025. அருளுடைமை - 07. அருள் இல்லார்க்கு





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 25 -- அருள் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாவது திருக்குறளில், "பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லை, ஆனது போன்று, உயிர்களின்மேல் அருள் இல்லாதவர்க்கு முத்தி உலக இன்பம் இல்லை" என்கின்றார் நாயனார்.

     அவ்வுலகம் இவ்வுலகம் என்று அவைகளுக்கு உள்ள இன்பத்தைக் காட்டினார். இவ்வுலக இன்பத்தை அடைதற்கு, பொருள் காரணம் ஆனதுபோல், அவ்வுலக இன்பத்தை அடைவதற்கு அருள் காரணம் ஆயிற்று.

திருக்குறளைக் காண்போம்...

அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை, பொருள் இல்லார்க்குஇவ் உலகம் இல்ஆகி ஆங்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை --- உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை,

     பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு --- பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
        
          ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற் போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

அத்து இட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்,
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்,
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.         --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் --- துவர் ஊட்டிய ஆடையை இடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில் வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமை பலரிடத்திலும் பெருமையடையும்; ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார் செத்த பிணத்தின் கடை --- ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும் ஒரு பொருளில்லாதார் செத்த பிணத்தினுங் கடைப்பட்டவராவர்.

         துறவு நிலையும் உயர்குடிப் பிறப்பும் உடையவர் ஆயினும் வறுமை இல்லாமையே பெருமை தரும்.


தங்குபேர் அருளும் தருமமும், துணையாத்
   தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர்
   யாவர்க்கும் புகலிடம் ஆன
செங்கண் மால் பிறந்து, ஆண்டு அளப்ப அருங்காலம்
   திருவின் வீற்றிருந்தனன் என்றால்,
அம்கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும்
   பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? --- கம்பராமாயணம், நகர்நீங்கு படலம்.

இதன் பதவுரை ---

     தங்கு பேரருளும் தருமமும் துணையா --- தம்மிடம் தங்கிய மிகுந்த கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு; தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும் --- தமக்குப் பகையாகிய புலன்களைக் கட்டுப்படுத்துபவராகி; பொங்குமா தவமும் ஞானமும் புணர்ந்தோர் --- மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும்  மெய்யறிவையும் பெற்றிருக்கும் மேலோர்கள்;   யாவர்க்கும் புகலிடம் ஆன --- யாவருக்கும் அடைக்கலமாக அடையத்தக்க;   செங்கண்மால் பிறந்து --- அழகிய கண்களை உடைய திருமால்   அவதரித்து;  ஆண்டு அளப்ப அருங்காலம் --- அங்கு (அயோத்தி   நகரில்) அளவிட  இயலாத பல காலம்;   திருவின் வீற்றிருந்தனன்  என்றால் ---  இலக்குமி தேவயின் (அவதாரமான சீதா    பிராட்டியுடன்  சிறப்போடு தங்கி இருந்தான் என்றால்;  அங்கண்மா  ஞாலத்து --- அழகிய விசாலமான இவ்வுலகிலே; இந்நகர்  ஒக்கும் பொன்நகர் ---  இந்த அயோத்திக்கு நிகரான அழகிய நகரம்;  அமரர் நாட்டு யாதோ? --- தேவ உலகில்தான் எது இருக்கிறது? இல்லை என்றபடி.

     தம் புலன்களை அடக்கி அருளும் அறமும் துணையாகச் சிறந்த தவத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் பெற்றிருக்கும்   மேலோர்கள்  புகலடைதற்குரிய இடமான திருமாலே   இராமனாக அவதரித்து, அளவிலாக் காலம் அரசு புரிந்த இந்த அயோத்தி நகருக்கு நிகரான நகரம் தேவ உலகிலும் இல்லை என்பது கருத்து.
  

புண்ணியம் புரி பூமிபார், தில்வரு போகம்
நண்ணி இன்புறு பூமி வானாடு என்ப நாளும்
புண்ணியம் புரி பூமியும் அதில்வரு போகம்
நண்ணி இன்புறு பூமியும் மதுரைமா நகரம்.   ---  தி.வி.புராணம், திருநகரச் சிறப்பு.

இதன் பதவுரை ---

     புண்ணியம் புரி பூமி பார் --- அறஞ் செய்தற்கு இடமாயுள்ளது புவியாம். அதில் வருபோகம் நண்ணி --- அவ்வறத்தால் விளையும் பயனைப் பெற்று, இன்பு உறு பூமி வானாடு --- இன்பத்தை அடைதற்கு இடமாயுள்ளது வானுலகமாம், என்ப --- என்று சொல்லுவர் நூலோர்; நாளும் --- எப்போதும், புண்ணியம் புரி பூமியும் --- அறஞ்செய்தற்கு இடமாயுள்ளதும், அதில் வரு போகம் நண்ணி --- அதனால் வருகின்ற போகத்தைப் பொருந்தி, இன்பு உறு பூமியும் --- இன்பத்தையடைதற்கு இடமாயுள்ளதும், மதுரைமா நகரம் --- இம் மதுரை மாநகரமே ஆகும்.


No comments:

Post a Comment

கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், காடு நல்லது.

  படுங்கோலம் அறியாமல் தண்டலையார்      திருப்பணிக்கும் பங்கம் செய்வார்; நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார      வீணனைப்போல் நீதி செய்வார்; கெடுங்க...