023. ஈகை - 06. அற்றார் அழிபசி





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "வறியவரின் மிகுந்த பசியைப் போக்குதலே, செல்வத்தை மிகப் பெற்ற ஒருவன், அச் செல்வத்தைச் சேர்த்துத் தனக்கு மறுமையில் உதவ வைக்கும் இடம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

     எல்லா நன்மைகளும் கெட வருதலால், "அழிபசி" என்றார்.

     பொருளைப் பெற்றவன், அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம், வறியவர் பசியைத் தீர்க்கும் அறம் என்றார்.

திருக்குறளைக் காண்போம்...

அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அற்றார் அழிபசி தீர்த்தல் --- வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க,

     பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது --- பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.

         (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)

     பொருள் இல்லாதவர்க்கு உண்டாகும் பசி, அழிபசி ஆகும். அதன் கொடுமையைப் பின்வரும் பாடல்களால் காண்க....

குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பசிப்பிணி என்னும் பாவி......         ---   மணிமேகலை.

இதன் பதவுரை ---

     குடிப்பிறப்பு அழிக்கும் --- தன்னால் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம் கொல்லும் --- சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் --- பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும் --- நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும் --- மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் --- பூண் விளங்குகின்ற கொங்கைகளை உடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி --- பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுஉடைமை
தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.             ---  ஔவையார்.

இதன் பதவுரை ---

     பசி வந்திட --- பசி நோய் வந்தால், மானம் --- மானமும், குலம் --- குடிப்பிறப்பும், கல்வி --- கல்வியும், வண்மை --- ஈகையும், அறிவுடைமை --- அறிவுடைமையும், தானம் --- தானமும், தவம் --- தவமும், உயர்ச்சி --- உயர்வும்,
தாளாண்மை --- தொழில் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் --- தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் --- இப் பத்தும் விட்டோடிப்போம்.

         மானம் முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை.

     வைப்பு உழி --- வைக்கும் இடம் எது என்னும் கருத்துக்கு ஏற்ற பாடல்...

வைத்ததனை வைப்பு என்று உணரற்க, தாம் அதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறம் செய்யின், அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பு என்பது.        ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     வைத்ததனை வைப்பு என்று உணரற்க --- தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க, தாம் அதனை --- தாம் அப்பொருளை, துய்த்து வழங்கி --- நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இரு பாலும் அத்தக --- இருமைக்கும் அழகுண்டாகுமாறு, தக்குழி நோக்கி அறம் செய்யின் --- செய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின், எய்ப்பினில் வைப்பு என்பது அஃது அன்றோ --- தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ?


சிறத்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறஞ் செய்து அருள் உடையர் ஆதல், - பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
சுமையொடு மேல்வைப்பு ஆமாறு.   --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப --- மலையில் மூங்கிலுடனே வேய்கள் நெருங்கி இணங்கி நிற்கும் வெற்பனே!, சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் --- சிறந்தனவாகிய இன்பங்களை அடைந்து இன்புற்றொழுகும் பொருளுடையவர்கள், அறம் செய்து அருளுடையராதல் --- அறங்களைச் செய்து யாவர் மாட்டும் அருள் உடையவராகி ஒழுகுதலாகிய, அதுவே --- அச்செயலே, சுமையொடு மேல்வைப்பு ஆமாறு --- ஒருவன் பொற்சுமையொடு அதன் மேலே மணிச் சுமையையும் வைத்துச் சுமந்து செல்லுதலை ஒக்கும்.

         செல்வம் உடையார் அறமும் அருளும் உடையவராகுக.

அருந்தவே கூழும், பூண
    ஆடையும், வீடும் இன்றி
வருந்துவோர் எண்ணிலார், நம்
    மருங்கு உளார் என அறிந்தும்
விருந்து இடாய், மணி மாடத்து
    மேவி, நீ ஒருவன் வாழப்
பொருந்தினாய், மனமே! மக்கட்
    போலி நீ விலங்கு ஆனாயே.    --- நீதிநூல்
        

இதன் பொழிப்புரை ---

     உண்பதற்குக் கூழும் உடுப்பதற்கு உடையும் உறைவதற்குக் குடிலும் இல்லாமல் வருந்துகின்ற பாட்டாளி மக்கள் அளவில்லாதவர் நம் அருகில் இருக்கின்றனர். அவர்கள் நிலையினை உணர்ந்தும் அவர்கட்கு வேண்டும் உதவி செய்கின்றாயில்லை. அழகிய மாளிகையின்கண் பொருந்தி நீ ஒருவனாக வாழ மனம் இணங்கினாய். நீ மக்கட்பதரும் இரக்கமற்ற கொடு விலங்கும் ஆவாய்.
        
        
ஏவல் செய்வோர்க்குக் கூலி
    இடைத் துகில் உணவாம் யாமோர்
காவலன் எனினும் சோறு
    கலை அன்றி ஒன்றுங் காணோம்,
ஆவலாய்ப் பொருளை ஈட்டி
    அயலவர்க்காச் சுமந்தோம்,
ஈவதை மேற்கொண் டேமேல்
    இணையில் வீடு அடைவோம் நெஞ்சே.   --- நீதிநூல்.     

இதன் பொழிப்புரை ---

     இட்ட பணியை இயற்றும் வேலையாட்களுக்குக் கிடைக்கும் கூலிப் பயன் இடுப்பில் கட்ட உடையும், வயிற்றுக்கு உணவுமேயாம். உலகமெல்லாம் ஆளும் மன்னர் மன்னனே எனினும் உண்ணச்சோறும் உடுக்க உடையுமின்றி மிகுதியாக அடைவது ஒன்றும் இன்று. அளவில்லாத ஆசையொடும் பணத்தைத் தேடிப் பிறர் பொருட்டுச் சுமக்கின்றோம். வீண்சுமை சுமவாது, அப்பணத்தால் வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கும் ஈகையை இடையறாது செய்து வருவோமானால் இசைபட வாழ்ந்து ஊதியமாம் பேரின்பப் பெருவாழ்வையும் பெறுவோம்.

        
சாந்தம் ஆர் வறியர் போலத்
     தற்பரன் வருவான் தா என்று,
ஏந்து கை வீடு கொள் என்று
     ஏந்து கையாம் அக் கையில்
ஈந்தபொன் விலைபோல் வீட்டுக்கு
     இட்ட பொன்னாம் அன்னாரைக்
காய்ந்திலை என்போர் வேண்டோம்
     கதி என்பார் போலும் மாதோ.  ---  நீதிநூல்.

 இதன் பொழிப்புரை ---

     பொறுமை மிக்க ஏழை போன்று முழுமுதற் கடவுள், கோலங்கொண்டு எழுந்தருள்வன். ஒன்றுவேண்டித் தருக என்று கூறிக் கை ஏந்துவன். அக் கை நமக்கு வேண்டிய பேரின்ப வீட்டைப் பெற்றுக்கொள்க, என்று ஏந்திய கை ஆகும். அக் கையில் விருப்புடன் கொடுத்த பொருள், அவ்வீட்டுக்கு நல்கிய விலைப்பொருளாகும். அன்னவர்களை வெறுத்துச் சினந்து இல்லையென்று கூறுவோர், வீடு வேண்டாமென்று மனமாரச் சொல்லும் வீணரேயாவர்.
        
வலிஅழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால்
நலிபுஅழிந்தார், நாட்டுஅறைபோய் நைந்தார்-மெலிவுஒழிய
இன்னவர் ஆம்என்னாராய் ஈந்த ஒருதுற்று
மன்னவராச் செய்யும் மதித்து.  --- சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     வலி அழிந்தார் --- வலியழிந்தவர், மூத்தார் --- முதியர், வடக்கு இருந்தார் --- வடக்கு நோக்கியிருந்து நோற்பவர், நோயால் நலிபு அழிந்தார் --- பிணியினால் நலிந்தழிந்தவர், நாட்டு அறைபோய் நைந்தார் --- தமது நாடுவிட்டுப் போய்த் தளர்ந்தவர், ( என்று சொல்லப்படுபிற இவ்வைவருடைய) மெலிவு ஒழிய --- தளர்ச்சி நீங்கும்படி, இன்னவர் ஆம் என்னார் ஆய் --- இன்னார் ஆவார் என்று ஆராயாமல், ஈந்த --- கொடுத்த, ஒரு துற்று --- ஒரு கவள உணவு, (கொடுத்தவரை அடுத்த பிறவியில்) மதித்து --- கணித்து, மன்னவர் ஆ செய்யும் --- அரசராகச் செய்யும்; (எ-று.)

No comments:

Post a Comment

61. புத்தாடை உடுக்கும் நாள்

  61.  புத்தாடை உடுக்கும் நாள் ----- "கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்      கட்டலாம் புதிய சீலை;   கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில...