023. ஈகை - 07. பாத்தூண் மரீஇயவனை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "எந்நாளும் தன்னிடம் உள்ளதைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்து உண்ணுதலைப் பழகியவனை, பசி என்னும் கொடிய நோயானது தீண்டாது" என்கின்றார் நாயனார்.

     பசியானது இவ்வுடம்பில் இருந்து, ஞானத்தையும் அதனை அடைவதற்குச் சாதனமான அருளுடைமை, புலால் மறுத்தல் முதலிய ஒழுக்கங்களையும் அழித்து, இனி வரும் பிறவிகளுக்குப் பாவத்தைத் தந்து, துன்பத்தை உண்டாக்குவதால்,  தீய பிணி எனப்பட்டது.

     பிணிப்பதால் பிணி எனப்பட்டது. பிறர் பசியைத் தணிப்பவன் பசியால் துன்பப்படான் என்றதனால், அவன் தனக்குத் தானே மருத்துவன் ஆகின்றான். "தமக்கு மருத்தவர் தாம்" என்னும் பழமொழி நானூற்றுப் பாடல் காண்க.

திருக்குறளைக் காண்போம்...

பாத்துஊண் மரீஇயவனை, பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பாத்து ஊண் மரீஇயவனை --- எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை,

     பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது --- பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.

         (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்து உண்டல், அட்டு உண்டல், ---  அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.        --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் --- சமைத்து உண்ணுதலென்பது, தமக்குள்ள பொருள் அளவினால் தம்மிடம் உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தாம் சமைத்ததைப் பகுத்து உதவிப் பின் தாம் உண்ணுதலாகும்;  அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு --- அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்கு  மேலுலகக் கதவு மூடப்படும்.

         இம்மையில் பிறர்க்கொன்று ஈயாதவர்க்கு மறுமையில் துறக்க உலக இன்பம் இல்லை.


நீர்அறம் நன்று, நிழல்நன்று, தன்இல்லுள்
பார்அறம் நன்று,பாத்து உண்பானேல் - பேரறம்
நன்று, தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால உடன்.    ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     நீர் அறம் நன்று --- நீர் அறஞ்செய்தல் நன்மையாம், நிழல் நன்று --- நிழல் அறஞ் செய்தல் நன்மையாம், தன் இல்லுள் --- தன் வீட்டில், பார் அறம் நன்று --- பிறர் உறைய இடங் கொடுத்தலாகிய அறம் நன்மையாம், பாத்து உண்பானேல் பேர் அறம் --- பிறவுயிர்கட்குப் பகிர்ந்து உண்பானாயின், (அது) பெரிய அறமாம், தளி சாலை நாட்டல் நன்று --- கோவிலொடு மரங்கள் கவிந்த சாலையையும் அழியாது நிலைபெறச் செய்தல் நன்மையாம், (இவ்வைந்தனையுஞ் செய்தவர்க்கு) பெரும்போகம் உடன் சால ஒன்றும் --- பேரின்பம் உடனே மிகுதியாக உண்டாகும்.


பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டாங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும், - வல்லிதின்
தாளின் ஒருபொருள் ஆக்கலும், இம்மூன்றுங்
கேள்வியுள் எல்லாந் தலை.    ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     பல்லவையுள் நல்லவை கற்றலும் --- பல நூல்களிலும் நல்ல நூற் பொருள்களைக் கற்று உணர்தலும்; பாத்து உண்டு ஆங்கு இல்லறம் முட்டாது இயற்றலும் --- (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, (தானும்) உண்டு, அந்நிலையில் இல்லாளோடு கூடிச் செய்யும் அறமானது  குறைவுபடாமல் செய்தலும்; வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும் --- ஊக்கத்தொடு, முயற்சியால் செய்தற்கரிய செய்கையைச் செய்து முடித்தலும்; இ மூன்றும் --- இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கல்விகள் எல்லாவற்றிலும், தலை --- சிறந்த கல்வியாம்.

         கற்கத் தக்கவற்றைக் கற்றலும், இல்லறத்தை முட்டின்றிச் செய்தலும், ஊக்கத்தோடு முயற்சியால் அருஞ்செயல் ஆற்றலும் தலைசிறந்தன.

பட்டார்ப் படுத்து, படாதார்க்கு வாள்செறிந்து,
விட்டு ஒழிவது அல்லால் அவ் வெங்கூற்றம்--ஒட்டிக்
கலாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல்
புலால் குடிலால் ஆய பயன்.    ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பட்டார்ப் படுத்து --- முற்பிறப்பில் அறம் செய்யாது குறைந்த வாழ் நாளை இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், படாதார்க்கு வாட்செறிந்து --- முன்னை அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு அவர்க்கு முன் தன் வாளை உறையுள் புதைத்து அவரைக் கொல்லாது, விட்டு --- விடுதலை செய்து, ஒழிவதல்லால் --- செல்வதல்லாமல், அவ் வெங்கூற்றம் --- கொடிய யமன், ஒட்டிக் கலாய்க் கொடுமை செய்யாது ---தன் மனம் சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு துன்பம் செய்யான்; ஆதலால், கண்டது பாத்துண்டல் --- ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலால் குடிலாலாய பயன் --- புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.


இசைவ கொடுப்பதூஉம் இல் என்பதூஉம்
வசை அன்று வையத்து இயற்கை; அஃதன்றிப்
பசைகொண்டவன் நிற்கப் பாத்து உண்ணான் ஆயின்
நசைகொன்றான் செல் உலகம் இல்.  --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     இசைவ கொடுப்பதும் --- தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும், இல் என்பதும் --- கூடாதவற்றை இல்லை என்று கூறுதலும், வசை அன்று --- ஒருவனுக்குக் குற்றமாகாது, வையத்து இயற்கை --- அவை பெரியோர்களது செயல்களாம், அஃது அன்றி --- அவ்வியற்கையின்றி, பசை கொண்டவன் நிற்க --- கொடுப்பான் என்று மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க, பாத்து உண்ணான் ஆயின் --- தன்னிடத்து உள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால், நசை கொன்றான் --- நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால், செல்உலகம் இல் --- செல்லுகின்ற மறுமை உலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை.

         தன்னிடத்து உள்ளதைக் கொடாதவனுக்கு மறுமை உலகத்தின்கண் இன்பம் இல்லை.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...