மனிதன் எப்படி வாழவேண்டும்




     எங்கள் ஊரில் இருந்த சித்தர் சிவானந்த மௌன சுவாமிகள் பேசமாட்டார். சாக்குக் கட்டியால் அவருக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் தரையில் எழுதியும், சைகை செய்தும் பல அறிவுரைகளை வழங்குவார். மனிதன் மனிதனாக வாழ்ந்தால் தான், இறைவனை அடைய முடியும் என்னும் வாழ்வியல் உண்மைகளை அறிவுறுத்துவார். சீகாருண்ணியத்தை மிகவும் வலியுறுத்தவார். திருக்கோயிலில் அன்னதானம் என்னும் நடைமுறையை, 1960-களிலேயே வகுத்துக் காட்டிய மகான். தினமும் பசித்தவர்களுக்கு, கூழ், கஞ்சி, சோறு தந்தருளிய காருண்ணிய சீலர் அவர்.

     சுவாமிகளைச் சூழ்ந்து எப்போதும் பத்துப் பேராவது இருப்பார்கள். மாலை மற்றும் இரவுக் காலங்களில் இன்னும் பலர் இருப்பார்கள். இரவு பத்துப் பதினோரு மணிவரையில் கூட இது தொடரும். எதையாவது சுவாமிகள் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார். சுற்றி உள்ளவர்கள், அவரவர் எப்படிப் புரிந்து கொள்ளுகின்றார்களோ, அப்படி சுவாமிகள் இதைத்தான் சொல்லுகின்றார் என்று விரித்துச் சொல்லுவர். சரியாகப் புரிந்துகொள்ளவில்லையானால், சுவாமிகள் திருத்துவார்.

     ஒரு நாள் இரவு, மனிதன் எப்படி வாழவேண்டும் என்று சொல்ல வந்த சுவாமிகள், சாக்குக் கட்டியால் எழுதியும், சைகையாலும், மனிதன் நாக்கைப் போலவும், பசுவைப் போலவும், பூவைப் போலவும் வாழவேண்டும் என்று விளக்கினார்.

     அப்போது, அங்கு இருந்த தமிழ் வித்துவான் ஒருவர், சுவாமிகள் சொன்னதைச் சுவைபட,

நாவைப் போல் வாழவேண்டும்,
ஆவைப் போல் வாழவேண்டும்,
பூவைப் போல் வாழவேண்டும்,

என்று சுவாமிகள் சொல்லுகின்றார் என்று தொகுத்துக் கூறினார். சுவைபடச் சொன்னது, சுவாமிகளுக்கு மிக்க மகிழ்வைத் தந்தது. மிகவும் விரிவாகச் சைகைகளால் விளக்கினார் சுவாமிகள்.

     எங்கள் தமிழ் ஆசிரியர், திரு விநாயகமூர்த்தி அவர்கள், அப்போது மாற்றலாகி இருந்தார். தொடர்பு இல்லை. எனக்கு ஆங்கில அறிவை ஊட்டி வளர்த்தவர் ஆசிரியர் திரு அலிப்பூர் ரஹீம் அவர்கள். தமிழிலும் அவருக்கு நல்ல ஈடுபாடு இருந்தது. கவிதைகளைப் புனைவார். அவரிடம் சுவாமிகள் சொன்னதைச் சொன்னேன். கேட்டு மகிழ்ந்த அவர், விநாயகமூர்த்தி இருந்தால் நல்ல விளக்கம் தருவார், நம் தமிழ் ஐயா இங்கு இல்லையே என்றார். விஞ்ஞானப் பாட ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள், இனிய தமிழில் வல்லவர். அவரும் மேல் விளக்கம் தர, விநாயகமூர்த்தி இல்லையே என்று வருந்தினார்.

     இந்த ஆசிரியர்கள் எல்லாம், பள்ளி நேரம் முடிந்த பிறகு ஒன்று கூடி, மாணவர்களை வைத்துக் கொண்டு, நல்ல செய்திகளைப் பகிர்பவர்கள். நான் செய்த தவம்.

     பின்னாளில், நான் பல நூல்களை முயன்று தேடிப் படித்து, பல ஆசான்களின் சந்நிதியில் இருக்கும் வாய்ப்புப் பெற்றேன். அப்போது தான், நீதிசாரம் என்கின்ற நீதிவெண்பா என்னும் நூலில் எனக்குப் பரிச்சயம் உண்டானது.

     எங்கள் சுவாமிகள் சொன்ன நாவைப் போல் இரு என்ற அறிவுரைக்குப் போதுமான விளக்கம் அந்த நூலில் கிடைத்தது. எனது மாணவர்கள் பலருக்கும் பின்னாளில் சொல்லி வந்தேன், வருகின்றேன்.

     நாக்கு உணவின் சுவையை அறியும் தன்மை உடையது. உண்ட உணவை வாங்கி, பற்களுக்கு மென்று தருவதற்குத் தள்ளி உதவி, மென்றதை உள் விழுங்குவது.
சில நேரங்களில் பற்களால் துன்பப் படுவதும் உண்டு.

     தன்னோடு இருந்துகொண்டே தனக்குக் கேடு விளைவிக்கும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்டே, நாவானது சுவையை அனுபவிப்பது போல, வாழ்வில் பகைவர், வேண்டாதவர் பலர் இருந்தாலும், அவர்களிடம் உண்மை அன்பைக் காட்டி, அவர்கள் மூலமும் நன்மையை அடைதல் நல்லோர் செயல் ஆகும் என்று நீதிவெண்பா கூறும் பாடலைப் பார்ப்போம்....

    
பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவை அருந்துமா போல் --- தொகைசேர்
பகைவரிடம் மெய் அன்பு பாவித்து, அவரால்
சுகம் உறுதல் நல்லோர் தொழில்.

     நாவானது, இரு தொழில்களைச் செய்யும்.

     உணவை வாங்கி, சுவை அறிந்து, அனுபவிக்க பற்களிடம் தள்ளி, பக்குவமாக வாங்கி, வயிற்றுக்குள் அனுப்பும்.

     மன உணர்வை வாக்காக வெளிப்படுத்தவும் செய்யும்.

     ஒருவனது நாக்கின் நுனியில் இனியசொல் இருக்குமானால் மலர்மகளும், இனிய சொல்லை உடைய நல்லோரும் அவனை நெருங்கி இருப்பர். அல்லாமல், நாக்கு நுனியானது வன்சொற்கள் பேசி வலிதாகுமானால், மலர்மகளும் சேரமாட்டாள். அதனால் இறப்பும் வரும் என்று நீதிவெண்பா என்னும் நூல் கூறும் பாடலைப் பார்ப்போம்...

நாவின் நுனியில் நயம் இருக்கின், பூமாதும்
நா இனிய நல்லோரும் நுண்ணுவார், - நாவின்நுனி
ஆம் கடினம் ஆகில் அத்திருவும் சேராள், முன்
ஆங்கே வரும் மரணமாம்.

     உலக வாழ்வு அல்லல்கள் பல நிறைந்தது. பொறாமை, கோபம், குரோதம், பகைமை, கோள் சொல்லுதல், புறங்கூறுதல், சமயம் பார்த்துக் காலை வாருதல், முதலிய கொடுமைகள் நிறைந்தது. அவைகளின் இடையே மனிதன் சுகமாய், தானும் வாழவேண்டும், பிறரையும் வாழ்விக்க முயலவேண்டும். இத்தகைய அரிய படிப்பினையை, நாவைக் கொண்டு அழகாக, எனது சுவாமிகள் மட்டுமல்ல நமது முன்னோர்களும் அழகாகக் காட்டி உள்ளார்கள்.

     இது, "நாவைப் போல் இரு" என்று எமது சுவாமிகள் விளக்கியது.

     அடுத்து, புல்லையும், நெல்லால் பயன்கொண்டு மனிதன் நீக்கிய வைக்கோலையும், தண்ணீரையும், கழுநீரையும் உட்கொண்டு, பசுவானது, எல்லோருக்கும் மருந்தாகவும், உணவாகவும் உள்ள பாலைத் தருகின்றது. உலகில் உள்ள உயிர்கள் உண்ட உணவானது, மலமாகக் கழிந்தால், அது பிறருக்குப் பயன் தருவது இல்லை. பசுவின் சாணமும், கோமயமும் எல்லோருக்கும் பயன் தருகின்றது. சுவை நிறைந்த உணவை உண்ணும், உயர்ந்த பிறவியான மனிதனின் கழிவுகூட வெறுக்கப்படுகின்றது.

     எல்லாத் துன்பங்களையும், இழிவுகளையும் தாங்கிக் கொண்டு பிறருக்கு நலம் புரிவது. அந்தப் பசுவைப் போல மனிதன் வாழவேண்டும். "பாலைப் பொழிந்து தரும் பாப்பா, அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா" என்றார் அமரகவி.

     மலரானது மென்மையும், மணமும் நிறைந்து மகிழ்வைத் தருகின்றது. மனிதர்கள் சூடிக் கொள்ள மட்டுமன்றி, உயர்ந்த கடவுள் வழிபாட்டிற்கும் செல்லுகின்றது.

     நாவும், ஆவும், பூவும் போல, மனிதன் விநயமும், நயமும் படிந்து வாழ்ந்து, அமைதியும், அடக்கமும் கொண்டு, அறமாகிய பண்பும், அன்பாகிய பயனும் தழைத்து வாழவேண்டும் என்னும் நல்லதொரு வாழ்வியல் உண்மையை எனது சுவாமிகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது.

    


No comments:

Post a Comment

61. புத்தாடை உடுக்கும் நாள்

  61.  புத்தாடை உடுக்கும் நாள் ----- "கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்      கட்டலாம் புதிய சீலை;   கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில...