024. புகழ் - 08. வசை என்ப





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "புகழ் என்னும் எச்சத்தைப் பெறாது விடுவாராயின், அது உலக மக்கள் அனைவருக்கும் பழி என்று சொல்லப்படும்" என்கின்றது.

     புகழானது தன்னை உண்டாக்கினவர் இறந்து போ, தான் இறவாமல் உலகம் உள்ள அளவும் எஞ்சி நிற்பதால், புகழ் எச்சம் ஆயிற்று. புகழ் உடம்பு நிற்க பூத உடம்பு இறத்தல்.

     புகழைப் பெறாவிட்டாலும், இகழ்ச்சியைப் பெறாமல் இருக்கலாமோ என்றால், புகழ் இல்லாமையே இகழாய் முடியும் என்பதைக் கருதுக.

     பாரதியார் கூற்றுப் போல வேடிக்கை மனிதராய் வாழ்ந்து மடிதல் கூடாது.

திருக்குறளைக் காண்போம்...

வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம், இசை என்னும்
எச்சம் பெறா விடின்.
        
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இசை என்னும் எச்சம் பெறாவிடின் --- புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின்,

     வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப --- வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர்.
        
         ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)

இசையில் பெரியதோர் எச்சம் இல்லை.   ---  முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     இசையின் --- கீர்த்தியைக் காட்டிலும், பெரியது --- சிறந்ததாகிய, ஓர் எச்சம் --- ஒப்பற்ற ஆஸ்தி, இல்லை --- வேறில்லை.

கீர்த்தியைப்போல் சிறந்த செல்வம் இல்லை.

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...