024. புகழ் - 06. தோன்றின் புகழொடு





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "மனிதராய்ப் பிறந்தால், புகழ் பெறுதற்குக் காரணமாகிய குணத்தோடு பிறக்கவேண்டும். அது இல்லாதவர் மனிதராய்ப் பிறத்தலை விட, பிறவாது இருத்தல் நல்லது" என்கின்றார் நாயனார்.

     மக்களாய்த் தோன்றுதல் கூடாது என்றதால், அருத்தாபத்தியினால், விலங்குகளாய்ப் பிறத்தல் பெறப்படும்.

     புகழிற்கு ஏதுவான குணங்கள் அமையப் பெறாதாரை, அன்பு இல்லாதவர் என்றும், அருள் இல்லாதவர் என்றும் இகழுதல் போல, விலங்குகளை அவ்வாறு இகழுதல் இல்லாமையால், புகழுக்கு ஏதுவான குணங்கள் இல்லாதவர் மக்களாய்ப் பிறத்தலினும், விலங்காய்ப் பிறத்தல் நல்லது எனலாம்.


திருக்குறளைக் காண்போம்...

தோன்றின் புகழொடு தேன்றுக, அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
        
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தோன்றின் புகழோடு தோன்றுக --- மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க;

     'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று ---அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று
        
         (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..

தோன்றி அரன்அருளால் தொண்டர் வென்றார்,தோற்று அமணர்
ஏன் பிறந்தேம் என்றே இடர் உழன்றார் --- ஆய்ந்துஅறிஞர்
தோன்றின் புகழொடு தேன்றுக, அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 

தொண்டர் --- ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர்.  வென்றார் --– சமணர்களையும் புத்தர்களையும் வாதில் வென்றார்.
                                            
     அடுத்து, மேற்குறித்த பாடலைப் போலவே, திருஞானசம்பந்தப் பெருமானை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியருளிய ஒரு பாடல்...

வால வயதில் வளர்புகலிப் பிள்ளையார்
போல விசயம் புரிந்தவர்ஆர் - ஞாலமிசைத்
தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 

         சீகாழிப் பதியில் அந்தணர் குலத்திலே கவுணிய கோத்திரத்திலே அவதரித்தவர் பிள்ளையார். மூன்று வயதிலே பொற்கிண்ணத்திலே கறந்தளித்த திருமுலைப்பாலைக் குடித்துச் சிவஞானசம்பந்தர் ஆயினார். சிவானந்த மேலீட்டால் சிவத்தலங்கள் தோறும் சென்று தரிசித்துத் தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்தார். பரசமய கோளரியாக விளங்கியருளினார். பொய்ந்நெறியைக் கொண்டிருந்த சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்று, சைவ நன்னெறியை நிலைநிறுத்தினார். பற்பல அற்புதங்களால் சைவசமயத்தை நாடெங்கும் பரப்பினார். ஆகவே திருஞானசம்பந்தரைப் போல வெற்றியுடன் விளங்கியவர் உலகத்திலே வேறு யாவர் தாம் உளர்

         ஆகலின் மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க. அக் குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலைக் காட்டிலும் விலங்காய்ப் பிறத்தல் நன்று என்றார் திருவள்ளுவ நாயனார்.

         வாலவயது --- இளமைப் பருவம். புகலி என்பது சீகாழிப் பதியின் பன்னிரு பெயர்களில் ஒன்று. விசயம் --- வெற்றி.
                                                              
     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மும்மை உலகும் முசுகுந்தனைத் துதிக்கும்,
எம்மை ஆட்கொண்ட இரங்கேசா! - செம்மையாத்
தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இதன் பதவுரை ---

     எம்மை ஆட்கொண்ட இரங்கேசா --- எங்களை ஆட்கொள்ள எழுந்தருளிய திருவரங்கநாதக் கடவுளே! மும்மை உலகும் --- மேல் நடு கீழ் என்னும் மூன்றுலகங்களும், முசுகுந்தனை --- முசுகுந்த சக்கரவர்த்தியை (அவனுடைய உதார குணத்திற்காக), துதிக்கும் --- புகழ்ந்து பேசும், (ஆகையால், இது) தோன்றில் --- உலகத்தில் பிறந்தால், புகழொடு -- செம்மையா தோன்றுக --- புகழைத் தேடும் குணத்தோடு ஒழுங்காய்ப் பிறக்க, அஃது இல்லார் --- அக்குணம் இல்லாதவர், தோன்றலின் --- பிறப்பதைக் காட்டிலும், தோன்றாமை நன்று --- பிறவாமை நல்லது (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- காதவழி பேரில்லான் கழுதையோடு ஒக்கும்.

         விளக்கவுரை --- பன்னிரண்டாண்டு பஞ்சம் வந்த காலத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி, தன் ஆட்சியில் குடிகள் வருந்தாவண்ணம் பூமியைக் கண்டித்து, ஊற்று நீர் வருவித்து, அந் நீரால் பயிரை வளர்த்துப் பஞ்ச நிவர்த்தி செய்வித்துப் புகழ் பெற்றார்.  தேவேந்திரனை வருத்திக் கட்டிக் கொண்டுபோன அரக்கனைக் கொன்று, அவனுக்கு எப்போதும் போல இந்திர பதவி நிலைக்கும்படி முடி சூட்டி, உபகாரம் செய்ததனால் முசுகுந்த சக்கரவர்த்தி, அங்கு அவன் பூசித்திருந்த எழுவிடங்காரகிய தியாகராயக் கடவுளைப் பூலோகத்தில் கொண்டு வந்து, ஏழிடங்களில் தனித்தனி நிறுத்திப் பூசித்து, எல்லார்க்கும் பேருதவி செய்து புகழெய்தினார். இதற்காக முசுகுந்தரை இன்றளவும் மும்மையுலகும் புகழும் என்க. இப்படி இப் படியில் இவரைப் போல் தோன்றில் தோன்றுக. இன்றேல் தோன்றாமை நன்று என்று உணர்க.

     பின் வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்...

பாடல் பெறானே, பலர் புகழ வாழானே,
நாடு அறிய நன்மணங்கள் நாடானே, --- சேடன்
இவன்வாழும் வாழ்க்கை, இருங்கடல் சூழ் பாரில்
கவிழ்ந்து என்? மலர்ந்து எனக் காண்.  --- ஔவையார் தனிப்பாடல்.

இதன் பொழிப்புரை ---

     சேடன் என்னும் பெயரை உடையவன் செல்வம் பெற்று இருந்தும், ஈகைத் தன்மை இல்லாததால் புலவர்களால் பாடப்படவில்லை. எல்லாரும் புகழுமாறு வாழ்க்கையை இவன் நடத்துவது இல்லை. பலர்க்குத் தெரியுமாறு நல்ல மங்கலச் செயல்களைச் செய்வதில்லை. எனவே கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் இவன் வாழும் வாழ்க்கை இழந்தாலும் கெடுவது இல்லை. நிலைத்தாலும் பயன் இல்லை.

பண் உறு கட கரிப் பரதன், பார் மகள்
கண் உறு கவினராய் இனிது காத்த அம்
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில்
எண் உறப் பிறந்திலன், இறத்தல் நன்று என்றாள்.         
                               ---  கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     பண்உறு --- அலங்கரித்தல் அமைந்த; கடகரி --- மத யானையையுடைய; பரதன் --- பரதன்; பார்மகள் கண்ணுறு  கவினராய் --- நிலமகள் விரும்பத் தக்க அழகுடையவராய்; இனிது காத்த --- இனிமையாக அரசாண்ட; அம்மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் --- அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை உடைய அரசர் வரிசையில் வைத்து; எண்ணுற --- நினைக்குமாறு (அரசனாக); பிறந்திலன் --- பிறக்கவில்லை;  இறத்தல் நன்று --- (எனவே) உயிர் வாழ்வதனினும் இறப்பதே மேல்;’என்றாள் -

     அரசனாகும் பேறு இல்லாதவன் அரசகுலத்தில் பிறந்து வாழ்வதைவிடச் சாவதே மேல் என்று பரதனுக்காக இரங்கினாளாம் மந்தரை.

 சிறந்தார் சொல்லும்நல் உரை சொன்னேன்; செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி; மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி; உலகத்தே
பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப் பிறிது என்றான்.
                                    ---  கம்பராமாயணம், பள்ளியடைப் படலம்.

இதன் பதவுரை ---

     சிறந்தார் --- அறிவாற் சிறந்த சான்றோர்; சொல்லும்  நல் உரை சொன்னேன் --- சொல்லுகின்ற நல்ல மொழிகளை உனக்கு எடுத்துச் சொன்னேன்; செயல் எல்லாம் --- (இதுகாறும் நீ செய்த)செயல்கள் எல்லாவற்றையும்; மறந்தாய் செய்தாய் ஆகுதி --- (புத்தித் தெளிவோடு அன்றி) நினைவின்றிச் செய்தவள் ஆவாயாக; (இவ்வாறு கருதுவது மன்னிப்புப் பெற வாய்ப்பாகும்); மாயா உயிர் தன்னை --- அழியாதிருக்கின்ற உன்னுடைய உயிரை; துறந்தாய் ஆகில் --- விட்டுவிட்டாயானால்; தூயையும் ஆதி --- தூய்மை உடையவளாகவும் உலகால் கருதப் படுவாய்; உலகத்தே பிறந்தாய் ஆதி --- உலகிற் பிறந்ததனால் வரும் பயனைப் பெற்றவளாகவும் ஆவாய்; ஈது அலது பிறிது இல்லை --- இது அல்லது உன் பழி தீர வேறு வழி எதுவும் இல்லை; ’என்றான் --- என்று கூறி முடித்தான். (பரதன்).

     நான் புத்தியில்லாமல் செய்துவிட்டேன்என்று சொல். எனவே, இனிமேல் உன் எண்ணம் புத்தியோடு மாறவேண்டும் என்றான். இறந்து போனால் பெரிதும் பாராட்டடப்படுவாய்; நீ பிறந்ததற்கும் ஒரு பொருள் இருக்கும். இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன்படி செய்த என்றான் பரதன். ஒருவேளை பரதன் அறிவுரை கைகேயியால் ஏற்றுக்கொள்ளப் பெற்றது எனக் கருதலாம். இதன் பின்னர்க் கைகேயி காவியத்தில் உரை நிகழ்த்தவில்லை என்பது காண்க.

'மற்று இலது ஆயினும், "மலைந்த வானரம்
இற்று, இலதாகியது" என்னும் வார்த்தையும்
பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர் அலால்,
முற்றுவது என்? இனி, பழியின் மூழ்கினாம்!'
                            ---  கம்பராமாயணம், இராவணன் மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     மற்று இலது ஆயினும் --- வேறு எதுவும் நாம்  செய்யவில்லை எனினும், மலைந்த வானரம் --- இங்கு வந்து  போர் செய்த ஒரு குரங்கு (அனுமன்) இற்று இலதாகியது --- செத்து ஒழிந்து போயிற்று; என்னும் வார்த்தையும் பெற்றிலம் ---  எனப்  பிறர் கூறும் பேச்சைக் கூடக் கேட்கப் பெற்றிலோம்; பிறந்திலம் என்னும் பேர் அலால் --- பிறந்தும் பிறவாதவர் ஆனோம் என்ற பெயரைத்தவிர, பழியின் மூழ்கினோம் ---  பழியாகிய கடலிலே மூழ்கி விட்ட நாம்; இனி முற்றுவது என் ---  இனி என்ன செய்து முடிக்கப் போகிறோம்.

அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்.
                             ---  கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.

இதன் பொழிப்புரை ---

     அறம் தலை நின்றவர்க்கு --- அற நெறியிலே தலைசிறந்து
விளங்கும் அந்த இராம, இலக்குவர்களிடம்; அன்பு பூண்டனென்
--- நான் மிக்க அன்புடையவனானேன்; நல்புகழ் அல்லால் --- நல்ல புகழ் அல்லாமல்; மறந்தும் வாழ்வு வேண்டலென் ---
மறந்தும் கூட உயிர்  வாழ்தலை விரும்பமாட்டேன்; பிறந்த என் உறுதி --- (இராவணன்) என்னுடன் பிறந்த எனக்கு நன்மையான உறுதி தருபவைகளை; நீ பிடிக்கலாய் என --- நீ
கடைப்பிடிக்காதவனாய் இருக்கிறாய் என்று கூறியதால்; துறந்தனென் --- இராவணனை விட்டு நீங்கினேன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான் --- இனி, நான் செய்ய வேண்டிய நற்செயல் என்னவென்று கூறுங்கள் என, வீடணன் தனது அமைச்சர் நால்வரைக் கேட்டான்.

ஒருவாறு பெருங்கிளைஞர்
         மனந்தேற்றத் துயர்ஒழிந்து,
பெருவானம் அடைந்தவர்க்குச்
         செய்கடன்கள் பெருக்கினார்;
மருவார்மேல் மன்னவற்கா
         மலையப்போம் கலிப்பகையார்
பொருஆரும் போர்க்களத்தில்
         உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார்.  --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     அருகிருந்த பெருஞ்சுற்றத்தார், அவர்தம் உள்ளத்தைத் தேற்ற, ஒருவகையால் வருத்தம் நீங்கிய அவ்விருவரும் பெரிய விண்ணுலகை அடைந்த பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடன்கள் எல்லாம் செய்தனர். மன்னனுக்காகப் போர் செய்யச் சென்ற கலிப்பகையார், பகைமை நிறைந்த போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழைக் கைக்கொண்டார் (இறந்தார்).

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...