025. அருளுடைமை - 02. நல்லாற்றான் நாடி





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 25 -- அருள் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "பிரமாணங்களாலும், அறிவாலும் நல்வழியிலே நின்று, நமக்குத் துணையாக வரும் அறம் இன்னதென்று ஆராய்ந்து, அருள் வழியில் ஒழுகவேண்டும். ஒன்றை ஒன்று ஒத்து இராத சமய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தாலும், அருளே ஒருவனுக்கு உற்ற துணை ஆகும்" என்கின்றார் நாயனார்.

     பிரமாணம் என்னும் சொல்லுக்கு, அளவை, ஆதாரம், விதி, சான்று, ஆணை, பத்திரம், கடவுள் நம்பிக்கை, மேற்கோள், உண்மையான நிலை,மூவகைக் கால அளவு, மெய்யறிவை அறிதற்கு உதவும் கருவி என்று பலவகைப் பொருள்கள் உண்டு.

     அளவை என்பது பலவகைப்படும் என்பதைப் பின்வரும் சிவஞானசித்தியார் பாடல் ஒன்றினால் தெளியலாம்....

அளவை காண்டல், கருதல், உரை,
         அபாவம், பொருள், ஒப்பு ஆறு என்பர்;
அளவை மேலும் ஒழிபு, உண்மை,
         ஐதிகத்தோடு, இயல்பு என நான்கு
அளவை காண்பர்; அவையிற்றின்
         மேலும் அறைவர்; அவை எல்லாம்
அளவை காண்டல், கருதல், உரை
         என்ற இம்மூன்றில் அடங்கிடுமே.

         அளவை என்பது காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை, இன்மை அளவை, பொருள் அளவை, உவமை அளவை, என்று ஆறு வகைப்படும் என்பர். சிலர் இவற்றுக்கு மேலும் ஒழிபு அளவை, உண்மை அளவை, ஐதிக அளவை, இயல்பு அளவை, என்ற நான்கனையும் கூட்டி அளவைகள் பத்து வகைப்படும் என்று கூறுவர். வேறு சிலர் இப்பத்துக்கு மேலும் அளவைகள் உண்டு எனக் கொள்வர். இவ்வாறு அளவைகளைப் பலவகைப்படுத்திக் கூறினாலும் அவை யாவும் காண்டல் அளவை, கருதல் அளவை, உரை அளவை எனும் மூன்றனுள் அடங்கும்.

         அளவை என்பது வடமொழியில் பிரமாணம் என்ற சொல்லால் குறிப்பிடப்படும். பிரமா என்ற சொல் அறிவு என்ற பொருளைத் தரும். எதன் வழியாக அறிவு பெறப்படுகிறதோ அது பிரமாணம் ஆகும். அளவையை அறிவு அளவை என்றும் வழங்குவர். ஆங்கிலத்தில் இது எபிஸ்டமாலஜி (EPISTOMOLOGY) எனப்படும்.

         உலகத்துப் பொருள்களை எண்ணல் அளவை, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை போன்றவற்றால் அளந்து காண்பது போல மெய்ப்பொருள் இயலில் கூறப்படும் கருத்துக்களை அளந்து அறிவதற்கு அளவை இயல் பயன்படுகிறது. அளவையில் குறை இருந்தால் அளக்கப்படும் பொருளினைப் பற்றிய அறிவும் குறையுடையதாய் முடியும். அதனால் தான் அளவை இயல் இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

         1. காண்டல் அளவை என்பது காட்சி என்றும், பிரத்தியட்சப் பிரமாணம் என்றும் வழங்கும். அட்சம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு, தமிழில் கண் என்று பொருள். ஒரு பொருளைக் கண் முதலிய ஐம் பொறிகளாலும் நேர் முகமாக அறிதல் காண்டல் அளவை ஆகும்.

         2. கருதல் அளவை என்பது அனுமானப் பிரமாணம் எனவும் கூறப்படும். ஒரு பொருளை நேர்முகமாகக் காண முடியாத போதும், அதனை ஒருபோதும் விட்டு நீங்காத தன்மை உடைய மற்றொரு பொருளைக் கண்டு முதலில் கூறப்பட்ட பொருள் உள்ளது என்று கருதி அறிதல் கருதல் அளவை ஆகும். எடுத்துக்காட்டாக தீயோடு விட்டு நீங்காத தன்மையை உடையது புகை. விட்டு நீங்காத் தன்மையை "அவிநா பாவம்" என்ற சொல்லால் குறிப்பர். தொலைவில் ஓரிடத்தில் புகை எழுவதைக் கண்டு நெருப்பு கண்ணுக்குப் புலனாகாத போதும் அங்கே நெருப்பு உள்ளது. என்று அறிந்து கொள்வது கருதல் அளவையின் பாற்படும்.

         3. உரைஅளவை, ஆகமப் பிரமாணம் என்றும், சத்தப் பிரமாணம் என்றும், ஆப்தவாக்கியம் என்றும் வழங்கப்படும். கண்டும் கருதியும் அறிய முடியாத பொருள்களைப் பற்றி நூல்களின் வாயிலாக அறிதல் உரை அளவை ஆகும். இங்கு நூல்கள் எனப்பட்டன. இறைவனால் அருளப்பட்டனவும், இறைவனின் மெய்யடியார்களால் அருளப்பட்டனவுமாகிய மெய்ந்நூல்களையே குறிக்கும்.

         4. இன்மை அளவை என்பது, உண்டு என்னும் அறிவுக்கு எதிராக உணரப்படுவதாகும். இதனை அபாவம் என்றும் வழங்குவர். எடுத்துக் காட்டாக முயலுக்குக் கொம்பு இல்லை என்பது இன்மை அளவையால் அறியப்படுவதாகும்.

         5. பொருள் அளவை --- இந்த அளவை வடமொழியில் அருத்தாபத்தி என்று வழங்கும். வன்றைக் கொண்டு ஒன்றை உய்த்து அறிவது இந்த அளவையால் பெறப்படும். எடுத்துக் காட்டாக, ஒருவர் உண்ணா நோன்பு இருப்பதாகச் சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பகற்பொழுது முழுவதும் அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் முன்னிலையில் அவர் எதையுமே உண்ணவில்லை. பத்துப் பதினைந்து நாள் கழிந்த பிறகு அவர் மேனி வாடாமல் இருப்பாரானால், யாருமே அறியாமல் இரவில் அவர் உண்ணுகிறார் என்பதனை உய்த்து (அருத்தாபத்தியால்) அறியலாம். இதனைப் பகல் உண்ணான் பருத்திருப்பான் என்ற சொற்களால் கூறுவர். இதுவே அருத்தாபத்தி அளவையாகும்.

         6. உவமை அளவை --- செய்யுளில் ஒப்பு என்ற சொல்லால் குறிக்கப்படுவது உவமை அளவை என்றும் கூறப்படும். காட்டுப் பசுவை அறியாத ஒருவன் அது எவ்வாறு இருக்கும் என்று கேட்டால், வீட்டுப் பசுவை ஒத்து இருக்கும் என்று விளக்குவது இந்த அளவைக்கு எடுத்துக் காட்டு.

         சிறப்பித்துச் சொல்லப்படுகிற மேற்கூறிய ஆறு அளவைகளையும் தவிர மேலும் நான்கு அளவைகள் கொள்ளப்படும் என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது. இவற்றுள் முதலாவது ஒழிபு அளவை. இதற்கு பாரிசேட அளவை என்றும் பெயர் வழங்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மகாபாரதக் கதையிலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுவர். அக்காலத்தில் ஆயிரம் யானை வலிமை உடையோர்கள் நால்வர் இருந்தனர். அவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமசேனன் என்பவர்கள். விராட நாட்டில் கீசகன் இனந்தெரியாத ஒருவனால் மற்போரில் கொல்லப்பட்டான். அந்நாட்டில் சல்லியனும், சராசந்தனும் இல்லை. எனவே கீசகனைக் கொன்றவன் அஞ்ஞாதவாசத்தில் இருந்தவனாகிய பீமனாகத் தான் இருத்தல் வேண்டும் என்று உய்த்து அறியப்படும்.

         உண்மை என்பது சம்பவ அளவை என்று வடமொழியில் கூறப்படும். என்னிடம் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன என்று நான் கூறும்போது, என்னிடம் நூறு பொற்காசுகள் உண்டு என்பது சொல்லாமலே பெறப்படும். ஏனெனில் நூறு, ஆயிரத்துள் அடங்கும் என்பது உலகறிந்த உண்மை.

         ஐதிகம் என்பது வழிவழியாக வழங்கி வரும் வழக்கமாகும். இம்மரத்தில் பேய் ஒன்று குடி இருக்கிறது எனும் போது தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டு வந்த ஒரு செய்தியை அது உணர்த்துகிறது.

         இயல்பு என்பது சுபாவ அளவை என்று கூறப்படும். சொற்களுக்கு நேரடியாகப் பொருள் கொள்ளுவது இந்த அளவையினுள் அடங்கும். மரம் என்ற தமிழ்ச் சொல் இயல்பாக நின்று மரம் என்ற பொருளை உணர்த்தும் என்று அறிவது இந்த அளவையுள் அடங்கும்.

         மா மரத்தைக் காட்டல் என்ற பாடம் பிழையானது என்றும் மரம் மரத்தைக் காட்டல் என்பது சரியான பாடம் என்றும் பெரும் புலவர் க. வச்சிரவேல் முதலியார் அவர்களும் மகா வித்துவான் சி. அருணை வடிவேல் முதலியார் அவர்களும் கொள்ளுகின்றனர்.

         இவ்வாறு பத்து அளவைகள் கூறப்படினும் அவை யாவும் காட்சி, கருதல், உரை எனும் மூன்றனுள் அடங்கும். இன்மையும், இயல்பும் காட்சி அளவையில் அடங்குவன. பொருள், ஒழிப்பு, உண்மை என்ற நான்கு அளவைகளும் கருதல் அளவையில் அடங்குவன. ஐதிகம் என்பது உரை அளவையில் அடங்கும்.

     ஒன்று ஒன்று ஒவ்வாத சமய நெறிகள் என்றது, பின்வரும் திருவாசகப் பாடலால் அறிய வரும்...

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழலிணைகள் தந்து அருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

இதன் பதவுரை ---

     உவலைச் சமயங்கள் --- பொய்ச் சமயங்களும், ஒவ்வாத சாத்திரம் ஆம் --- ஒன்றற்கொன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய, சவலைக் கடல் உளனாய்க் கிடந்து --- குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறும் --- தடுமாறுகின்ற, கவலை --- துன்பத்தை, கெடுத்து --- போக்கி, கழல் இணைகள் தந்தருளும் --- திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற, செயலைப் பரவி --- திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ --- நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

     நெறி --- வழி. சமய நெறி --- சமயங்கள் காட்டு வழி.
சமய நெறி எதுவும் ஞானத்தை அடைந்து கடவுளை அடைதற்கு உரிய வழியைக் காட்டுவனவே. அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவரவர் வாழ்வியல் நிலைக்கு ஏற்பவே, சமயங்கள் வழியை வகுத்துக் காட்டும். எந்த வழியாக இருந்தாலும், ஞானத்தைப் பெறுவதற்கும், கடவுளை அடைவதற்கும் உபாதானர் ஆனவையே. ஆனால், சமய உண்மைகளை உள்ளபடி அறியாதார், தாம் அறிந்ததையே உண்மை என்று சாதித்துக் காட்டுவர். சமயநெறிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவர்.

     இதைப் பின்வரும் திருமந்திரப் பாடலால் தெளியலாம்...

ஒன்றதே பேரூர், வழிஆறு அதற்கு உள,
என்றது போலும் இருமுச் சமயமும்,
நின்று இது தீது இது என்று உரை ஆதர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

இதன் பொழிப்புரை ---

     செனறு அடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றால் போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், ஒரு பொருளாகிய கடவுளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. யாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று, இங்ஙனம் தம்முள் பிணங்கும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்து ஓடும் நாயை ஒத்தவர் ஆவர்.

     அகச்சமயத்தில் கூறப்படும் உண்மைகள் புறங்கூற்றாகிய வெற்றுரைகளால் மறுக்கப்படாதன என்பதும் அவற்றின் ஒருமைப்பாட்டினை உணராது, தோற்றத்தினைக் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக்கொண்டு, கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மெய்ம்மையினை உள்ளவாறு உணரும் தெளிவின்றி, தம் சொற்களைப் பயனிலவாகச் செய்வோர் என்பார், "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார். ஞானமே திருமேனியாக உடைய இறைவன், சமயங்கள் தோறும் அருளிச்செய்த ஆகமங்களில் எல்லாம் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களினும் ஒத்துச் சென்று, முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனேயே நோக்கி முடியும்.

     இக் கருத்தை ஔவைப் பிராட்டியார், தாம் பாடி அருளிய நல்வழி என்னும் நூலில் மேலும் தெளிவுபடுத்தி உள்ளார்...

புண்ணியம்ஆம், பாவம்போம், போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள், --- எண்ணுங்கால் 
ஈது ஒழிய வேறுஇல்லை, எச்சமயத்தோர் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.

இதன் பதவுரை ---

     புண்ணியம் ஆம் --- அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் --- பாவமானது அழிவினைச் செய்யும்; போன நாள் செய்த அவை --- முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு --- பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் --- (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் --- ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் --- எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை --- இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் --- பாவம் செய்யாது புண்ணியமே செய்க.

     எனவே, சமயநெறிகள் சொல்லுவது, பாவத்தைப் பயின்று, துன்பத்தை அனுபவித்து, பிறவியில் மீண்டும் மீண்டும் புகுவதை  விடுத்து, அறத்தைச் செய்து, அருள் வழியில் சென்று, இறையருளால் ஞானத்தைப் பெற்று, இறைவன் திருவடியை அடைந்து, மீண்டும் பிறவாத நிலையைப் பெற்று, இறவாத இன்ப வாரிதியில் திளைக்கவேண்டும் என்றே அறிவுறுத்துகின்றன. சமயங்கள் சொல்லும் உண்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.

திருக்குறளைக் காண்போம்...
  
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க, பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க --- அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக,

     பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே --- ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.

      (அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தாமொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

வாழ்கணங்கள் ஆக்கினன் சதாநந்தன் வன்நரகின்
மூழ்கு கொடியோரை, முருகேசா! - தாழ்கிலா
நல்லாற்றான் நாடி அருள்ஆள்க பல்லாற்றான்
தெரினும் அஃதே துணை. 

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, சதாநந்தன் --- சதாநந்தர் என்னும் முனிவர், வல் நரகில் மூழ்கு கொடியோரை --- கொடிய நிரயத்திலே அமிழ்ந்து கிடந்த பொல்லாதவர்களை, வாழ் கணங்கள் ஆக்கினன் --- சிவலோகத்தில் வாழுகின்ற சிவகணங்களாகச் செய்தார். தாழ்கிலா --- இகழ்ச்சியில்லாத, நல் ஆற்றால் நாடி --- நல்வழியை ஆராய்ந்து, அருள் ஆள்க --- அருளைச் செலுத்துக, பல் ஆற்றால் தேரினும் --- பலவழிகளால் ஆராய்ந்து பார்த்தாலும், அஃதே துணை --- அந்த அருளே சிறந்த துணையாக உயிர்கட்கு விளங்கும்.

         சதாநந்த முனிவர் நிரயத்தில் கிடந்து வருந்திய உயிர்த்தொகைகளை எல்லாம் சிவகணங்களாகச் செய்து திருக்கயிலைக்கு அனுப்பினார். நல்ல நெறியை நாடி அருளை எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தவேண்டும்.  பலவழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அவ் அருளே உயிர்களுக்குத் திறந்த துணையாக விளங்கும் என்பதாம்.

                                             சதாநந்தர் கதை

         சதாநந்தர் என்பவர் பதரிகாச்சிரமத்திலிருந்த பூரணவித்து என்னும் முனிவருடைய புதல்வர். இவருடைய தாய் பெயர் பத்திரதத்தை. சில முனிவர்கள் கூடிப் புராணம் படித்தார்கள்.  அப்போது, உயிர்த் தொகைகள் நிரயத்தை அடைந்து வருந்துகிற செய்திகளை எல்லாம் விளக்கமாகக் கூறினார்கள்.  இதனைக் கேட்ட சதாநந்தர் அவ் உயிர்களிடத்திலே மிகுந்த இரக்கம் கொண்டார். தம்முடைய தவச் சிறப்பினால் ஒரு விமானத்தில் ஏறி எமலோகத்திற்குச் சென்றார். எமன் முனிவரை வரவேற்றுப் போற்றினான். நிரயங்கட்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினான். நிரயத் துன்பத்தைப் பார்த்து உள்ளம் பதைத்தார்.  சிவபிரானுடைய திருப்பெயரைக் கூறி அவ் உயிர்த்தொகைகளை எல்லாம் விடுவித்தார். சிவகணங்களாக்கித் திருக்கயிலைக்கு அனுப்பிவிட்டார். முனிவருடைய அருளுடைமையைக் கண்டு அனைவரும் மனம் மகிழ்ந்தார்கள்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


பெரியவர், தம் நோய்போல் பிறர்நோய்கண்டு, உள்ளம்
எரியின் இழுது ஆவார் என்க, - தெரிஇழாய்!
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.           ---  நன்னெறி.

இதன் பொழிப்புரை ---

     தெரிந்து எடுத்த அணிகலன்களை அணிந்தவளே!  கண்கள் நெருங்கிய நோயினால் வருந்தும் பிற உறுப்பைக் கண்டு அழும்.  அதுபோல,  பெரியவர்கள், பிறர் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதி, நெருப்பிலே பட்ட நெய் போல மனம் உருகுவர்.

         இழுது --- வெண்ணெய். மண்டு --- நெருங்கிய. கலுழும் --- வருந்தும்.


தன்ஒக்கும் தெய்வம் பிறிதில்லை, தான் தன்னைப்
பின்னை மனம் அறப் பெற்றானேல்--என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு.       ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தன்னைப் பின்னை மனம் அறத்தான் பெற்றானேல் ---இன்பம் பயப்பது போன்ற தன்னைத் தீநெறிகளில் முன்னர்ச் செலுத்திப் பின்னர் வருந்துகின்ற மனத்தினை ஒருவன் அடக்குவானாயின், தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை --- அவனை நிகர்க்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை; எழுத்து எண்ணே நோக்கி என்னை --- இலக்கணம் சோதிடம் முதலியவற்றையே ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது, இருமையும் கண்டு --- இம்மையிற் புகழும் மறுமையில் இன்பமும் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து, அருட்கண்ணே நிற்பது அறிவு --- அருளை மேற்கொண்டு ஒழுகுதலே அறிவுடைமையாகும்.


பொருள்உடையான் கண்ணதே போகம், அறனும்
அருள்உடையான் கண்ணதே ஆகும், - ருள்உடையான்
செய்யான் பழி,பாவம் சேரான், புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.     --- சிறுபஞ்சமூலம்

இதன் பதவுரை ---

     போகம் பொருள் உடையான் கண்ணதே ஆகும் --- உலக இன்பமானது, செல்வப் பொருள் உடையவனிடத்து உண்டாகும், அறனும் அருள் உடையான் கண்ணதே ஆகும் --- நல்லொழுக்கமும், இரக்கம் உள்ளவனிடத்தில் உள்ளதாகும், அருள் உடையான் பழி செய்யான் --- அத்தகைய அருள் உடையவன்  பழிக்கப்படுந் தீய செயல்களைச் செய்யான், பாவம் சேரான் --- தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான்,
புறமொழியும் பிறர் செவிக்கு உய்த்து உய்யான் --- புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்திப் பிழைக்க மாட்டான்;

     பொருள் உள்ளவனுக்கு உலக இன்பம் பெருகும்; அருள் உள்ளவனுக்கு அறம் விளையும்; அருள் உள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலையும் செய்யான்.


வைததனால் ஆகும் வசை, வணக்கம் நன்றாகச்
செய்ததனால் ஆகும் செழுங்குலமும், - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம், நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.      --- சிறுபஞ்சமூலம்

இதன் பதவுரை ---

     வைததனான் வசை ஆகும் --- (ஒருவன் பிறனை) வைததனால் (அவனுக்கு) வசை உண்டாகும், நன்றாக வணக்கம் செய்ததனால் செழுங்குலமும் ஆகும் --- நன்மை தரும் வணக்கம் என்பனவற்றைப் பிறர்க்கும் செய்ததனால் வளமையாகிய குடிப்பிறப்பும் ஆகும், செய்த பொருளினால் போகம் ஆகும் --- ஈட்டிய பொருளினால் உலக இன்பம் உண்டாகும். நெகிழ்ந்த அருளினான் அறம் ஆகும் --- (பிறர் பொருட்டுத்) தன் மனம் நெகிழ்ந்த, அருள் காரணமாக தருமம் உண்டாகும்.

         பிறரைத் திட்டுதலால் பழியும், வணக்கமும் நன்மையும் மேற்கொண்டிருத்தலால் குலமேன்மையும், பொருளால் போகமும், அருளால் அறமும் உண்டாகும்.

         போகம் --- நுகர்ச்சி. இன்பம். நெகிழ்தல் --- உருகுதல். அருள் --- காரணங் கருதாது ஒரு தன்மைத்தாய் எல்லார் மேலுஞ் செல்லும் இரக்கப் பெருக்கு.


No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...