025. அருளுடைமை - 08. பொருள் அற்றார்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 25 -- அருள் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "தீவினையின் பயனாகிய வறுமையை அடைந்தவர், பின் ஒரு காலத்தில் நல்வினையின் பயனாக வறுமை நீங்கி, செல்வத்தினால் விளங்குவார். அப்படி அல்லாமல், அருள் இல்லாதவர், அவர் புரிந்த பாவம் நீங்காமையால், அருள் அற்றவரே ஆவார். பின் ஒரு காலத்திலும் அவர் அருட்செல்வம் உடையர் ஆதல் இல்லை" என்கின்றார் நாயனார்.

     முந்திய திருக்குறளில், பொருள் இல்லாமையோடு அருள் இல்லாமையை ஒருவிதத்தால் ஒப்பாக்கிச் சொன்ன நாயனார், அதனை மறுத்து, மற்றொரு விதத்தினால், பொருள் இல்லாமையினும், அருள் இல்லாமை கொடிது என்றார்.

     தீவினையின் பயனாக வறுமையை அடைந்தோர், அத் தீவினையின் பயன் நீங்கிய காலத்து, பின்னர் நல்வினைப் பயானல் செல்வத்தை உடையவர் ஆகலாம். அருள் இல்லாதவர் எக்காலத்தும் மேம்பாடு அடைவதில்லை.


திருக்குறளைக் காண்போம்...

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் --- ஊழால் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர்,

     அருள் அற்றார் அற்றார், மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை.

         ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

மூர்த்திபால் வன்கண்மை மூண்ட வடுக அரசன்
சூர்த் திறத்தான் உய்ந்தானோ? சோமேசா! - கூர்த்த
பொருள் அற்றார் பூப்பர் ஓருகால், அருள்அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது.

         அருளுடைமையாவது தொடர்பு பற்றாது இயல்பாக உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை.  இல்லறத்திற்கு அன்புடைமை போல, இது துறவறத்திற்குச் சிறந்ததாம் என்க.

இதன் பொருள் ---

         சோமேசா!  கூர்த்த பொருள் அற்றார் --- மிக்க பொருளை இழந்து ஊழான் வறியராயினார்,  ஒரு கால் பூப்பர் --- அவ்வாறு நீங்கிப் பின் ஒருகாலத்துச் செல்வத்தால் பொலிவர்,  அருள் அற்றார் --- அவ்வாறின்றி அருளிலாதார், அற்றார் --- பாவம் அறாமையின் அழிந்தாரே, மற்று ஆதல் அரிது --- பின் ஒரு காலத்தும் ஆதலில்லை....

         மூர்த்திபால் --- மூர்த்தி நாயனாரிடத்தே, வன்கண்மை மூண்ட வடுகரசன் --- பகைமை மிக்குக் கொடுமையைச் செய்த வடுகமன்னன், சூர்த் திறத்தால் --- தன் வீரத் தன்மையால், உய்ந்தானோ --- பிழைத்தானோ, அழிந்தான் ஆகலான் என்றவாறு.


மூர்த்தி  நாயனார் வரலாறு

         பாண்டி நாட்டிலே, மதுரைப் பதியிலே, வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.

         நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில், வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன், சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான்.  அவன், தீங்குக்கு இடையே மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.

         கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான்.  நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்? இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?" என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார்.  சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை.  திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதி, ஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது. எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே.  இராச்சியம் எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து, உன் திருப்பணியைச் செய்து, நமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.

         மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின், இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்து, திருக்கோயில் புறத்தில் நின்றார். அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குபு புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால், எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்து, முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும், அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோ, அவர் அரசராதல் வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக்கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து, அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது.  அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கி, அவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள்.

         முடிசூட்டற்குரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போது, நாயனார், மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்து, சைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார்.  அதற்கு எல்லாரும் இசைந்தனர்.  பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலனாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார்.  அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.

         மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

     அருளை இழந்த மன்னன் அதைப் பெறாமலே மடிந்தான். சந்தனக் கட்டை என்னும் பொருளை இழந்த மூர்த்தி நாயனார், இறையருளைப் பெற்றதோடு, இம்மையிலும் மறுமையிலும் பெருவாழ்வையும் பெற்றார்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...