025. அருளுடைமை - 04. மன்னுயிர் ஓம்பி





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 25 -- அருள் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "நிலைபேறு உடைய உயிர்களைப் பாதுகாத்து, அவ்வுயிர்களிடத்தில் அருள் உடையராய் இருப்பார்க்கு, தனது உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீய வினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர்" என்கின்றார் நாயனார்.

     மன் ---  நிலைபெற்ற. மன் உயிர் - நிலைபேறு உடைய உயிர்.

     உயிர்கள் சித்துப் பொருள் (சித்து - அறிவு). எனவே, அவைகளுக்கு அழிவில்லை என்பதால் "மன் உயிர்" என்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

மன்உயிர் ஓம்பி, அருள் ஆள்வாற்கு இல் என்ப,
தன் உயிர் அஞ்சும் வினை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு --- நிலைபேறு உடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு,

     தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.

         (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

வஞ்சப் புறவினுடன் வான்துலையில் ஏறினான்
இன்சொற் சிவிமுன், இரங்கேசா! - எஞ்சாமல்
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! முன் --- முற்காலத்தில், இனிமை சொல் சிவி --- இனிமையாகப் பேசும் இயல்புடைய சிபிச் சக்கரவர்த்தி, வஞ்சப் புறவினுடன் --- வஞ்சகமாக வடிவெடுத்து வந்த இயமனாகிய புறாவினுடன், வான் துலையில் ஏற்னான் --- நீண்ட தராசுத் தட்டில் ஏறி நின்றான், ஆகையால், இது,  எஞ்சாமல் --- கொஞ்சமேனும் பின்னிடையாகாமல், மன் உயிர் ஓம்பி --- நிலைபெற்ற பிற உயிர்களைக் காத்து, அருள் ஆள்வாற்கு --- அவைகளிடத்திலே இரக்கம் பூண்டு இருப்பவனுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை --- தன் உயிர் அஞ்சவேண்டிய பரகாரியம், இல்லை என்ப --- இல்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள் என்பதை விளக்குகின்றது.

         கருத்துரை ---  மன்னுயிரைத் தன் உயிர்போல் மதிக்க வேண்டும்.

         விளக்கவுரை --- சிபிச் சக்கரவர்த்தி சூரியகுலத் தோன்றல். மெத்த இரக்கமுள்ளவன், மன் உயிரைத் தன் உயிர்போல் மதிக்கும் இயல்பு உள்ளவன். இவன் அருளுடைமையை உலகத்தார்க்கு உணர்த்தும் பொருட்டு, பரமசிவன் ஒரு வேடனாகவும், இயமன் ஒரு புறாவாகவும் வடிவெடுத்துப் புறப்பட்டார்கள். வேடன் புறாவை விடாமல் துரத்தி வந்தான்.  புறா பயந்தோடிச் சிபிச் சக்கரவர்த்தியிடத்தில் அடைக்கலம் புகுந்தது. அதைப் பயம் தீர்த்து ஆதரித்தான் மன்னன். உடனே, வேடன் அம் மன்னன் எதிரில் தோன்றி, ", மன்னா! இப் புறாவை நான் துரத்தி வந்தேன். இப்போது எனக்குப் பசி மிகுந்து இருப்பதனால் இதை எனக்குக் கொடுத்துவிடு, கொன்று தின்று பசி ஆறுவேன்" என்றான். "அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பது என் கடமை. அதற்கு ஈடாக வேறெந்த மாமிசமேனும் தருவேன், கேள்" என்றான் மன்னவன். "வேறெதுவும் வேண்டேன், உன் துடை மாமிசம் வேண்டும்" என்றான் வேடன். அப்படியே மன்னவன் துலை கொண்டு வந்து நாட்டி, அதன் ஒரு தட்டில் புறாவை வைத்து, அதற்கு ஈடாக மறுதட்டில் தன் துடை மாமிசத்தை அறுத்து வைத்தான். புறாத் தட்டு பின்னும் அதிகமாய்த் தாழ்ந்தது. அது கண்ட மன்னவன் அதிசயித்துப் பின்னும் தன் மாமிசத்தை அறுத்து வைக்கும்தோறும் புறாத் தட்டு தாழ்ந்து கொண்டே போயிற்று. பிறகு அவன், தானே மாமிசத் தட்டில் ஏறி நின்று புறாத் தட்டை ஏற்றிச் சரிப்படுத்தினான். உடனே பரமசிவன் அவனுடைய அருளுடைமைக்கு வியந்து, மழவிடை மேல் அவற்குக் காட்சி தந்து, கயிலாயத்தில் வாழும் மாட்சியும் அருள் புரிந்தார். மாயவேடம் தாங்கி வந்த இயமனாகிய புறா என்பதனால் "வஞ்சப் புறவு" என்றார். சிவி, சிபி இரண்டும் ஒன்று. கவி, கபி என்பது போல.

     சிவி, சிபி இரண்டும் ஒன்று. கவி, கபி என்பது போல.

"எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன்" என்று சிலப்பதிகாரம் கூறும்.

"புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானைச் செம்பியன்"

எனவும்,

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூர் உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன்"

எனவும், புறநானூற்றுப் பாடல்களும்,

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும், புகழ்கிற்பாம்?-
மின்உயிர்க்கும் நெடுவேலாய்! இவர் குலத்தோன்,மென் புறவின்
மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்!

எனக் கம்பராமாயணமும் கூறுமாறு காண்க.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...