023. ஈகை - 08. ஈத்து உவக்கும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "தம்முடைய பொருள்களைப் பிறருக்குக் கொடாது வைத்திருந்து, பின்னர் இழந்து விடும் கொடியவர்கள், இல்லாதவர்க்கு அவர் வேண்டும் பொருளைக் கொடுத்து, அவர் மகிழக் காணுதலால் உண்டாகும் இன்பத்தை அறியார் போலும்" என்கின்றார் நாயனார்.

     தம்முடைய பொருளைப் பிறருக்குக் கொடுக்காது சேர்த்து வைத்து, பின்னர் திருடர் முதலியோர் கொள்ளுதலால் இழந்து நிற்கின்ற கொடியவர்கள், அருள் உள்ளம் கொண்டவர்கள் ஏழைகளுக்கு அவர் வேண்டியதைக் கொடுத்து, அந்த ஏழைகள் மகிழ்வதால் அவர் அடையும் இன்பத்தை அறிந்தால், அந்தக் கொடியவர்களும் அவ்வின்பத்தை அடையவேண்டி, பொருளைச் சேர்த்து வைத்து மகிழார்.

திருக்குறளைக் காண்போம்...

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல், தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கண் அவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் --- தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்,

     ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் --- வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!

         (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றைக் காட்டி, குமார பாரதி என்பார் தாம் இயற்றி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பஞ்சவடிக்கு என்றுசிவ பத்தர்க்கு உவப்ப, மண
அம் சுதை மென் கூந்தல் அரிந்து அன்று ஈந்தார் - கஞ்சாறர்,
ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்கண் அவர்.  

         மானக்கஞ்சாற நாயனார் பெருமை மிக்க சிவபத்தர். அவரது தவப்புதல்வி மணக்கோலம் கொண்டிருந்த சமயத்தில் சிவபெருமான் மாவிரதி வடிவம்கொண்டு கஞ்சாறர்பால் அடைந்தார். அவரது புதல்வியின் கூந்தலைக் கண்ணுற்றார்.  இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆம் என்றார். அவர் பெருமகிழ்வுடன் அவளது கூந்தலை அரிந்து நீட்டிப் பெரு வள்ளன்மையை உடையரானார். அவருடைய அடியார் பத்தியின் முதிர்ச்சியைக் கண்ட சிவபிரான் மறைந்தருளினார். அப்பொழுதே மணமகளுக்குக் கூந்தல் முன்புபோல வளர்ந்து அழகு பெற்றது. கஞ்சாறர் தமது அருமைத் திருமகளைக் கலிக்காமருக்கு மணம் செய்வித்து மகிழ்ந்தார்.  மிக்க மேலான இன்பத்தை அடைந்தார்.

         தம்முடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்து போகும் அருளில்லாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு தாம் மகிழும் அருளுடையார் அடையும் இன்பத்தைக் கண்டு அறியார் கொல்லோ. அறிந்தாராயின் அவரும் அவ் இன்பத்தை அடைவாரன்றோ.  அன்றியும் வைத்து இழவாரே, என்று திருவள்ளுவர் கூறிய நயம் உய்த்து உணர்தற்கு உரியதாம் என்க.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்,
துன்னுஅருங் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான் பொருள்காத்து இருப்பானேல், அ ஆ
இழந்தான்என்று எண்ணப் படும்.    ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     உண்ணான் --- இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் --- மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் --- பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்து கொள்ளாமலும், துன் அரும் கேளிர் துயர் களையான் --- நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் --- இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் --- ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக் கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று --- ஐயோ! அவன் அப்பொருளை இழந்தவனே என்று, எண்ணப்படும் --- கருதப்படுவான்.

     செல்வம் ஒருவன் இறக்குமளவும் அழியாமலிருந்தாலும், அதனால் கொண்ட பயன் யாதொன்றும் இல்லாமையின், அவன் உடையவனாயினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.


உடாஅதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார், - கொடாஅது
வைத்தீட்டி னார் இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.   --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     வான் தோய் மலைநாட --- வானத்தைப் பொருந்துகின்ற மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் --- நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் --- உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் --- தம் உடம்பை வருத்தியும்; கெடாத நல் அறமும் செய்யார் --- அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது --- வறியவர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் --- பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் --- அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ --- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி --- அதற்குச் சான்று.

மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார், பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி னாடு மலைநாட! அஃதன்றோ
பள்ளியுள் ஐயம் புகல்.      ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     குரங்கு வள்ளியில் ஊசல் ஆடும் மலைநாட --- குரங்குகள் வள்ளிக்கொடியின்கண் இருந்து ஊசலாடுகின்ற மலைநாட்டை உடையவனே!, மரம்போல் வலிய மனத்தாரை --- மரத்தைப் போல வலிய கல் நெஞ்சு உடையாரை. முன்நின்று இரந்தார் பெறுவது ஒன்று இல்லை --- அவர்முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை; அஃது --- அவர் முன்பு நின்று இரத்தல், பள்ளியுள் ஐயம் புகல் --- சமணப் பள்ளியுள் இரக்கப் புகுதலை யொக்கும்.

         சமணப் பள்ளியுள் வாழ்வார் பிச்சை எடுத்து உண்டு, தமக்கென்று ஒரு பொருளும் இலராய்ப் பற்றற்று இருப்பராதலின், அவரிடையே ஐயம் புகுவார்க்கு ஒன்றும் பெறமுடியாது. அதுபோல, மனம் இல்லார் இடத்தில் பொருள் பெற முடியாது. பொருள் இல்லாதவராய் இருந்தாலும், மனம் உடையவர்கள் இடத்தில் சென்று இரந்தால் பயன் உண்டு. பொருள் உடையர் ஆயினும், மனம் இல்லாரிடத்துச் சென்று இரப்பதால் பயன்பெறுதல் இல்லை.


விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார், வம்பர்க்கு உதவல்,
இரும்பணை வில் வென்ற புருவத்தாய்! ஆற்றக்
கரும்பனை அன்னது உடைத்து. --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     இரும் பணை வில் வென்ற புருவத்தாய் --- பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினை உடையாய்!  விரும்பி அடைந்தார்க்கும் --- உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுகம் இருப்பதால், தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும், சுற்றத்தவர்க்கும் --- தம் உறவினர்க்கும், வருந்தும் பசி களையார் --- அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி, வம்பர்க்கு உதவல் --- புதிய அயலார்க்கு உதவி செய்தல், ஆற்ற கரும்பனை அன்னது உடைத்து --- மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனை போலும் தன்மையை உடையது.

நன்மையராம் நாரணனும் நான்முகனும் காண்பரிய
தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.   ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்,
ஓட்டித் துரந்திட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.     ---  திருமந்திரம்.
        
இதன் பொழிப்புரை ---

     ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங்களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத் தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.


மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன்
     மகிழ்ந்து,  'நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!' என்று உரைப்ப,
     சூரன் மாமதலையும் சொல்வான்:
'அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டு
     ஆயினும் ஏழ் எழு பிறப்பும்,
"இல்லை" என்று இரப்போர்க்கு "இல்லை" என்று உரையா
     இதயம் நீ அளித்தருள்!' என்றான்.    ---  வில்லிபாரதம்.

இதன் பதவுரை ---

     முனிவன் மகிழ்ந்து --- பிராமணன் வேடத்தில் வந்த கண்ணன் உள்ளத்தில் மகிழ்ந்து மல்லல் அம் தொடையல் --- வளப்பத்தையுடைய அழகிய மாலையைச் சூடிய, நிருபனை --- கர்ணனை நோக்கி, 'நீ வேண்டிய வரங்கள் --- நீ விரும்பின வரங்களை, சொல்லுக --- சொல்லுவாயாக; உனக்குத் தருதும் ---உனக்குக் கொடுப்போம்,' என்று உரைப்ப --- என்று சொல்ல, சூரன் மா மதலைஉம் --- சிறந்த சூரியபுத்திரனான கர்ணனும் சொல்வான் --- விடை சொல்பவனாய்,-'அல்லல் --- பிறவித் துன்பங்களுக்குக் காரணமான, வெம் வினையால் --- கொடிய கருமத்தினால், இன்னம் --- இன்னமும், உற்பவம் --- பிறப்பு, உண்டாயின் உம் --- உண்டானாலும் ஏழ் ஏழு பிறப்பும் --- எழுமையையுடைய எழுவகைச் சன்மங்களிலும், இல்லை என்று இரப்போர்க்கு --- (வறுமையால்) ஒரு பொருளும் இல்லை என்று சொல்லி யாசிப்பவர்களுக்கு, இல்லை என்று உரையா --- (வைத்துக் கொண்டே நீ கேட்கும் பொருள் இப்பொழுது என்னிடம்) இல்லை என்று சொல்லி உலோபம் செய்யாத, இதயம் --- நல்ல மனத்தை, நீ அளித்தருள் என்றான் --- நீ (எனக்குக்) கொடுத்தருள்வாயாக என்று சொன்னான்.


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. --- புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

    தெளிந்த கடல் நீரால் சூழப்பட்ட இந்த  உலகம் முழுதும், பிற வேந்தர்க்குப் பொதுவானது அல்ல, எனக்கே உரியது என்று ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒரு தன்மையை உடையவர்க்கும், நள்ளிரவில் மட்டும் அல்ல, பகல் பொழுதிலும் உறங்காது விரைந்து செல்லும் காட்டு விலங்குகளை வேட்டை ஆடிக் கொன்று திரியும் கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும், தேவைப்படுவது, உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் கூட எல்லாருக்கும் பொதுவானவை தான். ஆகவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், எல்லோருக்கும் கொடுத்து மகிழவே என்பதை எல்லோரும் உணர்வீர்களாக. இதை உணராமல், ஈட்டிய செல்வம் யாவும் தமக்கே உரியது, தாம் ஒருவரே அதைத் துய்த்து மகிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவற விட்டு, இழந்து, இறந்து போய் இருக்கின்றார்கள்.


கழிந்தது பொழிந்து என வான்கண் மாறினும்,
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை;
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல்
 இன்னாது அம்ம, இயல் தேர் அண்ணல்!
 இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே,
அனையையும் அல்லை நீயே, ஒன்னார்
ஆரெயில் அவர் கட்டாகவும், நுமது எனப்
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தை நீ இரவலர் புரவே. ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     முன்புதான் மழையைப் பொழிந்து விட்டோமே என்று இப்போது வானம் மழையைப் பொழியாது இருந்து விட்டாலும், சென்ற பட்டத்தில்தான் விளைவைத் தந்தோமே என்று, இந்த முறை நிலமானது விளைச்சலைத் தராது இருந்தாலும், உயிர்களுக்கு வாழ்வு இருக்காது. அதே போலவே, எங்களுக்கு இன்னும் பரிசில் தரவேண்டும் என்று நாங்கள் கேட்டு வந்தாலும், உங்களுக்குத் தான் முன்பு பரிசில் தந்தேனே என்று கூறி, இப்போது பரிசில் தர மறுப்பது முறையல்ல. எனவே, அழகிய தேரினை உடைய அண்ணலே! கேட்பாயாக. இல்லை என்று வறுமையால் பொருள் தேடி வருபவர்களிலும், பரிசில் தராதவர், பரிசில் பெற்றவர் போற்றும் வாழ்த்தையும் புகழையும் இழப்பவர் ஆவர். நீ அப்படிப்பட்டவன் அல்லவே. பகைவர் காவல் அரணைக் கைப்பற்றுவதைக் கடமையாகக் கொள்ளும் முன்பாக, பாடிவரும் பாவலர்க்கு உதவுவதைக் கடமையாக எண்ணும் காவலனே! வள்ளலே! இல்லை என்று வருவோர்க்கு ஈந்து அவரையும் காப்பாயாக.

கருங்குளவி சூரைத் தூற்று ஈச்சங்கனி போல்
வருந்தினர்க்கு ஒன்று ஈயாதான் வாழ்க்கை - அரும்பகலே
இச்சித்து இருந்த பொருள் தாயத்தார் கொள்வரே
எற்றோ மற்று எற்றோ மற்று எற்று.   --- ஔவையார் தனிப்பாடல்.

இதன் பொழிப்புரை ---

     வண்டுகளால் சூழப்பட்ட எட்டிப் புதரில் இருக்கும் ஈச்சம் பழம் போன்று வறுமை அடைந்தவர்களுக்கு ஒரு பொருளையும் தராத உலோபியினது வாழ்வில், அவன் சூர்த்து வைத்து இருக்கும் செல்வத்தைப் பட்டப்பகலில் அவனுடைய சுற்றத்தார் கவர்ந்து கொள்வார்கள் என்று, பேயே, அவனை அடிப்பாயாக.

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர், இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.   ---  நல்வழி.

இதன் பதவுரை ---

     பேர் உலகில் --- பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் --- (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் --- (எமக்குப்) பிறந்தவர், பெரு நாட்டார் --- (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் --- (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் --- (எம்மை). நேசித்தவர், என வேண்டார் --- என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் --- பிறர், இரணம் கொடுத்தால் --- தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் --- (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் --- (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார்.

         உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு, யாரே அநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.         ---  நல்வழி.

இதன் பதவுரை ---

     பணத்தைப் பாடுபட்டுத் தேடி --- பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து --- (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே --- நன்மை எல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் --- (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு --- உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு --- உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் --- பாவிகளே, அந்தப் பணம் --- அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் --- இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்?

         அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்குஆம், பேய்க்குஆம், பரத்தையர்க்குஆம் --- வம்புக்குஆம்,
கொள்ளைக்குஆம், கள்ளுக்குஆம், கோவுக்குஆம்சாவுக்குஆம்,
கள்ளர்க்குஆம், தீக்கு ஆகும் காண்.   ---  தனிப்பாடல்.

இதன் பொழிப்புரை ---

     சிவபெருமானுடைய அடியவர்க்குப் பயன்படாத செல்வங்கள் சூனியத்துச் செலவிடப்படும். பேய் வழிபாட்டுக்குப் பயன்படும். பொதுமாதர்க்குக் கொடுக்கப்படும். வீண்செயலுக்கு ஆகும். கள்வர் கொள்ளை இடுவதற்கு உரியது ஆகும். கள் உண்ண உதவும். வேந்தனுக்காக வசூலிக்கப்படும். இறந்த பின்னர் செய்யும் செயல்களுக்கு ஆகும். தீயினுக்கு இரையாகி அழிக்கப்படும்.

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை ஆடி நயம் புரியும்,
தாயார் வயிற்றின் நரராய்ப் பிறந்து, பின் சம்பன்னராய்
காயா மரமும், வறளாம் குளமும், கல் ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே. ---  பட்டினத்தார்.

இதன் பொழிப்புரை ---

     திருக்கச்சியில் எழுந்தருளி உள்ள ஏகம்பநாதரே! நாயாய்ப் பிறந்தாலும், தன்ன வளர்ப்பவனுக்கு நல்ல வேட்டையினை ஆடிப் பயன் செய்யும். தாய் வயிற்றில் மனிதராய்ப் பிறந்து, பின் செல்வம் உள்ளவர்களாய் வளர்ந்து, காய்க்காத மரத்தையும், நீர் வற்றிப் போன குளத்தையும், கல்லால் ஆன பசுவையும் போல, ஒருவர்க்கும் ஒன்றினையும் கொடுத்து உதவாத மனிதரை இந்தப் பூமியில் என்ன பயன் கருதிப் படைத்தாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...