024. புகழ் - 01. ஈதல் இசைபட





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இல்வாழ்க்கை என்னும் அதிகாரம் தொடங்கி, ஈகை என்னும் அதிகாரம் வரை உள்ள பத்தொன்பது அதிகாரங்களில் சொல்லப்பட்ட பிரமசாரி முதலியவர்க்குப் பங்கிட்டு உண்ணுதல், மைந்தரைச் சபையில் முந்தி இருக்கச் செய்தல், சுற்றத்தாரிடம் அன்பாய் இருத்தல், விருந்தோம்பல், செய்ந்நன்றி அறிதல் முதலிய இல்வாழ்க்கைக்கு உரிய அறங்களில் தப்பாது நடந்தவர்களுக்கு, பிறவியின் பயனாக, இறவாது விளங்கும் கீர்த்தியைப் "புகழ்" என்றார் நாயனார். அதுபற்றிக் கூறும் அதிகாரம் இது. பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருவதால், ஈகையின் பின்னர் வைக்கப்பட்டது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "வறியவர்க்குக் கொடுப்பதும், அதனால் புகழ் உண்டாக வாழ்வதும் அல்லாமல், மக்கள் உயிர்க்கு பயன் வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

     ஒருவனுக்குப் புகழ் உண்டாக வாழ்வதற்கு, கல்வி, ஆண்மை, நல்ல குடிப்பிறப்பு, நல்ல ஒழுக்கம், செல்வம், தீவினைக்கு அஞ்சுதல், நடுவு நிலைமை முதலிய வேறு காரணங்களும் இருந்தாலும், அவற்றுள், ஈகையே சிறந்தது என்றார். அந்த ஈகையானது, மனித இனத்தைத் தவிர பிறருக்கு வாய்க்காது. மனித இனத்தால்தான், பிற இனத்தையும் வாழவைக்க முடியும்.

     "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், "உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே" என்றும், "செல்வத்துப் பயனே ஈதல்" என்றும் புறநானூறு கூறும். "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்" என்று கலித்தொகை கூறும். "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" என்று மணிமேகலை அறிவுறுத்தும். இதனால், இசைபட வாழ்தலை ஈகை அறிவிக்கின்றது என்று அறியலாம்.

திருக்குறளைக் காண்போம்...

ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     'ஈதல்' --- வறியார்க்கு ஈக,

     இசைபட வாழ்தல் --- அதனால் புகழ் உண்டாக வாழ்க,

     அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை --- அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.
        
         (இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்... 


போசன் கவிஞருக்கே போதப் பரிந்து அளித்துத்
தூசுஇலாக் கீர்த்திகொண்டான், சோமேசா! - ஆசையுடன்
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

         புகழாவது இல்வாழ்க்கை முதல் ஈகை ஈராகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப் பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்வது. இறவாது நிற்கும் கீர்த்தி. இது பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின், அதன்பின் வைக்கப்பட்டது.

இதன் பொருள்---

         சோமேசா!  ஆசையுடன் --- ஆதரத்துடன்,  ஈதல் --- வறியார்க்கு ஈக,  இசைபட வாழ்தல் --- அதனால் புகழ் உண்டாக வாழ்க, அது அல்லது --- அப் புகழல்லது,  உயிர்க்கு ஊதியம் இல்லை --- மக்கள் உயிர்க்குப் பயன் வேறொன்று இல்லையாம், 

         போசன் --- போசராசன், கவிஞருக்கே பரிந்து போத அளித்து --- பாவலருக்கே ஆசைகொண்டு மிகுதியாகப் பொருளைக் கொடுத்து,  தூசு இலாக் கீர்த்தி கொண்டான் --- குற்றமில்லாத புகழைப் பெற்றான் ஆகலான் என்றவாறு.

         "எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
         செய்தற்கு அரிய செயல் என்று - வையகத்து
         ஈதல்இசைபட வாழ்தல் அது அல்லது
         ஊதியம் இல்லை உயிர்க்கு".

         மானவ தேயத்து இராசதானியாகிய தாரா நகரத்திலிருந்து கொண்டு, கௌடதேயத்தோடு கூடிய தென்தேசங்களையும் ஆண்ட போஜன் என்னும் அரசன், தன்னை அடுத்த கவிநலரத்னம் எனப்படும் காளிதாசன் முதலிய ஒன்பதின்மருக்கும் பிற மொழிப் புலவர்களுக்கும் மிக்க பொருள் வழங்கி அவர்களால் புகழப் பெற்று வாழ்ந்தான். சிலர் கூறிய அரிய கவிகளைக் கேட்டு வியந்து அட்சரத்திற்கு இலட்சம் பொன் வீதம் பரிசளித்தான் என்றால் இவன் கொடையையும் இதனால் அவன் பெற்ற புகழையும் பற்றிக் கூறவும் வேண்டுமோ?

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

ஓடிவரு புட்குஅன்று உடலைஅரிந்து ஈந்தபுகழ்
தேட அரிதே, சிவசிவா! - நாடினதும்
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

     புள் --- பறவை, புறா. சிபிவேந்தன் புறாவின் பொருட்டுத் தன் உடலைக் கொடுத்தல் கூறப்பட்டது.

     சிபிச் சக்கரவர்த்தி சூரிய குலத் தோன்றல். மெத்த இரக்கம் உள்ளவன், மன் உயிரைத் தன் உயிர்போல் மதிக்கும் இயல்பு உள்ளவன். இவன் அருளுடைமையை உலகத்தார்க்கு உணர்த்தும் பொருட்டு, பரமசிவன் ஒரு வேடனாகவும், இயமன் ஒரு புறாவாகவும் வடிவெடுத்துப் புறப்பட்டார்கள். வேடன் புறாவை விடாமல் துரத்தி வந்தான். புறா பயந்தோடிச் சிபிச் சக்கரவர்த்தியிடத்தில் அடைக்கலம் புகுந்தது. அதைப் பயம் தீர்த்து ஆதரித்தான் மன்னன். உடனே, வேடன் அம் மன்னன் எதிரில் தோன்றி, ", மன்னா! இப் புறாவை நான் துரத்தி வந்தேன். இப்போது எனக்குப் பசி மிகுந்து இருப்பதனால் இதை எனக்குக் கொடுத்துவிடு, கொன்று தின்று பசி ஆறுவேன்" என்றான். "அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது என் கடமை.  அதற்கு ஈடாக வேறெந்த மாமிசமேனும் தருவேன், கேள்" என்றான் மன்னவன். "வேறெதுவும் வேண்டேன், உன் துடை மாமிசம் வேண்டும்" என்றான் வேடன். அப்படியே மன்னவன் துலை கொண்டு வந்து நாட்டி, அதன் ஒரு தட்டில் புறாவை வைத்து, அதற்கு ஈடாக மறுதட்டில் தனது துடை மாமிசத்தை அறுத்து வைத்தான். புறாத் தட்டு பின்னும் அதிகமாய்த் தாழ்ந்தது. அது கண்ட மன்னவன் அதிசயித்துப் பின்னும் தன் மாமிசத்தை அறுத்து வைக்கும்தோறும் புறாத் தட்டு தாழ்ந்து கொண்டே போயிற்று. பிறகு அவன், தானே மாமிசத் தட்டில் ஏறி நின்று புறாத் தட்டை ஏற்றிச் சரிப்படுத்தினான். உடனே பரமசிவன் அவனுடைய அருளுடைமைக்கு வியந்து, மழவிடை மேல் அவற்குக் காட்சி தந்து, திருக் கயிலாயத்தில் வாழும் மாட்சியும் அருள் புரிந்தார்.

     சிவி, சிபி இரண்டும் ஒன்று. கவி, கபி என்பது போல.

"எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன்" என்று சிலப்பதிகாரம் கூறும்.

"புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானைச் செம்பியன்"

எனவும்,

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூர் உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன்"

எனவும், புறநானூற்றுப் பாடல்களும்,

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும், புகழ்கிற்பாம்?-
மின்உயிர்க்கும் நெடுவேலாய்! இவர் குலத்தோன், மென் புறவின்
மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்!

எனக் கம்பராமாயணமும் கூறுமாறு காண்க.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்(கு)
அடையாவாம் ஆண்டைக் கதவு.    ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து --- பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா --- அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்
நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.             ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்
பாடு அறியாதானை இரவு.      ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் --- பிறர்க்கு கொடுத்து உண்பவன் எனப்படுவான் உலகத்தில் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் --- அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான்; நண்ணார் முன் சேறல் தெற்ற நகையாகும் --- விரும்பாதவர் முன்,ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சி உண்டாக்கும்; பாடு அறியாதானை இரவு பகையாகும் --- தனது தகுதி அறியாதவனை இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.


கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
         கனிகள் உப கார மாகும்,
சிட்டரும் அவ் வணம்தேடும் பொருளையெல்லாம்
         இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டுலவுஞ் சடையாரே! தண்டலையா
         ரே! சொன்னேன் வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்
         வாழ்ந்தாலும், என் உண்டாமே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

     மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும், என்  உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார்  வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும், என்  உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டிவைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம் --- அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.


ஓதஅரிய தண்டலையார் அடிபணிந்து
         நல்லன் என்று உலகம் எல்லாம்
போதமிகும் பேருடனே புகழ்படைத்து
         வாழ்பவனே புருடன், அல்லால்
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த
         பூதம் என இருந்தால் என்ன?
காதவழி பேரில்லான் கழுதையோடு
         ஒக்கும் எனக் காணலாமே.          --- தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

     ஓத அரிய தண்டலையார் அடி பணிந்து --- சொல்லுதற்கு அரிய புகயை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இறைவரின் திருவடிகளைப் பணிந்து, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே --- உலகில் உள்ளோர் எல்லாம் ‘இவன் நல்லவன்' என்று போற்றும் அறிவு மிக்க நற்பெயருடன், புகழ் படைத்து வாழ்பவனே புருடன் --- புகழையும் படைத்து வாழ்கின்றவனே ஆண்மகன் ஆவான், அல்லால் --- அவ்வாறு இல்லாமல்,   ஈதலுடன்  இரக்கம்  இன்றி --- இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் கொடைப் பண்பும், உயிர்கள் மீது தயவும் இல்லாமல், பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன --- பொன்னைக்  காக்கும் பூதம்போல, தான் ஈட்டிய பொருளைக் காத்து வைத்து இருப்பதால் பயன் என்ன? காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே --- காத தூரம் தன்னுடைய புகழ் விளங்குமாறு வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று அறியலாம்.


உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,
துன்அரும் கேளிர் துயர் களையான் --- கொன்னே
வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், ஆஆ,
இழந்தான் என்று எண்ணப்படும்.         ---  நாலடியார்.

இதன் பொழிப்புரை ---

     தானும் உண்ணாமல், பிறருக்கு உதவிப் பெருமைப் படாமல், புகழை ஈட்டாமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை, சீ சீ வாழ்க்கையா அது? அப்படிப்பட்டவன் இருந்து என்ன? இறந்து என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

     அவன் கேடு கெட்டவனாக உலகத்தாரால் கருதப்படுவான்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைபு புதைத்து வைத்துக்
கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள் --- கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின், யாரே அனுவிப்பார்?
பாவிகாள்! அந்தப் பணம்.                 ---  நல்வழி.

இதன் பதவுரை ---

     பணத்தைப் பாடுபட்டுத் தேடி --- பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து --- (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே --- நன்மை எல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் --- (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு --- உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு --- உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் --- பாவிகளே, அந்தப் பணம் --- அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் --- இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்?

         அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை


பாவிதனம் தண்டிப்போர் பால் ஆகும், அல்லது அருள்
மேவு சிவன் அன்பர் பால் மேவாதே --- ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்கு ஆம், அன்றியே
தூயவருக்கு ஆகுமோ? சொல்.            --- நீதிவெண்பா.

இதன் பொழிப்புரை ---

     சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகும். அல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.

     கொடைப் பண்பு ஆகிய ஆன்ம நேயமும், உயிர்க்கு இரங்குவதாகிய அருள் பண்பு என்னும் ஜீவகாருண்ணியமும் கொண்டவர்களே அடியவர்கள். இதனைப் பின் வரும் அருட்பாடல்களால் அறியலாம்..

வாள்ஆர்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
தோள்ஆகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்குஇருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.


நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பரிய
தொன்மையான் தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்றுஇரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

பொன்னிநீர் நாட்டின் நீடும் பொற்பதி, புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்கு இல்லைஎன்னாதே ஈயும்
தன்மையார் என்று, நன்மை சார்ந்த வேதியரை, சண்பை
மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு ஆக்குஊர் ஆக்கூர். --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     காவிரியாறு பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டின் பழமையான அழகிய பதி, உலகத்துள்ளோர் வறுமையினால் இரந்து சென்றால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியவற்றை வரையாது அளிக்கும் குணம் உடையவர்கள் என்று சீகாழித் தலைவரான ஆளுடைய பிள்ளையார், நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருள் செய்த மறை வாக்கினைப் பெறும் ஊரானது `திருவாக்கூர்\' என்பதாகும்.

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்தபோது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க, முன்பு நின்று இனிய கூறி,
நாளும்நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி,
நீளும் இன்பத்துள் தங்கி, நிதிமழை மாரி போன்றார்.   --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     அவர் (சிறப்புலி நாயனார்) , உலகங்கள் எல்லாவற்றையும் ஆளுகின்ற சிவபெருமானின் அன்பர்கள் தம்பால் வந்து அணையின், அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கி, மூண்டெழும் அன்பு மேன்மேல் பொங்க, அவர்களுக்கு இனிய சொற்களைக் கூறி, நாடோறும் நல்ல உணவுகளை அளித்து, உண்பித்து, அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்து, அதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்து, செல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் என விளங்கி வந்தார்.


ஈதலும், பல கோலால பூஜையும்,
     ஓதலும், குண ஆசார நீதியும்,
          ஈரமும் குரு சீர்பாத சேவையும் ...... மறவாத,

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
     சோழ மண்டல மீதே, மனோகர!
          ராஜ கெம்பிர நாடு ஆளும் நாயக! ...... வயலூரா!   ---  திருப்புகழ்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...