023. ஈகை - 04. இன்னாது இரக்கப்படுதல்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகராத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "யாசித்து வந்த ஒருவர், பொருளைப் பெற்றதனால் உண்டாகின்ற அவரது இனிய முகத்தைக் காணும் அளவு கூட, அவர் இரந்து நிற்றல் துன்பம் தருவதே" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

இன்னாது இரக்கப் படுதல், இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இரக்கப்படுதல் இன்னாது --- இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று,

     இரந்தவர் இன்முகம் காணும் அளவு --- ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;

         (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங் கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மீள்என்று உரைப்பளவும் மிக்கு உவகை பெற்றிலர்,வன்
தோளர் இயற்பகையார், சோமேசா! - நீள்உலகில்
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

         ஈகையாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல்.  இது மறுமை நோக்கியது ஆகலின் இம்மை நோக்கிய ஒப்புரவறிதலின் பின் வைக்கப்பட்டது.

இதன்பொருள்---

         சோமேசா!   நீள் உலகில் --- இடம் அகன்ற இவ் உலகத்தின்கண், இரக்கப்படுதல் இன்னாது --- இரத்தலே அன்றி இரக்கப்படுதலும் இனிதன்று,  இரந்தவர் இன்முகம் காணும் அளவு --- ஒருபொருளை இரந்தவர் அது பெற்றதனால், இனிதாகிய அவர் முகம் காணும் அளவும்... 

         வன்தோள் இயற்பகையார் --- வலிய தோள்களை உடைய இயற்பகை நாயனார், மிக்கு உவகை பெற்றிலர் --- மிகுதியான மகிழ்ச்சியைப் பெற்றிலர்,   மீள் என்று உரைப்பளவும் --- தனது மனைவியைக் கொண்டு அடியார் மீள்க என்று சொல்லுமளவும் ஆகலான் என்றவாறு.

"தவமுனி தன்னைமீளச் சொன்னபின், தலையால் ஆர
அவன்மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று,
புவனமூன்று உய்யவந்த பூசுரன் தன்னை ஏத்தி,
இவன்அருள் பெறப்பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்"
                                                               --- (பெரியபுரா - இயற்பகை, 27)   

         சோழநாட்டில், காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் அவதரித்த இயற்பகை நாயனார் சிவனடியார் திறத்து அன்பு பூண்டு, அவர் வேண்டின யாவும் பரிந்தளித்து வந்தார்.  சிவபெருமான் அவர் திருத்தொண்டின் பெருமையை உலகர்க்கு உணர்த்த வேண்டி, ஒரு தூர்த்த வேதியராய்த் திருவுருக்கொண்டு வந்து உபசரிக்கப் பெற்று, "அன்ப! கேட்பது தருவாயோ?" என்றார். அதற்கு நாயனார், "என்னிடத்து உளதாயின், அஃது உமதே" என, "உன் மனைவியை விரும்பி வந்தேன்" என்றார். அதுகேட்டு மகிழ்ந்து, மனைவியாரை அவருக்குத் தர, மனைவியாரும் அவருடன் செல்ல இசைந்தார். அதன் பின், நாயனார், "இனி யான் செய்யும் குற்றேவல் ஏதோனும் உளதோ?" என்ன, அதற்குப் பெருமான், "நீ எனக்கு வழித்துணையாக வரவேண்டும்" என்றார்.  "அது யான் ஏவாமலே செய்யக் கடவது அன்றோ" என்று கூறி அவர்களுடன் சென்றார். உறவினர்கள் இதனை அறிந்து வழி மறித்தார்கள். அவர்களை எதிர்த்து வாளால் வீசிக் கொன்று, திருச்சாய்க்காடு என்னும் திருப்பதியை அணையுங்கால் பெருமான், "வீட்டிற்கு மீள்க" என, நாயனார் பணிந்து மனைவியாரிடம் பற்றொன்றும் இன்றித் திரும்பியும் பாராது செல்வது அறிந்து, "இயற்பகை முனிவா! ஓலம்" என்று உரத்துக் கூற, யாவர் எதிர்த்தார்களோ என்று விரைந்தோடி வந்தார்.  பெருமானைக் கண்டிலர். மனைவியாரையே கண்டார்.  பெருமான் அவ் இருவருக்கும் காட்சி கொடுத்து கதி அருளினார்.

இந்த வரலாற்றின் விரிவை முந்திய திருக்குறளில் காண்க.

     அடுத்து, பெரியபுராணத்தில் வரும் சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
காய்க்கறிவேறு ஒன்று தொடாக் கள்ள வயிரவர்க்குஓர்
சேய்க்கறி செய்து இட்டார் சிறுத்தொண்டர், --- வாய்க்கு 
இனிதாய் இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

     காய்கறியைத் தொட்டுப் பார்க்காத வயிரவராகக் கள்ள வேடம் பூண்டு, தன்பால் வந்து எய்திய சிவபெருமானுக்கு, தனது பிள்ளையே கறியாகச் சமைத்து உண்ண இட்டார் சிறுத்தொண்ட நாயனார். பசித்து வந்த அடியாருக்கு, அவர் கேட்டதை அருளிய பெருமை இதில் காட்டப்படும்.            

சிறுத்தொண்டர் வரலாறு

         இந்த நாயனாரின் இயற்பெயர் பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர். ஆயுள்வேதக் கலைகளிலும் வடமொழிக் கலைகளிலும் புலமை வாய்ந்தவர். படைத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் பயிற்சி பெற்றவர். சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்தவர்.

         பரஞ்சோதியார் சோழ மன்னனிடத்தில் அமைச்சராய் அமர்ந்து கடனாற்றி வந்தார். அவர், வேற்றரசர்களை வெல்வதிலும், அவர்கள் நாடுகளைப் பற்றுவதிலும் பேர்பெற்று விளங்கினார். ஒரு முறை வடபுலத்திலே உள்ள வாதாபி என்னும் நகரத்தில் போர் மூண்டது. அப் போரில் பரஞ்சோதியார் தலைப்பட்டு வெற்றி பெற்றார். அவ் வெற்றியின் பயனாக மணி, நிதி முதலியவற்றைக் குவியல் குவியலாகவும், யானை குதிரை முதலியவற்றைக் கூட்டம் கூட்டமாகவும் பரஞ்சோதியார் திரட்டி வந்தார். அவற்றைக் கண்ட மன்னன், பரஞ்சோதியார் திறத்தை வியந்து பேசினான்.

     அப்பொழுது அங்கு இருந்த மற்றை அமைச்சர்கள் மன்னனைப் பார்த்து, "இவர் சிவனடியார். இவருக்கு எதிராவார் ஒருவரும் இல்லை" என்று சொன்னார்கள். அது கேட்ட மன்னன் நடுக்குற்றான். "அந்தோ கெட்டேன். இதுவரை இவரைச் சிவனடியார் என்று உணர்ந்தேனில்லை. போர்முகத்துக்கு அனுப்பினேன், பாவியானேன்" என்று வருந்தினான். பரஞ்சோதியார் காலில் விழுந்து, "அடியவரே, என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று வேண்டினான். பரஞ்சோதியார், "என் கடமையைச் செய்தேன், அதனால் என்ன தீங்கு" என்றார். மன்னன் அவருக்கு நிதிக்குவியல்களையும், விருத்திகளையும் கொடுத்து, "உமது மெய்ந்நிலையை நான் அறியாதவாறு நடந்து வந்தீர். இனி என் கருத்துக்கு இசைந்து நடக்குமாறு வேண்டுகிறேன். இனி, இப்பணி செய்தல் வேண்டாம். திருத்தொண்டு செய்தல் வேண்டும்" என்று வணங்கி விடை கொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுத் தம் திருப்பதி சேர்ந்தார்.

         பரஞ்சோதியார் திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரப் பெருமானை வழிபடுவார். தமக்கு இல்லக் கிழத்தியாக வாய்த்த திருவெண்காட்டு நங்கையார் என்னும் பெருமாட்டியுடன் கலந்து நல்லறம் ஓம்புவார்.  சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர்த் தாம் உண்பார்.  அவர், அடியவர்களிடத்தில் மிகச் சிறியராய் நடப்பார். அதனால், அவருக்குச் "சிறுத்தொண்டர்" என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.

         இவ்வாறு ஒழுகி வரும் நாளில், சிறுத்தொண்டர் மனைவியார் கருவுற்றார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.  சீராளதேவர் என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. அவர் தக்க பருவத்தில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

         திருச்செங்காட்டங்குடிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவர்தம் வருகையைக் கேள்வியுற்ற சிறுத்தொண்டர், அவர் எதிர்கொண்டு அழைத்து வந்தார்.  அன்பில் மூழ்கிப் பலவித உபசாரம் செய்தார்.  திருஞானசம்பந்தப் பெருமான், அவரைத் தமது திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருளினார்.

         சிறுத்தொண்டரின் திருத்தொண்டு திருக்கயிலையையும் ஈர்த்தது. அவர் அன்பை நுகரச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒரு வயிரவத் திருக்கோலம் தாங்கி, திருச்செங்காட்டங்குடி சேர்ந்தார். பசியால் பீடிக்கப் பட்டார் போல் நடந்தார். "சிறுத்தொண்டரின் வீடு எங்கே" என்று கேட்டு வந்தார்.  வீட்டின் வாயிலில் வந்து நின்று, "சிறுத்தொண்டர் வீட்டில் உள்ளாரா?" என்று கேட்டார். தாதியாராகிய சந்தன நங்கையார், "மாதவர் வந்துள்ளார்" என்று விரைந்து வந்து வயிரவர் திருவடியிலே விழுந்து வணங்கி, "நாயனார் அடியவர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். அடிகள் உள்ளே எழுந்தருளலாம்" என்று சொன்னார். அதற்கு வயிரவர், "பெண்கள் உள்ள இடத்தில் நாம் தனித்துப் புகுவதில்லை" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.  அவ்வுரை திருவெண்காட்டு நங்கையாருக்குக் கேட்டது.  'அடியவர் போய் விடுவாரோ' என்று எண்ணி ஓடி வந்தார். வந்து, "அடிகளே!  நாயனார், அடியவர்கட்கு நாள்தோறும் அமுது செய்விப்பது வழக்கம். இன்று ஓர் அடியவரும் வரவில்லை.  அதனால், அவர் அடியவர்களைத் தேடிப் போயுள்ளார்.  இப்பொழுது வருவார். புதிதாக அடிகள் எழுந்தருளி இருக்கிறீர்.  அடிகள் திருவேடத்தைப் பார்த்தால் நாயனார் மகிழ்வெய்துவார்.  அடிகள் உள்ளே எழுந்தருள்க" என்று வேண்டினார். அவ் வேண்டுதலுக்கு இசையாது, "நாம் இருப்பது வடதேசம்.  சிறுத்தொண்டரைக் காணவே இங்கு வந்தோம். அவர் இல்லாத வேளையில் இங்கே தங்கமாட்டோம். கணபதீச்சரத்தில் திருஆத்தியின் கீழ் இருப்போம். சிறுத்தொண்டர் வந்ததும் தெரிவியுங்கள்" என்று கூறிக் கணபதீச்சரத்தைச் சேர்ந்தார்.

         அடியவர்கள் யாரையும் காணாது சிறுத்தொண்டர் வீடு வந்தார். நிலைமையை மனைவியார்க்குக் கூறி வருந்தினார்.  அம்மையார், நாயனாரைப் பார்த்து, "இப்பொழுது இங்கே ஒரு வயிரவர் வந்தார்" என்று சொன்னார். அதைக் கேட்டதும் நாயனார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று கூத்தாடினார். அவர் எங்கே என்று கேட்டு,  ஓடோடிச் சென்று வயிரவரைக் கண்டார், வணங்கினார். வயிரவர், நாயனாரைப் பார்த்து,  "பெரிய சிறுத்தொண்டர் நீரோ" என்றார். நாயனார் வயிரவரை மீண்டும் வணங்கி, "சிவனடியார்கள் எளியேனை அப்படிச் சொல்வது வழக்கம். அடிகளே! ஏழைக் குடிலுக்கு எழுந்தருளல் வேண்டும்" என்று முறையிட்டார். வயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து, "உம்மைக் காண வந்தோம். நாம் வடதேசத்தினோம். எமக்கு அமுதளிக்க உம்மால் இயலாது" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "அடிகளின் உணவு முறையைத் தெரிவியுங்கள்.  அவ்வாறே செய்விப்பேன். அருமை ஒன்றும் இல்லை" என்றார்.  அதுகேட்ட வயிரவர், "நாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை உண்போம். அந்த நாள் இந்நாள் ஆகும். பசுவைக் கொன்று சமைத்து உண்பது எமது வழக்கம். இது உமக்கு அருமையானது அன்றோ" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "சால நன்று எமக்கு முந்நிரையும் உண்டு. ஒன்றும் குறைவில்லை. அடிகளுக்குத் திருவமுது ஆகும் பசு இன்னதென்று தெரிவித்தல் வேண்டும்.  தெரிந்தால், நான் போய் விரைவில் அமுதாக்குவித்துத் திரும்புவேன்" என்றார்.

         வயிரவர், "தொண்டரே!  நாம் உண்ணும் பசு நரப் பசுவாகும்.  ஐந்து வயது உடையதாய், உறுப்பில் பழுது இல்லாததாய் இருத்தல் வேண்டும். இன்னும் அதன் இயல்பைக் கூறுவோம். கூறினால், அது உமக்கு புண்ணில் வேல் எறிந்தால் போல் தோன்றும்" என்றார். சிறுத்தொண்டர் "நன்றாகக் கூறலாம்" என்றார். வயிரவர், "அச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்கத் தந்தை உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்" என்றார். சிறுத்தொண்டர், "இதுவும் எமக்கு அரிது அன்று. அடிகள் திருவமுது செய்ய இசைவது போதும்" என்றார்.

         சிறுத்தொண்டர் பேரானந்தத்துடன் வீடு நோக்கி வந்தார்.  அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த திருவெண்காட்டு நங்கையார், நாயனார் முகமலரச்சியோடு வருதவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். நாயனார் வயிரவர் விருப்பத்தைத் தெரிவித்தார். அது கேட்ட அம்மையார், "ஒரு குடிக்கு ஒருவனாக உள்ள சிறுவனுக்கு ஏங்கே போவது" என்றார்.  நாயனார் அம்மையாரைப் பார்த்து, "நினைவு நிரம்பப் பொருள் கொடுத்தாலும், பிள்ளையை யாரும் தரமாட்டார்கள். தந்தாலும் உவப்புடன் அரியும் பெற்றோர் இருப்பாரா? இனிக் காலம் தாழ்த்தல் ஆகாது. நமது அருமைப் புதல்வனை அழைப்போம்" என்றார். அம்மையார், "நம் குலமணியைப் பள்ளியில் இருந்து அழைத்து வாரும்" என்றார்.

         பள்ளியிலிருந்து ஓடி வந்து தன்னைத் தழுவிக்கொண்ட சீராளதேவனை, தோள் மேல் சுமந்து வீட்டுக்கு வந்தார்.  அம்மையார் பிள்ளையை வாங்கினார். தலைமயிரைத் திருத்தினார். முகம் துடைத்தார். திருமஞ்சனமாட்டி அலங்கரித்துத் தமது ஆருயிர்க் கணவரிடம் கொடுத்தார்.  சிறுவனை அன்போடு வாங்கிய சிறுத்தொண்டர் அடுக்களைக்குச் செல்லாமல் வேறோர் இடம் சென்றார். அம்மையார் பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு பின் சென்றார்.  பிள்ளையின் தலையைச் சிறுத்தொண்டர் பிடிக்க, அம்மையார் பிள்ளையின் கால்களை மடியிலே இறுக்கினார். இரண்டு கைகளையும் தமது இரண்டு கைகளால் பற்றினார். சீராளதேவர் பெற்றோர் மகிழ்வதாகக் கருதி நகை செய்தார்.  சிறுத்தொண்டரும் அம்மையாரும், நம் புதல்வன் நமக்குப் பெரும்பேற்றை அளித்தான் என்று மகிழ்வெய்தினர். அம் மகிழ்வுடன் செயற்கரும் செய்கையினைச் செய்தனர்.

         "தலை இறைச்சி அமுதுக்கு உதவாது" என்று அதை விலக்குமாறு தோழியாரிடம் அம்மையார் கூறினார். மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

         நாயனார் களிகூர்ந்து, திரு ஆத்தியை அடைந்து, "அடிகள் விரும்பியவாறு சமையல் செய்யப்பட்டது. அருள் கூர்ந்த எழுந்தருள்க" என்று வேண்டினார். இருவரும் வீடு சேர்ந்தனர்.

         நாயனாரும் அம்மையாரும் முறைப்படி வயிரவருக்கு வழிபாடு செய்து "அமுது படைக்கும் வகை எப்படி" என்று கேட்டனர். "சோற்றுடன் கறிகளையும் ஒக்கப் படைக்க" என்றார் வயிரவர். திருவெண்காட்டு நங்கையார் பரிகலம் திருத்தி, சோறு கறிகளை முறைப்படி படைத்தார். அதனைப் பார்த்த வயிரவர், "பசுவின் உறுப்புக்கள் எல்லாவற்றையும் சமைத்தீரா" என்று கேட்டார். "தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று அதனைக் கழித்தோம்" என்றார் திருவெண்காட்டு நங்கையார்.  "தலையும் வேண்டும்" என்றார் வயிரவர். நாயனாரும் அம்மையாரும் திகைத்து நிற்கையில், தாதியாராகிய சந்தன நங்கையார், "வயிரவர் திருவமுது செய்யம்போது அவர்தம் எண்ணம் தலை இறைச்சியின் மீது செல்லினும் செல்லும் என்று நினைந்து, அதையும் சமையல் செய்து வைத்திருக்கிறேன்" என்றார். திருவெண்காட்டு நங்கையார் அகமகிழ்ந்து தலை இறைச்சியையும் கொண்டு வந்து படைத்தார்.

         பிறகு வயிரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து, "நாம் தனியே உண்பதில்லை. சிவனடியார்களுடன் உண்பதே வழக்கம்.  அவர்களை அழைத்து வாரும்" என்றார். நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது. "ஐயோ,! இன்று திருவமுது செய்ய இடையூறு நேர்ந்ததே" என்று ஏங்கியபடியே வெளியே போனார். சிவனடியார் ஒருவரையும் காணவில்லை. நிலையை வயிரவருக்குத் தெரிவித்தார். "திருநீரு அணிந்தவர்க்கே நான் சோறிடுவது வழக்கம்" என்று சொல்லி வணங்கினார்.

         வயிரவர், நாயனாரை நோக்கி, "உம்மைப் போலத் திருநீறு இட்டவரும் உளரோ? ஆகவே, நீர் எம்மோடு திருவமுது செய்வீர்" என்றார். நங்கையாரை நோக்கி, "நமக்குப் படைத்த சோறு கறிகளில் இருந்து எடுத்து இவருக்கும் படைக்க" என்று பணித்தார். நங்கையாரும் அப்படியே செய்தார். 'நாம் உண்டால் வயிரவரும் உண்பார்' என்று எண்ணி, சிறுத்தொண்டர் உண்ணப் புகுந்தார். நாயனாரைப் பார்த்து வயிரவர், "நாம் உண்டு ஆறு மாதங்கள் ஆயிற்று. நீரோ நாளும் உண்பவர். நாம் உண்ணும் வரை பொறுக்கல் ஆகாதா? நம்முடன் உணவு கொள்வதற்குப் புத்திரன் இல்லையோ? இருப்பின், அவனை அழையும்" என்றார்.  நாயனார், "எனக்குப் புதல்வன் உண்டு. ஆனால் அவன் இப்போது இங்கு உதவான்" என்றார். வயிரவர், "அவன் வந்தால் அன்றி நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்" என்றார்.

         நாயனாரும் நங்கையாரும் செய்வது அறியாமல், திருவருளை நினைந்து வெளியே வந்து,  "மைந்தா! மணியே! சீராளா! வாராய்! வாராய்! வயிரவர் உண்ண அழைக்கின்றார், வாராய்! வாராய்!" என்று ஓலமிட்டு அழைத்தனர். ஆண்டவன் அருளால், சிராளதேவர் பள்ளியினின்று ஓடி வருபவர் போல வந்தார். அம்மையார் அருமைப் புதல்வரை எடுத்து அணைத்து, நாயனார் கையில் கொடுத்தார். நாயனார், "அடியவர் அமுது செய்யப் பெற்றோம் பெற்றோம்" என்று ஆனந்தம் கொண்டார்.  பிள்ளையுடன் வீட்டிற்கு விரைந்து வந்தார். அதற்கு முன்னரே வயிரவர் மறைந்தருளினார். சிறுத்தொண்டர் திகைத்தார், விழுந்தார், எழுந்தார், மயங்கினார். "வயிரவர் எங்கே எங்கே" என்றார். இறைச்சியும் அமுதும் கலத்தில் காணோம். நடுக்குற்று வெளியே வந்தார்.

         அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப் பெருமானுடனும் மழவிடைமேல் காட்சி தந்தார். பெருமான் அந்த நால்வருக்கும் அருள் சுரந்து, தங்களைப் பிரியாத பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச் சென்றார்.

         இரப்பவர்களுடைய துன்பத்தைத் தீர்க்க முயலாமல், வெறும் அனுதாபம் மட்டும் பேசுவது நல்லதன்று. பிச்சை கேட்பவனுடைய குறை தீர்ந்து அவன் முகம் மகிழ்ச்சி காட்டுகின்ற வரையிலும் கூட, வெறும் இரக்கம் பேசுவது நல்லதன்று என்றார் திருவள்ளுவ நாயனார்.

         இன்னாது - இன்பம் செய்வதன்று.  இரக்கப்படுதலாவது யாசிப்பவருக்குக் கொடுப்பேன் என்று இருத்தல்.

     இனி, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
                 
கரந்திலராய் அளிப்பார்க்கும் இன்னாது இரக்கப்படுதல்,
இரந்தவர் இன்முகம் காணும் அளவு என்று இயம்புதலால்,
வரந்தர வேண்டும் என்று உன்பால் சொல்லேனை வலிய வந்து ஆள்,
புரந்தரன் பூசிக்கும் புல்லையில் வாழ் உந்திபூத்தவனே.

     தனது கமல நாபியில் இருந்து பிரதேவனைப் படைத்தவரே! இந்திரன் வந்து பூசிக்கும் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே! தமது பொருளை இல்லை என்று சொல்லி ஒளிக்காமல், இல்லை என்று வந்தோரின் இன்முகம் காணும் அளவு கூட, இல்லை என்ற துன்பச் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுதல் கூடாது என்ற (திருவள்ளுவ நயானாரால்) சொல்லப்பட்டு உள்ளதால், எனக்கு வரம் அருளவேண்டும் என்று நான் வேண்டாத நிலையிலேயே என்ன நீ வலிய வந்து ஆட்கொண்டு அருளுவாயாக.

     கரந்திலராய் - ஒளியாதவர்களாய். வலிய வந்து ஆள் --- வேண்டுதல் செய்யாமலே வந்து ஆண்டருள்வாயாக. புரந்தரன் --- இந்திரன். உந்தி பூத்தவன் --- உந்தியில் நான்முகனைத் தோற்றுவித்தவன்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லார் உழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா
ஓத்து இலாப் பார்ப்பான் உரை.      --- இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா --- கொடுத்த அளவினால் மகிழாதவர்க்குக் கொடுத்தல் துன்பமாம்; பாத்து உணல் இல்லார் உழை சென்று உணல் இன்னா --- பகுத்து உண்ணுதல் இல்லாதவரிடத்தில் போய் உண்ணுதல் துன்பமாம்; மூத்த இடத்து பிணி இன்னா --- முதுமை உற்ற காலத்தில் நோய் உண்டாதல் துன்பமாம்; ஆங்கு -- அவ்வாறே, ஓத்து இலா பார்ப்பான் உரை இன்னா --- வேதத்தை ஓதுதல் இல்லாத பார்ப்பானுடைய சொல் துன்பமாம்.

     உவவாதார்க்கு ஈப்பு இன்னா என்பதனை, ‘இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் இன்முகம் காணுமளவு' என்னுந் குதிருக்றளுடன் பொருத்திக் காண்க.


கல்லாமை அச்சம், கயவர் தொழில் அச்சம்,
சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம் - எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம், மரத்தார் இம்
மாணாக் குடிப்பிறந் தார்.            --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     கல்லாமை அச்சம் --- நல்ல நூல்களைப் படிக்காத குற்றம், கயவர் தொழில் அச்சம் --- இழிதொழில் புரிகின்ற குற்றம், சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம் --- தீய சொல்லைப் பயிலுதல் கூடாது என்பதில் உண்டான குற்றம்,  எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் --- இல்லை என்று வருகின்றவர்களுக்கு ஏதும் கொடுத்து உதவமுடியாத குற்றம், இம்மாணாக் குடிப் பிறந்தார் மரத்தார் --- இவ்வாறு மாட்சிமையில்லா உயர் குடியிற் பிறந்தார், நடுக்கடலில் மரக்கலத்தில் செல்வாரை ஒத்தவராவர்


     தீயவற்றிற்கு அஞ்சி வாழ்தற்குரிய உயர் குடிப் பிறப்பே சிறந்தது.

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத
         இயல்பும், என்னிடம் ஒருவர் ஈது,
     இடு என்றபோது, அவர்க்கு இல்லை என்று சொல்லாமல்,
         இடுகின்ற திறமும், இறையாம்
நீ என்றும் எனை விடா நிலையும், நான் என்றும் உள்
         நினைவிடா நெறியும், அயலார்
     நிதி ஒன்றும் நயவாத மனமும், மெய்ந்நிலை நின்று
         நெகிழாத திடமும், உலகில்
சீ என்று, பேய் என்று, நாய் என்று பிறர் தம்மைத்
         தீங்கு சொல்லாத தெளிவும்,
     திரம் ஒன்று வாய்மையும், தூய்மையும் தந்து, நின்
         திருவடிக்கு ஆள் ஆக்குவாய்,
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
         தலம் ஓங்கு கந்தவேளே!
     தண்முகத் துய்யமணி, உண்முகச் சைவமணி,
         சண்முகத் தெய்வமணியே.      ---  திருவருட்பா.

No comments:

Post a Comment

61. புத்தாடை உடுக்கும் நாள்

  61.  புத்தாடை உடுக்கும் நாள் ----- "கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்      கட்டலாம் புதிய சீலை;   கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில...