024. புகழ் - 04. நிலவரை நீள்புகழ்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "ஒருவன் மண்ணுலக எல்லையில் நிலைத்து நிற்கக் கூடிய புகழைச் செய்துகொள்வான் ஆயின், சுவர்க்க உலகமானது அவனை அல்லாமல், தன்னை அடைந்து இருக்கின்ற ஞானிகளை விரும்பாது" என்கின்றார் நாயனார்.

     துறுவறத்தில் சென்று தத்துவ ஞானம் பெறாது இறந்தவர்கள், மறுமையில் தேவ உடம்பைப் பெறுவார்கள்.  அல்லாமல், புகழைப் பெறமாட்டார்கள். ஆகையால், தேவலோகத்தில் இயற்கையாக உள்ளவர்கள், அவர்களைப் புகழுடம்பு இல்லாமையால் விரும்பாது, பூத உடலைக் கொண்டு, இம்மையில் புகழையும், மறுமையில் தேவ உடம்பையும் பெற்றவனையே விரும்புவர் என்றபடி.

     புகழை உடையவன் புகழுடம்பால் இந்த உலகத்திலும், தேவ உடம்பால் தேவர் உலகத்திலும் ஒரு சேர இருப்பான் என்றபடி.

திருக்குறளைக் காண்போம்...

நிலவரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

இதற்குப் பரிமேலகழர் உரை ---

     நிலவரை நீள் புகழ் ஆற்றின் --- ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின்,  

     புத்தேள் உலகு புலவரைப் போற்றாது --- புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது.

         (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

போத நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்
றாது புத்தேள் உலகு என்றார், புவிக்கண் அருள்செயலால்
ஓது புகழ்கண்டு அயன்போற்றும் தென்புல்லை ஊரனைச்சென்று
ஏதம் இல்லாது புத்தேள் உலகு ஏத்தல் இயல்வதுவே.

இதன் பொழிப்புரை ---

     ஒருவன் மண்ணுலக எல்லையில் நிலைத்து நிற்கக் கூடிய புகழைச் செய்துகொள்வான் ஆயின், சுவர்க்க உலகமானது அவனை அல்லாமல், தன்னை அடைந்து இருக்கின்ற ஞானிகளை விரும்பாது என்றார் திருவள்ளுவ நாயானர். திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமால் உலகில் உள்ளோர்க்கு அருள் புரிவது அறிந்து, பிரமதேவனும் வந்து போற்றுவதால், அப் பெருமானைப் போற்றி வணங்கியவர் தேவருலகைச் சென்று அடைவது இயல்பானதுதான்.   

     அயன் போற்றும் --- நான்முகன் வழிபாடு செய்யும்.  ஏதமில்லாது --- குற்றமில்லாமல். புத்தேள் உலகு ஏத்தல் --- தேவருலகை  அடைவித்தல்.

     பின்வரும் படால்கள் ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...
                                                                       
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்பு உடையாடள் பெற்றானும், --- உண்ணும்நீர்
கூவல் குறைவு இன்றித் தொட்டானும், இம்மூவர்
சாவா உடம்பு எய்தினார்.             ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     மண்ணின்மேல் வான் புகழ் நட்டானும் --- மண்ணுலகத்தில் பெரிய புகழை நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் மாசுஇல் சீர் கற்பு உடையாள் பெற்றானும் --- பெண்களுள் குற்றமற்ற சிறப்புடைய கற்புடையவளை (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணும் நீர் குறைவு இன்றி கூவல் தொட்டானும் --- உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி, கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், இ மூவர் சாவா உடம்பு எய்தினர் --- ஆகிய இம் மூவரும் (எக்காலத்தும்) இறவாத (புகழ்)உடலைப் பெற்றவராவார்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழ் அன்னே!
ஆடுநர்க்கு ஈத்த பேரன்பினனே!
அறவோர் புகழ்ந்த வாய்கோல் அன்னே!
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே!
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
 துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது, த்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று,
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுஇல் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.  ---  புறநானூறு.

இதன் பொழிப்புரை ---

     பாடி வந்தவர்க்கு வாரி வழங்கிய பெரும் புகழ் உடையவன். ஆடும் கூத்தர்க்கு அள்ளிக் கொடுக்கும் அன்பு மனம் மிக உடையவன். கற்றறிந்த பெருமக்கள் போற்றிப் புகழச் செங்கோல் நடத்தியவன். சான்றோர்கள் பாராட்டும் ஆழ்ந்த நட்புக்கு உரியவன். மகளிரிடம் இனிமையாகப் பழகக் கூடிய மென்மையான தன்மை உடையவன். அதே நேரத்தில், வலிமையானவர்க்கு வலிமையானவன். கல்வி கேள்விகளில் சிறந்து மாசற்ற அறிவு உடையவர்க்கு அவனே புகலிடம். இவ்வளவு புகழும் பெருமையும் உடையவன், நமது கோப்பெருஞ்சோழன் என்பதைச் சற்றும் எண்ணிப் பார்க்காமல், எமன் நம்மிடம் இருந்து அவனைப் பிரித்து விட்டானே. பிரிவால் வருந்திக் கோபித்துக் குமுறி அழும் நமது சுற்றத்தாரைக் கூட்டிக் கொண்டு, வாருங்கள் எமனோடு சண்டை இடலாம். இன்ப மயமான இந்த உலகம், துன்ப மயம் ஆகுமாறு நமது அரசன் நம்மை விட்டுப் பிரிந்து நடுகல் ஆகிவிட்டான். சொல்லாற்றால் மிக்க புலவர்களே! அவனது மங்காத புகழைப் போற்றிப் பாடுவீர்களாக.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...