024. புகழ் - 10. வசை ஒழிய வாழ்வாரே





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 24 -- புகழ்

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "தம்மிடத்துப் பழி உண்டாகாமல், புகழ் உண்டாக வாழ்பவரே உயிர் வாழ்பவர் ஆவார். புகழ் உண்டாகாமல், பழி உண்டாக வாழ்பவர் இறந்தோர் ஆவார்" என்கின்றது.

     இசை இருந்தால் வசை வாராது. வசை இருந்தால் இசை வாராது.

     புகழ் இல்லாதவன் சடப் பொருளுக்குச் சமம்.

திருக்குறளைக் காண்போம்...

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார், இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்.
        
இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் --- தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்,

     இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் --- புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
        
         (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.)

     பின்வரும் படால்கள் ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன்அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
 தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடுஇயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடுஇல் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆக, கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல், என்
நாடு இழந்த அதனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத்
தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. ---  புறநானூறு.

     தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிலே தலைமறைந்து வாழ்ந்து இருந்த குமண வள்ளலைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து, இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

இதன் பொழிப்புரை ---

    நிலையில்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கச் செய்யவேண்டும் என்னும் கருத்து உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்த, தமது உயிரையும் விட்டு இருக்கின்றனர். நெருங்க முடியாத பெரும் செல்வச் சிறப்பினை உடைய குடியில் பிறந்தோர், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தம் உயிரையும் கொடுக்கும் சான்றோர் வழி செல்லத் தெரியாதவர்கள் ஆவார்கள். கால் வரை நீண்டு தொங்கும், மணி ஒலி எழுப்ப வரும், புள்ளிகளை உடைய துதிக்கையோடு கூடிய வெற்றி யானைகளைப் பாடி வருவோருக்குப் பரிசிலாகத் தந்து உதவும் குறைவற்ற புகழை உடைய, வலிமை மிக்க குதிரைகளை உடைய, முதிரமலைத் தலைவன் ஆகிய குமணனைப் பாடி நின்ற தான், வீணே பரிசில் பெறாது வெறும் கையோடு திரும்பப் போவதைக் கண்டு மனம் வருந்தி, தான் நாடு இழந்து தவிப்பதிலும் கொடுமையானது, ஒரு நல்ல புலவன் தன்னைத் தேடி வந்து, பரிசில் பெறாது திரும்புவது என எண்ணி, தன்னிடம் இருந்த உடைவாளை என்னிடம் தந்து, "என் தலையை வெட்டிக் கொண்டு போய், எனது தம்பியிடம் தந்து வேண்டிய பரிசிலைப் பெற்று மகிழ்க. இதைவிடச் சிறந்த ஒன்று இப்போது என்னிடம் இல்லை. எனவே, எனது தலையைக் கொண்டு போகச் சொல்கிறேன்" என்று சொன்ன, போரில் புறம் கொடாத உன்னுடைய அண்ணன் குமணனை நான் காட்டில் கண்டு வருகின்றேன் என்பதை அறிவாயாக.


வழிகெட வரினும் தத்தம்   
     வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம்
கிழிபட அயில்வேல் வந்து
     கிழிப்பினும், சான்றோர் கேட்கும்
மொழிகொடு வாழ்வது அல்லால்,
     முறைகெடப் புறம் நின்றார்க்கு
பழிபட வாழ்கிற்பாரும்
     பார்த்திபர் உளரோ பாவம். ---  கம்பராமாயணம், மாயாசனகப் படலம்.

இதன் பதவுரை ---
     வழி கெட வரினும் --- தங்களுடைய கால்வழியே அழியும் நிலைமை வரினும்; தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் ---  தத்தமுடைய வாழ்க்கையே தேய்ந்து அழிந்து போவதாயினும்;  மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிடைப்பினும் --- மார்பு கிழிபடுமாறு கூர்மையான வேல் வந்து எதிர்ப்படினும்; ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது அல்லால் --- சான்றோர் கூறும்  நன்மெழியைக் கைக்கொண்டு வாழ்வதல்லாது;  முறைகெட ---  அறவழி நீங்கப்;  புறம் நின்று ஆர்க்கும் பழிபட வாழ்கிற்பாரும்  பார்த்திபர் --- மறைவில் இருந்து (பலர்) ஒலித்துப் பழி தூற்றும்படி வாழ்பவர்களாகிய அரசர், உளரோ --- உன்னைத் தவிர்வேறு யாராவது உண்டா?; பாவம் - பாவம்.

உணர்விலன் ஆதலிற் சாக்காடு இல்லை. --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     உணர்விலன் ஆதலின் --- அறிவிலான் ஆதல்போல, சாக்காடு --- மரணம், இல்லை --- ஒருவனுக்கு வேறில்லை.

அறிவில்லாதவன் செத்த பிணத்தை ஒப்பான்.




No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...