்,
சீலைநல மாகவும் கட்டார்கள், நல்அமுது
     செய்து உணார், அறமும்செயார்,

புரவலர்செய் தண்டம் தனக்கும் வலு வாகப்
     புகுந் திருடருக்கும் ஈவார்,
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,
     புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,

விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்
     வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என
     மிகுசெட்டி சொன்னகதைபோல்,

வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
     மற்றொருவருக்கு ஈவரோ?
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.    ---  குமரேச சதகம்.

       இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடிப் புதைத்து வைப்பார் --- பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.

     சீலை நலமாகவும் கட்டார்கள் --- நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.

     நல் அமுது செய்து உணார் --- நல்ல உணவு சமைத்துச் சாப்பிடமாட்டார்.

     அறமும் செயார் --- அறவழியிலும் செலவிடார்.

     புரவலர் செய் தண்டம் தனக்கும் வலுவாகப் புகும் திருடருக்கும் ஈவார் --- அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார்.

     புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார் --- புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார்.

     புராணிகர்க்கு ஒன்றும் உதவார் --- புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.

     பிள்ளை விரகு அறிந்து சோறு கறி தினும் அளவில் --- குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்,

     வெகுபணம் செலவு ஆதலால் --- மிக்க பொருள் செலவழிவதனாலே,

     கிழவனாம் பிள்ளையே விளையாடு பிள்ளை என ---  கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று,

     மிகு செட்டி சொன்ன கதைபோல் --- மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல,

     வரவு பார்க்கின்றதே அல்லாது உலோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ --- உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?


பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்
உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.        ---  நல்வழி.

இதன் பொழிப்புரை ---

     பரந்துள்ள இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்தவர், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர் எமக்கு நேயம் உடையவர் என்று யாரையும் விரும்பாத உலோபிகள், பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணாக்குபவர்க்கு எல்லாவற்றையும் கொடுப்பர். முன்னே கூறப்பட்டவர் தன்னிடத்தில் வந்து அடைக்கலமாகப் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்.


உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்; ---  கம்பராமாயணம், பாலகாண்டம்.

இதன் பதவுரை ---

     உளம் பரும் பிணிப்பு அறா --- உள்ளத்தில் பருத்த பிணிப்பு
நீங்காத; உலோபம் ஒன்றுமே --- உலோபகுணம்  ஒன்று  மட்டுமே; அளப்ப அரும் குணங்களை --- அளப்பதற்கரிய பல  நற்குணங்களை எல்லாம்;  அழிக்கும் ஆறுபோல் ---- அழிக்கின்ற தன்மையைப் போல; கிளப்ப அரும் கொடுமைய அரக்கி ---   சொல்ல முடியாத கொடுமைகளை உடைய இந்த அரக்கி;  கேடு  இலா வளம் பரும் மருதவைப்பு --- கேடே இல்லாத வளம் நிறைந்த இந்த மருத நிலத்தை எல்லாம்; அழித்து மாற்றினாள் ---  கொன்று. தின்று பாலை நிலமாக மாற்றிவிட்டாள்.

     உள்ளத்தின் பெரிய பிணிப்பு நீங்காத. உலோபம்: ஈகையற்ற  தன்மை. குணம், குலம், கல்வி, கேள்வி, அறிவு, ஆற்றல்ஆகிய பல நல்ல குணங்களை உடையவராயினும், உலோபம் என்ற ஒன்று  இருந்தால், அந்த நல்ல குணங்களை அழித்துவிடும். அதுபோல வளம் மிக்க மருதநிலத்தை அழித்துப் பாலை நிலமாக்கி விட்டாள். அத்தகைய கொடிய அரக்கி இவள் என்றான்.  விசுவாமித்திர முனிவன்.

கட்டுரையின். தம கைத்து உள போழ்தே
இட்டு. இசைகொண்டு. அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகைஆவது உலோபம்;
விட்டிடல்  என்று விலக்கினர் தாமே. --- கம்பராமாயணம், பாலகாண்டம்.

இதன் பதவுரை ---

     தம கைத்து உள போழ்தே --- தமது செல்வம் இருக்கும்  காலத்திலே; இட்டு இசை கொண்டு --- இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று: அறன் எய்த முயன்றோர் --- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்; உள் தெறு வெம்பகையாவது  உலோபம் --- மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்;  விட்டிடல் என்று --- (அதனை) விட்டுவிட வேண்டும் என்று; தாம் கட்டுரையின் விலக்கினர் --- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.

     செல்வம் இருக்கும் போதே ஏற்பவர்களுக்கு ஈந்து புகழ்   பெற வாழ வேண்டும். உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம். அதனை விட்டொழிக்க வேண்டும் என்பதே நீதி நூல்களின் துணிவு என்பது கருத்து.


உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான்; உள்ளூர்
இருந்து உயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உள் கூர் பசியால் உழை நசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் --- உடம்பில் மிகுகின்ற பசித் துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடி வந்தவர்கட்குத் தான் உள்ளூரில் இருந்தும் ஒன்று உதவ இயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று --- அவ்வாறு உள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை வீணே கழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப் பிறர் இல்லத்தில் விருந்தினனாய் இருந்து உண்ணுதலே நலமாகும்.

         பிறர்க்கு ஒன்று உதவ இயலாத வறியோனது உயிர்வாழ்க்கை வீண்.

     செல்வம் படைத்த ஒருவன் பிறர்க்கு உதவாது பாவி ஆவதை வி, அவன் வறுமையாளன் ஆகி, பிறரிடம் சென்று பிச்சை ஏற்றால், அவனுக்குக் கொடுப்பவனுக்குப் புகழைச் சேர்ப்பவன் ஆகின்றான். எனவே, உலோபியானவன், வறுமையாளன் ஆகி, இரந்து வாழ்வதே மேன்மை தருவது.


கரவாத திண்ணன்பின் கண் அன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; -இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     கரவாத திண் அன்பின்கண் அன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை --- தமக்கு ஒன்று ஒளியாத உறுதியான மெய்யன்பினை உடைய கண்போன்ற அன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாது வாழ்வது வாழ்க்கையாகும்; இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகும் --- இரத்தலாகிய செயலை நினைக்கும் பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது; கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு என் கொலோ ---அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங் காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையா நிற்கும்!


தான்ஓர் இன்புறல் தனிமையில் துவ்வாது.  ---  முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     ஓர் தான் --- ஒருவன் தான் மாத்திரமே, இன்புறல் --- இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது --- வறுமையின் நீங்கி ஒழியாது.

         பொருள் உடையவனாய் எவர்க்கும் உதவாமல் தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன், பொருள் இல்லாமையால் தனித்து உண்ணும் தரித்திரனுக்குச் சமானமாவதன்றி வேறாகான்.


வாழ்நாள், உடம்பு வலி,வனப்பு, செல்கதியும்,
தூமாண் நினைவு, ஒழுக்கம், காட்சியும்--தாம் மாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
ஒன்றுங் கொடை ஒப்பது இல். ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     மாண்ட உண்டி கொடுத்தான் --- மாட்சிமைப்பட்ட உணவினைக் கொடுத்தவன், வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதி தூமாண் நினைவு ஒழுக்கம் காட்சி கொடுத்தலால் ---ஆயுள் உடல்வலிமை அழகு மறுமைப்பயன் தூயசிறந்த எண்ணம் ஒழுக்கம் நற்காட்சி முதலியவற்றையும் அவ் வுணவு வாயிலாகக் கொடுப்பதால், ஊண் கொடையொடு ஒப்பது கொடை ஒன்றும் இல் --- பசித்தவர்கட்கு உணவு கொடுத்தலோடு ஒத்த கொடை வேறொன்றும் இல்லை.


பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான், காவாதான்,
அஞ்சாது உடைபடையுள் போந்துஎறிவான், - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான், குழவி பலிகொடுப்பான்,
எண்பதின் மேலும்வாழ் வான்.       ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     பஞ்சப் பொழுதகத்தே பாத்து உண்பான் --- சிறுவிலை(பஞ்ச)க் காலத்தில், (தன்னிடமிருக்கும் உணவுப் பொருள்களை பலர்க்கும்) பகிர்ந்து, (பின்பு) தாம் உண்பவனும், காவாதான் --- தன்னிடத்துள்ள பொருளை வீணே காவாது பிறருக்கே உதவுவோன், உடை படையுள் --- உடைந்த தன் படையினுள்ளே, அஞ்சாது போந்து --- அஞ்சாமற் புகுந்து, எறிவான் --- (பகைவர் படையை) எறிந்து தன் படையை உய்யக் கொள்பவன், எஞ்சாதே உண்பது முன் ஈவான் --- ஒருநாளும் ஒழியாமல் தான் உண்பதை, முன்னே பிறருக்குக் கொடுத்துப் பின் உண்பவன், குழவி பலி கொடுப்பான் --- பசித்த குழவிகளுக்குச் சோறு அளிப்பவன், (ஆகிய இவ் ஐவரும்) எண்பதின் மேலும் --- எண்பது வயதுக்கு மேலும், வாழ்வான் --- சுகமாக உயிர் வாழ்ந்திருப்பான்.

     பகுத்து உண்டல் எல்லாக் காலத்தும் பேரறமே. ஆயினும், சிறிவிலைக் காலத்தில் அது செய்தல் மிகச் சிறந்து காட்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...