திரு வலிவலம் - 0846. தொடுத்த நாள்முதல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தொடுத்த நாள்முதல் (வலிவலம்)

முருகா!
அடியேனை அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருளி
 திருவடியில் சேர்த்து அருள்வாய்.


தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன ...... தனதான


தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க வேறொரு பெயர்தம திடமது
     துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்

துவக்கி லேயடி படநறு மலரயன்
     விதித்த தோதக வினையுறு தகவது
     துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே

அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
     மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ

டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
     யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
     யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ....அருள்தாராய்.

எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
     எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் .....மருகோனே

எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
     யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் .....புதல்வோனே

வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
     அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
     வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே

வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
     கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
     மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க, வேறொரு பெயர்தமது இடம்அது
     துவட்சியே பெறில், வருடன் மருவிடு ......பொதுமாதர்

துவக்கிலே, அடி பட,நறு மலர் அயன்
     விதித்த தோதக வினை உறு தகவது
     துறக்க, நீறு இட, அரகர எனஉளம் ...... அமையாதே,

அடுத்த பேர் மனை, துணைவியர், தமர்,பொருள்,
     பெருத்த வாழ்வு இது சதம் என மகிழ்வுறும்,
     அசட்டன், துலன், அவம் அது தவிர,நின் .....அடியாரோடு

அமர்த்தி, மாமலர் கொடுவழி பட, எனை
     இருத்தியே, பரகதி பெற, மயில்மிசை
     அரத்த மாமணி அணி கழல் இணைதொழ .....அருள்தாராய்.

எடுத்த வேல்பிழை புகல் அரிது என, எதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
     எதிர்த்தும், ர்கணை விடல் தெரி கரதலன் ......மருகோனே!

எருக்கு மாலிகை குவளையின் நறுமலர்,
     கடுக்கை மாலிகை, பகிரதி, சிறுபிறை,
     எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் ......புதல்வோனே!

வடுத்த மா என நிலைபெறு நிருதனை
     அடக்க, ஏழ்கடல் எழுவரை துகள் எழ,
     வடித்த வேல்விடு கரதல! ம்ருகமத ...... புயவேளே!

வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய,
     கடப்ப மாலிகை அணிபுய! அமரர்கள்
     மதித்த சேவக! வலிவல நகர்உறை ...... பெருமாளே.


பதவுரை

      எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து --- தேவரீர் எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்னும்படியாக விடுத்து அருளி,

      ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்தும் --- இராவணனது இரத்தினங்கள் பதித்த முடிகள் பொடிபடுமாறு எதிர்த்துப் போர் புரிந்து,

     ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே ---  ஒப்பற்ற அம்பைச் செலுத்தவல்ல திருக்கரத்தை உடைய இராமபிரானின் திருமருகரே!

      எருக்கு மாலிகை --- வெள்ளெருக்கம் பூவால் ஆன மாலை,

     குவளையின் நறுமலர் --- நறுமணம் பொருந்திய குவளை மலர்,

     கடுக்கை மாலிகை --- கொன்றைமலர் மாலை,

     பகிரதி --- கங்கை ஆறு,

     சிறு பிறை --- இளம் பிறைச் சந்திரன்,

      எலுப்பு மாலிகை புனை --- எலும்புகளால் ஆன மாலை ஆகியவற்றை அணிந்துள்ள,

     சடிலவன் அருள் புதல்வோனே --- திருச்சடையினை உடைய சிவபரம்பொருள் அருளிய திருப்புதல்வரே!

      வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க --- பிஞ்சு விட்ட மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலைபெற்று நின்ற சூரபதுமனை அடக்கவும்,

      ஏழ்கடல் எழுவரை துகள் எழ --- ஏழு கடல்களும் வற்றவும், ஏழு மலைகளும் பொடியாகவும்,

      வடித்த வேல் விடு கரதல --- கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய திருக்கரத்தை உடையவரே!

     ம்ருகமத புயவேளே --- கத்தூரி மணக்கும் திருத்தோள்களை உடையவரே!

      வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணிபுய --- காட்டில் வாழ்ந்திருந்த குறவர் மகளாகிய வள்ளிநாயகியின் மார்பினைத் தழுவி முழுகிய கடப்பமலர் மாலையை அணிந்த திருப்புயங்களை உடையவரே!

      அமரர்கள் மதித்த சேவக --- தேவர்கள் மதித்துப் போற்றுகின்ற வல்லமை உடையவரே!

     வலிவல நகர் உறை பெருமாளே --- திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க --- தொடக்கத்தில் இருந்தே தன்னோடு பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும்,

      வேறு ஒரு பெயர் தமது இடம் அது துவட்சியே பெறில் ---
வேறு ஒருவர் இடத்தில் அவருடைய சோர்வு அறிந்து,

     அவருடன் மருவிடு பொது மாதர் துவக்கிலே அடிபட --- அவருடன் கலக்கின்ற விலைமாதர்களின் பிடியில் அகப்படும்படியாக,

      நறுமலர் அயன் விதித்த --- நறுமணம் மிக்க தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவர் விதித்த

     தோதக வினை உறு --- குற்றத்தை விளைக்கும் தீய வினையானது வந்து சேரும்போது,

     தகவு அது துறக்க --- எனது ஒழுக்க நிலையில் இருந்து தவறி,

      நீறு இட --- திருநீற்றை அணிந்து கொள்ளவும்,

     அரகர என உளம் அமையாதே --- அரகர என்று கூறித் துதிக்கவும் எனது உள்ளம் பொருந்தாமல்,

      அடுத்த பேர் --- என்னிடத்தில் வந்து பொருந்திய உற்றார்கள்,

     மனை --- வீடும்,

     துணைவியர் --- மனைவியும்,

     தமர் --- எனது சுற்றமும்,

     பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என --- பெரும் பொருட்செல்வமும்  கூடிய பெரிய வாழ்வாகிய இதுவே நிலைத்திருப்பது என்று,

      மகிழ்வு உறும் அசட்டன் --- மகிழ்கின்ற மூடன்,

     ஆதுலன் --- அறிவற்றவன் ஆகிய அடியேன்,

     அவம் அது தவிர --- அனுபவிக்கின்ற கேடு என்னை விட்டு நீங்குமாறு,

      நின் அடியாரோடு அமர்த்தி --- உனது மெய்யடியார் திருக்கூட்டத்தில் அடியேனைப் பொருந்தச் செய்து,

     மாமலர் கொடு வழிபட எனை இருத்தியே --- நல்ல மலர்களைக் கொண்டு தேவரீரை வழிபடும்படியாக இருக்கச் செய்து,

      பரகதி பெற --- மேலான வீட்டின்பத்தை அடியேன் பெற்று உய்யுமாறு,

     மயில்மிசை --- மயிலின் மீது எழுந்தருளி,

     அரத்த மாமணி அணிகழல் இணை தொழ அருள் தாராய் ---  சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள் அணிந்த தேவரீரது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவீராக.


பொழிப்புரை

     தேவரீர் எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்பது போல விடுத்து அருளி, இராவணனது இரத்தினங்கள் பதித்த முடிகள் பொடிபடுமாறு எதிர்த்துப் போர் புரிந்து, ஒப்பற்ற அம்பைச் செலுத்தவல்ல திருக்கரத்தை உடைய இராமபிரானின் திருமருகரே!

         வெள்ளெருக்கம் பூவால் ஆன மாலை, நறுமணம் பொருந்திய குவளை மலர், கொன்றைமலர் மாலை, கங்கை ஆறு,இளம் பிறைச் சந்திரன், எலும்புகளால் ஆன மாலை ஆகியவற்றை அணிந்துள்ள, திருச்சடையினை உடைய சிவபரம்பொருள் அருளிய திருப்புதல்வரே!

         பிஞ்சு விட்ட மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலைபெற்று நின்ற சூரபதுமனை அடக்கவும், ஏழு கடல்களும் வற்றவும், ஏழு மலைகளும் பொடியாகவும், கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய திருக்கரத்தை உடையவரே!

     கத்தூரி மணக்கும் திருத்தோள்களை உடையவரே!

         காட்டில் வாழ்ந்திருந்த குறவர் மகளாகிய வள்ளிநாயகியின் மார்பினைத் தழுவி முழுகிய கடப்பமலர் மாலையை அணிந்த திருப்புயங்களை உடையவரே!

     தேவர்கள் மதித்துப் போற்றுகின்ற வல்லமை உடையவரே!

     திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         தொடக்கத்தில் இருந்தே தன்னோடு பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும், வேறு ஒருவர் இடத்தில் அவருடைய சோர்வு அறிந்து, அவருடன் கலக்கின்ற விலைமாதர்களின் பிடியில் அகப்படும்படியாக, நறுமணம் மிக்க தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவர் விதித்த, குற்றத்தை விளைக்கும் தீய வினையானது வந்து சேரும்போது, எனது ஒழுக்க நிலையில் இருந்து விடுபட்டு, திருநீற்றை அணிந்து கொள்ளவும், அரகர என்று கூறித் துதிக்கவும் எனது உள்ளம் பொருந்தாமல், என்னிடத்தில் வந்து பொருந்திய உற்றார்கள், வீடும், மனைவியும், எனது சுற்றமும், பெரும் பொருட்செல்வமும்  கூடிய பெரிய வாழ்வாகிய இதுவே நிலைத்திருப்பது என்று, மகிழ்கின்ற மூடனும், அறிவற்றவனும் ஆகிய அடியேன், அனுபவிக்கின்ற கேடு என்னை விட்டு நீங்குமாறு, உனது மெய்யடியார் திருக்கூட்டத்தில் அடியேனைப் பொருந்தச் செய்து, நல்ல மலர்களைக் கொண்டு தேவரீரை வழிபடும்படியாக இருக்கச் செய்து,  மேலான வீட்டின்பத்தை அடியேன் பெற்று உய்யுமாறு, மயிலின் மீது எழுந்தருளி, சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள் அணிந்த தேவரீரது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவீராக.   

விரிவுரை

தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க, வேறு ஒரு பெயர் தமது இடம் அது துவட்சியே பெறில், அவருடன் மருவிடு பொது மாதர் ---

தொடுத்தல் --- இயைத்தல், பூட்டுதல், வளைத்தல், கட்டுதல், சேர்த்து வைத்தல்.

துவட்சி --- அசைவு, ஒசிவு, சோர்வு.

பூக்களளை இணைத்து மாலை தொடுப்பது போ, தனக்கு மாலை சூட்டி, மங்கல நாணைப் பூட்டி சேர்த்துவைக்கப்பட்ட, பருவம் உள்ள கணவன் இருக்கும்போதே, வேறு ஒருவன் தனது உள்ளம் மயங்கி இருக்கும் காலம் பார்த்து, பொருள் கருதி, அவனுடன் கூடி இன்பத்தை அனுபவிக்கின்றவர் பொது மாதர். பணம் படைத்த எல்லோருக்கும் பொதுவானவர். அருள் கருதாது, பொருள் ஒன்றையே கருதி, தமது உடல் சுகத்தை விலை பேசும் விலைமாதர்.

களபம் ஒழுகிய புளகித முலையினர்,
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,
     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர், ...... எவரோடும்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,
     பொருளில் இளைஞரை வழிகொடு, மொழிகொடு,
     தளர விடுபவர், தெருவினில் எவரையும் ...... நகையாடி,

பிளவு பெறில், அதில் அளவுஅளவு ஒழுகியர்,
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,
     பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு, ......                                                                                                      குழைவோடே,
  
பிணமும் அணைபவர், வெறிதரு புனல்உணும்
     அவச வனிதையர், முடுகொடும் அணைபவர்...

என அருணகிரிநாதப் பெருமான் பொதுமாதர் குறித்து அருளி உள்ளது காண்க,

துவக்கிலே அடிபட ---

துவக்கு --- கட்டு, தொடர்பு, பற்று, தோல்.

அடிப்படுதல் --- கீழ்ப்படுதல், பழகுதல், அடிமைப்படுதல்.

தோல் என்பது உடல் உணர்வைப் பெறுகின்ற கருவி. தொடு உணர்வால் அறிவு மயக்கம் உண்டாகும்.

விலைமாதரின் புற அழகிலும்,  கண்ணசைவிலும், அல்ங்காரப் பேச்சிலும் அறிவு மயங்கி, அவரின்பமே மேலானது என்று எண்ணி, அவர் இடும் ஏவலைச் செய்து, பொருளையும் வார் வழங்கி, அடிமைப்பட்டுக் கிடத்தல்.


நறுமலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு ---

மலர் என்பது தாமரையையே குறிக்கும். மற்ற மலர்களைப் பேரிட்டு அழைக்கவேண்டும். மல்லிகை மலர், குவளை மலர் என்பது போல.

அயனம் - பிறப்பு. படைப்பு.

தாமரை மலரில் வாசம் செய்யும் பிரமன், உயிர்களின் வினைக்கு ஏற்ப, அவற்றுக்கு உடலைப் படைக்கும் படைப்புக் கடவுள் ஆவார்.

நல்வினைப் பயன் இருந்தால், நல்வாழ்வு அமையும். தீவினைப் பயன் இரு்ந்தால் அதற்கு மாறான வாழ்வு அமையும்.

தீவினையின் பயனை ஒருவன் அனுபவிக்கும் காலம் வரும்போது, அறிவு மங்கும். அழிவு தொடங்கும். அழிவுக்குக் காரணமாக உள்ளவை மூன்று. அவை, கள் குடித்தல், சூது ஆடுதல், விலைமகளிர் தொடர்பு.

விலைமளிர் கூட்டம் பொருளிழப்புக்குத் துணை புரிந்து, அருளிழப்பையும் தருவிக்கும். அதுபோன்றே, பொருள் ஈட்டுவதற்குத் தடையாகவும், முடிவில் தீமையையே தருவதாகவும் அமைந்துள்ளது கள் குடி. இதற்கெல்லாம் காரணமாக அமைந்து நிற்பது காமம். இது, ஆசை, அன்பு, விருப்பம், இன்பம், புணர்ச்சியின்பம் என்றெல்லாம் பொருள்படும். என்றாலும், காணும் பொருள்களின் மீது கொள்ளும் ஆசையே காமம் ஆகும். ஒரு பொருள் தேவையா, தகுதியா, நன்மையா, தீயமையா என்றெல்லலாம் ஆராயாமல், அதன்மீது ஆசை கொள்ளுவது காமம். காமத்தை உட்பகை என்றனர் முன்னோர்.

கள்ளாமை என்னும் ஒரு அதிகாரத்தை, பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்தல் கூடாமை என்பதற்காக வைத்தார் நாயனார்.

கள்ளத்தனத்துடன் மறைவாக அனுபவிப்பது என்பதால் கள் எனப்பட்டது. நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ இருந்து வெறியினால் உணர்வை மறைக்கும் பொருட்களை நுகர்தல். கள் என்னும் பெயர் மூவகைப் பொருட்கும் பொதுவாக அமைந்தாலும், பெருவழக்குப் பற்றி நீர் வடிவான பொருளையே குறிக்கும். அது இயற்கையும் செயற்கையும் என இரு வகைகளை உடையது.  இயற்கை என்பது, பனை தென்னை முதலிய மரங்களில் இருந்து இறக்குவது.  செயற்கை என்பது அரிசி காய்கனி முதலியவற்றைப் புளிக்க வைத்தும் காய்ச்சியும் எடுப்பது.

கள்ளால் ரும் தீமையைத் திருவள்ளுவ நாயனார் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் காட்டியவாறு காண்க.

"உட்கப் படாஅர், ஒளி இழப்பர், எஞ்ஞான்றும்,
கள்காதல் கொண்டு ஒழுகுவார்".  

கள் உண்பதில் ஆசை கொண்டு வாழ்பவர், பகைவரால் அஞ்சப்படமாட்டார்கள். தாம் பெற்றுள்ள புகழையும் இழப்பர்.

"உண்ணற்க கள்ளை, உணில் உண்க, சான்றோரால்
எண்ணப்பட வேண்டா தார்".  

கள்ளை உண்ணாது ஒழிதல் வேண்டும். தகுதி மிக்க சான்றோரால் மதிக்கப்பட விரும்பாதவர் ஆயின், அதனை உண்ணலாம்.               

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால், என் மற்றுச்
சான்றோர் முகத்துக் களி".                                

ஈன்று எடுத்த தாயின் எதிரிலும் கள் உண்டு களித்தல் விரும்பத் தகாதது ஆகும். அவ்வாறு இருக்க, சான்றோர்கள் முன்னர் கள் உண்டு களித்தல் எப்படி?

"நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும், கள் என்னும்
பேணாப் பெரும் குற்றத்தார்க்கு".

கள் உண்ணுதல் என்னும் விரும்பத் தகாத பெரும் பாவத்தைப் புரிந்தவரை விட்டு நாணம் என்று சொல்லப்படும் நல்ல பெண்ணானவள் நீங்குவாள்.

"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு".

இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும் திருமகளால் புறக்கணிக்கப்பட்டவரின் தொடர்புகள் ஆகும்.

பொன்னாசையும் மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும் உண்டு. எனவே, பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது. இதுவேயும் அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே அகல வேண்டும்.

கள்ளானது குடித்தால் அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு பண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள் வேறொன்றும் இல்லை.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.         --- திருக்குறள்.

கள் உண்டல் காம்ம் எமன்ப
         கருத்து அறை போக்குச் செய்வ,
எள் உண்ட காமம் போல
         எண்ணினில் காணில் கேட்கில்
தள்ளுண்ட விடத்தின், நஞ்சநம்
         தலைக்கொண்டால் என்ன, ஆங்கே
உள்ளுண்ட உணர்வு போக்காது,
         உண்டபோது அழிக்கும் கள் ஊண்.                                                                                            --- திருவிளையாடல் புராணம்.
  
இதன் பொருள் ---

கள் உண்ணுதலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள் உணவானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினாலும், கண்டாலும், கேட்டாலும் தவறுதலுற்ற இடத்திலும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அப்பொழுதே, உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது. உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.

தீயைக் காட்டிலும் காமத் தீ கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும் சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால் நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்.                     --- நாலடியார்.

தொடில்சுடின் அல்லது காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ,                    --- திருக்குறள்.

தீயானது தொட்டால் தான் சுடும். காமத் தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம் பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.

உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும், குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத் தீ அதே.

நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில் காமமே.           --- கந்தபுராணம்.

அறம் கெடும், நிதியும் குன்றும்,
         ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும் போகி
         நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும், மறையோர் மன்னர்
         வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை மாதர்
         குணங்களை விரும்பினோர்க்கே.           --- விவேகசிந்தாமணி.

காமமே குலத்தினையும் நலத்தினையும்
         கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
         புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச் செல்லாமல்
         வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும் பகையாக்கிக்
         கழுத்து அரியும் கத்தி தானே. --- விவேகசிந்தாமணி.

ஒக்க நெஞ்சமே! ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்,
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே.                       --- திருவருட்பா.

"நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின், முற்றிழாய், பிற்பயக்கும் பீழை பெரிது" என்றார் குமரகுருபர அடிகள். மிக்க காமம் என்பது, தொடக்கத்தில் விளைக்கின்ற சிறிது பொழுதே இருக்கும் தன்மையை உடைய இன்பத்தைக் காட்டிலும், பின்னர் விளைக்கின்ற நெடுங்காலம் வருத்துவதாகிய துன்பம் பெரியதாகும்.

புறப்பகை கோடியின் மிக்குஉறினும் அஞ்சார்   
அகப்பகை ஒன்றுஅஞ்சிக் காப்ப அனைத்து உலகும்   
சொல்ஒன்றின் யாப்பார் பரிந்துஓம்பிக் காப்பவே   
பல்காலும் காமப் பகை.            --- நீதிநெறி விளக்கம்.

உலகம் முழுவதையும் தமது ஒரு வார்த்தையினாலே தமது வசமாக்க வல்ல ஆற்றல் படைத்த முனிவரும், காமமாகிய உட்பகை தம்மை அணுகாவண்ணம் எப்போதும் வருந்தியும் தம்மைக் காத்துக் கொள்வர். ற்றதுபோல, அறிவு உடையார் வெளிப்பகை தமக்குக் கோடிக்கு மேல் உண்டானாலும் அஞைசமாட்டார். ஆனால், அகப்பகை ஆகிய காமப்பகைக்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்வர்.

தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்
தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல்உணர்வினைத் தொலைக்கும்,
ஏம நல் நெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம் அன்றியே ஒரு பகை உண்டு கொல் கருதில்.      ---  கந்தபுராணம்.

காமமே கொலைகட்க்கு எல்லாம்
         காரணம், கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம்
         காரணம், கூற்றம் அஞ்சுங்
காமமே கள் உண்டற்கும்
         காரணம், ஆதலாலே
காமமே நரக பூமி
         காணியாக் கொடுப்பது என்றான்.     --- திருவிளையாடல் புராணம்.
 
இதன் பொருள் ---

காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது. கண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றுவனும் அஞ்சுதற்கு உரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலாலே, காமமொன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக் காணி ஆட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.

கொலை அஞ்சார், பொய்ந்நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ, ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்
காமம் கதுவபட் டார்.                         --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

காமத்திற்கு வசப்பட்டவர்கள் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல வெட்கப்பட மாட்டார்கள். தம்முடைய பெருமையைக் காத்துக்கொள்ளவும் செய்யமாட்டார்கள். திருட்டுத் தொழில் ஒன்று மட்டுமா? அதற்கு மேலும் பலவகையான தீய செயல்களையும் புரிவார். இந்தக் காம உணர்வானது பொழியோடு பாவத்தையும் தருவது ஆகும் என்றும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு இருக்க, காமத்தால் பீடிக்கப்பட்டவர்கள் வேறு என்ன தான் செய்ய மாட்டார்கள். எல்லாத் தீமைகளையும் புரிவர்.

நிலைத்த இன்பமான பேரின்பத்தில் திளைத்து இருப்பவர்கள்,  உலக இன்பமாகிய பாழும் சேறு போன்ற நரகத்தில் விழமாட்டார்கள். சிற்றின்பத்தை விழைபவர் மற்ற அனைத்து இன்பங்களையும் கூவிட்டு விடுவார்கள் என்று நீதிநெறி விளக்கப் பாடல் கூறும்.

சிற்றின்பம் சில்நீரது ஆயினும், அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடு, - முற்றும் தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ?
பார்இன்பப் பாழ்ங்கும்பியில்.           --- நீதிநெறி விளக்கம்.

         செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் இப்படித்தான் சிதறும் என்று "விவேக சிந்தாமணி" கூறுகின்றது.

அன்னையே அனைய தோழி!         
         அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்,      
         உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்,
என்னையே புணருவோர்கள்
         எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப்    
         போதினில் வீழ்வது ஏனோ?     

பொம்எனப் பணைத்து விம்மிப்
         போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே!
         கூறுவேன் ஒன்று, கேண்மோ,
செம்மையில் அறம் செய்யாதார்
         திரவியம் சிதற வேண்டி,
நம்மையும் கள்ளும் சூதும்
         நான்முகன் படைத்தவாறே!

இதனை, இரத்தினச் சுருக்கமாக, இரண்டு வகையான மனத்தை உடைய விலைமாதரும், கள்ளும், சூதாட்டமும் ஆகியவை திருமகளால் புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் என்றார் திருவள்ளுவ நாயனார்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.                              ---  திருக்குறள்.

காம மயக்கம் கொண்டு, விலைமாதரைக் கூடுபவர் செல்வமானது, வற்றிப் போகத்தான் செய்யும். அது அவருடைய தீவினைப் பயன் ஆகும். செல்வம் சுருங்க வரும் காலத்து, மாதர் மேல் மனம் வைக்கத் தோன்றும்.

மாதர்மேல் மனம் வைத்தார்க்கு ஞானம் கல்வி ஒழுக்கம் ஆகிய அனைத்தும் அழியும் என்பதை ஔவைப் பிராட்டியார் அருளிய பாடலால் தெளியலாம்.

நண்டு,சிப்பி, வேய்,கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண் தொடீ!
போதம், தனம், கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.                  --- ஔவையார்.


தகவு அது துறக்க ---

தகவு --- தகுதி,  குணம், பெருமை, அருள், நடுவுநிலைமை, நீதி, வலிமை, அறிவு, தெளிவு, நன்மை, நல்லொழுக்கம்.

விலைமாதர் கூட்டுறவால், ஒருவனது தகவு குன்றும்.


நீறு இட அரகர என உளம் அமையாதே ---

திருநீறு --- வினைகளை நீறாக்குவது. அஞ்ஞானத்தை அகற்றுவது. பாவத்தை அறுப்பது.

திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்த திருநீற்றுப் பதிகத்தை ஓதித் தெளிதல் வேண்டும்.

"நீறு அணிந்தார் அகத்து இருளும், நிறை கங்குல் புறத்து இருளும் மாறவரும் திருப்பள்ளியெழுச்சி" எனத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளியபடி, திருநீறு அணிந்து வழிபடுபவர்கள் உள்ளத்தில் உள்ள அஞ்ஞான இருளானது நீங்கும்.

பாவக் காடு மூடியுள்ள உள்ளத்தில் திருநீற்றை அசிந்து உய்யவேண்டும் என்னும் எண்ணம் எழாது.

சிவஞான மயமானது திருநீறு. "சத்தி தான் யாதோ என்னில் தடை இலா ஞானம் ஆகும்" என்ற சிவஞானசித்தியாரது திருவாக்கின்படி, ஞானமே சத்தியாகும். ஆதலின், திருவருள் சத்தி சொரூபமானது. "பராவணம் ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருநீற்றினை அணிந்து கொள்வார்க்கு நோயும் பேயும் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும். சர்வமங்கலங்களும் பெருகும். தீவினை கருகும்.

எல்லாவற்றையும் தூய்மை செய்வது பசுவின் சாணமே ஆகும்.  அதனால் ஆகிய திருநீறு, உள்ளத்தையும் உடம்பையும் தூய்மை செய்ய வல்லது. நிறைந்த தவம் புரிந்தோர்க்கே திருநீற்றில் மிகுந்த அன்பு உண்டாகும். தவம் செய்யாத பாவிகட்குத் திருநீற்றில் அன்பு உண்டாகாது.

எத்தகைய பாவங்களைப் புரிந்தவராயினும், பெரியோர்கள் இகழ்கின்ற ஐம்பெரும் பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை அன்புடன் தரித்து நல்வழிப்படுவாராயின், முன் செய்த பாவங்களினின்றும் விடுபட்டு, செல்வம் பெற்று, உலகமெல்லாம் போற்றும் பெருமை அடைவார்கள்.

யாது பாதகம் புரிந்தவனர் ஆயினும், இகழும்
பாதகங்களில் பஞ்சமா பாதகர் எனினும்,
பூதி போற்றிடில், செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது தீர்ந்தனர், பவுத்திரர் ஆகியே திகழ்வார்.   ---  உபதேச காண்டம்.

சிவதீட்சை பெற்று ஒவ்வொருவரும் முறைப்படி திருநீறு பூசி, இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.

திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போது, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன் ஒன்று சேர்தல், அதிகமாக விலகுதல்,  வளைதல், முதலிய குற்றங்கள் இன்றி அணிதல் வேண்டும். இதற்காக எப்படியாவது பூசிவிட்டு, ஒழுங்குபடுத்தக் கூடாது. நாளடைவில் இது கைகூடும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய மூன்று இடங்களில் ஆறு அங்குல நீளமும், ஏனைய அங்கங்களில் ஓவ்வோர் அங்குல நீளமுமாகத் தரித்தல் வேண்டும். மூன்று கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.

மூன்று வேளையும் இவ்வாறு திருநீறு திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். முடியாத போது, ஒருவேளையேனும் முறைப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் தரித்தவர் உருத்திர மூர்த்தியே ஆவார். இவ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்து, பதி தருமம் புரிவோர் நிகரில்லாத மும்மூர்த்தி மயமாவார் என்று வேதங்கள் கூறுகின்றன.


திருநீறு வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்" என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
 
திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
  
திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

அரன் - பாவங்களைப் போக்குபவன்.

சிவ நாமங்களுக்குள் சிறந்த நாமம் இது. துயரங்கள் இன்றி வாழவேண்டும் என்பதே உயிர்களின் நோக்கம். துயரங்கள் நீங்க வேண்டுமானால் இந்த 'அரகர' என்ற திருநாமம் எங்கும் ஒலிக்கவேண்டும்.

எல்லாம் அரன் நாமமே சூழ்க,
வையகமும் துயர் தீர்கவே...

என்று அருளிச் செய்தார் திருஞானசம்பந்தர்.

துன்பத்தைத் தவிர்த்து, இன்பத்தைத் தரவல்லது இத் திருநாமம்.  இதனை அறியாது துன்ப நீக்கத்திற்கு வேறுவேறு சாதனங்களை மேற்கொள்வது, கரும்பு இருக்க இரும்பைக் கடிப்பது போலும் என்க.

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து
         முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை
         இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை,
         ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க
         இரும்பு கடித்து எயத்த ஆறே!                   --- அப்பர்.

அரஅர என்று அனுதினமும் உள்ளம் உருகி உரைப்பவர்க்கு அரிய காரியம் அகில உலகங்களிலும் இல்லை.  அமரத்துவத்தை அளிக்க வல்லது. பிறவாத பெற்றியைத் தரும்.

அரகர என்ன அரியது ஒன்றுஇல்லை,
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அரும்பிறப்பு அன்றே.                      ---  திருமந்திரம்.

கந்தவுலகிலே முருகவேளுடைய கொலுவில் அடியார்கள் அரகரா என்று ஒலிக்கும் ஒலி கடல்போல் முழங்கும் என்று கொலு வகுப்பிலே அடிகள் கூறுகின்றனர்.

வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்...                 --- கொலு வகுப்பு.

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று
    அறுசமய நீதி ஒன்றும்              அமறியாமல்
  அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
    அநுதினமும் நாணம் இன்றி            அழிவேனோ.    --- (கருவின்) திருப்புகழ்.

தீவினை மண்டி இருந்தால், இறைவன் திருநாமத்தைச் சொல்ல வாய் வராது.


அடுத்த பேர் மனை, துணைவியர், தமர், பொருள், பெருத்த வாழ்வு இது சதம் என மகிழ்வு உறும் ---

உலகில் உள்ள பொருள்கள் யாவும் சதமல்ல, சதம் அல்லாதவற்றை சதம் என்று எண்ணி மாந்தர் மகிழ்ந்து, பின்னர் எல்லாம் இழந்து துன்புறுகின்றனர்.

ஊரும் சதம்அல்ல, உற்றார் சதம்அல்ல, உற்றுப்பெற்ற
பேரும் சதம்அல்ல, பெண்டீர் சதம்அல்ல; பிள்ளைகளும்
சீரும் சதம்அல்ல, செல்வம் சதம்அல்ல, தேசத்திலே
யாரும் சதம்அல்ல, நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே    --- பட்டினத்தார் .

இவையெல்லாம் நமது வினையின் பயனாக வந்து சேர்ந்தவை. இவைகளைப் பொருள் என எண்ணி அறிவு மயங்கி மகிழ்தல் கூடாது. "மனைவி தாய், தந்தை மக்கள், மற்று உள சுற்றம் என்னும் வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே" என்று அறிவுறுத்துகின்றார் அப்பர் பெருமான்.

அசட்டன் ---

கீழ்மகன், இழ்ந்தோன், குற்றமுடையவன்.

ஆதுலன் ---

ஆற்றல் அற்றவன், வறியவன்.

அவம் அது தவிர ---

அவம் --- கேடு.

நின் அடியாரோடு அமர்த்தி மாமலர் கொடு வழிபட எனை இருத்தியே ---

அடியவர் கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,
கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்
பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்
நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்
பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று
அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்
பரமானந்தக் கூத்த! கருணையொடு
நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்
உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொணீஇ,
எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்
செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல் தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".        

அடியேன் புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு பழகி வந்த்தால், அவர்கள் என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது என்கின்றார் இந்த அகவல் பாடலில்.

வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
     மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள்
     திறத்து இடை நைவேனை
ஒப்பு இலாதன உவமனில் இறந்தன
     ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயங் கண்டாமே. 

நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
     நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை
     என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன்
     நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

முன்னை என்னுடை வல்வினை போயிட
     முக்கண் அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்
     எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றது ஓர் புரிசடை முடிதனில்
     இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயங் கண்டாமே. 

பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர்
     காரணம் இது கேளீர்
ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும்
      உபாயம் அது அறியாமே
செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு
     ஒருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே.

பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்
     பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று
     குடி கெடுகின்றேனை
இரவு நின்று எர் ஆடிய எம் இறை
     எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என்
     ஏழைமை அதனாலே,
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு
     நல்வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு
     ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

பொத்தை ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
     ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
     சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
     பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

நீக்கி முன் எனைத் தன்னொடு நிலாவகை
     குரம்பையில் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து,
     நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
     எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
     எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
     அப்பொருள் பாராதே,
பெற்றவா பெற்ற பயன்அது நுகர்த்திடும்
     பித்தர்சொல் தெளியாமே
அந்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
     அதிசயம் கண்டாமே. 

இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்  
     சிறுகுடில் இது, இத்தைப்
பொருள் எனக் களித்து அருநரகத்து இடை
     விழப் புகுகின்றேனை,
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
     சினப் பதத்தொடு செந் தீ
அருளும் மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
     அதிசயங் கண்டாமே.  

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்          ---  தாயுமானார்.

தரையின் ஆழ்த் திரை ஏழே போல்,எழு
     பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
     சவலை தீர்த்து, ன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்
சபையின் ஏற்றி, இன் ஞானா போதமும்
     அருளி, ஆட்கொளுமாறே தான், அது
     தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே. ---  (நிருதரார்க்கொரு) திருப்புகழ்

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

என்று கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார். மிக உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.

மயில்மிசை அரத்த மாமணி அணிகழல் இணை தொழ அருள் தாராய் ---  

அரத்தம் - சிவப்பு.   மாமணி - பெரியமாணிக்கம்.


எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து --- 

முருகப் பெருமான் ஒன்றைக் குறித்து விடுத்த அருளிய வேலானது தனது இலக்கில் இருந்து பிழைபடாது என்பது போ, இராமன் செலுத்திய கணையும் இலக்கை அடையாமல் போகாது.
        
ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே ---

இராவணனது இரத்தினங்கள் பதித்த முடிகள் பொடிபடுமாறு எதிர்த்துப் போர் புரிந்து, ஒப்பற்ற அம்பைச் செலுத்தவல்ல திருக்கரத்தை உடையவர் இராமபிரான்.

"தடை அற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     
தலைபத்து உடையதுட்டன் ...... உயிர்போகச்
சலசத்து மயில்உற்ற சிறைவிட்டு வருவெற்றி
     
தருசக்ர தரனுக்கு ...... மருகோனே"

எனப் பிறிதொரு திருப்புகழிலும் அடிகள் பாடியுள்ளது காணுக.

வலிவல நகர் உறை பெருமாளே ---

திருவலிவலம் சோழ நாட்டில் உள்ளதொரு பாடல் பெற்ற சிவத் திருத்தலம்.

இறைவர் --- இருதய கமலநாதேசுவரர், மனத்துணைநாதர்.
இறைவியார் --- வாளையங்கண்ணி,    அங்கயற்கண்ணி.
தல மரம் --- புன்னை.

தேவார மூவர் முதலிகள் வழிப்பட்டுத் திருப்பதிங்கள் அருளப்பெற்ற திருத்தலம்.

திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ஓரத்திலேயே கோயில் உள்ளது.  உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம். இரண்டுமே நல்ல வழித்தடங்கள்.

கோச்செங்கட் சோழ நாயனார் அமைத்தருளிய மாடக்கோயில்களில் இத்திருத்தலத்துத் திருக்கோயிலும் ஒன்று. வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து வழிபாடு செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது.

தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், திருமுறை இசைக்கும் முன் பின்வரும் பாடலைப் பாடுவார்கள்.

பிடியதனரு உமை கொள மிகுகரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினான் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்திருத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது மரபு என்று ஒன்று உருவாக்கிவிடப்பட்டது.. அதன்படி "கணபதிவர அருளினன்" என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். ஆனால், இப் பாடலின் பொருள் வேறு.

கருத்துரை

முருகா! அடியேனை அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருளி, திருவடியில் சேர்த்து அருள்வாய்.


No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...