024. புகழ் - 05. நத்தம்போல் கேடும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "புகழ் உடம்பிற்குப் பெருக்கமாகும் வறுமையும், புகழ் உடம்பு நிலைபெறுதற்குக் காரணமாகிய மரணமும், அறிவு உடையார்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை" என்கின்றார் நாயனார்.

     புகழ் உடம்பு பெருக்கத்தை அடை, பூத உடம்பானது முதிர்ந்து வறுமையினை அடைதல். புகழ் உடம்பு நிலைபெற பூத உடம்பு இறத்தல். புகழுடம்பு விருத்தி அடைய அடைய, பூதவுடம்பிற்குக் குறித்த நாள்கள் குறைந்து கொண்டே வருதல்.
புகழுடம்பைப் பெருக்கிக் கொள்வது அறிவு உடையோர்க்கே சாத்தியம் ஆகும்.

     அரிது என்பதனை, கேடு என்பதனோடும், சாக்காடு என்பதனோடும் கூட்டி, நத்தம் ஆகும் கேடு அரிது, உளது ஆகும் சாக்காடு அரிது என்று கொள்ளவேண்டும்.

     ததீசி முனிவர், சிபி மன்னன், கர்ணன், குமணன், முதலியோர், தமது பூத உடம்போடு இக்காலத்து இல்லை. ஆனால், அவர்கள் புகழ் நிலைத்து இருத்தல் அறிக.

திருக்குறளைக் காண்போம்...

நத்தம்போல் கேடும், உளது ஆகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.

இற்குப் பரிமேலழகர் உரை ---

     நத்தம் (ஆகும்) கேடும் --- புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும்,

     உளது ஆகும் சாக்காடும் --- புகழுடம்பு உளதாகும் சாக்காடும்,

     வித்தகர்க்கு அல்லால் அரிது - சதுரப்பாடு உடையார்க்கு அல்லது இல்லை.
        
         ('நந்து' என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் 'நத்து' என்றாய் பின் 'அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று 'நத்தம்' என்று ஆயிற்று. 'போல்' என்பது ஈண்டு உரையசை. 'ஆகும்' என்பதனை முன்னும் கூட்டி, 'அரிது' என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், 'வித்தகர்க்கு அல்லால்' அரிது என்றார். இதனால், புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்பு உடையாடள் பெற்றானும், ---  உண்ணும்நீர்
கூவல் குறைவு இன்றித் தொட்டானும், இம்மூவர்
சாவா உடம்பு எய்தினார்.             ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     மண்ணின்மேல் வான் புகழ் நட்டானும் --- மண்ணுலகத்தில் பெரிய புகழை நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் மாசுஇல் சீர் கற்பு உடையாள் பெற்றானும் --- பெண்களுள் குற்றமற்ற சிறப்புடைய கற்புடையவளை (மனைவியாகப்) பெற்ற கணவனும், உண்ணும் நீர் குறைவு இன்றி கூவல் தொட்டானும் --- உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி, கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், இ மூவர் சாவா உடம்பு எய்தினர் --- ஆகிய இம் மூவரும் (எக்காலத்தும்) இறவாத (புகழ்)உடலைப் பெற்றவராவார்.


பாலின்நீர் தீஅணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து
மேலும்நீர் கண்டுஅமையும் மேன்மைபோல், - நூலின்நெறி
உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே
மற்றோர் புகல மதித்து.              ---  நீதிவெண்பா.

இதன் பொழிப்புரை ---

     பாலில் கலந்த நீரை நெருப்பானது நெருங்கிச் சுட, பால் சினந்து பொங்கி வழிந்து, அந் நெருப்பினுள் புகுந்து அதனை அவித்து, பின்னும் நீரை உற்றத் தன் சினம் அடங்கும் பெருமைபோல,  கற்ற நூலின் நெறியிலேயே நிற்பவர்கள், தம்மோடு சேர்ந்தவருக்கு உண்டான துன்பத்தை, பிறர் கண்டு புகழ்ந்து கூறுமாறு இதுவே நல்ல செயலாம் என எண்ணித் தம் உயிரைக் கொடுத்தும் நீக்கி வைப்பார்கள்.

     (அமையும் - சினம் தணியும்.  புகல – புகழ்ந்து கூறுமாறு.)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;- எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்.
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரோ?  ---  கம்பராமாயணம், வேள்விப் படலம்.

இதன் பதவுரை ---

     மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் --- இறந்தவர்கள் எல்லோரும் இறந்தவர்களாக எண்ணப்படுபவர்கள் அல்லர்;  மாயாது ஏந்திய கை கொடு இரந்தவர் வீழ்ந்தவர் --- இழிவு வந்த போதும் இறந்து படாமல் ஏந்திய கைகளைக் கொண்டு வசதி உள்ளவர் முன் சென்று யாசிப்பவர்களே இறந்தவர்களாகக் கருதப்படுவோர் ஆவர்; எந்தாய் வீந்தவரேனும் --- எனது தந்தைக்கு ஒப்பானவரே! பருவுடல் மறைந்து இறந்தவரே எனினும்;   இருந்தவர் --- உயர்ந்தவர் தம் மனத்தில் மறையாது புகழுடம்புடன் இருந்தவர்கள்;  ஈந்தவரே அல்லது யாரே --- நாடி வந்தோர்க்கு ஈந்தவரே அல்லாது வேறு யார்?  

     தனது ஆசிரியரான வெள்ளி என்னும் சுக்கிராச்சாரியாரை  எந்தையே என்றது மரபு நோக்கி என்க. இறந்தவர் இறந்தவரன்று. இழிவு நேர்ந்த போதும் இறந்து படாமல் பிறரிடம் யாசித்து  நிற்பவரே இறந்தோர். கொடையில் சிறந்தோர் தம் பருவுடல் மறைந்தாலும் புகழுடம்புடன் என்றும் இருப்பவர் ஆவர்என்பது கருத்து.

'பைந்தார் எங்கள் இராமன் பத்தினி,
செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன்,
மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ? ---  கம்பராமாயணம், சம்பாதிப் படலம்.

இதன் பதவுரை ---

     மைந்தா --- வீரமுள்ளவனே! பைந்தார் எங்கள் இராமன் --- பசுமையான மலர்மாலை அணிந்தவனான எங்கள் இராமனின்; பத்தினி --- மனைவியும்; செந்தாள் வஞ்சி திறத்து --- சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி போன்றவளுமான சீதையின் பொருட்டு; இறந்தவன் --- உயிர் நீத்தவனாகிய; எம்பி --- என் தம்பி சடாயு; வரம்பு இல் சீர்த்தியோடு --- அளவில்லாத புகழோடு; உய்ந்தான் அல்லது --- நல்வாழ்வு பெற்றான் என்று கூறாலாமே அல்லாமல்; உலந்தது --- இறந்து போனான் என்பது; உண்மையோ --- உண்மைப் பொருளாகுமோ?

     சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது. ஆதலால், அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்து வருகிறான் என்றார்.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...