023. ஈகை - 02. நல்லாறு எனினும்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "பிறர் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுதல் வீட்டுலகிற்கு நல்ல வழிதான் என்றாலும், தனக்காகக் கொள்ளுதல் தீமையானது. வீட்டுலகை அடைய முடியாது என்றாலும் ஈதலே நல்லது" என்கின்றார் நாயனார்.

     கொள்ளுதல் தீது என்பதை, "ஏற்பது இகழ்ச்சி" என்னும் ஔவைப் பிராட்டியாரின் அருள்வாக்காலும், நாயனார் பின்னர் அறிவுறுத்தும் "இரவச்சம்" என்னும் அதிகாரத்தாலும் விளங்கும்.

     ஈகையால் மேல் உலக வாழ்வு நிச்சயம். ஒருக்கால், அது இல்லை என்று கூறுவார் இருந்தாலும், ஈகையை விட்டுவிடுதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது.

     தீயதை விலக்கினால் அல்லது, நல்லது விளங்காது என்பதால், "ஈதலே நன்று" நல்லது சொன்ன நாயனார், "கொளல் தீது" என்று தீயதும் உடன் கூறினார்.

திருக்குறளைக் காண்போம்....

நல்லாறு எனினும் கொளல் தீது, மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கொளல் நல் ஆறு எனினும் தீது --- ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது,

     மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று --- ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று.

         ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தல் காணலாம்....


திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர், துபோல்
அரசர் உழையர் ஆகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும், பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்,
உற்றெனன் ஆதலின் உள்ளி வந்தனனே,
ஈ என இரத்தலோ அரிதே, நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும், வெல்போர்
எறிபடைக் கோடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்பெருங் கானம் பாடல் எனக்கு எளிதே.   ---  புறநானூறு.

 இதன் பொழிப்புரை ---

    அலைமோதும் கடற்கரைக்குப் பக்கமாகச் சென்றாலும், தெரிந்தவர்கள் யாரேனும் எதிர்ப்பட்டால், அவர்களிடம் தாகம் தணிக்க, கடல் முழுதும் நீர் நிறைந்து இருந்தாலும், அது குடிக்க உதவாது என்பதால், நல்ல குடிநீர் எங்கே கிடைக்கும் என்று கேட்பதுதான் உலகத்து மக்கள் இயல்பு. அது போலத்தான், அரசர்கள் பெரும் செல்வம் உடையவர்களாக இருந்தாலும், வழங்கும் இயல்பு உடைய வள்ளல்களைத் தேடியே புலவர்கள் செல்வர். எனவே, நானும், பெறுவது அளவில் பெரியதா, சிறியதா என்று பார்க்காமல், உனது பெருங்குணத்தை எண்ணியே உன்னிடம் வந்துள்ளேன். கொடு என்று கேட்பது கடினமானதுதான், என்றாலும், எனக்கு நீ தந்தாலும், ஏதும் தராவிட்டாலும், போரில் எதிர் வரும் படைகளுக்கு அஞ்சி, புறுமுதுகு இட்டு ஓடாத ஆண்மை உடையவனே! தூய வெள்ளை ஆடையை விரித்துப் பிடிப்பது போல, மலை உச்சியில் இருந்து குளிர் நீர் அருவிகள் பல நெருங்கி விழும் வளம் மிக்க உன்னுடைய நாட்டைப் பாடுவது எனக்கு இயல்பானது.


ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
 உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
 உள்ளிச் சென்றோர்ப் பழியலர், அதனால்
புலவேன் வாழியர் ஓரி, விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே. ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     ஈ என்று பிறரிடம் சென்று இரந்து நிற்பது இழிவானது. அதைவிட இழிவானது, இல்லை என்று வந்து இரப்பவனுக்கு, ஈயேன் என்பது. ஒருவன் கொடு என்று கேட்பதற்கு முன்னரே, அவன் முகக் குறிப்பினை அறிந்து கொடுத்து உதவுவது உயர்ந்த செயல் ஆகும். அப்படிக் கொடுப்பதையும் வேண்டாம் என்று மறுத்தல், அதனினும் உயர்ந்த செயல் ஆகும். கடல் முழுதும் தெளிந்து, நிறைந்து, பரந்து இருக்கின்றது நீர். ஆனாலும், நீர் வேட்கை உடையவர்கள், அந்தக் கடல் நீரைப் பருக மாட்டார்கள். ஆனால், ஆடும் மாடும் சென்று கலக்கிய சிறிய குட்டையில் உள்ள சேறு கலங்கிய நீரானாலும் கூட, அதைத் தேடிப் பலரும் செல்வர். இரவலர் தாம் பரிசில் பெறமுடியாத பொழுது, தாம் புறப்பட்ட நேரத்தையும், சகுனத்தையும் நினைவந்து வருந்தி, அவற்றைப் பழிப்பார்கள். அல்லாமல், பரிசில் பெற விரும்பிச் சென்றவர்களைப் பழிக்கமாட்டார்கள். ஏனவே, நீ இப்போது பரிசில் தராது, இல்லை என்று சொன்னாலும், வானமழை போல வரையாது வழங்கும் வள்ளல் ஓரியே! நீ வாழ்வாயாக.


மேவலன் அல்லை நீயே,
         நட்டவன், மேலை வானோர்
யாவரும் அருந்தும் ஆற்றால்,
         அறம் புகழ் எனக்கே ஆக,
ஆ உரு ஆதி என்றாய்,
         அன்னதே செய்வேன் என்றான்,
ஈவதே பெருமை அன்றி
         இரக்கின்றது இழிபே அன்றோ. --- தி.வி.புராணம்.

இதன் பதவுரை ---

     மேவலன் அல்லை --- நீ எனக்குப் பகைவன் அல்லை; நீயே நட்டவன் --- நீயே நண்பன்; மேலை வானோர் யாவரும் அருந்தும் ஆற்றால் --- விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரும் உண்ணும் இயல்பினால், அறம் புகழ் எனக்கே ஆக --- புண்ணியமும் புகழும் எனக்கு உளவாக, ஆ உரு ஆதி என்றாய் --- ஆனின் உருவாகி வருவாய் என்றாய், அன்னதே செய்வேன் என்றான் --- அங்ஙனமே செய்வேன் என்று கூறினான், ஈவதே பெருமை அன்றி --- (எஞ்ஞான்றும்) கொடுத்தலே பெருமையல்லாமல், இரப்பது இழிபே அன்றோ --- இரத்தல் இழிபல்லவா.


வெள்ளியை ஆதல் விளம்பினை. மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்.
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். --- கம்பராமாயணம், வேள்விப்படலம்.

இதன் பதவுரை ---

     வெள்ளியை ஆதல் விளம்பினை --- நீ வெள்ளறிவு உடையனாதலின். உன் இயற்கைக்கேற்ப சொல்லினை;  மேலோர் --- மேன்மைக் குணம் உடைய பெரியோர்கள்;   வள்ளியர் ஆக --- தாம் வள்ளமை உடையோராயின்;   இன் உயிரேனும் --- தமது  இனிய உயிரையே என்றாலும்;  வழங்குவர் அல்லால் --- கொள்வோர்க்குக் கொடுப்பாரே அல்லாமல்; எள்ளுவ என் சில --- சில கூறி பரிகசிப்பரோ?; கொள்ளுதல் தீது, கொடுப்பது நன்று ---   பிறர்பால் ஏற்றல் தீமை, ஈதலே நன்மையாகும்.

     கொள்ளுதல் தீது, கொடுப்பது நன்று. "நல்லாறெனினும்   கொளல் தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" என்ற  திருக்குறள் கருத்து அமைந்த பாட்டு இது.


நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம்கோ,
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து,
இனிது கண்டிசிற் பெரும முனிவு இலை,
வேறு புலத்து இறுக்குந் தானையொடு
சோறுபட நடத்தி நீ துஞ்சாய் மாறே. --- புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     உன்னைப் புகழ்ந்து பாடிய புலவன், பின்னும் ஒரு வேந்தனிடம் சென்று பரிசில் பெறத் தேவை இல்லாத அளவுக்கு, அளவில்லாமல் கொடுக்கும் வள்ளலே! மாந்தரஞ் சேறல் இரும்பொறை ஆளும் நாடு, வானவர் நாட்டினை ஒத்தது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். உன்னைக் கண்டு மகிழ்ந்தேன். அரசர் பெருமானே! தளராது  தடையின்றிப் படை நடத்திச் சென்று பகையினை வென்று, நாட்டில் அறமும் தழைக்க வாழ்வாயானல் உனக்குச் சாவு இல்லை. நீ என்றும் இறவாத புகழ் பெறுவாய்.


உட்பகை ஒருதிறம் பட்டு எனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலில், சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்,
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே. ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     சோழவேந்தன் நாடில் உட்பகை இல்லை. பறவைகளின் தீ நிமித்தங்களால் உண்டான பகையும் இல்லை. எனவே, நாம் நமக்குள்ளாகவே போரிட்டு மடிவோம் என்று தினவெடுத்த தோள் உடைய மறவர்கள் தோள் தட்ட, அவருடைய தினவு அடங்கப் பறை முழக்கிச் செல்லும் தேர்க்காலில், கள் உண்போர் கை நடுங்கச் சிதறவிட்ட மது நிறைந்து கிடக்க, அந்தச் சகதியிலே பாகர் இன்றி ஆடிக் கிடக்கும் யானை, அப் பறை ஒலி கேட்டு, போர் என்று எழுகின்ற வீர உணர்வு உடையவன் உறையூரில் இருக்கும் எமது தலைவன். அவனிடம் செல்க. அவன் பிறரிடம் சென்று பாடவேண்டாத அளவுக்குப் பெரும் செல்வத்தை அளிப்பான்.


இரவி னானே ஈத்தோன் எந்தை,
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்
இரப்பச் சிந்தியேன், ரப்படு புணையின்
உளத்தின் அளைக்கும் மிளிர்ந்த தகையேன்,
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி
ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாது என் சிறு கிணைக்குரலே. ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     அந்த இரவுப் போதில் எனக்கு வேண்டிய பரிசில்களை எல்லாம் தந்தான். என் தலைவன் அவன். அன்றில் இருந்து இன்று வரைக்கும் வேறு யாரிடமும் சென்று நான் இரங்கும் நிலை உண்டாகவில்லை. மற்றவர் உள்ளம் எண்ணுவதைக் குறிப்பால் அறிந்துகொள்ளும் புலமை உடைய நான், நீர் நிலைகளின் தலைமடை போல, மனதில் நிறைந்த மகிழ்ச்சி உடையவனாய் இருக்கின்றேன். எனவே, ஒவ்வொரு நாளும், இரவலர்க்கு இல்லை என்னாது வழங்கும் வள்ளல்களை நாடிப் போய், அவர்கள் வீட்டு வாசல் முன் நின்று, அவர்களைப் போற்றிப் பாடுதற்கு என்னுடைய சிறிய தடாரிப் பறை இப்போது எல்லாம் இசைப்பது இல்லை.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் --- சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
அறிமடமும் சான்றோர்க்கு அணி. --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப --- செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை கேட்டறிதும் --- காட்டில் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் --- ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி --- அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.

     அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.

     அறிமடம் --- அறிந்தும் அறியாது போன்று இருத்தல். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி. மயிலுக்குப் போர்வை ஈந்தான் பேகன். இவர்கள் காட்டில் படர்ந்த முல்லைக்கும், வாடையால் மெலிந்த மயிலுக்கும் வேறு பொருள்களைக் கொண்டு அவைகளின் துன்பத்தை நீக்க அறிவாராயினும், அறியாதவர்கள் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக் கொடுத்து உதவியால், அறிமடம் ஆயிற்று. அறியாதவர்கள் போன்று கொடுத்துச் சேறலின் அவர்கள் செயல்களால் புகழ் என்றும் நிலைபெற்று நிற்றலால், சான்றோர்க்கு அணி எனப்பட்டது.


முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் ஈத்த இறைவன்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன். ---  புறப்பொருள் வெண்பாமாலை.

இதன் பொழிப்புரை ---

     முல்லைக்குப் பொன் தேரினையும், மயிலுக்கு அழகிய நீலப் போர்வையினையும், எல்லை கடலாக உடைய உலகத்தே தம்புகழ் விளங்குமாறு, முற்காலத்தே, அவை இரவாத போதும் கொடுத்த வள்ளல்களைப் போல, நீயும் கரவு ஏதும் இன்றிக் கொடுத்தலே நினக்குக் கடமையாகும்.


இந்நீர ஆய வளங்குன்றினும், இன்மை கூறாத்
தன்னீர்மை குன்றான் எனும் தன்மை பிறர்க்குத் தேற்ற
நன்னீர் வயலின் விளைவு அஃகி நலிவு செய்ய
மின்னீர வேணி மதுரேசர் விலக்கி னாரே. ---  தி.வி. புராணம்.

இதன் பதவுரை ---

     இந்நீரவாய வளம் குன்றினும் --- இத்தன்மையவாகிய செல்வங்கள் குறைந்தாலும், இன்மை கூறாத் தன் நீர்மை குன்றான் எனும் தன்மை --- வறுமையைக் கூறாமையாகிய தன் இனிய பண்பினின்றும் குன்ற மாட்டான் (இவ்வடியார்க்கு நல்லான்) என்னுந் தன்மையை, பிறர்க்குத் தேற்ற --- அஃது உணராத மற்றையோருக்குத் தெளிவிக்க, நல் நீர் வயலின் விளைவு அஃகி நலிவு செய்ய --- நல்ல நீர்வள மிக்க வயல்களில் விளைவு குறைந்து வருத்துமாறு, மின் நீர வேணி --- மின்போலும் ஒளி வீசுந் தன்மையையுடைய சடையையுடைய, மதுரேசர் விலக்கினார் --- சோமசுந்தரக் கடவுள் அவ்விளைவை விலக்கியருளினார்.

     இன்மை கூறாமை --- தன்பால் வந்து இரந்தவர்க்கு 'என்னிடம் பொருளில்லை' யென்று கூறாமை; ஈதல்.

"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்"

என்பது காண்க. அன்பன், இயல்பு ஆண்டவனுக்குத் தெரியுமாயினும், அவ்வியற்கையை ஏனையோர்க்கும் தெரிவித்து உய்வித்தற் பொருட்டு அங்ஙனஞ் செய்தனர் என்றார்.


செல்வ மேவிய நாளில் இச்செயல்
         செய்வது அன்றியும், மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும்
         வல்லர் என்று அறிவிக்கவே,
மல்லல் நீடிய செல்வம் மெல்ல
         மறைந்து, நாடொறும் மாறிவந்து,
ஒல்லையில் வறுமைப் பதம் புக
         உன்னினார் தில்லை மன்னினார்.   --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     தமக்குச் செல்வம் பெருகி இருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்து  வந்ததன்றி, துன்பத்தை விளைவிக்கும் வறுமை உண்டாய விடத்தும், தமக்கு உரிய உண்மையான பத்திமையால் இவ்வாறு செய்வர் என்பதை யாவர்க்கும் அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நிலைமை திரிய, விரைவில் வறுமைத் தன்மையை அடையுமாறு, தில்லை மாநகரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டருளினார்.


நல்நெறி என்னினும், நான் இந் நானில
மன்உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மாமுடி
தொல்நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.
                                             ---  கம்பராமாயணம், ஆறுசெல் படலம்.

இதன் பதவுரை ---

     நான்  நல் நெறி என்னினும் --- நான் (அரசு புரிவது) தரும நெறியே என்று நீங்கள் சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன் உயிர்ப் பொறை --- இப் பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து இருந்து வாழ்கிலேன் --- தூக்கி அரசனாக இருந்து வாழ உடன் பட மாட்டேன்; அன்னவன் தனைக் கொணர்ந்து --- அந்த (அரசாட்சிக்குரிய) இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி --- மலர் மாலையோடு கூடிய மகுடத்தை; தொல்நெறி முறைமையின் --- தொன்று தொட்டு வரும் மரபு வழிப்படி; சூட்டிக் கண்டிர் --- (அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.

     நாவாற்றலால் எதுவும் நியாயமாக்கப்பட்டுவிடும் என்பது கருதிநல்நெறி என்னினும் என்றான் பரதன்.


ஈவது நன்று, தீது ஈயாமை, நல்லவர்
மேவது நன்று மேவாதாரோடு, - வாது
கேட்டுத் தலைநிற்க, கேடுஇல் உயர்கதிக்கே
ஓட்டுத் தவம் நிற்கும் ஊர்ந்து. ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     ஈவது நன்று --- (பிறர்க்கு வேண்டிய பொருளைக்) பொடுப்பது நன்மையாம்; ஈயாமை தீது --- கொடாமை தீமையாம்; நல்லவர் மேவாதாரோடு மேவது நன்று --- நல்லோர் பொருந்ததவரோடு பொருந்தி இருப்பது நன்மையாம்;  ஓவாது கேட்டு தலை நிற்க --- இடையறாமல் (நன்னெறிக்குக் காரணமாகிய நூற் பொருளைக்) கேட்டு, (அந்நெறியின்) கண்ணே நிற்றலைச் செய்க, (நின்றால் அந்நிலை) கேடு இல் உயர் கதிக்கு ஓட்டு தவம் ஊர்ந்து நிற்கும் --- அழிவில்லாத, உயர்ந்த வீட்டு நெறியின் கண்ணே விரைந்து செல்லுஞ் செலவின்கண் மிகுதியாக மேம்பட்டு நிற்கும்.

      ஈகை நன்று, ஈயாமை தீது, தம்மைச் சேராதவரோடும் நல்லவர்கள் ஒருவாறு சேர்ந்தாற்போல் இருப்பது நன்று, நல்லன கேட்டு அவற்றுக்குத் தக ஒழுகுதல் அவ்வொழுக்கம் மேன்மேல் உயர்ந்து நற்பேற்றிற்கு மக்களைச் சேர்ப்பியா நிற்கும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...