023. ஈகை - 01. வறியார்க்கு ஒன்று





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 23 -- ஈகை

     "ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே" என்னும் தொல்காப்பியச் சூத்திரப்படி, ஈகை என்பது உயர்ந்தோன் ஒருவன் அவனிலும் தாழ்ந்தோனுக்கு, அத் தாழ்ந்தோன் வேண்டியதை மகிழ்ந்து அளித்தல் ஆகும். தரித்திரராய் வந்தோர்க்கு, ஒன்றைக் கொடுத்துப் பிறிது ஒன்றை வாங்காமை ஈகை ஆகும்.

     எனவே, இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "ஒரு பொருளும் இல்லாதவர்க்கு, அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே, பிறர்க்குக் கொடுத்தல் என்னும் ஈகை ஆகும். அது அல்லாமல், தரித்திரர் அல்லாது, ஒத்தார்க்கும் உயர்ந்தார்க்கும் கொடுத்தல் என்பது, ஒரு பயனை எதிர்பார்க்கும் தன்மையினை உடையது" என்கின்றார் நாயனார். ஒத்தார்க்கும், உயர்ந்தார்க்கும் கொடுப்பவை திரும்பவும் தம்மிடம் வருதலினால், அது ஈகை ஆகாது.

     ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும், ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்" கூறுகின்றது. அது வருமாறு....

"மாண்பு உடையாளர், கேண்மையர், தத்தம்
     வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,
சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்
     தீர்ந்தவர், தந்தை, தாய், குரவர்,
காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர்
     ஒன்பதின்மரும் உளம் களிப்ப,
வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று ஒன்றே
     கோடியாம் என மறை விளம்பும்".

"முகன் எதிர் ஒன்றும், பிரியின் மற்றுஒன்றும்
     மொழிபவர், விழைவுறு தூதர்,
அகன்ற கேள்வி இலார், அருமருத்துவர்கள்,
     அரும்பொருள் கவருநர், தூர்த்தர்,
புகல்அரும் தீமை புரிபவர், மல்லர்,
     செருக்கினார், புன்தொழில் தீயோர்,
இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்
     ஈந்திடல் பழுது என இசைப்பார்".

திருக்குறளைக் காண்போம்...

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
குறி எதிர்ப்பை நீரது உடைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை --- ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது,

     மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து --- அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.

         (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தல் காணலாம்...

ஏற்ற கைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன், - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப! மாறு ஈவார்க்கு ஈதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.     --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     மலி கடல் தண் சேர்ப்ப --- வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையைச் சார்ந்த நிலத்துக்கு உரியவனே!

     ஆற்றின் --- ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது --- இரந்த கையை மாறாமல், இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் --- கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின் கடமையாகும். மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து --- எதிர் உதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல், கடனிலும் விளக்கமான கடன் தருதல் என்னும் பெயருடையது.

         எதிர் உதவி ஏதும் எதிர்பார்க்காது, வறிஞர்க்கு இயன்றதை மாறாமல் உதவுவதே ஆண்மகனின் கடமை ஆகும்.


ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை;
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே... --- மணிமேகலை.

இதன் பதவுரை ---

     ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் --- தமது வறுமை நிலையைப் பொறுத்துக் கொள்ளும் வன்மை உடையோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோரே ஆவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை --- வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் --- அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே --- உணவினை அளித்தோரே உயிர் கொடுத்தோர் ஆவர்.

'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை.. ---  கலித்தொகை.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன், பிறரும்
சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே. --- புறநானூறு

 இதன் பதவுரை ---

    இம்மைச் செய்தது --- இப் பிறப்பின்கண் செய்தது ஒன்று; மறுமைக்கு ஆம் --- மறுபிறப்பிற்கு உதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் --- என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து, அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என --- அமைந்தோர் பிறரும் போய வழி என்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை --- அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்ணம்.

         மறுமைப் பயன் அறப் பயனாதலின், இம்மையில் நலம் செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை “அறவிலை வணிகர்” என்றார். அமைந்தோர், நற்பண்புகளால் நிறைந்தவர்.


வைப்பானே வள்ளல், வழங்குவான் வாணிகன்,
உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு --- உய்ப்பான்
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ன் ஆரத்
தொடங்கானேல் சேறல் துணிவு.    --- சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     வைப்பானே வள்ளல் - பொருளை ஈட்டி வைப்பவனே வள்ளலென்று சொல்லப்படுவான்; வழங்குவான் வாணிகன் --- ஈட்டிய அப்பொருளைப் பிறர்க்குக் கொடுப்பவனே வாணிகன் என்று சொல்லப்படுவான்; உயர்கதிக்கு உய்ப்பானே ஆசான் --- (ஒருவனுக்கு நல்லறிவூட்டி அவனை) மேலான பதவிக்கு செலுத்தக் கூடியவனே சிறந்த ஆசிரியனாவான்; உயர்கதிக்கு உய்ப்பான் --- உயர்கதியில் செலுத்த வல்லோன், உடம்பின் ஆர் வேலி --- உடம்பின்கண் பொருந்தியுள்ள உயிராகிய வேலியை, ஒருப்படுத்து ஊன் ஆர தொடங்கானேல் சேறல் துணிவு --- நீக்கி அவற்றின் தசையை உண்ணத் தொடங்கான் ஆயின், (அவன்) உயர்கதியிற் செல்லுதல், உண்மையாம்.

     பிறர்க்குப் பயன்படும்படி பொருளை ஈட்டி வைப்பவன் வள்ளல், அவற்றைப் பயன் கருதி எவனேனும் வழங்குவானாயின் அவன் வாணிகனை ஒப்பான், மாணாக்கனை உயர்கதிக்குச் செலுத்துபவனே ஆசிரியன் ஆவான், மாணாக்கன் உயிர் கோறலும் ஊன் புசித்தலும் இல்லானானால் உயர்கதிக்குச் செல்லல் துணிவேயாம்.


தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல,
அடுத்தவயல் குளம் நிரப்பி அறம்பெருக்கி, அவனி எலாம்
உடுத்தகடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என
மடுத்து அறியாப் புனல்வையைக் கரையஉளது வாதவூர். ---  தி.வி. புராணம்.

இதன் பதவுரை ---

     தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல --- ஒருவனைப் பற்றிய வறுமையினையும் அவனால் பிறர்க்கு ஆகும் பயனையும் சீர்தூக்கிக் கொடுப்பார் போல, அடுத்த வயல் குளம் நிரப்பி --- அடுத்துள்ள வயல்களையும் குளங்களையும் நிரம்பச் செய்து, அறம் பெருக்கி --- (அதனால்) அறத்தினைப் பெருக்கி, அவனி எலாம் உடுத்த கடல் --- நிலவுலகு அனைத்தையும் சூழ்ந்த கடலானது, ஒருவர்க்கும் உதவாத உவரி என --- ஒருவருக்கேனும் பயன்படாத உவர் நீரை உடையதெனக் கருதி, மடுத்து அறியாப் புனல் வையைக் கரை --- அதில் பாய்ந்து அறியாத நீரினை உடைய வையை ஆற்றினது கரையின்கண், வாதவூர் உளது --- திருவாதவூர் என்னும் திருப்பதி உள்ளது.

     "வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்
     குறி எதிர்ப்பை நீர உதுடைத்து"

என்பது வாயுறை வாழ்த்தாகலின், வறியார்க்கே ஈதல் வேண்டும்; அவருள்ளும் பிறர்க்குப் பயன்படுவார்க்கு ஈதல் சிறந்தது. வயலும் குளமும் வறியனவும் பிறர்க்குப் பயன்படுவனவும் ஆகும்.

     உவரி - உவர் நீர் உடையது;  வைகை ஆறு இயல்பாகக் கடலில் கலவாமையைக் கடல் வறுமை இன்மையும் பயன்படாமையும் உடையது எ, அதில் மடுத்து அறியாது எனக் கற்பித்துக் கூறினமையால், ஒரு காலத்தில் வையையாறு கடலிற் கலவாது ஆயிற்றென அறிக.


இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே.
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே. ---  வெற்றிவேற்கை.

இதன் பதவுரை ---

     இல்லோர் இரப்பதும் --- பொருள் இல்லாதவர் யாசிப்பதும், இயல்பே இயல்பே --- இயற்கையே இயற்கையே.

     இரந்தோர்க்கு ஈவதும் --- இல்லை என்று வந்து யாசித்தவர்க்குக் கொடுத்து உதவுவதும், உடையோர் கடனே --- பொருளுடையவர் கடமையே.

     வறியவர் இரப்பது இயற்கையே அன்றிப் புதுமையன்று.
வறியராய் இரப்பவர்க்கு ஈவது பொருள் உடையவர் கடமையே.


பயன் நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை, - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப!
கூலிக்குச் செய்து உண்ணுமாறு. ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     வயமாபோல் ஆலித்து பாயும் அலைகடல் தண்சேர்ப்ப --- வெற்றியையுடைய குதிரையைப் போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே!,

     பயன் நோக்காது --- மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி, ஆற்றவும் பாத்தறிவு ஒன்று இன்றி --- மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி, இசை நோக்கி --- புகழ் ஒன்றனையே நோக்கி, ஈகின்றார் ஈகை --- கொடுக்கின்றவர்களது ஈகை, கூலிக்கு செய்து உண்ணுமாறு --- கூலிக்குத் தொழில் செய்து உண்ணு நெறியோடு ஒக்கும்.

         'பாத்தறிவு ஒன்று இன்றி' என்றது வறியோர், அவரல்லாதோர் என்று பகுத்துணர்தல் இன்றிப் புகழ் ஒன்றனையே கருதி ஈதலை. அங்ஙனம் ஈதல் புகழ் பயக்குமாயினும், மறுமையின்பத்தைக் கொடாது ஒழிதலே அன்றி, ஈகை எனவும் படாது என்பதாயிற்று.
புகழ் ஒன்றனையே கருதிப் பகுத்துணர்வு இன்றி ஈதல், கூலிக்கு வேலை செய்வார் செயல் எத்தகையதாயினும் அதைக் கருதாது செய்தலை ஒக்கும்.


ஓடி எங்கும் உலரும் பைங் கூழ்களை
நாடி, மைமுகில் நன்மழை பெய்தல்போல்,
வாடி நையும் வறிஞர் இருக்கையைத்
தேடி மேலவர் செய்வர் உதவியே.   ---  நீதிநூல்.   

இதன் பொழிப்புரை ---

     மழைஇன்றி வாடும் நெற்பயிர்களை ஆராய்ந்து, விரைந்து சென்று எவ்விடத்தும் கரிய மேகம் மழையைப் பொழிதல்போல, அறிவுடையோர் வாடி வருந்தும் ஏழைகள் தங்கும் இடத்தைத் தேடிச்சென்று வேண்டும் உதவிகளைச் செய்வர்.


பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாண்இழை விறலி மாலையொடு விளங்க,
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்,
யாரீரோ என வினவல், ஆனாக்
காரென் ஒக்கல் கடும்பசி இரவஒ!
வெல்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியே மன்னே இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅ மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ,
கடாஅ யானைக் கலிமான் பேகன்,
எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ, அன்றே பிறர்,  
வறுமை நோக்கின்று, வன் கைவண்மையே.    ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

    பாடிப் பரிசில் பெறும் பாணர் போலக் காணப்படும் நீங்கள், தூய பசும்பொன்னால் ஆன தாமரைப் பூவைச் சூடி இருக்கிறீர்கள். உம்முடன் வந்த பெண்களாகிய விறலியர் உயர்ந்த பொன்னால் ஆன மணிமாலைகளை அணிந்திருக்கின்றனர். நீங்கள் எல்லாம் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் இருந்து, குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, இந்தக் காட்டுப் பகுதியில், உங்கள் ஊரில் மகிழ்ச்சியாக இருப்பது போல் இருக்கின்றீர்களே, நீங்கள் எல்லாம் யார் என்று கேட்க நினைக்கின்றீரா, புலவரே! நாங்கள் உங்களைப் போலத்தான். பசியாலும், வறுமையாலும் வாடும் சுற்றத்தோடும், வெற்றி வேலைத் தாங்கிய வேந்தன் பேகனைக் கண்டு, அவனிடம் பரிசில் பெறும் முன்பு இப்படித்தான், உங்களிலும் கீழாகத் துன்பத்தில் துவண்டுகொண்டு இருந்தோம். பேகன் தந்த கொடையால் எங்கள் நிலைமை இப்போது மாறிவிட்டது. நீங்கள் கண்டு வியக்கும் அளவுக்கு, நாங்கள் பொன்னும், மணியும் பூண்டு, குதிரையும் தேரும் பெற்று இருக்கின்றோம். எங்களுக்கு இப்படிக் கொடை தந்து அருளிய பேகன், ஆடும் மயிலுக்குத் தனது மேலாடையை அணிவித்த மேன்மையாளன். மதம் மிக்க யானைகளும், வலிமை மிக்க குதிரைகளும் உடைய அந்தப் பேகன், அளவு இல்லாமல் பலருக்கும் அள்ளிக் கொடுப்பவன். அதையும், அதனால் வரும் நன்மையையும், புகழையும், மறுபிறப்பில் வரும் புண்ணியத்தையும் எண்ணி, எதிர்பார்த்துக் கொடுக்காமல், தன்னைத் தேடி வருபவர் வறுமை அறிந்து கொடுக்கும் வள்ளன்மை உடையது அவன் கைவண்ணம். (எனவே, நீயும் சென்று, அவனைப் பாடிப் பரிசில் பெற்று வறுமை நீங்கி, எங்களைப் போல் வளமான வாழ்வு பெறுவாயாக)

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...