திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
23 -- ஈகை
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறளில், "இல்லை என்று சொல்லும்
துன்ப மொழியை, தான்
பிறரிடத்துச் சொல்லாமையும், அதனைத் தன்னிடத்துச் சொன்னவர்க்கு இல்லை என்னாது
கொடுத்தலும் ஆகிய இவ்விரண்டும் சிறந்த குடிப்பிறப்பு உடையவனிடமே இருக்கும்"
என்கின்றார் நாயனார்.
இலன் என்னும் எவ்வம் --- இல்லை என்று
சொல்லுவதால் உண்டாகும் துன்பம்.
இலன் என்னும் எவ்வம் --- இல்லை என்னும் அத்
துன்பம் தரும் சொல்லை, இரப்பவன் ஒருவன்
தனக்குச் சொல்லுவதன் முன்னம், அவனது குறிப்பை அறிந்து பொருளைக் கொடுத்தல்.
இலன் என்னும் எவ்வம் --- இல்லை
என்னும் அத் துன்பம் தரும் சொல்லை, மறுபடியும் பிறரிடத்தில் போய் ஒருவன்
சொல்லாமல்படிக்கு, வேண்டும் பொருளை நிரம்பக் கொடுத்தல்.
இலன் என்னும் எவ்வம் --- இல்லை
என்னும் அத் துன்பம் தரும் சொல்லை ஒருவன் சொல்லக் கேட்டும், தனது உலோப
குணத்தால்,
ஈவதற்கு
உரிய பொருள் இருந்தும், நான் இப்போது பொருள் இல்லாதவனாய் இருக்கின்றேன்
என்று சொல்லும் துன்பம் தரும் சொல்லைச் சொல்லாது கொடுத்தல்.
திருக்குறளைக்
காண்போம்...
இலன்
என்னும் எவ்வம் உரையாமை,
ஈதல்,
குலன்
உடையான் கண்ணே உள.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
இலன் என்னும் எவ்வம் உரையாமை --- யான்
வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்,
ஈதல் --- அதனைத் தன்கண் சொன்னார்க்கு
மாற்றாது ஈதலும்,
உள குலன் உடையான் கண்ணே --- இவை
இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.
(மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று
என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன்
தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று
அவன் உரையா வகையால் கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று
அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான்
இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்' சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்
எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த
பன்மையாக உரைப்பர்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும்
நூலில் வரும் வரு பாடல்...
தொல்லைமணி
மன்றுஉடையார் தொண்டர்க்குப் பெண்டிரையும்
இல்லை
எனாது ஈந்தார் இயற்பகையார், --- வல்லி
இலன்
என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்
உடையான் கண்ணே உள.
இயற்பகையார் ---
இயற்பகை நாயனார். சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் இவரிடம் வந்து இவருடைய
மனைவியைத் தம்முடன் அனுப்பும்படி வேண்ட, இவர்
அங்ஙனமே செய்தார் என்ற வரலாறு பெரியபுராணத்தில் காண்க. வல்லி --- கொடி போன்றவளே.
இயற்பகை நாயனார்
வரலாறு
இயற்பகையார் நாயன்மார்களுள் ஒருவர்
ஆவார். இவர் “இல்லையே என்னாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில்
வைத்துப் பாடப்பட்டவர். இவர் சோழநாட்டிலே காவேரி சங்கமம் என்னும் புனித
தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான
அவர் தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு, இறையடியார் தம் குறை முடிப்பது என்பது
அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவர் எனினும் அவர் வேண்டுவதை இல்லை என்னாது
கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்து வந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர்
பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில்
அணிந்து, தூர்த்த வேடம் உடைய
வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது
வீட்டினை அடைந்தார். நாயனார் வந்த அடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, "முனிவர் இங்கு
எழுந்தருளியது என் பெருந்தவப் பயன்" என்று வழிபட்டு வரவேற்றார். வேதியர்
அன்பரை நோக்கி, "சிவனடியார்கள்
வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத, உம்மிடத்திலே
ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்,
அதனை
நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன்" எனக் கூறினார். அது
கேட்ட இயற்பகையார், "என்னிடமிருக்கும்
எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதில் சிறிதும் ஐ.மில்லை.
நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக" என்றார். அதுகேட்ட வேதியர், "உன் மனைவியை விரும்பி
வந்தேன்" எனச் சொன்னார்.
நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து
"எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்"
எனக் கூறி, விரைந்து வீட்டினுள்
புகுந்து கற்பிற் சிறந்த மனைவியாரை நோக்கி, "பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு
நான் கொடுத்துவிட்டேன்’"என்றார். அதுகேட்ட மனனவியார், மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை
நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை
இதுவாயின், நீர் கூறியதொன்றை
நான் செய்வதன்றி எனக்கு வேறு உரிமை உளதோ?" என்று
சொல்லித் தன் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கு எனத்
தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய
அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய
மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்.
மறைமுனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய
இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, "இன்னும் யான்
செய்தற்குரிய பணி யாது?" என இறைஞ்சி நின்றார்.
வேதியராகிய வந்த இறைவன், "இந் நங்கையை யான்
தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத்
துணையாக வருதல் வேண்டும்" என்றார். அதுகேட்ட இயற்பகையார் "யானே
முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர்
வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும்" என்று எண்ணி, வேறிடத்துக்குச் சென்று போர்க்கோலம்
பூண்டு, வாளும் கேடயமும்
தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து
அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாராது
சுற்றத்தாரும், வள்ளலாரது
சுற்றத்தாரும் "இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டு போவதா?” என வெகுண்டனர். தமக்கு நேர்ந்த பழியைப்
போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர்.
"தூர்த்தனே! போகாதே. நற்குலத்தில்
பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு, உமது
பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’"எனக் கூறினார். மறைமுனிவர் அதுகண்டு
அஞ்சியவரைப் போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் "இறைவனே! அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்" என்றார்.
வீரக்கழல் அணிந்த இயற்பகையார்,
"அடியேனேன்
அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன்" என வேதியருக்கு தேறுதல் கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, "ஒருவரும் எதிர்
நில்லாமே ஓடிப் பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத்
துடிப்பீர்" என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், "ஏடா! நீ என்ன
காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்? உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும்
இகழ்ச்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது, உன்
மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர
இறந்தொழிவதன்றி உன் மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதியோம்"
என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் "உங்கள் உயிரை
விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்" என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு
முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட
இயற்பகையார், சுற்றத்தார் மேல்
பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து, அவர்களுடைய கால்களையும் தலைகளையும்
துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும்
வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக, எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர்.
எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, "அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக்
கடக்கும் வரை உடன் வருகின்றேன்" என்று கூறித் துணை சென்றார்.
திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறைமுனிவர்
"நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்" என்று கூறினார்.
இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து
திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார்.
மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி
“இயற்பகை
முனிவா ஓலம்,
ஈண்டுநீ வருவாய் ஓலம்,
அயர்ப்புஇலா
தானே ஓலம்
அன்பனே ஓலம் ஓலம்
செயற்குஅரும்
செய்கை செய்த
தீரனே ஓலம் என்றான்
மயக்குஅறு
மறை ஓலிட்டு
மால்அயன் தேட நின்றான். --- பெரியபுராணம்.
மறைமுனிவர் அழைத்த பேரோசையினைக் கேட்ட
இயற்பகையார், "அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என்
கைவாளுக்கு இலக்காகின்றார்" என்று கூறி விரைந்து வந்தார்.
மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக்
கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தை விட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார்
முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன்
மாதொருபாகராக எருதின் மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே
பலமுறை தொழுதார்; எல்லை இல்லாத இன்ப
வெள்ளம் அருளிய இறைவனை உள்ளம் கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது
அம்மையப்பராகிய இறைவர் "பழுதிலாதாய், உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம்.
உன் மனைவியுடன் நம்மில் வருக" எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார்.
உலகியற்கை மீறிச் செயற்கரும் செய்கை செய்த
திருத்தொண்டராகிய இயற்பகையாரும்,
தெய்வக்
கற்பினையுடைய அவர் தம் மனைவியரும், ஞானமாமுனிவர் போற்ற
நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர்
தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகம் அடைந்து
இன்புற்றனர்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய
மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
பொன்னகர்க்
கோன் ஏற்பத் ததீசி புற எலும்பை
முன்னல்
இன்றித் தந்தான், முருகேசா! - மன்னி
இலன்என்னும்
எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான்
கண்ணே உள.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, பொன் நகர் கோன் ஏற்ப ---
பொன்னுலகத்திற்கு இறைவனாகிய இந்திரன் இரந்து வேண்ட, ததீசி --- ததீசி முனிவர், புற எலும்பை ---
முதுகெலும்பை, முன்னல் இன்றி
தந்தான் --- சிறிதும் எண்ணிப் பாராமலே கொடுத்தார். மன்னி --- நிலைபெற்று, இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் ---
நான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் கூறுதற்கு முன்னரே கொடுத்தல், குலன் உடையான் கண்ணே உள --- நல்ல
குடியில் பிறந்தவனிடத்தில் தான் இருக்கிறது.
இந்திரனானவன் இரந்து வேண்டத் ததீசி
முனிவர் தம்முடைய முதுகெலும்பைத் தமக்கு இறுதி ஏற்படுதலையும் எண்ணிப் பாராமல்
கொடுத்தார். தன்னுடைய வறுமை நிலையை இரப்போன் இயம்புதற்கு முன்னரே வழங்குதல்
நற்குடியில் பிறந்தவனிடத்தில் தான் உண்டு எந்பதாம்.
முன்னல்
--- எண்ணுதல்.
ததீசி முனிவர் கதை
ததீசி என்பவர் புகழ்பெற்ற
முனிவர்களில் ஒருவர். இவர் இறைவனை நோக்கித் தவம் செய்தலை மேற்கொண்டிருந்தார். இந்திரன் ஒரு காரணத்தை முன்னிட்டு
விருத்திராசுரன் என்பவனோடு போர் புரியத் தொடங்கினான். இந்திரனுடைய வச்சிரப்படை
பழையதாகையால் கெட்டுப் போயிற்று. புதிய வச்சிரப் படையை எவ்வாறு செய்யலாம் என்று
திருமாலிடம் அறிவுரை கேட்டான். அம் மாயவன், ததீசி முனிவனுடைய முதுகெலும்பைக் கொண்டு
அப்படையைச் செய்துகொள். பல படைக்கலங்களின் திரட்சியே முதுகுத் தண்டாக விளங்குகிறது
என்று சொன்னார். இந்திரன் ததீசி முனிவரிடம் சென்று உற்றதை உரைத்து அவ் எலும்பினை
இரந்தான். முனிவர் அவ் எலும்பைக் கொடுப்பதால் தமக்கு இறுதியேற்படும் என்பதையும்
எண்ணிப் பாராமல் அதனை அவனுக்கு வழங்கி வீடுபேற்றை அடைந்தார்.
இனி, இத் திருக்குளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ
வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
தந்தைக்கு
இளமை தருபூருவை நிகர்வார்
சிந்திக்கின்
எங்கே, சிவசிவா! ---
நிந்தித்து
இலன்என்னும்
எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான்
கண்ணே உள.
பூரு --- பூருவாகன். நிகர் --- ஒப்பு. யயாதி
மன்னன் மகன் பூருவாகன் தன் இளமையைத் தந்தைக்குக் கொடுத்து அவன் முதுமையைத் தான்
பெறுதல்.
விடபருவர் என்னும் அசுர ராசன் மகளாகிய
சன்மிட்டை என்பவளும் சுக்கிராசாரியார் மகளாகிய தேவயானை என்பவளும் ஒருநாள் நீராடிய
பிறகு தவறாக ஒருவர் உடையை ஒருவர் அணிந்துகொண்டனர். அப்பொழுது தேவயானை
சன்மிட்டையைப் பார்த்து, "புனிதை அல்லாத நீ
என்னுடைய ஆடையை அணியலாமோ" என்று கேட்டாள். அதற்குச் சன்மிட்டையானவள், "என்னுடைய தந்தையால்
உன்னுடைய தந்தை உயிர் வாழ்தலை அறியாயோ" என்று கேட்டதுடன் தேவயானையை ஒரு
பாழ்ங்கிணற்றிலே தள்ளிவிட்டுச் சென்றாள். தேவயானை அங்கு வந்த யயாதி ராசனால்
கரையேறிச் சென்று தன்னுடைய தந்தைக்குச் செய்தியைக் கூறினாள். விடபருவா அங்கு வந்து
சுக்கிராசாரியாருடைய சினம் தணியுமாறு தன் மகள் சன்மிட்டையைத் தேவயானைக்கு
அடிமையாக்கினான். அவள் ஆயிரம் தோழிகளோடு ஏவல் புரிந்து கொண்டிருந்தாள்.
வியாழபகவான் மகனாகிய கசன்
சுக்கிராசாரியாருடைய மகளை அந்தணர்க்கு உரிமை ஆகாதவாறு வசவுரை வழங்கி இருத்தலின், அவர் யயாதி மன்னனுக்குச்
"சன்மிட்டையை விரும்பற்க" என்று கூறித் தன் மகளைத் திருமணம் செய்து
கொடுத்தார். அவன் அவளோடு கூடி யது,
துருவசு
என்னும் இரண்டு மக்களைப் பெற்றான். ஒருநாள் யயாதி மன்னன் சோலையை அடைந்த பொழுது
அங்கு வந்த சன்மிட்டை யயாதி மன்னனிடம் மக்கட்பேறு வேண்டினாள். அவன் அவளோடு
சேர்ந்து துருகு, அனு, பூரு என்னும் மூன்று மக்களைப்
பெற்றான். இதனைச் சுக்கிராசாரியார்
அறிந்தார். "நீ என் மொழியைக் கடந்தாயாதலின் மூப்புப் பருவம் அடைவாயாக"
என்று யயாதி மன்னனுக்கு வசவுரை வழங்கினார். "வேறு எவரேனும் மூப்பினை ஏற்றால்
இளமை பெறுவாய்" என்று வசவுரை நீக்கமும் கூறினார். யயாதி தன் மக்களை அழைத்து, "என் மூப்பை ஏற்று
இளமை தந்தவனுக்குப் பிறகு அரசாட்சியைத் தருவேன்" என்று கூறினான். பூரு
தன்னுடைய இளமையைக் கொடுத்து விட்டுத் தந்தையினுடைய மூப்பை ஏற்றுக் கொண்டான். யயாதி
தன்னுடைய மனைவியர்பால் எல்லை அற்ற இன்பங்களைப் புதிது புதிதாய் நுகர்ந்து
மகிழ்ந்தான்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்....
பொன்னிநீர்
நாட்டில் நீடும்
பொன்பதி புவனத்து உள்ளோர்
"இன்மையால் இரந்து
சென்றோர்க்கு
இல்லை என்னாதே ஈயும்
தன்மையார்" என்று நன்மை
சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார்
அருளிச் செய்த
மறைத் திருஆக்கூர் அவ்வூர். --- பெரியபுராணம்.
இதன்
பொழிப்புரை ---
காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ
நாட்டின் பழமையான அழகிய பதி, உலகத்துள்ளோர்
வறுமையினால் இரந்து சென்றால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை
வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி
அருள் செய்த மறை வாக்கினைப் பெறும் ஊரானது `திருவாக்கூர்' என்பதாகும்.
நன்மையராம்
நாரணனும் நான்முகனும் காண்பரிய
தொன்மையான்
தோற்றம் கேடு இல்லாதான் தொல்கோயில்
இன்மையால்
சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே. ---
திருஞானசம்பந்தர்.
இதன்
பொழிப்புரை
---
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும்
காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு
இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு
இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்
தோன்றிமாடம் ஆகும்.
மலர்ந்த
செவ் வந்திப் போதும்
வகுளமும் முதிர்ந்து வாடி
உலர்ந்து
மொய்த்து அளிதேன் நக்கக்
கிடப்பன உள்ள மிக்க
குலந்தரு
நல்லோர் செல்வம்
குன்றினும், தம்பால் இல் என்று
அலந்தவர்க்கு
உயிரை மாறி
ஆயினும் கொடுப்பர் அன்றோ. --- தி.
வி.புராணம்.
இதன்
பதவுரை ---
மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் ---
விரிந்த செவ்வந்தி
மலரும் மகிழம் பூவும், உதிர்ந்து வாடி
உலர்ந்தும் --- நிலத்தில் உதிர்ந்து வாடிப் புலர்ந்தும், அளி மொய்த்துத் தேன் நக்கக் கிடப்பன ---
வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பனவாயின; உள்ளம் மிக்க --- உள்ள மிகுதியையுடைய, குலம்தரு நல்லோர் --- உயர்குடிப் பிறந்த
நல்லோர்கள், செல்வம் குன்றினும் ---
செல்வஞ் சுருங்கிய விடத்தும், தம்பால் இல் என்று
அலந்தவர்க்கு --- தம்மிடத்து வந்து இல்லை என்று கூறி வருந்தியவர்க்கு, உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ ---
தம் உயிரை மாறியாகிலும் கொடுப்பார் அல்லவா.
இந்நீர
ஆய வளங்குன்றினும், இன்மை கூறாத்
தன்னீர்மை
குன்றான் எனும் தன்மை பிறர்க்குத் தேற்ற
நன்னீர்
வயலின் விளைவு அஃகி நலிவு செய்ய
மின்னீர
வேணி மதுரேசர் விலக்கி னாரே. ---
தி.வி. புராணம்.
இதன்
பதவுரை ---
இந்நீரவாய வளம் குன்றினும் ---
இத்தன்மையவாகிய செல்வங்கள்
குறைந்தாலும், இன்மை கூறாத் தன்
நீர்மை குன்றான் எனும் தன்மை --- வறுமையைக் கூறாமையாகிய தன் இனிய பண்பினின்றும்
குன்ற மாட்டான் (இவ்வடியார்க்கு நல்லான்) என்னுந் தன்மையை, பிறர்க்குத் தேற்ற --- அஃது உணராத
மற்றையோருக்குத் தெளிவிக்க, நல் நீர் வயலின்
விளைவு அஃகி நலிவு செய்ய --- நல்ல நீர்வள மிக்க வயல்களில் விளைவு குறைந்து வருத்துமாறு, மின் நீர வேணி --- மின்போலும் ஒளி
வீசுந் தன்மையையுடைய சடையையுடைய,
மதுரேசர்
விலக்கினார் --- சோமசுந்தரக் கடவுள் அவ்விளைவை விலக்கியருளினார்.
இன்மை கூறாமை - தன்பால் வந்து இரந்தவர்க்கு 'என்னிடம் பொருளில்லை' யென்று கூறாமை; ஈதல்.
"இலன் என்னும் எவ்வம்
உரையாமை ஈதல்"
என்பது
காண்க. அன்பன், இயல்பு ஆண்டவனுக்குத்
தெரியுமாயினும், அவ்வியற்கையை
ஏனையோர்க்கும் தெரிவித்து உய்வித்தற் பொருட்டு அங்ஙனஞ் செய்தனர் என்றார். மின் ஈர
வேணி என்றுரைத்தலும் பொருந்தும். மதுசேர் தேற்ற நலிவு செய்யும்படி விலக்கினார்
என்க.
செய்கை
அழிந்து சிதல் மண்டிற்று ஆயினும்
பொய்யா
ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம்
உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர்
செயற்பா லவை. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
செய்கை அழிந்து சிதல் மண்டிற்றாயினும் பொய்யா
ஒரு சிறை பேர் இல் உடைத்தாகும் --- வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில்
கட்டுக் குலைந்து கறையான் கவ்விற்றாயினும் அது மழை ஒழுக்கில்லாத ஒரு பக்கத்தை
உடையதாயிருக்கும், அதுபோல; எவ்வம் உழந்தக் கடைத்தும்
குடிப்பிறந்தார் செய்வர் செயற்பாலவை --- வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி
அலைப்புண்ட காலத்தும் உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய
நற்செயல்களைச் செய்துகொண்டே இருப்பர்.
வறுமையிலும் குடிப்பிறந்தார் தம்
கடமைகள் செய்தலில் வழுவார்.
கொடுப்பின்
அசனம் கொடுக்க, விடுப்பின்
உயிர்
இடையீட்டை விடுக்க, எடுப்பிற்
கிளையுள்
கழிந்தார் எடுக்க, கெடுப்பின்
வெகுளி
கெடுத்து விடல். --- நான்மணிக்கடிகை.
இதன்
பதவுரை ---
கொடுப்பின் அசனம் கொடுக்க - ஒருவர்க்கு ஒன்று
கொடுப்பதானால் சோறுகொடுத்து உண்பிக்க; விடுப்பின் உயிர் இடையீட்டை விடுக்க ---
ஒன்றை விட்டுவிடுவதானால் உயிரைப் பற்றிய பற்றை விட்டுவிடுக; எடுப்பின் கிளையுள் கழிந்தார் எடுக்க ---
ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதனால்,
தன்
சுற்றத்தாருள் வாழ்நலங்கள் அற்று
ஏழைகளாய் உள்ளவர்களைத் தாங்கி மேலுயர்த்துக; கெடுப்பின்
வெகுளி கெடுத்துவிடல் --- ஒன்றைக் கெடுப்பதானால் சினத்தைக் கெடுத்து விடுக.
கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க; விடுப்பதானால் பற்றை விடுக்க; எடுப்பதானால் சுற்றத்தாருள் ஏழைகளை
எடுக்க; கெடுப்பதானால்
வெகுளியைக் கெடுக்க.
No comments:
Post a Comment