024. புகழ் - 02. உரைப்பார் உரைப்பவை




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலகத்தில் ஒன்றைப் பாராட்டிக் கூறுபவர் பாராட்டுவன. எல்லாம், இரப்பவர்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுத்து உதவுவார் மேல் நிற்கின்ற புகழையே ஆகும்" என்கின்றார் நாயனார்.

     ஒருவன் புகழ் உண்டாக வாழும் காரியத்திற்கு உரிய காரணம், வறியவர்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈதலே ஆகும்.

     புகழ் என்பது உரையும் பாட்டும் என்று இருவகைப்படும். உரைப்பார் உரைப்பவை என்று எல்லார்க்கும் உரிய உலக வாழ்க்கையையே எடுத்துக் கூறினார். என்றாலும், இனம் பற்றி, புலவர்க்கே உரிய பாட்டும் கொள்ளப்படும் என்பதால், பாடப்படும் பாட்டு எல்லாம் இரப்பவர்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் என்பதும் கொள்ளப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 
        
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உரைப்பார் உரைப்பவை எல்லாம் --- உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம்,

     இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் --- வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
        
         (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும் (புறநா.27) அவற்றுள் 'உரைப்பார் உரைப்பவை' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே 'பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்' என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)

இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை. ---  முதுமொழிக்  காஞ்சி.

இதன் பதவுரை ---

     இரப்போக்கு --- யாசிப்பவர்க்கு, ஈதலின் --- கொடுப்பதைக் காட்டிலும், எய்தும் --- ஒருவன் அடைதலான, சிறப்பு --- மேன்மை, இல்லை --- வேறில்லை.

     ஈகைபோல் புகழ்தருவது வேறில்லை என்பதாம்.

சோராக் கையன் சொன்மலை அல்லன்.  ---  முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     சோரா கையன் --- பிறர்க்கு ஒன்றுங் கொடாதவன், சொன்மலை அல்லன் --- மலைபோன்ற புகழை உடையவன் ஆகான்.

         சோரக் கையன்' என்ற பாடத்தைக் களவுசெய்யும் கையை உடையவன் புகழுக்கு உரியவன் ஆகான் எனவும் பொருத்துகின்றனர்.

     சோரம் --- களவு, கை --- ஒழுக்கம்; சோரக் கையன் --- களவொழுக்கம் உள்ளவன்.

ஒன்றாக நல்லது உயிர் ஒம்பல், ஆங்கு அதன்பின்
நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருக என்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.        ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்;
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.      ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் --- குறுங்கோலால் ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்; இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் --- இடித்து முழங்கிய மேகத்தின் ஒலியை ஒரு யோசனை எல்லை வரையில் உள்ளோர் கேட்பர்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் அடுக்கிய மூவுலகும் கேட்கும் --- தக்கோரால், ‘இவர் உதவி செய்தவர்' என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர்.

         பிறர்க்கு உதவி செய்யும் வள்ளன்மையே ஒருவர்க்கு யாண்டும் புகழ்பரப்பும்.

     ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும்.

கொடையே எவர்க்கும் எப்பேறும்
     கொடுக்கும், நெறியிற் பிறழாத
கொடையே யாரும் தன்வழியின்
     ஒழுகச் செய்யும், குறைதீர்ந்த
கொடையே பகையை உறவாக்கும்,
     குலவும் பூதம் அனைத்தினையுங்
கொடையே புரக்கும் என்று உள்ளம்
     கொள்ளப் புகன்றான் கவுதமனே. ---  காஞ்சிப் புராணம்.

     கொடுத்தலானே யாவர்க்கும் எப்பயனும் கிடைக்கும்; அறவழியில் தப்பாத கொடைக் குணமே யாவரையுந் தன் வழிப்படுத்து நடத்தும் (தன் ஏவல் கேட்பிக்கும்). குற்றம் தவிர்ந்த கொடையே பகைவரையும் உறவினராக்கும்; விளங்குகின்ற ஆன்மாக்கள் அனைத்தினையும் அதுவே காக்கும் என்று உள்ளங் கொள்ளும்படியாகக் கவுதமன் கூறினன்.

No comments:

Post a Comment

80. இவர்க்கு இது இல்லை

  “சார்பிலா தவருக்கு நிலையேது? முதலிலா      தவருக் கிலாபமேது? தயையிலா தவர்தமக் குறவேது? பணமிலா      தார்க்கேது வேசை உறவு? ஊர்இலா தவர்தமக் கர...