023. ஈகை - 05. ஆற்றுவார் ஆற்றல்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தவத்தால் வல்லமை உடையவருக்கு வல்லமை ஆவது, அவர் தம்மை அடைந்த பசியைப் பொறுத்துக் கொள்ளுதல். அந்த வல்லமையும், அந்தப் பொறுத்தற்கரிய பசியை, தமது ஈகைப் பண்பினால் மாற்றுகின்றவரது வல்லமைக்குப் பிற்பட்டதே ஆகும்" என்கின்றார் நாயனார்.

"ஏறு அடர்த்து, வில்முருக்கி, எவ்வுலகும் கைக்கொண்டு,
மாறு அடர்த்த ஆழ் வலவனைக் --- கால்தொழற்கு
எஞ்சினார் இல் எனினும், மாயன் இகல் நெடுமால்
வஞ்சியான் நீர்நாட்டார் மன்".

     இது திருமாலுக்கும் சோழனுக்கும் சிலேடை செய்து வேற்றுமையும் கூறியதாக அமைந்த ஒரு தனிப்பாடல்.

     திருமால் கண்ணனாய் வந்தபோது நப்பின்னைப் பிராட்டியின் பொருட்டு ஏழு காளைகளை அடக்கினான்; இராமனாய் வந்த போது சீதைக்காக வில்லை ஒடித்தான்; வாமனனாய் அவதரித்து எல்லாவுலகத்தையும் பேருருவால் கைக்கொண்டான். அடியார்க்குப் பகைவரானவர்களை அடக்கிச் சக்கராயுதத்தைத் தாங்கினான்.

     சோழனும், பாண்டியனின் சுறவேற்றுக் கொடியினையும் சேரனுடைய விற்கொடியினையும் வென்றான்; எவ்வுலகையும் தன்னடிப் படுத்தினான்; பகைவரை அடக்கும் ஆணைத் திகிரியினை உருட்டினான்.

     இவ்விருவரையும் வணங்காதார் யாரும் இலர். ஆயினும், திருமால் மாயன் (கருநிறம் உடையவன், வஞ்சனை உடையவன்); சோழன் வஞ்சியான் (வஞ்சி என்னும் கருவூரை உடையவன், யாரையும் வஞ்சனை செய்து வருத்தமாட்டான்.)

     "துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று" என்றும், "செயற்கு அரிய செய்வார் பெரியர்" என்றும், "தவம் செய்வார் தம் கருமம் செய்வார்" என்றும், துறவறத்தாரை உயர்த்திக் கூறி, "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார் கொல் மற்றையவர் தவம்" என்று இல்லறத்தாரை அவர் பின் வைத்துக் கூறிய நாயனார், இத் திருக்குறளில், இல்லறத்தாரை உயர்த்திக் கூறினார். மேற்கூறிய தனிப்பாடலில், காத்தல் கடவுளாகிய திருமாலுக்குச் சோழன் ஒருவகையில் உயர்ந்தவன் என்றது போல, துறவறத்தார்க்கு, இல்லறத்தார் மேம்பட்டவர் என்று காட்டினார்.

     தாமும் பசித்துப் பிறரது பசியையும் தீர்க்கமாட்டாதவரை விட, தமது பசியையும் தீர்த்தப் பிறரது பசியையும் தீர்ப்பார் உயர்ந்தவர் என்றபடி.

திருக்குறளைக் காண்போம்...

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல், அப் பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் --- தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்,

     அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் --- அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.

         (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளதைக் காணலாம்...

சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன்மற்(று)
ஈரப் படினும் அது ஊரான்--ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல.            ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     சோற்று ஊர்திப் பாகன் சோராப் பசிக்குமேல் ஈரப்படினும் அது ஊரான் --- உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன் மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான், அதனால் முடிக்கும் கருமம் பல --- அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல இருப்பதால், ஆரக் கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும் --- அவ்வுடலைத் தொழிற்படுத்தற்கு ஏற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...