திருக்குறள்
அறத்துப்பால்
துறவற இயல்
அதிகாரம் 25 -- அருள்
உடைமை
இந்த அதிகாரத்தில் ஒரும் ஐந்தாம்
திருக்குறளில், "அருள் உள்ளம்
கொண்டோர்க்கு இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் ஒரு துன்பமும் உண்டாகாது.
அதற்கு,
காற்று
உலவுகின்ற வளப்பத்தை உடைய இந்தப் பெரிய நிலவுலகத்தில் வாழ்வோர் சாட்சி ஆவார்"
என்கின்றார் நாயனார்.
சாட்சி என்பதற்கு, "பரஸ்பரம் வழக்கு
இடும் இருவரினும் வேறாய், அவ்விருவரது வழக்கை சாட்சாத்தாக (நேராக) அறிந்து
உதாசீனனாய் (பட்சபாம் அற்றவனாய்) இருப்பவன் சாட்சி எனப்படுவான்" என்கின்றது
தத்துவானுசந்தானம்.
தாம் கண்டு தெளிந்த பொருளைக் காணாதவர்க்குத்
தெளிவித்தற்கு உரியவர் சாட்சி எனப்படுவார்.
காற்று வழங்காத இடத்தில் உயிர் வாழ்க்கை
இல்லை என்பதால்,
"வளிவழங்கும்
மல்லல் மாஞாலம்" என்றார்.
அருள் ஆள்வார்க்குத் துன்பம் உண்டாக ஒரு
காலத்திலும்,
ஓரிடத்திலும்
யாரும் கண்டவர் இல்லை. எனவே, உலகத்தார் அனைவருமே சாட்சி ஆவார் என்றார்.
திருக்குறளைக்
காண்போம்...
அல்லல் அருள்
ஆள்வார்க்கு இல்லை, வளி வழங்கும்
மல்லல் மாஞாலம் கரி.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை ---
அருள் உடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது,
வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி ---
அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
(
சான்று
ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள்
ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும்
சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல்
மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்...
அருளால் பிரம்பின்
அடி உண்டார்க்கு இல்லை
துயர்தான், உலகு அனைத்தும்
சொல்லும், --- ஒருநாளும்
அல்லல் அருள்
ஆள்வார்க்கு இல்லை, வளி வழங்கும்
மல்லல் மாஞாலம் கரி.
அடி உண்டார் ---
வந்தி என்னும் ஒரு மூதாட்டியின் ஆளாக வந்து, பாண்டியனால் அடிபட்ட சிவபெருமான்.
அனைத்தும் சொல்லும் --- அந்த வலியாகிய துன்பத்தை எல்லா உலகங்களிலும் உள்ள யாவரும்
என்மேல் பட்டது, என்மேல் பட்டது என்று
கூறுவார்கள். துயர்தான், இடைநிலை விளக்கு--
மத்திம் தீபம். இது திருவிளையாடல் புராணத்துள் பிட்டுக்கு மண்சுமந்த
திருவிளையாடலில் கண்ட வரலாறு.
அந்த அருளை மணிவாசகப் பெருமான் வியந்து
பாடுகின்றார்.
"பண்சுமந்த
பாடல் பரிசு படைத்து அருளும்
பெண்சுமந்த
பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண்சுமந்த
கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண்சுமந்த
நெற்றிக் கடவுள், கலிமதுரை
மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,
புண்சுமந்த
பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"
--- திருவாசகம்.
"வாதவூரனை
மதித்து, ஒரு குருக்கள் என,
ஞான பாதம் வெளி இட்டு, நரியில் குழுவை
வாசி ஆம் என நடத்து வகை உற்று, அரசன்.....அன்புகாண,
மாடை
ஆடை தர பற்றி முன் நகைத்து, வைகை
ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து, மகிழ்
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் ...கந்தவேளே!"
என
மதுரையம்பதிக்குப் போந்து முருகப் பெருமானை வழிபட்டுப் பாடிய திருப்புகழில்
அருணகிரிநாதப் பெருமான் இந்த அருள் விளையாடலைப் போற்றிப் பாடி உள்ளார்.
சிவபெருமான் மண்
சுமந்த வரலாறு
மதுரையில் நாள்தோறும் அவித்த பிட்டை ஆலவாய்
அண்ணலுக்கு என்று நிவேதித்து, அதனை விற்று
வாழ்ந்தனள் வந்தி. அந்த அம்மைக்கு மகப்பேறு இல்லை. அதனால் அப்பேரைப் பெற்றனள்.
அந்த அம்மை சோமசுந்தரக் கடவுளிடம் இடையறாத மெய்யன்பு பூண்டவள்.
வையை ஆற்றில் பெருவெள்ளம் சிவபெருமான்
ஆணையால் பெருகியது. அரிமர்த்தன பாண்டியன் கரையை உயர்த்துமாறு கட்டளை இட்டனன்.
செல்வம் உடையவர்கள் ஆள் வைத்துக் கரையை உயர்த்தினார்கள். ஏழைகள் தாமே சென்று கரையை
மேடு செய்தனர்கள். வந்திக்குப் பணமும் இல்லை. ஆளும் இல்லை. என் செய்வாள்? ஏங்கினாள்; இரங்கினாள்; மீனவன் ஆணையால் நடுங்கினாள்; அழுதாள்; தொழுதாள்.
துணைஇன்றி, மக்கள்இன்றி,
தமர்இன்றி, சுற்றம் ஆகும்
பணையின்றி, ஏன்று கொள்வார்
பிறர் இன்றி, பற்றுக்கோடாம்
புணைஇன்றி, துன்பத்து ஆழ்ந்து,
புலம்புறு பாவியேற்குஇன்று,
இணைஇன்றி
இந்தத் துன்பம்
எய்துவது அறனோ எந்தாய்.
தேவர்க்கும்
அரியன் ஆய
தேவனே, அன்பர் ஆவார்
யாவர்க்கும்
எளியன்ஆகும்
ஈசனே, வேந்தன் ஆணைக்
காவல்செங்
கோலார் சீற்றம்
கடுகுமுன் கூலியாளாய்
ஏவல்செய்
வாரைக் காணேன்,
ஏழையேன் இனிஎன் செய்வேன்.
என்று தளர்ந்த வயதுடைய வந்தியம்மை உள்ளம்
தளர்ந்தாள்.
இறைவன் ஏழை பங்காளன். ஏழை - பெண். பங்கு ஆளன்
- உமையை இடப் பாகத்தில் வைத்து ஆள்பவன்.
இப்போது ஏந்திழையாகிய வந்தியின் பங்குக்கு
ஆளாக வருகின்றார். அவருடைய கருணையே கருணை. திருக் கயிலையில் இருந்தபடியே வந்தியின்
பங்குக் கரையை சங்கல்பத்தினாலேயே உயர்த்தி விட்டு இருக்கலாம். வந்திக்கு
ஆள்வேண்டும் என்ற கவலைதான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்ற
அப்பர் பெருமான் அருள்வாக்கின்படி எம்பெருமான் கூலியாளாக வந்தார்.
"திடங்காதல்
கொண்டு அறவோர்
திருவேள்வி தரும் அமுதும்
இடங்காவல்
கொண்டு உறைவாள்
அருத்து அமுதும் இனிது உண்டும்
அடங்காத
பசியினர் போல்,
அன்னை முலைப் பால் அருந்த
மடங்காத
பெருவேட்கை
மகவுபோல் புறப்பட்டார்".
அழுக்கடைந்த ஒரு பழந்துணியை உடுத்தி, சும்மாடு மேல் ஒரு பழங்கூடையைக்
கவிழ்த்து, தேய்ந்த மண்வெட்டியை
தோள்மேல் வைத்துக்கொண்டார்.
"ஆலுமறைச்
சிரமுடியார்
அடிக்கமலம் நிலம் சூடக்
கூலிகொடுத்து
என்வேலை
கொள்வார் உண்டோ என்றென்று
ஓலமறைத்
திருமொழிபோல்
உரைபரப்பிக் கலுழ்கண்ணீர்
வேலையிடைப்
படிந்து அயர்வாள்
வீதியிடத்து அணைகின்றார்".
வேதமுடிவாகிய அதர்வ சிகையில் விளங்கும்
அவருடைய திருவடிக் கமலம் மதுரையின் வீதியில் படுகின்றது. நிலமகள் செய்த
பெருந்தவம். "கூலியோ கூலி" என்று ஓலமறைத் திருமொழிபோல் வாய்விட்டுக்
கூவுகின்றார். கண்ணீர்க் கடலில் முழுகி இருக்கும் வந்தியம்மை வீட்டிற்கு நேராக
வந்து "கூலியோ கூலி" என்று கூவியருளினார்.
தாய்தந்தை இல்லாத தற்பரனை வந்தி கண்டாள்.
ஆனந்தம் கொண்டாள்.
"அப்பா!
இப்படி வா. உன்னைப் பார்த்தால் நன்றாக சுகத்தில் இருந்து வந்தவனைப் போல்
காண்கின்றதே. ஏனப்பா இப்படி கூலியாளாக வந்தனை?” என்று வினவினாள்.
கூலியாளாய் வந்த குருபரன், "பாட்டீ! எனக்குத்
தாய் தந்தைகள் ஒருவருமில்லை. சுடலையில்தான் இருப்பேன். பேய்கள் தான் எனக்கு உறவு.
என் மனைவி அன்னபூரணி. அறம் வளர்த்தாள். ஆனால் என்னை பிட்சாடனம் செய்ய
விட்டுவிட்டாள். இன்னொருத்தி தலைமீது ஏறிக்கொண்டாள். மூத்தபிள்ளைக்கு மகோதரம்.
ஊரில் என்ன விசேடம் ஆனாலும் அவன் போய்த்தான் ஆகவேண்டும். இளைய பிள்ளை தகப்பன் சுவாமி
ஆகிவிட்டான். என்ன செய்வேன்? விடத்தையும்
உண்டேன். எனக்கு மரணம் இல்லையென்று எல்லோரும் கூறுகின்றனர். அதனால் மண்ணெடுத்துப்
பிழைக்கலாம் என்று வந்தேன்" என்றார்.
வந்தியம்மை, "அப்பனே! பாவம் உன்னைப் பார்க்க மனம்
மகிழ்ச்சி அடைகின்றது. இந்த ஊரில் பெரும் பெருந் தனவந்தர்கள் இருக்கின்றனர்.
அங்கெல்லாம் போயிருந்தால் நல்ல கூலி கிடைத்திருக்கும். நான் பரம ஏழை. என்னிடம்
வந்து சேர்ந்தாய். என்னிடம் காசு பணம் இல்லை. பிட்டு வியாபாரம் செய்பவள். பிட்டைத் தருவேன். பிட்டுக்கு மண்ணெடுக் கவேணும்.
உனக்கு உடன்பாடா" என்று கேட்டாள்.
கூலியாள், "பாட்டீ! மிகவும் நல்லது. நீ காசு பணம்
தந்தால், நான் அதனை அப்படியே
தின்னமுடியாது. கடையில் போய் ஆகாரம்
வாங்கி அருந்தவேண்டும். நீ பிட்டாகவே தந்துவிட்டால், கடைக்குப் போகும் வேலை இல்லாது போகும்.
பிட்டுக்கே மண் சுமக்கிறேன்" என்றார்.
வந்தியம்மை, "அப்பனே! இன்னொரு சங்கதி. உதிர்ந்த
பிட்டைத் தான் உனக்குத் தருவேன். உதிராத பிட்டை விற்று, நாளைக்கு அரிசி வாங்க வைத்துக் கொள்வேன்.
உனக்குச் சம்மதமா?” என்றாள்.
எம்பிரான், "பாட்டீ! மிக நல்லது. உதிராத பிட்டைத்
தந்தால், நான் உதிர்த்துத்
தானே சாப்பிடவேண்டும். உதிர்ந்ததைத் தந்தால், உதிர்க்கின்ற வேலை இல்லாது போகும்.
அந்தக் கவலை உனக்கு வேண்டா. இப்போது சிறிது கொடு" என்றார்.
வந்தியம்மை ஐந்தெழுத்தைச் செபித்தவண்ணமாகவே, அவித்த, தூய்மையும் இனிமையும் உடைய பிட்டை
எடுத்து, "அருந்து, அப்பா!” என்று இட்டாள்.
பெம்மான் சும்மாட்டுத் துணியை விரித்து ஏந்தி, "ஆலவாய் அண்ணலுக்கு
இது ஆகுக" என்று கூறி தலையை அசைத்து அசைத்து அமுது செய்தார்.
ஆலமுண்ட நீலகண்டன் அடியாள் தந்த பிட்டைப்
பெருமகிழ்ச்சியுடன் உண்டு,
"பாட்டியம்மா!
இனி நான் போய் மண் சுமப்பேன். இன்னும் மாவு இருந்தால் பிட்டு சுட்டு வையும்"
என்று கூறிவிட்டு, வையைக் கரையை
அடைந்தார்.
பதிவு செய்த புத்தகத்தில், 'வந்தியின் ஆள், சொக்கன்' என்று பேர் பதிவு செய்தார்.
"வெட்டுவார், மண்ணைமுடி
மேல்வைப்பார், பாரம் எனக்
கொட்டுவார், குறைத்து எடுத்துக்
கொடுபோவார், சுமடுவிழத்
தட்டுவார், சுமை இறக்கி
எடுத்ததனைத் தலைபடியக்
கட்டுவார், உடன்சுமந்து
கொடுபோவார் கரைசொரிவார்".
"இவ்வண்ணம்
இவர் ஒருகால்
இருகால் மண் சுமந்துஇளைத்துக்
கைவண்ண
மலர் கன்றக்
கதிர்முடிமேல் வடு அழுந்த
மைவண்ணன்
அறியாத
மலரடி செம் புனல்சுரந்து
செவ்வண்ணம்
படைப்ப ஒரு
செழுந்தருவின் மருங்கு அணைந்தார்".
"வானத்தில்
மண்ணில் பெண்ணின்
மைந்தரில் பொருளில் ஆசை
தான்
அற்றுத் தமையும் நீத்துத்
தத்துவம் உணர்ந்த யோகர்
ஞானக்கண்
கொண்டே அன்றி,
நாட அருஞ் சோதி, மண்ணோர்
ஊனக்கண்
கொண்டும் காண
உடன் விளையாடல் செய்வார்".
வெட்டுவார். மண்ணை முடிமேல் வைப்பார். பாரம்
என்று கீழே கொட்டுவார். குறைத்து எடுப்பார். சும்மாடு விழத் தட்டுவார். சுமை இறக்கி
சும்மாட்டைத் தலை படியக் கட்டுவார்.
மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கில் கொட்டுவார். அதனால் சிறிது உயர்ந்த கரையை உடைப்பார்.
ஆடுவார். இனிது பாடுவார். நகை செய்வார்.
எல்லோரும் தன்னையே பார்க்குமாறு குதிப்பார். மணல்களைக் குவிப்பார். ஓடுவார். மீள்வார். கூடையைத் தண்ணீரில் போட்டு, அதனை எடுக்க வெள்ளத்தில் குதித்துத்
தவிப்பதுபோல் நடிப்பார். கரை ஏறுவார்.
வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் ஆசையற்று, தனையும் அற்ற யோகியர் ஞானக்கண் கொண்டே
அன்றி, நாடருஞ்சோதி, மண்ணோர் ஊனக்கண் கொண்டும் காண உடன்
விளையாடுவார்.
அருளினால் உலகமெல்லாம் ஆக்கியும் அளித்தும்
நீத்தும் பெருவிளையாடல் செய்யும் பிறைமுடிப் பெம்மான் இவ்வாறு விளையாடல் செய்ய, ஓச்சு கோல் கையராகி அருகு நின்று ஏவல்
கொள்வார் அடைகரை காண வந்தார். எல்லாப் பங்கும் அடைபட்டு இருக்கின்றன. வந்தி பங்கு
மட்டும் அடைபடவில்லை.
"வந்திக்குக் கூலியாளாய் வந்தவன் யார்?” என்று ஓடி, மன்மத மேனியராய் விளங்கும் பெருமானை
நோக்கி, "தம்பீ! அந்தப் பங்கெல்லாம் அடைபட்டனவே? ஏன் நீ இந்தப் பங்கை அடைக்காமல் வாளா
கிடக்கின்றனை?” என்று
வினவினார். விரிசடைப்பெருமான்
சிரித்தனர்.
"இவன் என்ன பித்தனோ? பேய் பிடித்த மத்தனோ? வந்தியை ஏமாற்ற வந்த எத்தனோ? இந்திர சாலம் காட்டும் சித்தனோ? இவன் யாரோ தெரியவில்லையே?” என்று திகைத்தார்கள்.
அரிமர்த்தன பாண்டியர் கரைகாண வருகின்றார்.
அமைச்சர் பலர் புடைசூழ்ந்து வருகின்றனர். ஏவலர் வெண்சாமரை இரட்டுகின்றனர். கரையைக்
காண்பாராகி வந்த காவலன், வந்தியின் பங்கைக்
கண்டார். "ஏன் இந்தப் பங்கு அடையவில்லை?” என்று கேட்டார். கண்காணிப்பாளர், "மன்னர் ஏறே! இது
வந்தியின் பங்கு. அவள் ஒரு ஆளை வைத்தனள். அந்த ஆள் இதனை அடைக்காமல் உன்மத்தனைப்
போல் இருக்கின்றான்" என்றார். "எங்கே அவன்?” என்று சீறினார் மன்னர்.
வள்ளல்தன்
சீற்றம்கண்டு
மாறுகோல் கையர்அஞ்சித்
தள்ளரும்
சினத்தராகி,
தடக்கைதொட்டு ஈர்த்துப் பற்றி,
உள்ளொடு
புறம்கீழ் மேலாய்
உயிர்தொறும் ஒளித்துநின்ற
கள்வனை
இவன்தான் வந்தி
ஆள்எனக் காட்டிநின்றார்.
எங்கும் நிறைந்து ஒளிந்திருக்கும் கள்வனை
ஈர்த்துக் கொண்டு போய், "இவன்தான் வந்தியின்
ஆள்" என்று காட்டினார்கள்.
கண்டனன்
கனன்று வேந்தன்
கையில்பொன் பிரம்புவாங்கி
அண்டமும்
அளவுஇலாத
உயிர்களும் ஆகமாகக்
கொண்டவன்
முதுகில்வீசிப்
புடைத்தனன், கூடையோடு
மண்தனை
உடைப்பில் கொட்டி
மறைந்தனன் நிறைந்தசோதி.
எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் தனது உடம்பாக உடைய
எம்பிரானைப் பிரம்பால் பாண்டியன் முதுகில் ஓங்கி அடித்தான். அந்த அடி எல்லா
உயிர்களின் மீதும், எல்லாப் பொருள்களின்
மீதும் பட்டது. அவர் எங்கும் நிறைந்தவர்.
எம்பிரான் மறைந்தார். வந்திக்குக் காட்சி அளித்தார். திருக்கயிலையில் அவளைச் சேர்த்து அருளினார்.
பாண்டினுக்கு அசரீரியாக அருள் புரிந்தார்.
சோமசுந்தரப் பெருமானின் அருளைப்
பரிபூரணமாகப் பெற்றவள் வந்தியம்மை. ஆதலால் அவளுக்குத் துன்பம் இல்லை. துன்பம்
வந்தபோது, இறைவனே
எழுந்தருளி வந்து அவளது துன்பத்தைப் போக்கி அருளினார்.
பின்வரும் திருவாசகப் பாடலைச் சிந்திக்கத்
தெளிவு வரும்...
பிணக்கு
இலாத பெருந்துறைப் பெரு
மான்! உன் நாமங்கள்
பேசுவார்க்கு,
இணக்கு
இலாதது ஓர் இன்பமே வரும்,
துன்பம் ஏது உடைத்து
எம்பிரான்!
உணக்கு
இலாதது ஓர் வித்து மேல்விளை
யாமல், என்வினை ஒத்தபின்,
கணக்கு
இலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.
இதன்
பதவுரை
---
பிணக்கு இலாத --- மாறுபாடு இல்லாத, பெருந்துறைப் பெருமான் ---
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உணக்கு இலாதது --- உலர்த்துதல்
இல்லாததாகிய, ஓர் வித்து --- ஒரு
விதையின் தன்மையை அடைந்த எனது செயல்கள், மேல்
விளையாமல் --- மேலும் ஆகாமியமாய் விளையாதபடி, என் வினை ஒத்தபின் --- எனது வினை
நுகர்ச்சிகள் இரண்டும் ஒரு தன்மையவாய் எனக்குத் தோன்றிய பின்பு, உன் நாமங்கள் பேசுவார்க்கு --- உன்னுடைய
திருநாமங்களையே எப்பொழுதும் சொல்லுவோர்க்கு, இணக்கு இலாதது --- நிகர் இல்லாததாகிய, ஓர் இன்பமே வரும் --- ஒப்பற்ற பேரின்பமே
உண்டாகும். துன்பம்
ஏது உடைத்து எம்பிரான் --- துன்பம் என்பது ஏன் வரப் போகின்றது பெருமானே! ஆதலால், நீ கழுக்குன்றிலே வந்து --- நீ
திருக்கழுக்குன்றத்திலே வந்து, கணக்கிலாத்
திருக்கோலம் காட்டினாய் - அளவில்லாத ஆசாரியத் திருக்கோலத்தை மீளவும் எனக்குக்
காட்டினாய்.
No comments:
Post a Comment