024. புகழ் - 03. ஒன்றா உலகத்து




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

    
     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "தனக்கு ஒப்புமை இல்லாத உயர்ந்த புகழை அன்றி, இந்த உலகத்தில் அழியாது நிலைபெறுவது வேறு ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

     தனக்கு ஒப்பு இல்லாமல் ஓங்குதலாவது, கொடுத்தற்கு அரிய உயிரையும், உறுப்பையும், பொருளையும் கொடுத்தலால், தன்னோடு ஒப்பு இல்லாமல் தானே உயர்கின்றது புகழ்.

     உயிரைக் கொடுத்தவர் ததீசி முனிவர். உறுப்பைக் கொடுத்தவர் சிபிச் சக்கரவர்த்தி. கவசம், முண்டலம் முதலிய பொருள்களைக் கொடுத்தவன் கர்ணன்.

     ஆதாரம் ஆகிய உலகம் உள்ள அளவும், ஆதேயம் ஆகிய புகழ் நிற்கும் என்பது, "சாதல் வந்து அடுத்தகாலும், தனக்கு ஒரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும்காலும் புகழ் உடம்பு இருக்கும்" என்னும் விநாயகப் புராணப் பாட்டால் காணலாம்.

திருக்குறளைக் காண்போம்...

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் --- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது;

     உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல் --- உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை.

         (இணை இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

எத்தனையோ வாசவர்நாள் இந்திரத்துய்மன் உற்றே
மொய்த்த புகழ் பூண்டான், முருகேசா! - உய்த்து உணரின்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, இந்திரத்துய்மன் --- இந்திரத்துய்மன் என்னும் அரசன், எத்தனையோ வாசவர் நாள் --- எண்ணிறந்த இந்திரர் காலம், இன்பம் உற்று --- இன்பத்தை அடைந்து, மொய்த்த புகழ் பூண்டான் --- மிகுந்த புகழைப் பெற்றான். உய்த்து உணரின் --- நன்றாக ஆராய்ந்து பார்க்குமிடத்தில், உலகத்து --- இவ் உலகத்திலே, உயர்ந்த புகழ் அல்லால் --- சிறந்த புகழை அல்லால், ஒன்றா --- ஒருபொருளாக, பொன்றாது --- அழியாது, நிற்பது --- நிற்கக்கூடியது, ஒன்று இல் --- வேறொன்றுமில்லை.

         இந்திரத்துய்மன் என்பவன் எண்ணிறந்த இந்திரர் காலம் வரையிலும் இன்பத்தை அடைந்து மிகுந்த புகழைப் பூண்டான்.  இவ் உலகத்திலே உயர்ந்த புகழை அல்லாமல் வேறு எதுவும் நிலைபெற்று நிற்கக்கூடியது அன்று என்பதாம்.  மொய்த்த புகழ் - மிகுந்த புகழ்.

                                                  இந்திரத்துய்மன் கதை

         இந்திரத்துய்மன் என்னும் அரசன் பல அறங்களையும் செய்து தேவருலகத்தை அடைந்தான். எண்ணிறந்த இந்திரர் காலம் இன்பம் நுகர்ந்து வாழ்ந்தான். தேவர்கள் இவனுடைய புகழை விளக்க விரும்பினார்கள். இவனைப் பார்த்து, "உன்னுடைய பெயர் நிலவுலகத்திலே நிலைபெறாமையால் அங்கே செல்வாயாக" என்று கூறினார்கள். அவன் மார்க்கண்டேய முனிவரை அடைந்து, "எனது காலமும் யான் இயற்றிய அறமும் தோன்றாதபடியினால் தேவர்கள் என்னை நிலவுலகத்திற்குச் செலுத்தினார்கள். என்னுடைய நிலையைத் தாங்கள் கூறவேண்டும்" என்று சொல்லி வேண்டிக் கொண்டான். அதற்கு அவர், "நீ எனக்கு முந்தியவனாகையால் நான் அறியேன்" என்றார். மேலும் அவனைப் பார்த்து, "எனக்கு மூத்ததாகிய ஒரு கூகை இருக்கிறது, அதனைக் கேட்கவேண்டும்" என்றார். அரசன் அவரோடு அக்கூகையை அடைந்து கேட்டான். அது, "எனக்கு மூத்ததாக ஒரு கொக்கு இருக்கிறது. அதனிடம் கேட்கவேண்டும்" என்றது. அரசன் அதனையும் அழைத்துக் கொண்டு கொக்கினிடம் சென்றான். அது, "எனக்கு மூத்ததாக ஒரு ஆமை இருக்கிறது. அதனைக் கேட்டால் விளங்கும்" என்று கூறியது. கொக்கையும் அழைத்துக் கொண்டு ஆமையிடம் சென்றான். அஃது, அரசன் இயற்றிய அறம் முதலியவைகளை எல்லோரும் அறியும்படியாகக் கூறியது. தேவர்கள் உடனே விமானத்தோடு வந்து அரசனை விண்ணுலகிற்கு அழைத்தனர். அரசன் எல்லோரையும் அவரவரிடத்தில் சேர்த்து விட்டு விண்ணுலகம் சென்றான். கூகை, கொக்கு, ஆமை முதலிய வடிவங்களைப் பெற்று இருந்தவர்கள் சிறந்த முனிவர்கள்.

     பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...
                                                     
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன்அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
 தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடுஇயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடுஇல் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆக, கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல், என்
நாடு இழந்த அதனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத்
தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. ---  புறநானூறு.

     தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிலே தலைமறைந்து வாழ்ந்து இருந்த குமண வள்ளலைக் கண்டு, அவன், தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து, இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

இதன் பொழிப்புரை ---

    நிலையில்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கச் செய்யவேண்டும் என்னும் கருத்து உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்த, தமது உயிரையும் விட்டு இருக்கின்றனர். நெருங்க முடியாத பெரும் செல்வச் சிறப்பினை உடைய குடியில் பிறந்தோர், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தம் உயிரையும் கொடுக்கும் சான்றோர் வழி செல்லத் தெரியாதவர்கள் ஆவார்கள். கால் வரை நீண்டு தொங்கும், மணி ஒலி எழுப்ப வரும், புள்ளிகளை உடைய துதிக்கையோடு கூடிய வெற்றி யானைகளைப் பாடி வருவோருக்குப் பரிசிலாகத் தந்து உதவும் குறைவற்ற புகழை உடைய, வலிமை மிக்க குதிரைகளை உடைய, முதிரமலைத் தலைவன் ஆகிய குமணனைப் பாடி நின்ற நான், வீணே பரிசில் பெறாது வெறும் கையோடு திரும்பப் போவதைக் கண்டு மனம் வருந்தி, தான் நாடு இழந்து தவிப்பதிலும் கொடுமையானது, ஒரு நல்ல புலவன் தன்னைத் தேடி வந்து, பரிசில் பெறாது திரும்புவது என எண்ணி, தன்னிடம் இருந்த உடைவாளை என்னிடம் தந்து, "என் தலையை வெட்டிக் கொண்டு போய், எனது தம்பியிடம் தந்து வேண்டிய பரிசிலைப் பெற்று மகிழ்க. இதைவிடச் சிறந்த ஒன்று இப்போது என்னிடம் இல்லை. எனவே, எனது தலையைக் கொண்டு போகச் சொல்கிறேன்" என்று சொன்ன, போரில் புறம் கொடாத உன்னுடைய அண்ணன் குமணனை நான் காட்டில் கண்டு வருகின்றேன் என்பதை அறிவாயாக.


பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்!
     உலகு எலாம் பெயர, பேராக்
காதை என் புகழினோடு
     நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன
     யாக்கையை விடுவது  அல்லால்,
சீதையை விடுவது உண்டோ,
     இருபது திண் தோள் உண்டால்? --- கம்பராமாயணம், இந்திரசித்து வதைப்படலம்.

இதன் பதவுரை ---

    பிள்ளாய்! பேதைமை உரைத்தாய் --- பிள்ளாய்! அறிவோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாய்;  உலகு எலாம் பெயர பேராக் காதை என் புகழினோடு நிலைபெற --- உலகங்கள் எல்லாம் நிலை பெயரவும் அழியாத கதை எனது புகழினோடு நிலை பெறுமாறும்; அமரர் காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் --- அதனைத் தேவர்கள் காணுமாறும்,  நீர்மேல் எழுகின்ற குமிழி போன்ற  நிலையில்லாத உடம்பை விடுவது அல்லது; இருபது திண் தோள் உண்டால் சீதையை விடுவது  உண்டோ? -- - இருபது திண்ணிய தோள்கள் எனக்கு இருக்கச் சீதையை விடுவதும் உண்டோ?
   

வென்றிலன் என்றபோதும்,
     வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளன் அன்றோ, மற்று அவ்
     இராமன் பேர் நிற்குமாயின்,
பொன்றுதல் ஒரு காலத்தும்
     தவிருமோ, பொதுமைத்து அன்றோ,
இன்று உளார் நாளை மாள்வர்,
     புகழுக்கும் இறுதி உண்டோ. --- கம்பராமாயணம், இந்திரசித்து வதைப்படலம்.

இதன் பதவுரை ---

    வென்றிலன் என்ற போதும் --- யான் வெற்றி பெறவில்லையாயினும்; மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின் --- (வெற்றி பெற்ற) அந்த இராமன் பேர்  நிற்குமாயின்; யானும் வேதம் உள்ளளவும் நின்றுளன் அன்றோ --- (அவனால்)  வெல்லப் பெற்ற) யானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில்  நிலைபெற்றுள்ளேன் அன்றோ? பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ --- இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிரக் கூடியதோ? அது எவ்வுயிர்க்கும் பொதுவானது அன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ? --- இன்று இருப்பவர்கள் நாளைக்கு இறப்பார்கள்; ஆனால் புகழுக்கும் அத்தகைய இறுதி உளதாமோ?

பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்,
பற்றின் கண் நில்லாது அறஞ்செய்க;--மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.        --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின் --- நெஞ்சே! நற்குணமிக்க செயல்களைத் தவறாமல் செய்யக்கருதினால், பற்றின்கண் நில்லாது அறஞ் செய்க --- அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக, அது --- அவ்வறம், பொன்றாப் புகழ் நிறுத்தி --- இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து, போய்ப் பிறந்த ஊர் நாடி --- மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி, கன்று உடை தாய்போல் வரும் --- தாய்ப் பசு தன் பாலை அருந்தத் தன் கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால் விரைந்து வரும்.

களைகணாத் தம்அடைந்தார்க்கு உற்றுழியும் மற்றோர் 
விளைவு உன்னி வெற்று உடம்பு தாங்கார் - தளர்நடையது 
ஊன்உடம்பு என்று புகழுடம்பு ஓம்புதற்கே 
தான் உடம்பட்டார்கள் தாம்.   ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     ஊன் உடம்பு --- இறைச்சியாலாகிய இவ்வுடல், தளர் நடையது என்று --- ( பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றால்) நிலை தளரும் தன்மையுடையது என்று கருதி (அதனால் அதை வெறுத்து), புகழுடம்பு ஓம்புதற்கே --- (நிலை தளராத) புகழ் உடம்பினை வளர்க்கவே, உடம்பட்டார்கள் --- தீர்மானித்தவர்கள், தம் களைகண் ஆக அடைந்தவர்க்கு --- தம்மை ஆதாரமாக அடைந்தவர்க்கு, உற்ற உழியும் --- (சிறிது துன்பம்) வந்தவிடத்தும், மற்றும் ஓர் விளைவு உன்னி --- வேறொரு பயனைக் கருதி, வெற்றுடம்பு தாங்கார் --- பயனில்லாத (தமது) ஊன் உடம்பினைப் பாதுகாக்க நினையார்.

     மன்னர் மன்னனான சிபி, புறாவின் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்ததும், தேவர் துன்பம் நீங்கத் ததீசி முனிவர் தம் முதுகெலும்பு ஈந்ததும், பாபர் தம் மகன் பிழைக்கவேண்டி அவனுக்கு வந்த காய்ச்சலை ஒருபெரியார் கூறியபடி தாம் ஏற்றுத் தம் மகனுயிர் காப்பாற்றியதும், புகழுடம்பு விரும்புவார் தம் ஊனுடம்பைப் பொருட்படுத்தார் என்பதற்குத் தக்க சான்றாகும்.
        
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்,
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான், - மலரவன்செய்
வெற்று உடம்பு மாய்வனபோல், மாயா புகழ்கொண்டு
மற்றுஇவர் செய்யும் உடம்பு.    ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் --- கலைமகளினுடைய வாழ்க்கை இருவர்க்கும் தத்தம் முகத்தின் இடத்ததே ஆனாலும்; மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் --- மலர்மேல் இருக்கும் நான்முகன் வளப்பம் பொருந்திய  தமிழ்ப் புலவர்களுக்கு ஒப்பாகான், (ஏனென்றால்) மலரவன் செய் வெறு உடம்பு மாய்வன போல் --- மலரவன் செய்கின்ற புகழில்லாத ஊன் உடம்பு அழிந்து போவன போல, மற்று இவர் செய்யும் உடம்பு புகழ் கொண்டு மாயா --- மற்று இப்புலவர்கள் செய்கின்ற நூலுடம்புகள் புகழைப் பெற்று அழியமாட்டா (ஆதலின் என்க).

     ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த தொல்காப்பியனாரும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த திருவள்ளுவனாரும் அருளிச் செய்த தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இலக்கண இலக்கிய நூல்களாகிய உடம்புகளின் வாயிலாக அவர்கள் செய்து கொண்ட புகழ் இன்றும் அழியாமல் நின்று நிலவுகின்றமை காணலாம். ஆனால், மலரவன் செய்த அவரது ஊனுடம்புகள், புகழோடு இக்காலத்திற் காணமுடியாதபடி அக்காலங்களிலேயே மறைந்து போனமையுங் காணலாம்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்பு உடையாடள் பெற்றானும், --- உண்ணும்நீர்
கூவல் குறைவு இன்றித் தொட்டானும், இம்மூவர்
சாவா உடம்பு எய்தினார்.             ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     மண்ணின்மேல் வான் புகழ் நட்டானும் --- மண்ணுலகத்தில் பெரிய புகழை நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் மாசுஇல் சீர் கற்பு உடையாள் பெற்றானும் --- பெண்களுள் குற்றமற்ற சிறப்புடைய கற்புடையவளை (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணும் நீர் குறைவு இன்றி கூவல் தொட்டானும் --- உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி, கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், இ மூவர் சாவா உடம்பு எய்தினர் --- ஆகிய இம் மூவரும் (எக்காலத்தும்) இறவாத (புகழ்)உடலைப் பெற்றவராவார்.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...